பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரியும்போது பெரும்பாலான மாணவர்கள் ஒருவிதமான கெத்து மனநிலையில் இருந்தனர். எதிர்கால வாழ்க்கை பற்றிய தவிப்பு ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சியான மனநிலையில் திரிந்தோம். வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், அரசியல் அறிவியல் போன்ற துறைகளில் படித்த மாணவர்களில் சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தனர். பதின் பருவம் கடந்த வயதில் படித்துக்கொண்டிருந்த பெரும்பான்மையான மாணவர்களில் சிலர் காதல் வயப்பட்ட மனநிலையில் ஏங்கினாலும் யதார்த்தச் சூழலில் காதல் கானல் நீராகக் காட்சியளித்தது. வளாகத்தில் புன்முறுவலுடன் கடந்து செல்கின்ற மாணவிமீது மையல்கொண்ட சிலர் சோக மனதுடன் இருந்தனர். மரத்தடிகளிலும் கேண்டீனிலும் துறை வாயிலிலும் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் கதைத்தவர்களைக் காதல் இணை என்று வெளியே இருந்து பார்க்கின்றவர்களுக்குத் தோன்றுகின்ற கதையாடல், தவறானது. நூலகத்தின் வாசிப்பு அறையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிய ஜோடிகள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்திட வாய்ப்பில்லை என்றுதான் எனக்குத் தோன்றும். பொருளாதார ஏற்றத்தாழ்வைவிட சாதி பெரிய தடையாக விளங்கியது. ஆதிக்க சாதிப் பெண் அன்புடன் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னாலும் உயிர் பயத்தினால் விலகிப் போன நண்பனை எனக்குத் தெரியும். ஒருவிதமான முதிர்ச்சியும் பக்குவமும் மிக்க பல்கலைக்கழக மாணவமாணவியர் சமூகச் சூழலைக் கருத்தில்கொண்டு காதல் விவகாரத்தில் ஒதுங்கியே இருந்தனர். அதேவேளையில் வளாகமெங்கும் ஆணும் பெண்ணும் உற்சாகமாகக் கதைத்தனர். அந்தக் காலத்தில் கடலை போடுதல் என்ற சொல் மாணவர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது. கடலை என்ற சொல் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் எப்படி வந்தது என்று பலரும் அறியாதபோதும் பிரபலமாக விளங்கியது.
மதுரை நகரத் தெருக்களில் தள்ளு வண்டியில் எரிகின்ற அடுப்பில் வாணலியில் மணலைச் சூடாக்கி அதில் நிலக்கடலையைப் போட்டு, வறுத்தெடுத்துச் சூடான கடலை விற்பனை நடைபெறும். விற்பனையாளர், ஏற்கனவே வறுத்த கடலை விற்பனையாகாதபோது, சட்டியில் இருக்கிற மணலை வெறுமனே வறுத்துக்கொண்டு பாவ்லா காட்டுவார். அந்த நிகழ்வு எப்படி மாணவமாணவியர் பேச்சைக் குறிப்பதாக மாறியது புலப்படவில்லை. எவ்விதமான காதல் நோக்கமும் இல்லாமல் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் மணிக்கணக்கில் அரட்டையடித்துக் கொண்டிருத்தல் கடலை போடுதல் எனப்பட்டது. நாட்டுக் கடலை, கம்பெனிக் கடலை , வறுத்த கடலை போன்ற சொல்லாடல்களும் வழக்கினில் இருந்தன. சிலர் கடலை போடுவதில் வல்லுநராக விளங்கினர். காதலும் காமமும் அற்ற பேச்சுகள் சாத்தியமென்ற புரிதலுடன் நானும் என்னுடைய நண்பர்களும் வெட்டியாகக் கடலை போட்டோம். ஏதாவது ஒரு ஜோடி தீவிரமாகக் காதல் வயப்பட்டிருப்பதை அறிந்தபோது மரியாதையுடன் ஒதுங்கிப் போனோம். அதேவேளையில் மாட்டிக்கிட்டானுக என்று நண்பர்களுக்குள் கிசுகிசு நிலவியது.
முதலாமாண்டு படிக்கும்போது தினமும் மதுரை சந்திப்பில் ரயிலில் ஏறி பல்கலைக்கழகம் வருவேன். நடைமேடையில் காத்திருக்கும் வேளையில் பேதமில்லாமல் எல்லோரும் பேசுவோம். பல்கலைக்கழக நிலையத்தில் இறங்கி, தமிழ்த்துறை வரை பேசிக்கொண்டு நடந்து வருவோம். ஒரு தலை ராகம் திரைப்படம் கொடி கட்டிப் பறந்த காலம். இரயிலில் இருந்து இறங்கி நடந்து செல்கின்ற மாணவிகளைப் பின்தொடர்ந்து சில மாணவர்கள் தினமும் செல்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது என்றைக்குத் தன்னுடைய காதலைச் சொல்லுவான் என்று யோசித்திருக்கிறேன். அந்த மாதிரிக் காதல்கள் வெற்றியடைய வாய்ப்பில்லை. மாலைவேளையில் மதுரையை நோக்கிப் பயணிக்கிற ரயிலுக்குக் கிழக்கே போகும் ரயில் என்று பெயர் சூட்டியிருந்தோம். அந்த ரயில் மதுரை சந்திப்புக்குள் நுழைவதற்கு முன்னர் தினமும் பழங்காநத்தம் பகுதியில் சிக்னலுக்காகக் காத்திருக்கும். நானும் சில நண்பர்களும் ரயில் பெட்டியை விட்டு இறங்கி, இஞ்சினை நோக்கி நடந்து போகும்போது படிக்கட்டில் அமர்ந்திருக்கிற மாணவிகள் ஏன் ரயில் நிற்கிறது என்று கேட்பார்கள். நாங்கள் டயர் பஞ்சர் என்று பதிலளிப்போம். வழக்கமாகத் தினமும் ரயில் இஞ்சினை இயக்குகிற ஓட்டுநர்கள் எங்களுடைய நண்பர்களாகி விட்டனர். சில நாட்களில் இஞ்சினுக்குள் ஏறி, நிலக்கரியை அள்ளி, எரிகின்ற அடுப்புக்குள் வீசியிருக்கிறேன். பயங்கரமான சூட்டில் இஞ்சினை ஓட்டுவது பெரிய துயரமான வேலை.
