நாமக்கல் இளந்தென்றல் என்பது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான் படித்த போது நடத்திய மாணவர் இதழ். நான் 1000 பிரதிகள் அச்சிட்டு முதல் முதலாக அச்சில் கொணர்ந்தேன். Offset அச்சில் வந்தது அதுவே முதல் & கடைசி முறை. எனக்கு முன் என் சீனியர்கள் கையெழுத்து பதிவாகக் கொண்டு வந்தனர். இப்பொழுது கணினி அச்சில் வருகிறது. நான் வெளியிட்ட இந்த இதழில் 8,9,10 பக்கங்களில் பாரதி குயிலம்மா என்ற தலைப்பில் ஞானசூனியன் என்ற புனைபெயரில் நான் எழுதிய கட்டுரைதான் என் முதல் இலக்கியக் கட்டுரை. 29 வருடங்களுக்கு முன்பு நான் இப்பொழுது எழுதுவதை விட நன்றாக எழுதி இருப்பதாக சொன்னார் என் எழுத்தைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர் ஒருவர். பாரதியின் 106 ஆவது நினைவுநாளை முன்னிட்டு இந்தக் கட்டுரை அந்திமழை வாயிலாக பகிரப்படுகிறது.
•••••
அப்போதைய எச்சரிக்கை உரை
பாரதி குயிலம்மா' என்ற இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ஞான சூனியன் ஒரு சினிமாப் பைத்தியம். கொஞ்சம் இலக்கிய வாசனை உடையவர்தான் என்றாலும் மனதில் "ஏதோ பெரிய இலக்கிய கர்த்தா" என்ற நினைப்பு. பாரதியின் குயில்பாட்டு பற்றி இளைஞர்களுக்கு சொல்கிறேன் என்று கூறிக்கொண்டு இந்தக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையை 'நக்கீரர் பார்வையோடு 'தமிழ் கூறும் நல்லுலகம் நோக்க வேண்டாம் என்றும், இந்தக் கட்டுரையாளரின் நடைக்கு ஆசிரியர் குழு பொறுப்பேற்காது என்றும் இளைஞர்களை பாரதியின் குயில் பாட்டை படிக்கத்தூண்டுவதே இக்கட்டுரையின் நோக்கமென்றும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பணிவுடன் வேண்டுகிறோம்.
ஆசிரியர் குழு
_________________________________________________________________________
தன்னைக் காதலிப்பது யாரென்று நாயகன், நாயகி இருவருக்குமே தெரியாது (காதல் கோட்டை). தன்னை காதலிக்கும் பெண் யாரென்று கதாநாயகனுக்கு மட்டும் தெரியாது (காலமெல்லாம் காதல் வாழ்க). கதாநாயகி யாரை காதலிக்கிறாள் என்பது படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்குத் தெரியாது (பாரதி கண்ணம்மா). படத்திலே யார் யாரைக் காதலிக்கிறாங்கறது இயக்குனருக்கேத் தெரியாது (நிறைய படங்கள்). இரண்டு ஹீரோவுல யாரைக் கல்யாணம் செய்யறதுன்னு ஹீரோயின் குழம்பறது; (காதல் தேசம்) ஹீரோயின் முதல் ஹீரோவை காதலிக்க வேண்டுமென்பதற்காக உதவி செய்ய வந்த இரண்டாவது ஹீரோவையே ஹீரோயின் காதலிக்கிறது. (மின்சார கனவு) 'நாம் இருவர், நமக்கு இருவர் 'என்ற கொள்கையோடு 2 ஹீரோக்களுமே ஆளாளுக்கு 2 ஹீரோயின்களை காதலிப்பது (இருவர்) இப்படி கண்டகாதல், கானாத காதல், காத்திருந்த காதல், காலையில் இருந்து காதல், ஒரு தலைக் காதல், இருதலை (வர்கள்) காதல் என்று தமிழ் திரையுலகமே காதலைச்சுற்றி சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரத்திலேயே இன்னொரு வித்யாசமான காதல் கதையைப் பற்றி உங்களுக்கு சொல்லாம் என்று நினைக்கிறேன்.
இதில் ஒரு பெண் மூன்று பேரை இரண்டு ஜென்மங்களாகக் காதலிக்கிறாள்,
அதுதான் பாரதின் குயில் பாட்டு.
கருணையினால் ஒரு காதல்,
கடமையினால் ஒரு காதல்
காதலினால் ஒரு காதல்,
இப்படி மூன்று காதலைப்பற்றி சொல்கிறார் பாரதியார், அது நம் தமிழ் படத்தைவிட சுவாரசியமாக இருக்கிறது. புதுவையில் ஒரு மாஞ்சோலை
"காதல் காதல் காதல் - காதல் போயின்
சாதல் சாதல் சாதல் ''என்று
சங்கராபரன ராகத்தில் ஏகதாளத்தில் ஒரு சோககீதம் கேட்கிறது. ( டைட்டில் சாங்?) மாடுகிற பூங்குயில் யாரென்று அங்குமிங்கும் தேடிக்கொண்டே வருகிறார் பாரதி என்ன அருமையான ஒப்பனிங் ஷாட் ) குயிலைக்கண்டு 'நீதானாஅந்தக் குயில்? ன்று கேட்டுவிட்டு அதனுடைய சோகத்திற்கு காரணம் கேட்கிறார் "என் சிந்தை கவர்ந்தவரே வாருங்கள், இன்று நாம் பேசுவதற்கு இடையூறுகள் வந்துவிட்டன. ளை வாருங்கள் பேசுவோம். நீங்கள் நாளை வரவில்லையெனில் நான் ஆவிதரியேன் " என்று சொல்கிறது.
பாரதியார் வீட்டில் இருக்கிறார், குயிலின் நினைவு அவரை வாட்டுகிறது. நாள் ஒன்று போவதற்கு நாள் பட்டபாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ யார் படுவார்?" என்கிறார் (நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும் இப்ப சொல்றாங்கல்ல அதே தான்.)
மறுநாள் காலை சோலைக்குச் செல்லும் பாரதி அங்கே அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காரணம் அங்கே பாரதியிடம் நேற்று காதல் மொழி பேசிய குயில், இன்று ஒரு குரங்கோடு காதல் மொழிபேசி கொஞ்சிக் கொண்டிருக்கிறது. அதனால் கோபமடைந்த பாரதி ஒரு வாளை எடுத்து குரங்கின்மீது வீச குயிலும், குரங்கும் மறைகின்றன, பாரதி மயக்கமடைகிறார்.
பாரதியின் மயக்கத்தைத் தெளிவித்து அவர் நண்பர்கள் அவரிடம் காரணம் கேட்க பிறகு சொல்கிறேன் இப்பொழுது என்னை "தனிமையில் விடுங்கள்" என்று பாரதி சொல்ல நண்பர்கள் பிரிகின்றனர்.
மறுநாள் காலை மீண்டும் சோலைக்குள் செல்ல குயில் ஒரு மாட்டோடு "காளையெருதரே காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன், தையலெனைக் காத்தருள்வீர்." என்று காதல் மொழிபேசிகொண்டிருப்பதைக் கண்டு வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற பாரதி வாளை எடுத்து வீச, மாடும் குயிலும் மறைகின்றன.
நான்காம் நாள் சோலைக்குச் சென்று, பாரதி நீசக்குயிலே, நிலையறியாப் பொய்மையே, ஆசைகுரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணி நீ பாடும் பாட்டைக் கேட்டேன்'என்று திட்ட தொடங்குகிறார்.
'நின் சொல் மறுக்க நெறியில்லை ஆயிடினும் என் மேல் பிழையில்லை (என்ன ஒரு அருமையான டயலாக்) என்று சொல்லிய குயில்,தனக்கு ஒரு பிளாஸ் பேக் இருப்பதாகவும் அதை ஒரு முனிவர் சொன்னதாகவும் குறிப்பிட்ட குயில் அந்த பிளாஸ் பேக் ஐ பாரதியிடம் சொல்லத் துவங்குகிறது.
குயிலின் பூர்வ கதை : ( பிளாஸ் பேக்)
சென்ற ஜென்மத்தில் குயில், வீர முருகன் எனும் வேடன் மகளாக பிறந்திருந்தது. அப்போது குயிலின் பெயர் சின்ன குயிலி (கிராமியத் தமிழ் படத்தோட கதாநாயகி பெயர் மாதிரி இருக்கல்ல?)
நல்லிளமை முந்துமழகினில் மூன்று தமிழ்நாட்டில் யாரும் அவள் அழகிற்கு இணை இல்லையாம். (அந்த காலத்து மிஸ் மெட்ராஸ் ?)
குயிலின் மாமன் மகள் மாடன் அவளை மணக்க விரும்பி தினம் தினம் பொய் மலர், புதுத்தேன் எல்லாம் கொண்டுவந்து கொடுத்து அவள் தன்னை மணக்க வேண்டும் என நித்தம் வேண்டவே, அவனை மணக்க குயிலி சம்மதிக்கிறா காதலினால் அல்ல அவன்மீது கொண்ட கருணையினால். அதேசமயம், குயிலி மொட்டை புலியன் மகன், நெட்டை குரங்கனுக்கு மணம் முடிக்க குயிலியி தந்தை சம்மதிக்கிறார். (தமிழ் படத்தில் வருகின்ற மாதிரி என்ன அருமையான முடிச்சு)
இதைக்கேட்டு கோபமுற்ற மாடனிடம் "கடமையினால் அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்தேன், மூன்று மாதத்தில் அவளைப் பிரிந்து உன்னிடம் வந்துவிடுகிறேன் 'சொல்கிறாள்.
(குயிலி புரட்சிப் பெண்ணா? புதுமைப் பெண்ணா?)
இதற்குப்பின் ஒருநாள் மலையில் சோலையில் விளையாடும் போதுஅங்கு வேட்டைக்கு வரும் சேரமான் மகனைக்கண்டு உண்மையாகவே காதல் கொண்டு கட்டியணைக்கிறாள் (மூன்றாவது ஆளா? என்ன பாலச்சந்தர் படம் மாதிரி போகுது ).
அதே நேரம் அங்கு வரும் மாடனும் குரங்கனும் அதிர்ச்சியடைகிறார்கள். நிச்சயத் தாம்புலம் நிலையாய் நடந்திருக்க, பிச்சை சிறுக்கி பேதகத்தைப் பார்' என்று நெட்டை குரங்கன் கோபந்தோடு வெகுண்டான், மாடனும் அவ்வாறே நெட்டை குரங்கள் வேந்தனை வாள் கொண்டு வெட்டிவிட வேந்தனும் தன் வாளையெடுத்து மாடனையும், குரங்கனையும் வெட்டிவிட்டு குயிலியின் மடியில் விழுந்து அடுத்த ஜென்மத்தில் இணைவோம் என்று உயிர் விடுகிறான். இந்த பிளாஸ் பேக் சொல்லிய முனிவர் குயிலியிடம் மன்னவன் உன்னைத் தேடி வருவான், அப்பொழுது மாடனும். குரங்கனும் மாடாகவும், குரங்காகவும் வந்து சூழ்ச்சி செய்து இப்பிறப்பினர் உங்கள் காதலை கலைக்க முயல்வார்கள். கிளைமாக்ஸ் என்னென்று நீயே பார்த்துக்கொள் என்று சொல்லிவிடுகிறார்.
