வயிறும் உயிரும்

வயிறும் உயிரும்

திரைப்படம் என்பதே ஒரு காட்சிப் பிழைதான். மூளையில் வேகமாய்ப் பதிந்து மறையும் படக்காட்சிகளே அதில் காணும் உருவங்களில் அசைவை உண்டு பண்ணுவதால் ஏற்படும் ஒரு தோற்றப் பிழைதான். அதிலும் சினிமாவில் தந்திரக் காட்சிகள் வந்த பின் புராண இதிகாசக் கதைகளின் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது என்று சொல்லலாம்.

1940 வாக்கில், ஏழு வகை திரைக்கதைகளில் ஒன்றான இரட்டை வேடக் கதைகள் படமாகத் தொடங்கியது தமிழில் பி.யு சின்னப்பா நடித்த உத்தம புத்திரன் இந்திய அளவிலேயே இதில் முதல் என்று சொல்லலாம். தந்திரக் காட்சியாக அவற்றைப் படம் பிடிக்க வேண்டியது வந்த போது கதாநாயகன் போல உருவ அமைப்பு உள்ளவர்களின் தேவை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.கொக்கோ என்று ஒரு நடிகர் உண்டு. என் தலைமுறைக்கும் முந்தியவர். பெரிய சாண்டோ. வீர தீரக் காட்சிகளுக்குப் பேர் பெற்றவர். ‘ஏல, எஸ். எஸ். கொக்கோ ரெண்டு ட்ரெயின் ஓடிக்கிட்டிருந்தா ரெண்டையும் சேர்த்து ஒரே தாவா தாவிருவாரு தெரியுமா...' என்று எங்கள் சின்னவயதில் அவரது பிரலாபத்தைப் பேசக் கேட்டதுண்டு. அது சும்மா வதந்திதான். ஆனால் அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நடிகர்கள் 1944 இல் இருந்தார்கள். பத்தே ஆண்டுகளில் அந்த நிலைமை மாறி விட்டது.

கதநாயக, நாயகிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து உண்டாகி அவரைப் படம் முடியும் மட்டும் பத்திரமாக வைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கும் நாயக நாயகியருக்கும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் 1958இல் சீர்காழியில் நடந்த அவரது நாடகத்தில், வழக்கம் போல நடிகர் குண்டுமணியைத் தூக்கி அடிக்கும் காட்சியில் கால் முறிந்து படுக்கையில் இரண்டு மாதங்கள் வரை கஷ்டப்பட்டார். 1958 ஆகஸ்டுக்குப் பின் 1959 டிசம்பர் 31 வரை அவருக்குப் படமே வெளி வரவில்லை. அப்படிப் படமே வரவில்லை என்ற பேர் வரக்கூடாதென்ற கட்டாயத்தில் 1959 டிசம்பர் 31 அன்று ‘தாய் மகளுக்குக் கட்டியதாலி' படம் வந்தது. அதற்கப்புறம் அவர் ரிஸ்க் எடுக்கவில்லை.

அதுவல்லாமல் யார் ஒருவராவது இல்லாத பட்சத்தில் படப்பிடிப்பை முடிப்பதற்குக் கூட டூப் போடுவது உண்டாகியிருக்கலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் படப்பிடிப்பில் யாருக்காகவும் காத்திருக்க மாட்டார். அலிபாபா படத்தில் எம்.ஜி.ஆர் இல்லாமலே கடைசி நேரப்படப்பிடிப்பில் டூப் போட்டே படத்தை முடித்து விட்டதாகக் கதைகள் உண்டு. லேடி எம்.ஜி.ஆர் என்று அழைக்கப் பெறும் ஒரு நடிகை குழந்தை உண்டாகி விட, அவசர அவசரமாகப் படங்களை முடித்துக் கொடுத்தார் அப்படியும் ஒரு சின்னக் கம்பெனி படம் ஒன்றில் அவரைப் போல ஒருவரை டூப் ஆக வைத்து லாங் ஷாட்டில் படம் எடுத்து வெளியிட்டார்கள். ரசிகர்கள் கண்ணில் அது தப்பவில்லை.

பொதுவாக டூப் காட்சிகளில் காமிராவை லாங் ஷாட்டுக்கு ஏற்றாற் போல மாற்றி விடுவார்கள். உயரத்தில் இருந்து குதிக்கிற காட்சி வந்தால் டூப் போடுகிறவர் குதிப்பார் காமிரா ஜூம் அவுட் ஆகி விடும் எழுந்திருக்கிற போது ஜூம் இன் ஆகி அருகே வந்து விடும். அந்த வித்தியாசம் தெரியாமல் எடிட்டர் பார்த்துக் கொள்ளுவார். நல்ல சண்டைக்காட்சியாக அமைந்திருக்கிறது என்றால் எம்.ஜி.ஆரே எடிட்டிங் டேபிளில்( அப்போதெல்லாம் மூவியோலா) உட்கார்ந்து விடுவார். நெருக்கமான காதல் காட்சிகளில் கூட பார்வையாளர்களை அனுமதித்து விடுகிற பெரிய நடிகர்கள் சண்டைக் காட்சியில் அனுமதிக்க மாட்டார்கள். கதாநாயக நடிகர்கள் என்றில்லை வில்லன் நடிகர்களுக்குக் கூட டூப் உண்டு.

நல்ல நேரம் படத்தில் கயிற்றில் நடந்து வித்தை காண்பிக்கும் காட்சியில் குளோசப்பில் எம்.ஜி.ஆரும், லாங் ஷாட்டில் டூப்பும் நடிப்பார்கள். பாடல் வரிகள்தான் முரணாக இருக்கும். ‘வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்திலாடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு' அவர் குறிப்பிடுகிற மனுஷன் அவரா டூப் நடிகரா என்பது அவருக்கே வெளிச்சம். உத்தமன் படத்தில் ஸ்கேட்டிங் ட்சிகளில் குளோஸப்பில் சிவாஜியும் மஞ்சுளாவையும் இடுப்புக்கு மேல் காண்பித்து விட்டு, லாங் ஷாட்டில் யாரோ ப்ரொஃபொஷனலை வைத்து எடுத்திருப்பார்கள். இதே இந்திப்படமான ஆ கலே லக் ஜா வில் ஓரளவுக்கு சசிகபூரும் ஷர்மிளாதாகூரும் ஸ்கேட் செய்வார்கள். அன்பே வா படத்தில் நாகேஷ் ஐஸ் ஸ்கேட்டிங் ஓரளவு செய்வார். எம்.ஜி.ஆருக்கும் சரோஜதேவிக்கும் டூப்.

நடிகைகளின் சண்டைக்காட்சியிலும் டூப் உண்டு. கதாநாயகி வெகுவாக ஆடைக் குறைப்பு செய்ய வேண்டிய காட்சியில் டூப் நடிகைகளைப் பயன் படுத்திக் கொள்வார்கள். நான் பார்த்த ஒரு படப்பிடிப்பில் ஒரு பெண்ணுக்கு ஒரு முழ ஜட்டி தவிர்த்து தொடையிலிருந்து கால் வரை பான் கேக்கைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். விசாரித்த போது, கதநாயகி பாத் டப் சோப் நுரைக்குள்ளிருந்து எழுந்து வருவதாகக் காட்சி. நாயகி பாத் டப்பில் மட்டுமே இருந்தார். எழுந்து வந்து டவலை அவிழ்த்துப் போட்டு விட்டு தொடை மட்டும் ஸ்கிரீன் முழுதும் தெரிய வருவது டூப் நடிகை. அது படமாக வந்த போது ‘என்னமா வழுவழுன்னு இருக்கா பாரேன் இந்த ஒரு காட்சிக்காகவே துட்டு செத்துது', என்று ரசிகர்கள் நாயகியை நினைத்து ஜொள்ளு விட்டார்கள்.

அந்தக் காலத்தில்தான் இரட்டை வேடங்களுக்கு, எம்.ஜி.ஆரின் ஒரு பாத்திரத்திற்கு கே.பி.ராம கிருஷ்ணன், எம்.கே.தர்மலிங்கம் போன்றோர் டூப் போடுகிறார்கள் என்றால் இப்போது டிஜிட்டல், கிராஃபிக்ஸ் காலத்திலும் டூப் வைத்தே எடுக்கிறார்கள்.. நசீர் என்றொரு ஒரு டூப் ஆர்டிஸ்ட் த்ரிஷா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷராவத், அஸின் போன்ற பெண் நடிகர்களுக்கும் டூப் போடுகிறார்.

எந்திரன் படத்தில், வசீகரன் ரோலுக்கு பாரதிராஜா பையன் மனோஜ் டூப் போட்டிருக்கிறார். கிராஃபிக்ஸ் மூலம் அவரது முகத்தை வெட்டி ரஜினி முகத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். மாற்றான் படத்தில் சூர்யாவுக்கு மன்மோகன் என்ற கலைஞர் டூப் போட்டிருக்கிறார். அஜித் ஒரு பைக் ரேஸர் என்று தெரியும் ஆனால் அவருக்கும் அபிஷேக், செந்தில் என்ற கலைஞர்கள் மங்காத்தா படத்தில் பைக் ரேஸில் டூப் போட்டிருக்கிறார்கள்.

 இதெல்லாம் இப்போது எப்படிச் செய்கிறார்கள் என்ற விவரங்களை யூ டியுபில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் இதெல்லாம் பரம ரகசியம். டிஷ்யூம் படத்தில் டூப் நடிகனின் வாழ்க்கைப் பாடுகளை நன்றாகக் காட்டியிருப்பார்கள். டூப் கலைஞர்கள் எவ்வளவோ எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகளுடன் படங்களில் நடிக்க வந்து உயிரைப் பணயம் வைத்து நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் திறமை திரைக்குப் பின்னாலேயே இருந்து விடுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com