
மகாகவி பாரதியின் ஆளுமையிலும் பாதிப்பிலும் திளைத்த 1970கள். பார்க்கும் யாவையும் அவரைப் போலவே சக்தியாகக் கண்டு நின்ற காலம். அவரது ``பச்சைக் குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி”, ``சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..” போன்ற கண்ணம்மா பாடல்களில் தோய்ந்திருந்தது மனது. அவை செய்த மாயமோ என்னவோ திருமணம் குடும்ப வாழ்க்கை என்றெல்லாம் துவங்கும் முன்பே பெண் குழந்தைகள் மீது பற்று மிகுந்து வரப் பார்த்து நின்றதெல்லாம் நினைவுக்கு வருகின்றது.
அந்த இருபது வயதின் ஆரம்பத்தில் காதல் வசப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். என் கண்ணம்மாவைக் குறியீடாக்கி என் பாணியில், நீளமாய் `கவிதை’ பற்றி ஒரு கவிதை எழுதினேன். அது,
என் கவிதை-
என் முதல் பெண் குழந்தை
வளர்ந்து விட்டாள்ஷ
ர்மிளாவை நாணவைக்க
சசியாய்ச் சிரிக்கிறாள்……….
என்று நீளும். (ஆராதனா படம் வந்திருந்த காலகட்டம், அதனால் ஷர்மிளா டாகூர் மேல் ஒரு ஈர்ப்பு.) பெண் குழந்தை பிறந்தது போல வந்த வேடிக்கையான ஒரு கனவின் தொடர்ச்சியாக இதை எழுதினேன். அந்த மாயக்கனவும் கவிதையும் பெண் குழந்தைகளுக்கான பிரியத்தை என்னில் நன்கு வேர் விடச் செய்து விட்டது. காணாததற்கு இந்தக் கவிதையை ஒரு நண்பருக்கு கடிதத்தில் எழுதி அனுப்பியிருந்தேன். அவர் பதிலுக்கு எழுதின பாராட்டுக் கடிதத்தில் `` சசிகலா, D/O கலாப்ரியா” என்று முகவரி எழுதியிருந்தார். போதாதா, மனம் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டது. பெண் குழந்தை பிறந்து ஒரு அப்பா ஆகி விட்டது போலவே நினைத்தேன். இப்போதைய காலத்தில் இதை எல்லாம் கேட்கையில் படிக்கையில் வேடிக்கையாக இருக்கலாம். எனினும் மென்மையான காதல் பொங்கும் அந்த வயதின் ஆத்மார்த்தம் அதுவென்றே இன்றும் நம்புகிறேன். ஆனால் ஒருநாளும் குழந்தைக்குக் காதலியின் பெயரை வைத்து விடக்கூடாதென்று தீர்மானமான முடிவிலும் இருந்தேன். ஏனென்றால் குழந்தையும் என்னிடம் பாராமுகம் காட்டி வளர்ந்து விடக்கூடாதே என்ற பயம்.
எனவே திருமணமான பின்னர் பெண் குழந்தையே வேண்டுமென்று ஆசை தொடர்ந்ததற்கு என் காதலுற்ற பொழுதின் மனமும் சக்தி உபாசனையும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. மனோதத்துவத்தில் இதற்கு ஏதாவது வேறு காரண காரியமிருக்கும்.
இன்னொரு நிகழ்ச்சி. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். என் அக்காவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கலா என்று பெயர். பெண் குழந்தை பிறந்ததற்கு அப்படி ஒரு அழுகை அழுதாள், பிறந்த பச்சைக் குழந்தையை நீட்டி என்னிடம் `நீ இதைக் கட்டிக்கிடுவியா,’ என்று கேட்டாள். நான் `ச்சேய் இது பச்சைப்புள்ளைல்லா,’ என்று வெட்கப்பட்டு ஓடியது நினைவிருக்கிறது. அந்தப் பெண் குழந்தை நிலைக்கவில்லை அதற்குப் பிறகு அவளுக்குப் பெண்ணே பிறக்கவில்லை. அவள் பின்னாளில் அந்தப் பெண் குழந்தை பிறந்ததற்காக அப்படி அழுதிருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பாள். எனக்கும் கூட அவளது குற்ற உணர்ச்சி சரியோ என்று தோன்றும். இதனால் பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது என்று மனதில் பதிந்து விட்டது.
