மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்கும் பாத்திமா, லேடி டோக், தியாகராசர் கல்லூரிகளில் தமிழ்த் துறைக்கும் பாடத்திட்டத்தில் முக்கிய வேறுபாடு விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தல். கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட விருப்பப் பாடம்தான் இருக்கும். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் மூன்று விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு. முதலாமாண்டு இரண்டாம் பருவத்தில் விருப்பப் பாடம் என்ற பிரிவில் நாட்டுப்புறவியல், மொழியியல், இதழியல் ஆகிய பாடங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இதழியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அன்றைய காலகட்டத்தில் இதழியல் கல்வி எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உதவுமென்ற நம்பிக்கை நிலவியது. இதழியல் பாடத்தைp பேராசிரியர் சாந்தாவும் எழுத்து பத்திரிகை பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த வள்ளியம்மாள் என்ற ஆய்வாளரும் நடத்தினர்.
இதழியல் பாடம் போதித்த பேராசிரியர் சாந்தா மாணவர்களுடன் நண்பர்களைப்போலப் பழகினார். அன்றைய காலகட்டத்தில் இதழியல் சார்ந்த பாடங்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தன. சில புத்தகங்கள்தான் தமிழில் இதழியல் பற்றி வெளியாகியிருந்தன. சாந்தா மேடம் வெறுமனே இதழ்கள் பற்றிய பாடம் எனப் போதிக்காமல் சமூக விஷயங்களையும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண் பற்றிய புதிர்கள் நிரம்பிய அப்பருவத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை நடைமுறைமூலம் உணர்த்திய பேராசிரியையின் அன்பிற்கு இணை எதுவுமில்லை. தமிழ் இலக்கியம் போதிக்கின்ற மரபு வழிப்பட்ட பேராசிரியைகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கிய சாந்தா அவர்களின் சமூக அக்கறையும் மாணவர்கள் மீதான ஈடு பாடும் முக்கியமானவை. மாணவன் என மட்டம் தட்டாமல், யார் சொல்லுவதையும் புன்முறுவலுடன் கேட்கும் பரிவுணர்ச்சி இயல்பாகவே பேராசிரியைக்கு வாய்த்திருந்தது. இதழியல் பாடத்தில் விளம்பரம் என்ற பிரிவின் முக்கியத்துவத்தைச் சாந்தா மேடம் நடத்திக்கொண்டிருந்தார். அச்சு ஊடக விளம்பரம்தவிர காட்சி ஊடக விளம்பரம் பற்றி விவரிக்கும்போது திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்புவதற்கு முன்னர் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள் பற்றிக் குறிப்பிட்டார். ஒரு மாணவி பசங்களுக்கு லிரில் சோப் விளம்பரம் பிடிக்கும் என்றவுடன் நான் பொண்ணுகளுக்கு லைபாய் சோப் விளம்பரம் பிடிக்கும் என்று சொன்னவுடன் அந்த மாணவி கோபத்துடன் என்னை முறைத்தார். வகுப்பு முடிந்தவுடன் என்னிடம் சண்டைக்கு வந்த மாணவியிடம் ஆம்பளை பசங்கபோலத்தான் பொம்பளப் பசங்க என்றேன்.
இதழியலில் பருவந்தோறும் ஒரு தாள் என்று மொத்தம் மூன்று தாள்கள் எழுத வேண்டுமென்ற நிலையில் நான்காம் பருவத்தில் செய்முறைத் தேர்வும் இருந்தது. ஏதேனும் இரு பொருண்மைகளில் காமிராமூலம் படம் பிடிக்கப்பட்ட நிழற்படங்களை இருட்டறையில் கழுவி, பிரிண்ட் போட வேண்டும். மதுரை நகரிலுள்ள பழமையான கட்டடங்கள், ஏழ்மையில் வாழ்கின்ற மக்களின் குடியிருப்புகள் போன்றவற்றை முன்வைத்துப் படங்களைக் கிளிக்கினேன். பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட ஆய்வகத்தில் பிலிம்களை வேதியியல் திரவத்தில் கழுவி, கறுப்பு வெள்ளைப் படங்களாகப் பிரிண்ட் போட்டோம்.
