பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி -3

பி.சுசீலா- ஒரு சாதனை சரித்திரம்

Sometimes the mist overhangs my path, And blackening clouds about me cling; But, oh, I have a magic way To turn the gloom to cheerful day—I softly sing. – James Weldon Johnson

சில நேரங்களில் மூடுபனி என் பாதையை மூடுகிறது, மேலும் என்னைச் சுற்றி கருமேகங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன; ஆனால், ஓ, என்னிடம் ஒரு மந்திர வழி உள்ளது இருளை மகிழ்ச்சியான நாளாக மாற்ற ... நான் மென்மையாகப் பாடுகிறேன்.  – ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன்

வெற்றிப்பாதையில் பயணம் என்பது ஒன்றும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமானதல்ல.

சிலருக்கு “வந்தே பாரத்” ரயில் பயணம் போல ஆரம்பத்திலேயே வேகமெடுத்து டாப் கியரில் செல்லும்.

சிலருக்கு எக்ஸ்பிரஸ் வேகத்திலும், இன்னும் சிலருக்கு பாசஞ்சர் ரயில் தொடர் போலவும் நின்று நிதானமாகப் பயணிக்கும்.

பி. சுசீலாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் பயணம் மிக மிக நிதானமாகத்தான் நகர்ந்தது.

அதற்கு காரணம் அப்போது திரை இசைத் துறையில் நிலவி இருந்த சூழ்நிலைதான்.

பி.சுசீலா திரைத் துறையில் காலெடுத்து வைத்த நேரத்தில் அவருக்கு முன்னதாகக் கோலோச்சிக் கொண்டிருந்த பாடகியர் அநேகம். அப்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உச்சத்தில் பி. லீலாவும், ஜிக்கியும் இருந்தார்கள்.

சற்று கனத்த சாரீர வளம் படைத்த பி.ஏ. பெரியநாயகி, யு.ஆர். ஜீவரத்தினம், டி.வி. ரத்னம், பாகீரதி, ராணி, யு.ஆர்.சந்திரா, டி.எஸ். பகவதி.

மென்மையான குரலுக்கு ஆர்.பாலசரஸ்வதி.

இவர்களுக்கெல்லாம் மேலாக சங்கீத வீராங்கனை எம்.எல். வசந்தகுமாரி.

இப்படிப்பட்ட திறமைசாலிகளின் கூடாரமாகத் திரை இசைத்துறை இருந்து வந்தது.

அப்போதெல்லாம் சட்டென்று கற்பூரம் போல இசை அமைப்பாளர்கள் ஒருமுறை சொல்லிக் கொடுப்பதை அப்படியே பற்றிக்கொண்டு பாடுவதில் பி.ஏ. பெரியநாயகி, பி. லீலா, ஜிக்கி.

எம்.எல். வசந்தகுமாரி ஆகியோர் மகத்தான திறமைசாலிகளாக இருந்து வந்தார்கள்.

ஒரு படத்தில் கிட்டத்தட்ட குறைந்த பட்சம் பன்னிரண்டு பாடல்களாவது இருந்து வந்தன. ஆகவே நேரம் மிகவும் கவனமாகக் கையாளப் படவேண்டிய நிலைமை.

ஒரு பாடல் மொத்தம் மூன்று சரணங்களாக இருந்தால் முதல் இரண்டு சரணங்கள் சரியாகப்பாடிவிட்டு கடைசி சரணத்தின் கடைசி வரியில் ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டாலும் கூட மறுபடி முதலில் இருந்தே பாடியாக வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மொழி தெரிந்தவர்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதையே பாதுகாப்பானதாக இசை அமைப்பாளர்கள் கருதி இருக்கலாம்.

பலமுறை ஒத்திகை – பாடுபவருக்கு மட்டும் என்று அல்ல – வாத்தியக் குழுவினருக்கும் கூட –அதன் பிறகு ட்ராக் பதிவு – அதற்கு பிறகுதான் ஒலிப்பதிவு – என்று இருக்கக்கூடிய சூழலில் பாடுவதற்கு சவாலாக இருக்கக்கூடிய பாடலை ஒரே டேக்கில் எந்த தவறும் இல்லாமல் பதிவு செய்தாக வேண்டும். அதில் யாரோ ஒருவரால் தவறு நேர்ந்தால் கூட – அது வரை கொடுத்த உழைப்பு எல்லாமே வீணாகிவிடும். ஒரே பதிவில் முடியாமல் ஒவ்வொரு பாடலுக்கும் ஏகப்பட்ட பதிவுகள் வீணானால் அன்றைய நாளின் பெரும்பகுதியை அது இழுத்துக்கொண்டு விடும்.