இந்தக் கதையெல்லாம் பாரதியிடம் சொல்லிய குயில்
“காதல் அருள்புரிவீர், காதல் யென்றிடிலோர், சாதல் ருளித் தமது கையாம் கொன்றிடுவீர் என்று டச்சிங்கா ஒரு டயலாக் பேசிவிட்டு பாரதி கையில் விழுகிறது. "கொன்று விட மனம் தான் கொல்லுமோ பெண்ணென்றால் மாதர்ன்பு கூறில் மனமிளகார் இங்குள்ளாரோ ? " என்று இங்கு ஆண்டாண்டு காலம் இருந்து வரும் ஆண்வர்கத்தின் பெருந்தன்மையை கூறி அந்தக் குயிலை முத்தமிடுகிறார் பாரதி.
முத்தமிட்டவன் அந்தக் குயில் உருவம் மறைத்து அழகான பெண்ணொருத்தி நிற்கிறாள் (ஸ்பெஷல் எபெக்ட்? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்?) அந்தப் பெண்ணின் அழகைப்பற்றி சொல்கிற பொழுது "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா ! ஆசைக்கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா ("அழகுக்கு இவள்தான் தாய் நாடா?" என்கிற வரியை இங்கிருந்துதான் சுட்டிங்களா, மிஸ்டர். பழனிபாரதி?) கவிதை கனி பிழிந்து சாற்றினிலே பண் கூத்தெனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி அதனோடு இன்முகத்தை தான்கலந்து மேனி வகுத்தான் பிரம்மன் என்பேன்". என்று சொல்கிறார் பாரதி. அப்படிப்பட்ட பெண்ணை கட்டியனைத்து மோகப்பெரு மயக்கத்தில் சிறிது நேரம் இருந்த பின்பு (நம்ம தமிழ் படத்திலே வழக்கமா இந்த நேரத்தில் ஒரு டூயட் வரும்) சோலை, சேலைக்குயில் எல்லாம் மறைந்து விட பழம்பாய், பண்டைச் சுவடி. பத்திரிக்கைக் கூட்டம் . எழுதுகோல் இவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறார் பாரதி (அடச்சே! அவ்வளவும் கனவு!) அவ்வளவும் மாலை அழகின் மயக்கத்தில் உள்ளத்தில் தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்று சொல்கிறார் (சே ! என்ன ஓர் அருமையான திரைக்கதை) அத்தோடு விட்டு விடாமல் "ஆன்றதமிழ் புலவீர் கற்பனையேயானாலும் வேதாந்தமாக விரித்து பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தா கூறீரோ ரோ!" என்று சொல்லி பாரதி குயில் பாட்டில் வேதாந்த விளக்கம் ம.ப.பெரியசாமி தூரன் எழுதியபாரதி நூல்கள் ஒரு திறனாய்வு என்ற புத்தகத்தில் கிடைத்தது. அதன்படி,
"குயில் பாட்டில், குரங்கள் எப்போதும் சலித்துக்கொண்டிருக்கும் மனத்தின் குறியீடாகவும் மாடன் என்பது மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) ஒன்றான ஆணவத்தின் குறியீடாகவும், குயிலி ஜீவாத்மாவின் குறியீடாக வந்துள்ளனர். ஆணவமாகிய மாடனும் எப்போதும் சலித்துக்கொண்டிருக்கும் குரங்கனும் எதேச்சையாக இருக்கும் பொழுது பேய்களாக மாறி பல குறும்புகள் செய்கின்றனர். ஆனால் பரமாத்மாவின் எதிரில் அவற்றின் வல்லமை ஒடுங்கிப் போய் மறைகின்றன. அதைப் போலவே ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாவதற்கு முன் அலைபாய்வது இயல்பு.அதனால் தான் குரங்கிடமும் மாட்டிடமும் காதல் கொள்கிறது. ‘நீயே கதி நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்' என்று ஜீவாத்மா பரமாத்வாவிடம் ஐக்கியமாகும் பொழுது உண்மையான காதல் ஏற்பட்டு இரண்டும், ஒன்றோடு ஒன்று கலக்கின்றன.