மதுரை, தினமணி நாளிதழில் இரு வாரங்கள் பயிற்றுநராகப் பயிற்சி செய்ய வேண்டும். நான் தினமும் தினமணி பத்திரிகை அலுவலகம் சென்று எப்படி பத்திரிகை உருவாகின்றது என்பதை நடைமுறையில் அறிந்தேன். தினமணி பத்திரிகை அலுவலகத்தில் இருந்த ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்களுடன் நெருங்கிப் பழகிடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரும் புலமையாளரான ஏ.என்.சிவராமன் தன்னுடைய சேமிப்பில் இருக்கிற நான்காயிரம் புத்தகங்களை வாசிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார். செய்தி நிறுவனம்மூலம் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்து நான் எழுதியதை ஏற்றுக்கொண்ட செய்தி ஆசிரியர் சரியென்று ஒப்புதல் அளித்தார். அந்தச் செய்தி மறுநாள் தினமணி நாளிதழில் பிரசுரமானது. அந்தப் பத்திரிகைச்செய்தி, இப்பவும் என்னிடம் இருக்கிறது. இதழியல் பாடம் படித்ததன் விளைவாகத் தினமணி நாளிதழில் வெளியான என் எழுத்து, மகிழ்ச்சி அளித்தது.
தமிழ்ப் பாடங்களுடன் ஒப்பிடும்போது இதழியல் பாடம் எளிதாகவும் படைப்பூக்கம் மிக்கதாகவும் இருந்தது. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது எங்கள் வீட்டிற்குத் தினமும் வந்த தினத்தந்தி நாளிதழை வாசிக்கத் தொடங்கிய எனக்கு இதழியல் பாடம் எளிதாக இருந்தது. நாளிதழுக்குத் தலையங்கம் எழுதுதல், திரைப்பட விமர்சனம் எழுதுதல் போன்றவை சுயமாக எழுதிட வாய்ப்பு அளித்தது. பள்ளிக்கூட மாணவர்களின் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைக் கண்டறிந்திட களஆய்வுமூலம், மாணவர்களிடம் வினா-விடை பட்டியலைத் தந்து,பெற்ற தகவல்களைப் புள்ளியல் முறையில் ஆய்வுசெய்து நான் எழுதிய திட்டக்கட்டுரை, சாந்தா மேடத்திற்குக் குழப்பத்தைத் தந்தது. அவருடைய வழிகாட்டுதலின்பேரில் சமூகவியல் துறைப் பேராசிரியர் தாராபாய் மேடத்திடம் திட்டக் கட்டுரையைத் தந்தேன். அவர் என்னுடைய புள்ளியியல் அடிப்படையிலான திட்டக் கட்டுரையை வாசித்துவிட்டுப் பாராட்டி, ஒப்புதல் அளித்தார். சாந்தா மேடம் கட்டுரையை ஏற்றுக்கொண்டு முதல் மதிப்பெண் வழங்கினார். அவருடைய தினத்தந்தி பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு எழுதும்போது, ஓர் இயலை என்னுடைய திட்டக் கட்டுரையை அடிப்படையாகக்கொண்டு எழுதியிருந்ததை வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
இதழியல் மாணவர்களின் சார்பில் பல்கலைக்கழகச் செய்திகள் அடங்கிய செய்தி மடல் பிரசுரிக்கலாம் என்று சாந்தா மேடம் விரும்பினார். எல்லா மாணவர்களும் குறிப்பிட்ட தொகையை அளித்து ’செய்திக் களஞ்சியம்’ என்ற இதழ் வெளியிட முடிவு செய்தோம். நானும் பாலகிருஷ்ணனும் விளம்பரங்கள் பெற்று,வெளியிட்டு செலவில்லாமல் இதழ் வெளியிடலாம் என்று ஆலோசனை சொன்னோம். மதுரை நகரிலுள்ள பிரபலமான டெய்லர் கடைகள், பல்கலைக்கழகத்திற்கு எதிரிலுள்ள மூக்கன் தேநீர் கடை போன்ற விளம்பரங்கள் பத்திரிகையில் இடம்பெற்றிருந்தன. மதுரை மணி அச்சகத்தில் டாப்ளாய்டு வடிவத்தில் நான்கு பக்கங்களுடன் வெளியான முதல் இதழைப் பாலகிருஷ்ணனும் இரண்டாவது இதழை நானும் அச்சகப் பொறுப்பேற்று வெளியிட்டோம். இருவரும் இதழுக்கான செய்திகளை எழுதுதல், தலைப்புக் கொடுத்தல், வடிவமைத்தல் போன்றவற்றை நேர்த்தியாகச் செய்திருந்தோம். பல்கலைக்கழக நிர்வாகத்துறைக்கும் பல்வேறு துறைகளுக்கும் செய்திக் களஞ்சியம் இதழை இலவசமாக அனுப்பினோம். செய்திக் களஞ்சியம் இதழ்களின் பிரதிகள் இப்பொழுது என்னிடம் இருக்கின்றன.
