பி. சுசீலா
பி. சுசீலா 
தொடர்கள்

இசையரசி - 5

பி.ஜி.எஸ்.மணியன்

இசை புனிதமானது : சிலிர்க்க வைக்கும் மாயாஜால அனுபவம்

உங்கள் இதயத்தை இழுக்கும் இன்னிசையின் தியானம்

மிகவும் இனிமையானது மற்றும் வசீகரமானது.

– டாக்டர். கீதா ராதாகிருஷ்ண மேனன்.

“வணங்காமுடி” – முதல் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ராட்சச கட் அவுட் வைத்து விளம்பரம் செய்யப்பட்ட படம்.

நடிகர் திலகம்,நடிகையர் திலகம், ராஜசுலோசனா, எம்.என். நம்பியார், நாகையா, கண்ணாம்பா, தங்கவேலு, எம். சரோஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற திரைப்படம்.

ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்று நால்வர் இணைந்து தயாரித்து ஆளுக்கு ஒன்றரை லட்சம் லாபம் சம்பாதிக்க வைத்த படம்.

பாடல்கள் அனைத்தையும் தஞ்சை ராமையாதாஸ் அவர்களையே எழுதவைத்து அவருக்கு பாடலாசிரியர்கள் வரிசையில் நிலையான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

இசைச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதனின் அற்புதமான இசை படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த படம்.

இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் மேலாக ஜி. ராமநாதனின் பாசறையில் நமது இசை அரசியின் திறமையை பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர வைத்த படம்.

பி. சுசீலா அவர்களுக்கு ஒரு தெளிவான அழுத்தமான முகவரியை ஏற்படுத்திக் கொடுத்த படம் என்று கூட “வணங்காமுடி”யைச் சொல்லலாம்.

படத்தின் டைட்டில் காட்சியே அந்தக் கானதேவதையின் குரலோடுதான் ஆரம்பமாகும்.

“ராஜயோகமே பாரீர்” என்ற பல்லவியோடு இணைந்த பி. சுசீலாவிற்கு உண்மையிலேயே ராஜயோகம் ஆரம்பமானது இந்தப் படத்தில் தான்.

“பீம்ப்ளாஸ்” (ஆபேரி என்றும் இதனைச் சொல்வார்கள்) ராகத்தில் ஜி. ராமநாதன் அமைத்த பாடல்.

ஆனால் பல்லவி கோரஸ் பாடகியரின் குரலில் தான் துவங்குகிறது. “ராஜயோகமே பாரீர்” என்று கோரஸ் குரல்கள் மத்யம ஸ்ருதியில் ஒலிக்க “ஹோ..ஹோ...” என்று பி. சுசீலாவின் குரலில் ஒரு சிறு ஹம்மிங். தொடர்ந்து “வாழ்வினிலே ஒரு நாள்..அதே திருநாள்...” என்று மறுபடி கோரஸ் பாடகியரின் உற்சாகமான தொடர்வு.

நமது இசை அரசியின் சாம்ராஜ்யம் சரண வரிகளில் தான் ஆரம்பமாகிறது.

“விண்மேவும் தாரா ....... விளையாட வாராய்...

பண்பாடி ஜோராய் படகோட்ட வா...ராய்.....

“விண்மேவும் தாரா..” என்று நட்சத்திரங்களை அழைக்கும் சுசீலாவின் குரல் சரணத்தின் ஆரம்ப வரிகளிலேயே உச்சத்தை எட்டிவிடும். வானத்தில் இருக்கும் தாரகைகளை அழைக்க வேண்டுமானால் குரல் உச்சத்திற்குத் தானே போகவேண்டும். விளையாட வாராய்...என்று

உச்சத்தில் சஞ்சாரம் செய்து நின்ற கானதேவதையின் குரல் அடுத்த வரிகளில் கீழே இறங்கி..

“பண்பாடி ஜோராய் படகோட்ட வா...ராய்.....” என்று படகோட்ட அழைத்து வந்துவிட்டதால்

சமத்தில் சஞ்சாரம் செய்யும் அழகே தனி. அந்தத் தேன்குரலில் வெளிப்படும் சங்கதிகளில்தான்

எத்தனை அழகு.! (3198) RAAJA YOGHAMEY PAAREER ANURAAGHA SSKFILM021 PS GROUP @ VANANGHKAAMUDI -YouTube

இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன்.