தமிழ்த் துறைக்குச் சிறிது தொலைவில்தான் மகளிர் விடுதி இருந்தது. வகுப்பறை மாணவிகளின் அழைப்பை ஏற்று அவ்வப்போது மகளிர்விடுதிக்குப் போயிருக்கிறேன். விடுதியிலுள்ள பார்வையாளர் அறையில் அமர்ந்துகொண்டு, தகவல் சொல்லி அனுப்பினால் வருகின்ற தோழிகளிடம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். முதல் தடவை போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது. பொதுவாக விடுதியில் தங்கிப் படிக்கிற மாணவிகள், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து அரட்டையடிப்பதை விரும்பினர். எனவே மாலைவேளையில் மகளிர் விடுதி பார்வையாளர் அறையிலும் எதிரே இருக்கிற மரத்தடிகளிலும் மாணவியரைப் பார்க்க வந்த மாணவர் கூட்டம் நிரம்பி வழியும்.
என்னுடன் படித்த விடுதி மாணவி, நான்கு நாட்களாக வகுப்புக்கு வரவில்லை. என்ன காரணமென்று விசாரித்தபோது காய்ச்சல் என்று வகுப்புத் தோழிகள் மூலம் அறிந்தேன். உடல் நலமில்லாத தோழியைப் பார்த்து வரலாம் என்று நானும் நண்பன் பாலகிருஷ்ணனும் விடுதிக்குப் போய், பார்வையாளர் அறையில் காத்திருந்தோம். சுமார் கால் மணி நேரம் கழிந்திருக்கும். எங்களுடைய தோழி புன்னகையுடன் கையில் தேநீர்க் கோப்பைகளுடன் வந்தார். அப்புறம் என்ன? வழக்கம்போல ஒரே அரட்டை. அரை மணி நேரம் கழிந்தபிறகுதான் நினைவுக்கு வந்தது அவருக்குக் காய்ச்சல் என்று. அப்புறம் என்ன? காய்ச்சல் பற்றி அசடு வழிய விசாரித்தோம். காய்ச்சலில் நான்கு நாட்களாக வாடி வதங்கியிருப்பார் என்ற எதிர்பார்ப்பினுக்கு மாறாகப் புதிய சேலை உடுத்தி, முகத்தில் பவுடர் பூசி உற்சாகத்துடன் வந்தவரைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து போச்சு.
இரண்டாமாண்டில் படிக்கும்போது ஆசிரியர் அறைக்குப்போய் பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களிடம் பாடம் தொடர்பாக ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது மக்கள் உரிமைக் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதனால், தி.சு.ந. சாரிடம் அவ்வப்போது துண்டறிக்கையை அளித்து நன்கொடை வாங்குவது வழக்கம். அவர் எப்பொழுதும் கேலியாகப் பேசுவார். அவர் என்னிடம் “ நீ பல்கலைக்கழத்தில் படிக்குற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்டார். நான், “ எம்.ஏ., படிச்சு முடிக்கணும் வேலைக்குப் போகணும் அப்புறம்தான் கல்யாணம்” என்று பதில் அளித்தேன். அவர் விடாமல், “ நம்ம யூனிவர்சிட்டியில் படிக்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணுவாயா?’ என்றார். ”இருவருக்கும் பிடித்திருந்தால் நம்ம யூனிவர்சிட்டி பொண்ணை நிச்சயம் கல்யாணம் பண்ணுவேன். சரி, இப்ப எதுக்கு இதைக் கேட்குறீங்க” என்றேன். அவர் அண்மையில் நடந்த சம்பவத்தை விவரித்தார். மதுரையில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் முடிவாயிடுச்சு. அப்புறம் அந்தப் பெண் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று அறிந்தவுடன் கல்யாணம் நின்றுவிட்டது. இதைப் பற்றி நீ என்ன சொல்றே? என்றார். எனக்கு ஒரே கோபம். ”சார் அவனுக முட்டாளுங்க. நம்ப கேம்ப்ஸ்ல அப்படியொன்றும் பொண்ணுக கண்டபடி திரியலை. நம்ம பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் தங்களுடைய லிமிட்டேஷன் தெரியும். வெளியே வீட்டுக்குள்ளேயே இருக்குற பொண்ணுகதான் யோக்கியம்ங்கிறது சரியில்லை.” என்று ஆத்திரமாகச் சொன்னேன். இந்நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் ஆண்-பெண் உறவு பற்றிய சமூக மதிப்பீட்டின் வெளிப்பாடாகும். அன்றாட வாழ்வில் சாதாரணமாக ஆணும் பெண்ணும் பேசினாலே தவறுதலாகக் கற்பிதம் செய்கின்ற பொதுப்புத்தி, இன்றைக்கு மாறியுள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது.
(முடிந்தது)