எனக்கும் முதல் பெண் பிறந்து ஆறுமாதத்தில் இறந்து போனது. கோபத்தில் கொஞ்சம் சக்தி உபாசனையிலிருந்து விலகியிருந்தேன். அந்த இழப்பை நீக்க எனக்கு அடுத்தும் பெண் பிறந்த போது பழைய மகிழ்ச்சியை மறுபடி அடைந்தேன். வீட்டில்தான் பிரசவம். மனைவி பிரசவ வேதனையில் இருக்கையில் பெண் பிறந்தால் எங்கள் அம்மா ஊரான ராஜவல்லிபுரத்தின் அம்மையான அகிலாண்டேஸ்வரி பெயரை வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அதை நினைவில் வைத்து பாரதியார் நூற்றாண்டில் பிறந்ததால் அகிலாண்ட பாரதி என்று பெயர் வைத்தேன்.
குடும்பத்தின் நான்காவது உறுப்பினராக மூன்றாவதாக ஒரு பெண் பிறந்த போதும் நானோ மனைவியோ கொஞ்சங்கூட வருந்தவில்லை. மனைவியின் வீட்டில் மூன்று பெண்கள். அவர்களை நல்லபடியாக கண்டிப்பும் சுதந்திரமும் கலந்து வளர்த்ததாக மனைவி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வளர்ந்த விதம் என் பிள்ளைகளை வளர்க்க என் மனைவிக்கு உதவியிருக்கும் என்று நான் நினைப்பதுண்டு.
மூன்றாவது பெண்ணிற்கு மனைவியின் அம்மா பெயரான தெய்வானையை நினைவுறுத்துகிற வகையில் தெய்வநாயகி என்று வைத்தோம். மனைவியின் ஊரான குற்றாலம் சக்தி பீடத்திற்குத் தரணி பீடம் என்று பெயர் அதன் நினைவாக, கூப்பிடுகையில் தரணி என்று அழைத்தோம். இரண்டு குழந்தைகளுக்கும் இடையில் எட்டு ஆண்டுகள் இடைவெளி. அது அவர்களது கவனத்தோடு கூடிய வளர்ச்சிக்கு உதவிகரமாகவே இருந்தது. பள்ளிக்கு அழைத்துப் போவதிலிருந்து பலவகைகளிலும் பெரிய மகள் தங்கையைப் பிரியமாகப் பார்த்துக் கொண்டாள். இன்றும் பார்த்துக் கொள்கிறாள்.அதற்குத்தான் பெண் வேண்டுமென்பது என்று பார்க்கிறவர்கள் சொல்லுவார்கள்.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியதில் என் மனைவிக்குத்தான் பெரும் பங்கு. (உண்மையில் இந்தக் கட்டுரையை அவரைத்தான் எழுதச் சொல்ல வேண்டும்.) அவர் ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அது எங்களுக்குப் பெரிய பொருளாதார பலத்தை வழங்கியது. அவர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை பார்த்தார். அதனால் அவருக்கு பணி மாறுதல் கிடையாது. ஒரே பள்ளியில்தான் பணி. நான் வங்கிப் பணி. வங்கிப் பணியில் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றால் அகில இந்திய அளவில் பல்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும். எழுத்தர் பணி என்றால் எங்காவது பக்கத்தில் மாறுதல் வாங்கிக் கொள்ளலாம் அப்போது குழந்தைகளை இருவரும் சேர்ந்து கவனிக்கலாம், மற்றச் சிரமங்களும் குறைவு என்பதால் எழுத்தராகவே நீடிப்பது என்று முடிவெடுத்தேன். அதிகாரியாகப் பல வாய்ப்புகள் வந்தன. தவிர்த்து விட்டேன்.
என் முடிவுக்கு மனைவி மறுப்பெதுவும் சொல்லவில்லை. என் எந்த முடிவுகளுக்கும் எப்போதும் அவர் மறுப்பெதுவும் சொல்வதுமில்லை. அவருக்கென்று எப்போதும் அபிலாசைகளோ முடிவுகளோ இருந்ததுமில்லை. நான் ஓரளவு அவர் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பேன். அதற்காக அதைக் குறித்து பெரிய கோருதல்(claim) எதுவும் எனக்கில்லை. எங்களிடையே நிலவிய ஒரு சின்னப் புரிந்து கொள்ளலும் அவரின் பெரிய மனதுடனான விட்டுக் கொடுத்தலும், பட்டுக் கோட்டை பாடல் போல ``இல்லற ஓடமதை இன்பம் ஏந்திச் செல்ல” உதவியாக இருந்தது. துன்பங்கள் வராமலும் இல்லை.
மனைவி கணிதப் பட்டதாரி ஆசிரியையாக இருந்தார். நான் கணிதம் முதுநிலை படித்திருந்தேன். அதனால் அவர் முதுநிலை கணிதம் படிக்க விரும்பிய போது என்னால் உதவி செய்ய முடிந்தது. இயல்பாகவே அவர் சிறப்பாகப் படிக்கக் கூடியவர். ஆண்டு தோறும் பள்ளியிலும் கல்லூரியிலும் முதல் மதிப்பெண் வாங்குகிறவர். அதனால் அவர் முது நிலை கணிதத்திலும் தேர்வு பெற்று முதுநிலை ஆசியராகப் பணி உயர்வு பெற்றார். பள்ளியில் சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றதினால் மாணவர்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பெற்றவர். ஒரு பெண் கல்வி கற்பதன் அவசியம் ஏன் என்பதற்கு அவரே நல்ல உதாரணம். குழந்தைகளை அன்றன்றையப் பாடங்களை அன்றே படிக்க வைத்து விடுவார். நானும் உதவுவேன் என்றாலும் அவர் ஆசிரியர் என்பது சொல்லித்தருவதில் கூடுதல் உதவிகரமாக இருந்தது. நான் ஒரு கணக்கைக் கால் மணி நேரமாகச் சொல்லிக் கொடுத்தால் அவர் ஐந்து நிமிடத்தில் கற்றுத் தருவார். பக்கத்திலுள்ள மற்ற பிள்ளைகளும் வீட்டில் வந்து படிப்பார்கள். டியூஷன் என்று காசு வாங்க மாட்டோம். யார் கேட்டாலும் படிக்க உதவுவோம். பிள்ளைகளுக்கு அந்தச் சூழல் உதவிகரமாக இருந்தது. மகள் இருவரும் சி.பிஎஸ்.இ பாடத் திட்டத்தில் பத்து வரை படித்தார்கள். இருவருக்குமே படிப்பு தவிரவும், சுற்று வட்டாரம் மற்றும் மாவட்டப் பள்ளிகள் அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பொது அறிவுப் போட்டிகளில் பங்கெடுக்கும் ஆர்வமும் பரிசு பெறும் திறமையும் இருந்தது. இருவரும் நாட்டியமும் இந்தியும் கற்றார்கள். பெரியவள் இந்தி விஷாரத் வரை கற்றாள். சின்னவள் வீணை கூடக் கற்றாள். எல்லாவற்றிற்கும் நாங்கள் ஊக்குவித்தோம். பெரிய மகள் பிளஸ் 2 வகுப்பில் கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கினாள். இரண்டாவது மகளும் நல்ல மதிப்பெண் வாங்கினாள். பெரியவள் நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண். சின்னவளுக்கு நுழைவுத் தேர்வு ரத்தாகி விட்டது.
என்னைத் தேடி பல இலக்கிய நண்பர்கள் வருவார்கள். நாங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் அவர்கள் காதுகளையும் எட்டியிருக்கலாம். குற்றாலத்தில் நடைபெற்ற பதிவுகள் கருத்தரங்கிலும் இருவரும் நிறைய அவர்கள் சக்திக்குட்பட்ட வேலைகள் செய்வார்கள். அவ்வளவு பெரிய இலக்கிய ஜாம்பவான்களைப் பார்த்ததும் கேட்டதும் இருவருக்கும் கண்டிப்பாக உந்துதல்களைத் தந்திருக்கும்.
பெரியவள் நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாள். பொறியியலில் எளிதாக இடம் கிடைத்தது. எழுத்தாளர் திலகவதி சொன்னது போல அவளது நல்ல உழைப்பின் வெகுமதியாக தமிழறிஞர்/ எழுத்தாளர் இட ஒதுக்கீட்டில் மருத்துவத்திற்கும் இடம் கிடைத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரானாள். இளையவள் பொறியியலில் எம்.டெக் படித்து பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் நல்ல வேலையில் இருக்கிறாள்.
இரண்டு பேருக்குமே நாங்கள் +2 வரைதான் படிப்பில் அடித்தளமிட்டு உதவி புரிந்தோம். அதற்குப் பின்னான கல்வி குறித்து எங்களுக்கே தெரியாது. அதிலும் அவர்கள் நன்றாகச் செய்ய முடிந்ததென்றால் அது அவர்களின் உழைப்பாகத்தானே இருக்க முடியும். பெரியவள் எழுத்திலும் இலக்கியத்திலும் சாதனை புரிகிறாள் என்றால் அது அவளாக வளர்த்துக் கொண்டதுதான். இப்படி எழுது, இதைத் திருத்து என்று ஒரு நாளும் சொன்னதில்லை அதிக பட்சம் போனால் அவளது ஒன்றிரண்டு நாவல், சிறுகதைகளை எழுதி முடித்த பின் அவற்றுக்கு ஒரு தலைப்புச் சொல்லேன் என்று கேட்டிருக்கிறாள். நான் சிலவற்றிற்குச் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் நான்தானே பெயரிட்டேன்.
அவர்கள் படிப்பிலும் வாசிப்பிலும் நாங்கள் கட்டாயப்படுத்தி எதையும் சொன்னதில்லை. சின்னமகளின் திருமணம் கூட அவள் விருப்பப்படியே நடந்தது. காதலுக்கு மரியாதை போல எங்கள் சம்மதத்திற்காகக் காத்திருந்தே கலப்புமணம் முடித்துக் கொண்டாள். இருவரிடமுமே சில விஷயங்களில் கண்டிப்பு காட்டாமலும் இல்லை. அது அவர்கள் நன்மைக்கென்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
என் இலக்கிய நண்பர்கள் அநேகரை அவர்கள் அறிவார்கள். அவர்கள் மீது மிகவும் மரியாதை கொண்டவர்கள். அந்த மரியாதையையும் அன்பையும் ஆதாரமாகக் கொண்டு பெரிய மகள் சின்னவளின் உதவியோடு எனது 75 வது ஆண்டு பவள விழாவைச் சிறந்த ஒரு இலக்கிய நிகழ்வாக நடத்திக் காட்டினார்கள். அதில் என்னுடைய பங்களிப்பெல்லாம் சிற்சில நண்பர்களின் அலை பேசி எண்களை அளித்தது மட்டுமே.
நாங்கள் வளர்த்தது போலவே இருவரும் தங்கள் குழந்தைகளை அவர்கள் பாணியில் நன்றாக வளர்க்கிறார்கள். பெரிய மகளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள். இன்று அவள் மூத்த மகள் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சின்னவள் +2 படிக்கிறாள். சின்ன மகளுக்கு ஒரு மகனும் மகளும் விளையும் பயிர் முளையிலே என்பது போல ஆறுவயது, மூன்று வயதான இரண்டு குழந்தைகளும் நன்றாகவே வளர்கிறார்கள்.
``பெண் குழந்தை என்பவள் நாம் எழுதிய சந்தோஷமான வாக்கியத்தின் ஆச்சரியக்குறி”, என்று யாரோ சொன்னதை எங்கள் வாழ்க்கையிலும் இயற்கையின் அருளால் உண்மையென்றே உணர்கிறோம். மனதார உண்மையினைப் புரட்டலாமோ மகாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ என்பதுதானே பாரதி வாக்கு.