இந்த இடத்தில் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் பாடக பாடகியருக்கு கற்றுக்கொடுக்கும் விதமே தனி. முதல்நாள் பக்க வாத்தியங்கள் எதுவும் இல்லாமல் பாடல் வரிகளைத் திரும்பத் திரும்பத் தான் நினைக்கும் “எபெக்ட்” வரும்வரை அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொடுப்பார்.

அடுத்த நாள் ஹார்மோனியம், தபேலாவுடன் ஒத்திகை. அதற்கு அடுத்த நாள் முழு வாத்தியக்குழுவுடன் ஒத்திகை. அதில் அவருக்குப் பூரணத் திருப்தி ஏற்பட்ட பிறகுதான் பாடல் பதிவுக்கே செல்வார்.

அந்த வகையில் பி. சுசீலாவின் முழுத் திறமையும் வெளிப்படும் விதமாக அவரை வேலை வாங்கி “ராஜயோக’த்தை அவருக்கு ஆரம்பமாக்கி வைத்தார் ஜி. ராமநாதன்.

அடுத்து முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்திலேயே அவர் அமைத்த தோடி ராகப் பாடலான “என்னைப்போல் பெண்ணல்லவோ உலக இருள் நீக்கும் கண்ணல்லவோ தேவி...” என்ற தோடி ராகப் பாடலைப் பி. சுசீலாவைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன்.

கரடுமுரடான சங்கதிகள், பிருகாக்கள், சஞ்சாரங்கள் எல்லாம் நிறைந்த பாடுவதற்கே கடினமான பாடல் இது.

எம்.எல்.வி. போன்ற இசை வீராங்கனைகள் மட்டுமே அனாயாசமாக பாடிவிட்டுப் போகக்கூடிய பாடல்.

ஆரம்பத்தில் சுசீலா மிகவும் பயந்துவிட்டார்.

“சார். வேண்டாம் சார். இந்தச் சங்கதிகள் எல்லாம் என் சாரீரத்துலே நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு கொண்டுவர முடியுமா என்று பயமா இருக்கு. என்னாலே முடியாது சார். என்னை விட்டுடுங்க.” என்று அழவே ஆரம்பித்துவிட்டார் அவர்.

ஜி. ராமநாதனா விடுவார்?

“என்னது? உன்னாலே பாட முடியாதா? பாடாம யார் விடுவா உன்னை? நீ தான் இந்தப் பாட்டைப் பாடறே. உன்னாலே கண்டிப்பா முடியும்.” என்று கறாராக அடித்துப் பேசி சுசீலாவிற்குச்  சொல்லிக் கொடுத்து அவரைப் பாடவைத்தார் அவர்.

அவர் நினைத்திருந்தால் எம்.எல்.வி. அவர்களையே பாட வைத்திருக்க முடியும்.  ஆனால் பி. சுசீலாவின் குரலின் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த பிடிப்பு. “இந்தச் சஞ்சாரங்கள் எல்லாம் இந்தக் குரல்லே வந்தாத்தான் பாட்டு நிற்கும்” என்ற அழுத்தம் திருத்தமான எண்ணம் அவருக்கு இருந்ததால் பொறுமையாக நிதானமாகச் சொல்லிக் கொடுத்து பி. சுசீலாவை இந்தப் பாடலைப் பாடவைத்தார் அவர்.

விளைவு..  பாடல் பதிவில் அற்புதமாகப் பாடி அனைவரையும் அசரவைத்தார் பி. சுசீலா. 

(3219) Vanagamudi | Ennai Pol Pennallavo song - YouTube

படம் வெளிவந்ததும் அவருக்குப் பாராட்டு மழை நாலாபக்கமிருந்தும் வந்து குவிந்தது.

“தேவியின் சன்னதியில் சாவித்திரி பாடும் “என்னைப்போல் பெண்ணல்லவோ  – நீ உலக இருள் நீக்கும் கண்ணல்லவோ?” என்ற பாட்டை பி. சுசீலாவின் மதுரமான குரலில் கேட்கும்போது மனத்துக்கு மிகவும் இதமாயிருக்கிறது” என்று கல்கி பத்திரிகை விமர்சனத்தில் ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு எழுதியது.

அந்த அளவிற்குத் தனித்துவம் பெற்ற பாடல் இது. 

பாடலை இசைச் சக்ரவர்த்தி அமைத்திருக்கும் அழகைச் சொல்வதா அந்த அமைப்பை உள்வாங்கிக்கொண்டு நமது இசை அரசி பாடியிருக்கும் அருமையைச் சொல்வதா?

இரண்டாவது சரணத்தில்

“பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்...  என்ற வார்த்தைகளை அடுத்து அவர் கொடுக்கும் கார்வை தோடி ராகத்தை அப்படியே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது.  “நான்.. மின்னாத சுடர்  போல ..” என்ற வரிகளுக்கு அடுத்த வரிகளில் பி. சுசீலாவின் குரல் உச்சத்தை நோக்கி “சொன்னாலும் புரியாத உலகத்திலே ..” என்று சஞ்சரித்துவிட்டு “எந்நாளும் உன்னை அன்றி துணை ஏதம்மா” என்று சட்டென்று கீழே இறங்கி விடுகிறது.

குறையைச் சொல்லும்போது உயரும் குரல் தேவியிடம் வேண்டுதல் செய்யும்போது கீழே இறங்கி விடுகிறது. அதில் ஒரு தழைவு, குழைவு, கெஞ்சல் என்று அனைத்தையும் பி. சுசீலாவின் குரல் அருமையாகப் படம் பிடித்துக் காட்டிவிடும்.

“நான் சின்னப்பொண்ணு.  என் மீது நம்பிக்கை வச்சி நான் தான் பாடணும்னு அவர் பிடிவாதமா இருந்தாரு. என் வாழ்க்கையிலே மறக்கவே முடியாத பாட்டு அது.” என்று நெகிழ்வுடன் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் பி. சுசீலா இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்து “மோகனப்புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே” என்ற அருமையான டூயட் பாடலை டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடினார் பி. சுசீலா. (3198) MOGHANAP PUNNAGAI SEITHIDUM NILAVEY SSKFILM021 PS, TMS @ VANANGHKAAMUDI - YouTube

“ராமநாத அய்யரோட இசை அமைப்பிலே அவர் சொல்லிக்கொடுப்பதை அப்படியே சரியாக ஒரு பாடகன் பாடிவிட்டால் வேறு எந்த மியூசிக் டைரக்டருடைய இசையிலும் சுலபமாகப் பாடிவிட முடியும்” என்று திரை இசைப் பாடலில் சகாப்தம் படைத்த பாடகரான டி.எம். சௌந்தரராஜன் குறிப்பிடுவார்.

அப்படிப்பட்ட ஜி. ராமநாதனின் இசையில் பி. சுசீலா “வணங்காமுடி” படத்தில் பாடிய பாடல்கள் அவரது வெற்றிப் படிக்கட்டுகளுக்கு மின்னுயர்த்தியாக அமைந்தன.

12.4.1957 இல் வெளிவந்த வணங்காமுடி மகத்தான வெற்றி பெற்று உண்மையிலேயே பி. சுசீலாவிற்கு ராஜயோகத்தை ஆரம்பித்தும் வைத்தது.

அதே ஆண்டு ஜி. ராமநாதனின் இசையில் “சமய சஞ்சீவி” “புதுமைப்பித்தன்” ஆகிய படங்களில் பாடினார் பி. சுசீலா.

அடுத்து 10.5.1957 இல் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் வெளிவந்த படம் சுசீலாவிற்கு வெற்றிப் “புதையலை”யே  கொண்டு வந்து சேர்த்துவிட்டது.  ஆம்.  “புதையல்” படத்தைத்தான் சொல்கிறேன்.

நடிகர் திலகம் – பத்மினி இணைவில் வெளிவந்த இந்தப் படத்தில் சிதம்பரம் எஸ். ஜெயராமனுடன் இணைந்து பி. சுசீலா பாடிய “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” என்ற நடபைரவி ராகப் பாடல் அமைந்த மாபெரும் வெற்றிப் பாடல்.  படம் வெளிவந்து அறுபத்தாறு வருடங்கள் நிறைவடைந்த பிறகும் இன்னும் இளமைத் துடிப்போடு உயிர்ப்போடு நிலைத்திருக்கிறதே!  இன்றும் மெல்லிசை மேடைகளில் தவறாமல் இசைக்கப்படும் பாடலாக இந்தப் பாடல் இருப்பதே இதன் வெற்றிக்கு ஒரு சாட்சி. (3198) விண்ணோடும் முகிலோடும் Vinnodum mugilodum YouTube 240p - YouTube

 இதே படத்தில் அவர் குழுவினருடன் இணைந்து பாடிய

“தங்க மோகனத் தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே

மங்கையர் வதனம் வாடுதே - இள மங்கையர் வதனம் வாடுதே”

என்ற கவிஞர் ஆத்மநாதன் எழுதிய பாடல் ... அற்புதமான இசையோடு நமது இசை அரசியின் இனிமையான குரலில் செவிகளில் தேன்வார்த்தது என்றால் அது மிகையே அல்ல. (3198) THANGA MOHANA THAMARAIYE - PUDHAYAL 1957 - AATHMANATHAN LYRICS - YouTube

 தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்

“சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம

தென்னாட்டில் எல்லாரும் கொண்டாடும் சேலையடி.”

என்ற கைத்தறி நெசவின் பெருமை பாடும் பாடலில் பி.சுசீலாவின் குரல் காஞ்சிப்பட்டின் நேர்த்தியோடு மின்னும் அழகே தனி. (3198) CHINNATCH CHINNA IZHAI PINNIP PINNI VARUM SSKFILM029 PS GROUP @ PUTHAIYAL - YouTube

கிராமிய இசையில் மெல்லிசை மன்னரின் தனித்திறமைக்கு இந்தப் பாடல் ஒரு அழுத்தமான அடையாளம். ஹரிகாம்போஜி ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை நாட்டுப்புற தெம்மாங்கு மெட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் அமைத்திருக்கும் லாவகம் புருவத்தை உயர்த்த வைக்கிறது.

பல்லவியைத் தொடர்ந்து வரும் முதல் சரணமும் முடிந்ததும் அடுத்து வரும் இணைப்பிசை முற்றிலும் மாறுபட்ட நடையோடு துவங்க பாடல் முற்றிலும் வேறுபட்ட நடையில் “உழைத்திடும் எளியவர் அடிக்கடி துவைத்து வந்தாலும்” என்று அடுத்த சரண வரிகளில் பயணிக்கும்.

“ஒற்றுமையோடு அத்தனை நூலும்

ஒழுங்கா வந்தா வளரும்....

இதில் ஒரு நூலறுந்தால் குளறும்

இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே

உலகில் தொழில் வளம் உயரும்”

என்று வரும் வரிகளில் பாடலும் இசையும் முற்றிலும் எதிர்பாராத கோணங்களில் பயணம் செய்ய ஆரம்பிக்க … மெட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்து  அவற்றை பி. சுசீலா பாடி இருக்கும் அற்புதத் திறமை வேறு எவராலும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

இன்று வரை யாராலும் நகலெடுக்க முடியாத சஞ்சாரங்கள்.

 “ஆளை விடுடா சாமி” என்று சொல்ல வைக்கும் நீண்ட சரணத்தில் மெல்லிசை மன்னர்கள் அமைத்திருக்கும் பிரயோகங்கள்.

அவற்றை அனாயாசமாக ஏற்ற இறக்கங்களுடன் தனது குரலில் கொண்டு வந்து நம் செவிகளில் தேன் பாயவைக்க எவ்வளவு சிரமப்பட்டு சாதகம் செய்திருப்பார் பி.சுசீலா என்று வியக்க வைக்கும் அதி அற்புதப் பாடல் இது.

துரித காலத்தில் வேகமாகப் பாடும்போது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்ற இறக்கங்களைக் கவனித்துக்  குரலால் சஞ்சாரம் செய்யும்போது சுருதியை விட்டு விலகாமல் அதே நேரம் ‘பொட்டை நெட்டுரு’ப் போடுவதுபோல அல்லாமல் அர்த்த பாவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர்வு பூர்வமாக – அதே நேரம் இனிமையும் குன்றாமல் பாடுவது என்பது மிகப் பெரிய கலை.

அந்தக் கலையில் கை தேர்ந்தவர்கள் திரை இசையில் இரண்டே இரண்டு நபர்கள் தான்.

பெண்களில் பி. சுசீலா :  ஆண்களில் டி.எம்.சௌந்தரராஜன்.

அதனால் தான் இந்த இருவராலும் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் திரை இசையில் சிகரங்களாக இருக்க முடிந்தது.