அன்று மதுரை நகரில் 09-20 க்குக் கிளம்புகிற பேருந்தைத் தவறவிட்டதால், காலதாமதமாக 10-30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். வளாகத்தில் மாணவமாணவியர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனர். காரணம் என்னவென்று விசாரித்தபோது வரலாற்றுத் துறையில் பேராசிரியர் ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சம்பவத்திற்கு எதிராக நியாயம் கேட்டு மாணவர் படை கிளம்பியிருந்தது. உடனே ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டு முன்வரிசையில் நின்று முழக்கங்களை எழுப்பினேன். தமிழ்த் துறையின் முன்னர் ஊர்வலம் வந்தவுடன் ஆவேசமாக முழங்கினோம். பேரசிரியர்கள் துறை வாசலில் நின்று வேடிக்கை பார்த்தனர். பல்கலைக்கழகத்திற்குள் சுற்றி நகர்ந்த ஊர்வலத்தில் நடந்துபோன நண்பன் பாலுச்சாமியும் நானும் பின்னர் விலகி, தமிழ்த் துறைக்குப் போனோம்.
துறை வாசலில் நின்றிருந்த சாந்தா மேடம் எங்கள் இருவரையும் அவருடைய அறைக்கு வருமாறு கூறினார். நானும் அவனும் பின்தொடர்ந்தோம். என்ன காரணத்திற்காக ஊர்வலம்? என்ற கேள்விக்குப் பாலுச்சாமி மாணவிமீது பேராசிரியரின் அத்துமீறல் என்று ஆவேசமாகப் பதிலளித்தான். அவர் நடந்தது என்ன தெரியுமா? என்று விளக்கினார். பாதிக்கப்பட்ட மாணவி ஊர்வலத்தில் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். ஆசிரியர் கையைப் பிடித்தால் அவள் ‘ போடா’ என்று கையை உதறிவிட்டு வெளியே வர வேண்டியதுதானே என்ற அவருடைய பேச்சு, சரியென்று தோன்றியதால் அமைதியாக இருந்தேன். பாலுசாமி,” ஆசிரியர் அகமதிப்பீட்டை வைத்து அதிகாரம் செலுத்தும்போது என்ன செய்வது?’என்று சொன்னான். ஒரு பெண் எந்த இடத்திலும் தன்னுடைய சுயமரியாதையை அவள்தான் காத்திட வேண்டும். பாடம், அகமதிப்பீடு அவ்வளவு முக்கியமானவையல்ல என்று சாந்தா மேடம் சொன்னதை இருவரும் ஏற்றுக்கொண்டோம். ஊர்வலத்தில் போனது தவறு என்று ஒப்புக்கொண்டேன் அந்தச் சம்பவமும் மேடத்தின் நுணுக்கமான பார்வையும் என்னுடைய கல்லூரிப் பணியின்போது பெரிதும் எனக்கு உதவின.
தமிழ் மொழிப் பாடத்தைப் பிற துறை சாரந்து விரித்து, வேலை வாய்ப்புக்கு வழி ஏற்படுத்திடும் இதழியல் பாடம், ஒருவகையில் மாணவரின் எழுத்துத் திறனை மேம்படுத்திட உதவியது. காலந்தோறும் தமிழ் என்ற பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்ட இதழியல் பாடத்திட்டத்தை வடிவமைத்த பேராசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
(தொடரும்)
( தொடரும்)
வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -1
வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -2
வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -3
வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -4
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp