கலாப்ரியா : நாற்பது வருடத்திற்கு கொஞ்சம் குறைவு

கலாப்ரியா :  நாற்பது வருடத்திற்கு கொஞ்சம் குறைவு
Published on

கலாப்ரியாவின் மொழி; எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்ற நெருக்கத்தைத் தருகிறது. வாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படி , தன் குடும்பத்தின் வீழ்ச்சியை , வேதனைகளை எழுதும் போது கூட கலாப்ரியாவிடம் சுய எள்ளல் காணமுடிகிறது.அந்த சிரிப்பை வாசித்து முடிக்கையில் , மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. இவ்வளவு வெளிப்படையாகாத் தனது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை.’

- எஸ் . ராமகிருஷ்ணன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கலாப்ரியாவின் கவிதைகளுக்கு ரசிகனாக சற்று விலகியே இருந்திருக்கிறேன். அவர் வசிக்கும் இடைகாலுக்கு என் அப்பாவின் சொந்த ஊரான கடையநல்லூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு தான் . ஊருக்கு போகும் போதெல்லாம் அவரை போய்ப் பார்க்கலாம் என்று தோன்றும். ஆனால் ஏனோ ஒரு தயக்கம். கலாப்ரியாவின் கவிதைகளை படிக்கும் போது அவர் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம் என்று தோன்றும். அவரை எப்படியாவது கட்டுரைத் தொடர் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கில் குஜராத்திலிருந்து (பரோடா) நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தேன், இரண்டு மாதம் கழித்து ‘ தொடர் சாத்தியமா என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு அப்போது அந்திமழையில் வந்து கொண்டிருந்த ‘கவிதைத்திருவிழா’ தொடருக்கு சில கவிதைகள் அனுப்பினார்... பின் அவரை தொடந்து எழுதச் சொல்லி நச்சரித்தேன். வருடங்கள் கடந்தது. ஆனால் அவர் எழுதவில்லை. இடையில் நான் குஜராத்திலிருந்து தமிழகம் வந்திருந்த தருணங்களில்  நேரில் பார்த்தும் வற்புறுத்தினேன்.

ஒரு நாள் இரவு(15-09-08) கலாப்ரியாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு... ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று அபிப்பிராயம் சொல்லச் சொன்னார். ‘அண்ணாவை வழியனுப்ப போனபோது ’ என்ற கட்டுரை. அன்று அண்ணாவின் பிறந்த நாள். உடனடியாக அந்திமழையில் பிரசுரித்து விட்டோம்... இவ்வளவு தூரம் வந்தவரை எப்படி விடுவது ... தொடர் துரத்தலின் பயனாக 50 கட்டுரைகள் எழுதிவிட்டார். இடையில் நிறுத்திவிடும் மனோ நிலைக்கு மூன்று முறை வந்தார்.

பெங்களூரிலிருந்து  சென்னைக்கு இடம் பெயர்ந்த புதிதில் எழுத்தாளர் சுஜாதா மைலாப்பூர் விவேகானந்தர் கல்லூரிக்கருகில்  ஒரு மாடியில் குடியிருந்தார். அப்போது அவரோடு பலமுறை உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல்களில் கலாப்ரியாவை சிலாகித்து நவீன தமிழ் கவிஞர்கள் எழுதக் கூச்சப்படும் விஷயங்களை மிக அழகான கவிதையாக்கி விடுகிறார். அவரிடம் எழுதுவதற்கான விஷயங்கள் நிறைய இருப்பதாக சொன்னதுண்டு. கூடவே அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படவேண்டுமென்றார் சுஜாதா.

பல சமயங்களில் என்னிடம் மனத்தடையின்றி பேசும் எழுத்தாளர்களில் பலர் எழுத்தில் பதிவு செய்வதற்கு தயங்குவதுண்டு. கலாப்ரியா அப்படி தயங்காதவர். இதைப்பற்றி கவிஞர் விக்கிரமாதித்யன்,‘ மற்ற கவிஞர்களிடமிருந்து கலாப்ரியாவைத் தனித்துக் காட்டுவது, அவருடைய மனத்தடையின்மை. நமது மரபே பொதுவில் பெரிதும் மனத்தடையுள்ளது தான். கலாப்ரியா தான் இந்த மனத்தடையிலிருந்து பூர்ணமாக விட்டு விடுதலையாகி வந்த முதல் கவிஞன். பிரமிள் , நகுலனிடமும் மனத்தடை கிடையாது என்ற போதிலும், அவர்கள் பாலியல் சார்ந்த கவிதையில் மட்டுமே விலகி வந்திருக்கிறார்கள். கலாப்ரியா தனிமனிதன், குடும்பம் , சமூகம் , பாலியல் என சகவற்றிலும் மனத்தடையில்லாது எழுதிவந்திருக்கிறார்’ என்று வியக்கிறார்.

பாலியல் பற்றி ஒளித்து வைக்க எதுவுமில்லை என்கிற எண்ணமுடைய கலாப்ரியா விடலைப்பருவத்தில் தெரு நண்பர்களிடமிருந்து எதையும் பொதுவாக பகிர்ந்து கொள்கிற தன்மை வந்ததாக கூறுகிறார். கலாப்ரியாவின் அனுபவங்கள் விசாலமானவை. தங்குதடையின்றி  எழுத்தாக உருமாறும் அனுபவங்கள் ஒப்பனைக்குள் ஒளிந்து கொள்வதில்லை.

இந்த ஒப்பனைகளற்ற எழுத்தை சென்சார் செய்யத் துடிக்காத கலாப்ரியாவின் குடும்பத்தின் மனசு அவரது அனுபவங்களை விட விசாலமானது.

24/11/1968 அன்று தனது முதல் கவிதையை எழுதிய கலாப்ரியா 15/9/2008 அன்று தான் தனது முதல் கட்டுரையை எழுதுகிறார். இடையில் 14530 நாட்கள். (40 வருடத்திற்கு கொஞ்சம் குறைவு). நாளைக்கே உலகம் அழிந்து விடப் போகிறதோ என்று அவசரத்தில் எழுதும் பலர் இந்த இடைவெளியை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்வது நலம். தனது ஐம்பத்தி எட்டாவது வயதில் உரைநடை எழுதவந்த கலாப்ரியா, அவரது அறுபத்தி ஏழாவது வயதில் ஒரு நாவலை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தர வேண்டுமென்ற வேண்டுகோளை பிரியத்துடன் முன்வைக்கிறேன்.

ஜனவரி, 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com