********

“கணவனே கண் கண்ட தெய்வம்” படம் அடைந்த மாபெரும் வெற்றியால் உந்தப்பட்ட நடிகை அஞ்சலிதேவி தனது கணவர் ஆதிநாராயண ராவ் அவர்களுடன் இணைந்துத் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரித்த  அஞ்சலி பிக்சர்ஸ் பானரில் தயாரித்த படம் “மணாளனே மங்கையின் பாக்கியம்”.  (தெலுங்கில் படத்தின் பெயர் ஸ்வர்ண சுந்தரி). படத்திற்கு இசை அஞ்சலி தேவி அவர்களின் கணவரான ஆதி நாராயண ராவ் அவர்களே தான்.

இந்தப் படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள்.  அவற்றில் ஆறு பாடல்கள் பி. சுசீலாவிற்கு.

கதாநாயகி அஞ்சலிதேவிக்கு கச்சிதமாக பி. சுசீலாவின் குரல் பொருந்தி வந்தது.

“ஜகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா” – என்ற பாடலை குழுவினருடன் இணைந்து பாடினார் பி.சுசீலா.

இன்றளவும் உயிர்த்துடிப்புடன் ஹிந்தோள ராகத்தில் பி. சுசீலா தனித்துப் பாடிய “அழைக்காதே நினைக்காதே” பாடலும், (3198) Azhaikkathe song - Manalane Mangayin Bhagyam அழைக்காதே அழைக்காதே - YouTube ஹம்சானந்தி ராகத்தில் கண்டசாலாவுடன் இணைந்து பி. சுசீலா பாடியிருந்த “தேசுலாவுதே” பாடலும் காலத்தால் அழிக்கமுடியாத அளவுக்கு சிரஞ்சீவித்துவத்துடன் விளங்குகின்றன.

“தேசுலாவுதே தேன் மலராலே” பாடலைப் படத்தின் தெலுங்குப் பதிப்பிலும் கண்டசாலாவுடன் பி. சுசீலா இணைந்து பாடி பாடலும் பதிவாகி விட்டது.

அந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர்களான இசை அமைப்பாளர் ஆதி நாராயணராவ் – அஞ்சலிதேவி தம்பதியர் பி. சுசீலாவைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களது முந்தைய தயாரிப்பான “அனார்கலி” மாபெரும் வெற்றி கண்ட படம்.  அந்தப் படத்தின் வெற்றியில் பாடல்களுக்கும் பெரும் பங்கு இருந்தது.  குறிப்பாக கண்டசாலாவுடன் இணைந்து ஜிக்கி பாடி இருந்த “ராஜசேகரா என்னை மோடி செய்யலாகுமோ” பாடல் பெருவெற்றி கண்ட பாடல்.

ஆகவே அப்படி படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த “ராஜசேகரா” பாடலைப் பாடியிருந்த பாடகி ஜிக்கி அவர்களுக்கு  சென்டிமென்டலாக இந்தப் படத்தில் ஒரு சிறப்பான பாடலைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்த அவர்கள் “தேசுலாவுதே” பாடலின் தெலுங்குப் பதிவில்  ஜிக்கியைப் பாடவைத்து அதனை இடம்பெற வைக்கவேண்டும் என்று நினைத்த ஆதிநாராயண ராவ் – அஞ்சலிதேவி தம்பதியர் தங்கள் விருப்பத்தை பி. சுசீலாவிடம் தெலுங்குப் பதிவின் பாடலில் ஜிக்கியின் குரலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதைத்  தெரிவித்தனர்.

அவர்கள் அதைத் தெரிவிக்கவேண்டிய அவசியமே இல்லை.  ஏனென்றால் ஜிக்கி அப்போது சீனியர் பாடகி. பி. சுசீலாவோ வளர்ந்து வரும் நிலையில் இருப்பவர். அவர்கள் அப்படி தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்காமலே ஜிக்கியைப் பாடவைத்துப் படமாக்கி இருந்தால் பி. சுசீலாவால் எதுவும் செய்ய முடியாது.

என்றாலும் வளரும் நிலையில் இருந்த தன்னையும் மதித்து கோரிக்கை விடுத்த அவர்களின் செயல் பி. சுசீலாவை வெகுவாக கவர்ந்துவிட்டது.

“இதுலே என்ன இருக்கு?  ஜிக்கி என்னை விட சங்கதிகளை எல்லாம் நல்லாவே கொடுப்பாங்க. அவங்க பாட்டையே படத்துலே உபயோகப்படுத்திக்குங்க. எனக்கு இதுலே எந்த வருத்தமும் கிடையாது.” என்று கொஞ்சம் கூட தயங்காமல் பெருந்தன்மையுடன் கூறி அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக “ஹாயி ஹாயிகா ஆமனி சாகே” என்ற அந்தப் பாடலை விட்டுக் கொடுத்தார் பி. சுசீலா.

ஆனால்.. படம்..?

பாராட்டுக்குரிய அம்சம் : “சுபம்” – என்று நையாண்டித்தனமாக விமர்சனம் செய்தது கல்கி.

ஆனால்.. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பி. சுசீலா காட்டிய பெருந்தன்மையின் காரணமாக நடிகை அஞ்சலிதேவியுடன் நீடித்த இறுக்கமான நட்பு ஏற்பட்டது. 

அஞ்சலிதேவியுடன் இணைந்து புட்டபர்த்தி சத்யசாய் பாபாவை தர்சனம் செய்யச் சென்றார் பி. சுசீலா. சாயி நாத பகவான் அவர்களை ஆட்கொண்டு விட்டார்.  அன்றிலிருந்து சாயி பகவானின் பரம பக்தை ஆகிவிட்டார் பி.சுசீலா.

சத்யசாய் பாபாவுடன் பி. சுசீலா, மற்றும் நடிகை அஞ்சலிதேவி கணவர் ஆதிநாராயண ராவ் அவர்களுடன்.

ஒருமுறை இருவரும் புட்டபர்த்தி செல்லும்போது வழியில் பாகே பள்ளி நெடுஞ்சாலைக்கருகே சத்ய சாய் சேவா மையம் (பிரேம குடீரம்) ஒன்று இருந்தது. பி.சுசீலாவும் அஞ்சலிதேவியும் வரும்போது சேவா மையத்து நிர்வாகிகள் இருவரையும் சற்று இளைப்பாறிவிட்டு “பிரசாதம்” எடுத்துக்கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டிக்கொண்டனர்.  ஆனால் அதனை  வழக்கமான சினிமா ரசிகர்களின் அன்புத்தொல்லையாக நினைத்துக் கொண்டதால் இருவரும் “பரவாயில்லே. இப்போ பகவான் தரிசனத்துக்கு போய்க்கிட்டு இருக்கோம். நேரமாகிடும்.”என்று நாசூக்காக மறுத்துவிட்டுப் புட்டபர்த்தியை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

புட்டபர்த்தி வந்தாகிவிட்டது.  பகவான் சத்திய சாய் பாபா அவர்கள் இருவரையும் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். பகவானின் தனி தரிசனம் கிடைக்கப்பெற்ற சந்தோஷத்துடன் அவரது அறைக்குள் நுழைந்தார்கள் அஞ்சலிதேவியும், பி. சுசீலாவும்.

உள்ளே சென்றதும், “நீங்க ரெண்டு பேரும் என் தரிசனத்துக்காகத் தானே வந்தீங்க?”  என்று லேசான புன்னகையுடன் தெலுங்கில் கேட்டார் சுவாமி.

“அவுனு சுவாமி” என்று இருவரும் ஒரே குரலில் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்கள். 

“நான் இங்கே மட்டும் தான் இருக்கேன்னு நினைச்சிட்டீங்களா? பிரேம குடீரத்திலேயே  நான் உங்களுக்காக தரிசனம் கொடுக்கக் காத்துக்கிட்டு இருந்தேனே.” என்று கனிவுடன் அவர் வெண்ணையில் கத்தியைச் சொருகுவதுபோலப் பேசவும் இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டு வியர்த்துக் கொட்டியது.

சுவாமியிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு திரும்பும் போது இருவரும் பாகே பள்ளி சேவா மையத்திற்குச் சென்று அங்கு பிரசாதம் பெற்றுக்கொண்ட பிறகே ஊருக்குத் திரும்பினார்கள். (ஆதாரம் :  சாய் சத் சரிதம் – சாய் பக்தர்களின் தினசரி பாராயண புத்தகம்)

அந்த 1957ஆம் வருடம் பி.சுசீலாவிற்கு இன்னொரு விதத்திலும் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத சிறப்பான வருடமாகவும் அமைந்துவிட்டது.

ஆம்.  “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்தில் பாடிய நேரமோ என்னமோ மனம் கவர்ந்த காதல் மணாளனாக டாக்டர்.ராம்மோகன்ராவ் அவர்கள் அவரது வாழ்வில் இணைந்தது இந்த வருடத்தில்தான்.

(இசையின் பயணம் தொடரும்.)

இசையரசி -1

இசையரசி -2

இசையரசி - 3

இசையரசி - 4