இப்படி ஒரு நாள் வீணானால் தயாரிப்பாளர்களுக்கு மறுபடி மறுநாள் ரெக்கார்டிங் என்றால் அது வீண் செலவு தானே? அப்படி அனாவசியச் செலவைத் தயாரிப்பாளர்களுக்கு வைக்கக்கூடாது என்ற எண்ணமும் சேர்ந்துகொள்ளவே புதியதாக மொழி தெரியாத பாடக / பாடகியரைத் தவிர்த்தே வந்தனர் இசை அமைப்பாளர்கள்.

இந்தக் காரணத்தினால் தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த இசை அமைப்பாளர் டி. ஆர். பாப்பா அவர்கள் பி. சுசீலாவை ஒதுக்கிய சம்பவம் நடந்தது.

ஆகவே பி. சுசீலாவின் இசைப்பயணம் நிதானமாகவே ஆரம்பித்து வேகம் எடுக்கவே தயங்கிய விதத்தில் தான் இருந்து வந்தது.

1954-ஆம் வருடம் ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் தான் பாடியிருந்தார் பி.சுசீலா.

தமிழ், தெலுங்கு என்று இரு மொழித் தயாரிப்பாக ஒய்.ஆர்.சுவாமி அவர்கள் இயக்கத்தில் என்.டி.ராமராவ், சௌகார் ஜானகி இணைந்து நடித்து வெளிவந்த “பணம் படுத்தும் பாடு” என்ற படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து டி.ஏ.கல்யாணம் அவர்களின் இசையில் “என் நெஞ்சில் பிரேமை கீதம்” என்ற பாடலைப் பாடி இருந்தார் பி.சுசீலா. இந்த ஒரே படம் தான் இந்த வருடம் பி.சுசீலாவின் தனித்துவமான குரலில் வெளிவந்தது.

அதற்காக நம்பிக்கை இழக்கவோ சோர்வடையவோவில்லை அவர். எப்படியும் தனக்கான நேரம் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையுடன் தனக்கு கிடைத்தது சொற்ப வாய்ப்பு என்றாலும் அதிலும் தனது முழுத்திறமையையும் காட்டி முழுமையான உழைப்பைக் கொடுத்தார் அவர். நேர்மையான அந்த உழைப்பு வீண்போகவில்லை.

அடுத்தவருடம் அதாவது 1955-ஆம் ஆண்டில் வெளிவந்த நாராயணன் கம்பெனியின் தயாரிப்பான “கணவனே கண் கண்ட தெய்வம்” திரைப்படம் அவரது திறமையை எடுத்துக்காட்டி இதோ இருக்கிறார் இன்னொரு சிறந்த பாடகி என்று அவரை தனித்து அடையாளம் காட்டியது.

“கணவனே கண் கண்ட தெய்வம்” மாபெரும் வெற்றியையும் வசூலையும் வாரிக்குவித்த படங்களில் ஒன்று.

நடிப்புச் செல்வம் ஜெமினி கணேஷ் அவர்களின் டாப் டென் படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக இந்தப் படத்திற்கும் ஒரு இடம் உண்டு. அவரது அழகான முகத்தின் வசீகரத் தோற்றத்திற்காகவே ஆரம்பத்தில் அவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார் தயாரிப்பாளர் நாராயண அய்யங்கார்.

மறுநாள் ஒரு பரதேசி போல அறுவருக்கத்தக்க வேடம் பூண்டு வந்து அவரை மிரள வைத்து சான்ஸ் வாங்கினார் ஜெமினி.

இந்தப் படத்தில் கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய இரண்டு பாடல்கள்,வி.சீதாராமன் எழுதிய ஒரு பாடல், கே.வி.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஒரு பாடல் – என்று நான்கு பாடல்களைப் பாடும் வாய்ப்பு பி. சுசீலாவிற்குக் கிடைத்தன.

அதுவும் இரு வேறு கதாபாத்திரங்களுக்கு ஒரே பாடகி. கதாநாயகி அஞ்சலிதேவிக்கும், எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த லலிதாவிற்கும் இவரே பாடவேண்டும். அருமையான முதல் முத்தான வாய்ப்பு.

இசை : ஹேமந்த் குமார். வங்காளத்தை சேர்ந்த இவர் தமிழில் இசை அமைத்த ஒரே படம் இது. ஆரம்பத்தில் கதாநாயகி அஞ்சலி தேவிக்கு மட்டுமே பி.சுசீலா பாடுவது என்று இருந்தது.

நாகராணி கதாபாத்திரத்தில் முதலில் பி. பானுமதி ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு பாடல் காட்சி உட்பட பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பி. பானுமதி படத்திலிருந்து விலகிக்கொள்ள லலிதா (பத்மினி) அந்த வேடத்தில் நடித்தார்.

இரண்டு நடிகைகளுக்கு ஒரே பாடகி குரல் கொடுப்பது அதுவரை பாடகியின் திறமைக்குத்தான் முதலிடம் என்று இருந்த நிலையை அடியோடு மாற்ற பி. சுசீலாவிற்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

பின்னணிப் பாடகிக்கென்று புது இலக்கணமே வகுத்துவிட்டார் பி.சுசீலா.அப்போதெல்லாம் வானொலி தான்.

வானொலியில் பாடல்களைக் கேட்கும்போது இது லீலா பாட்டு – இது எம்.எல்.வி. பாட்டு – என்ற அளவில் அதுவரை பாடகியரின் பெயரை முன்னிறுத்தித் தான் பாடல்களைக் கேட்டு வந்தார்கள்.

படத்தோடு பார்க்கும்போது காட்சி அமைப்பில் மனம் ஈடுபடுவதால் அங்கு நடிக்கும் நட்சத்திரம் முன்னணியில் வருவது இயற்கை.

ஆனால் ..

“கணவனே கண் கண்ட தெய்வம்” படத்தில் பி. சுசீலா பாடிய பாடல்களை ரேடியோ பெட்டியின் முன்னால் அமர்ந்து கேட்டபோது முதல் முதலாகப் பாடலில் காட்சியும் பாடலுக்கு நடித்த நட்சத்திரமும் கேட்பவர் மனதில் நிழலாட ஆரம்பித்தன.

இது ஒரு மிகப் பெரிய மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். பாடலைக் கேட்பவர் மனக்கண் முன் அந்த நட்சத்திரமே சொந்தக்குரலில் பாடுவது போல இருக்கவேண்டும். அதே சமயத்தில் பாடகியின் குரலும் சேர்ந்து நடிக்கவேண்டும்.

இங்குதான் தனித்து நிற்க ஆரம்பித்தார் பி. சுசீலா.

அதுவரை யாருமே செய்யாத இந்த மிகப்பெரிய மாற்றத்தை அனாயாசமாகச் சாதித்துக் காட்டினார் பி. சுசீலா.

“எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ” -

“உன்னைக் கண் தேடுதே” – ஆகிய இரண்டு பாடல்களை லலிதாவிற்காகப் பாடினார் பி. சுசீலா.

“அன்பில் மலர்ந்த நல் ரோஜா” – “ஓ மாதா மாதா” ஆகிய இரண்டு பாடல்கள் கதாநாயகி அஞ்சலிதேவிக்காக.

“எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ” – பாடல் சுசீலாவின் ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும். இரண்டே இரண்டு வினாடிகள் இசைக்கும் அந்த ஹம்மிங்கைத் தொடர்ந்து மாண்டலினும், ஷெனாயும் தபேலாவின் தாளக்கட்டுடன் நேர்த்தியாக இணையும் முன்னிசையைத் தொடர்ந்து “எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ” என்று ஆரம்பிக்கும் பல்லவியில் “துள்ளி” என்ற ஒற்றை வார்த்தையை சுசீலாம்மா உச்சரிக்கும் அழகே தனி. அந்த ஒற்றை வார்த்தை உச்சரிப்பே – தமிழில் “ல”, “ள” வேறுபாட்டை நன்றாக உணர்ந்துகொண்டு அவர் மொழியையும் பாடல் வரிகளையும் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு பாடி இருக்கிறார் என்பதற்கு சான்று. (3198) எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ- Kanavane Kankanda Deivam - 1955 - YouTube

உன்னைக் கண் தேடுதே
உன்னைக் கண் தேடுதே

“உன்னைக் கண் தேடுதே” பாடல் போதையுடன் விக்கல் சேர்ந்து பாடவேண்டும்.  சுசீலாவின் குரல் அருமையாக நாகராணியின் மயக்கத்தை வெளிப்படுத்தியது.

பாடலின் இறுதியில்

“உன்னைக் கண் தேடுதே.. ஹே.ஹே. ஹே.

உற ங். ..கா....ம...லே. .. என் ....மனம் வாடுதே.. உன்னை..ம்க். கண்...தேடு...தே.”

என்று சிரிப்பும் விக்கலும்..கலந்து அவர் உதிர்க்கும் .. சங்கதிகள் ..  அப்படியே நம்மையும் சொக்கவைக்குமே. (3198) உன்னை கண் தேடுதே- கணவனே கண்கண்ட தெய்வம் - YouTube

இந்தப் பாடல் ஆரம்பத்தில் பி. பானுமதி சொந்தக் குரலில் பாடிப் படமாக்கப்பட்ட பாடல்.

மறுபடி பதிவாக்கம் செய்யும் போது பி.சுசீலாவை பாடலை மட்டும் பாடவைத்துவிட்டு விக்கல் பகுதி வந்தபோது ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த பானுமதியின் விக்கலை அப்படியே பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் ஒரு கருத்தும் உண்டு.

நடிகை பானுமதியே இந்தக் கருத்தைப் பதிவும் செய்திருக்கிறார். 

ஆனால் ஜெயா டி.வி.யின் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டபோது பி.சுசீலா அவர்கள் “உன்னைக் கண் தேடுதே-பாட்டு எனக்கு பெரிய அளவுலே பெயர்  வாங்கிக்கொடுத்த பாட்டு; ரொம்ப கஷ்டப்பட்டு பாடின பாட்டு. விக்கல் எல்லாம் கூட வரும் அந்தப் பாட்டிலே” என்று கூறி இருக்கிறார். 

பிலிம் சுருளில் ஒரு முறை செய்த பதிவை அழித்துவிட்டு மறு பதிவு என்னும் போது முதலில் பதிவாகி இருந்த அனைத்துமே – விக்கல் உட்பட – அழிந்து விடத்தான் செய்யும். மேலும் ஒலிப்பதிவில் தொழில் நுட்ப வசதி குறைவான அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட இணைப்பு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் என்பதால் சந்தேகத்தின் பலனை நாம் பாடிய சுசீலாம்மாவுக்கே கொடுத்துவிடலாம்!.

லலிதா ஏற்றிருந்த  நாகராணி கதாபாத்திரத்திற்குப்  பாடும்போது அவரது குரலில்  ஒரு தனி கம்பீரமும், உற்சாகமும் அதே சமயம் பெண்மையின் நளினமும் தெறிக்கும்.

கதாநாயகி அஞ்சலிதேவிக்காக “அன்பில் மலர்ந்த நல் ரோஜா – கண் வளராய் என் ராஜா” என்று ஒரு தாலாட்டுப் பாடல்.  தாய்மையின் கனிவும், நேசமும் அந்தக் குரலில் அழுத்தமாகத் தொனிக்கும்.

நாட்டின் இளவரசி அருவெறுக்கத்தக்கத் தோற்றம் கொண்ட ஒரு ஏழைக் கூனனுக்கு மனைவியாகி நாட்டை விட்டே வெளியேறிக் கானகத்தில் ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் குடிசையில் வாழ நேரிடுகிறது.  அவளுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அந்த குழந்தையை தூளியில் இட்டுத் தாலாட்டும் பாடல் தான்  - கதாநாயகி அஞ்சலிதேவிக்காக பி. சுசீலா பாடிய  “அன்பில் மலர்ந்த நல் ரோஜா – கண் வளராய் என் ராஜா”  என்ற வி.சீதாராமனின் பாடல். (3198) Kanavane Kankanda Deivam 1955 -- Anbil Malarntha Nal Roja - YouTube

தனது மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே எல்லாத் தாய்மார்களின் ஆசையாக இருக்கும்.

இந்த நாயகியோ அரண்மனையில் சுகபோகத்தில் இருந்தவள். தான் பிறந்தபோது இருந்த நிலைமைக்கும் இப்போது தனது மகன் பிறந்திருக்கும் போது இருக்கும் நிலைமைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். 

அன்பில் மலர்ந்த நல் ரோஜா-பாடல் காட்சி
அன்பில் மலர்ந்த நல் ரோஜா-பாடல் காட்சி

ஆனால் அதை நினைத்து மனம் புழுங்காமல் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை விதையை அவள் தனது தாலாட்டில் விதிக்கிறாள்:

“தங்கத் தொட்டிலில் தாலாட்டியே

சுகுமாரனே.......... சீராட்டியே

வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே

கொஞ்சிடும் நாள் வந்திடுமே”

“தா...லாட்டியே” என்னும்போது நீண்டு பிறகு நெருக்கத்தில் வந்து நிற்கும் பி. சுசீலாவின் குரல்.

சுகுமா....ரனே..என்று அடுத்தவரியை ஆரம்பிக்கும்போது போது பிறகு மீண்டும் தூரத்தில் சென்று “சீராட்டியே” என்று முடிக்கும்போது அருகாமையில் வந்து முடியும். ஒரு குழந்தையைத் தொட்டிலில்  இட்டு அந்தத் தொட்டிலை  வீசி ஆட்டும்போது எப்படிச் செல்லுமோ அந்த அசைவைப்போலவே நமது சுசீலாம்மாவின் குரலும் முன்னும் பின்னுமாகப் பயணிக்கும் அழகே தனி.

வார்த்தைகளும் இசையும் ஒன்றோடு இணைந்து பயணிக்கும் பாடலில் சுசீலாம்மாவின் குளுமைக் குரலும் சேர்ந்து சங்கமிக்கப் பாடலும் தனிக் கவனம் பெற்றுவிட்டது.

ஒரு ஹம்மிங்கோடு ஆரம்பிக்கும் சுசீலாம்மாவின் குரல் பாடல் முழுவதும் மத்யம சுருதியிலேயே பயணிக்கும். இப்போது அந்தக் குரலில் தாய்மையின் முதிர்ச்சி லேசாக தொனிக்கும்.

அதே குரல் தான் .  ஆனால் முதல் இரண்டு பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தொனிக்கும் அழகும் லாவகமும்.. 

அடுத்து கணவன் உயிரைக் காக்க நாகஜோதியை தேடித் பயணிக்கும் முன் அம்பிகையின் ஆலயத்தில் நெஞ்சம் உருக மனைவி வேண்டும் காட்சிக்கான பாடல்.

“ஓ.. மாதா.  மாதா.

ஆஆஆ வந்தருள் விரைந்து நீ தா.

ஜெகன் மாதா.”

கே.வி.ஸ்ரீநிவாசன் எழுதிய பாடல். நெஞ்சம் பதைக்க அஞ்சலிதேவி வேண்டிப்பாடும் காட்சி படம் பார்க்க வந்த தாய்க்குலத்தின் கண்களை நனைத்தது என்றால் அதில் பாதிப் பங்கு உள்ளம் உருகப் பாடிய பி.சுசீலாவிற்கும் உண்டு. அதே நேரம் கணீர் என்று ஒலித்த அவரது ரவை சாரீரம் பெண்மையின் பலவிதமான பரிமாணங்களையும் பிரதிபலித்தது. (3198) Kanavane Kankanda Deivam 1955 -- Oh Mathaa Mathaa - YouTube

இந்த நான்கு பாடல்களையும் பி. சுசீலா பாடி இருக்கும் விதம் குரலிலேயே வித்தியாசம் காட்டிப் பாடும் ஒரு VARIETY SINGER என்பதை உறுதி செய்து அவரது தனித்துவத்தை அடையாளம் காட்டியது.

அதே வருடம் வெளிவந்த அடுத்த படம் “கோடீஸ்வரன்”.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஸ்ரீராம், ராகினி ஆகியோர் நடிப்பில் சுந்தர்ராவ் நட்கர்னி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.

எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் :

“குலாவும் தென்றல் நிலாவைப் பிரிந்து போகாதென்று நினைக்கிறேன் ” என்று பி. சுசீலா பாட, “போகக்கூடாதென்று நினைக்கிறேன்” என்று ஏ.எம். ராஜா முடிக்கும் பல்லவியுடன் தொடங்கும் பாடல் சுசீலாவின் திறமையை அருமையாக எடுத்துக்காட்டியது.

எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் பி.சுசீலா பாடிய முதல் படம் இதுதான்.அதுமட்டுமல்ல நாட்டியப் பேரொளி பத்மினிக்காகப் பாடிய முதல் பாடலும் இதுதான். (3198) TAMIL OLD--Kulavum thentral nilavai pirivathu--KODEESWARAN - YouTube

பத்மினிக்காக இந்தப்பாடலைப் பாடியவர் ராகினிக்காக “யாழும் குழலும் உன் மொழிதானோ.” என்ற டூயட் பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார்.

இப்படி ஒரே படத்தில் இரு நாயகியருக்காக பாடும்போது தனது குரலில் சுசீலா காட்டிய வித்தியாசம் வாயசைத்து நடிப்பவர்களே பாடுவது போலத் தோன்ற வைத்தது.

அதுவரை பாடிய பாடகியர்கள் யாருமே இந்த அளவுக்கு நட்சத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவுக்கு பாடியதே இல்லை. 

அந்தவகையில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டார் பி. சுசீலா.

தொடர்ந்து வந்த 1956ஆம் ஆண்டு வெற்றிப்பாதையில் அவரது முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி -2

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com