பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 7

பி.சுசீலா -ஒரு சாதனைச் சரித்திரம்

Music is the therapy

I need when I feel blue.

Music lifts my spirits

To make sure I pull through.– Bryanna T. Perkins.

இசை என்பது நான் மனம் தளர்ந்திருக்கும் நேரத்தில் எனக்கு தேவையான சிகிச்சை. இசை நான் மேலேறி வர என் உற்சாகத்தை உயர்த்துவது.

– ப்ரையன் டி. பெர்கின்ஸ் - "A Friend Found In Music." கவிதையின் ஒரு பகுதி.

தொடர்ந்து அதே ஐம்பத்தெட்டாம் ஆண்டு வெளிவந்த படங்கள் எல்லாம் பி. சுசீலாவிற்கு ஒரு நிலையான அழுத்தமான முத்திரையைப் பதிக்க பேருதவி புரிந்தன.

“இல்லறமே நல்லறம்” – ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, நாகையா, எம்.என். நம்பியார், சரோஜாதேவி, எம்.வி. ராஜம்மா - ஆகியோரின் நடிப்பில் உருவான படம்.

கே.ஜி. மூர்த்தி அவர்களின் இசையமைப்பில் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பி. சுசீலா பாடிய அருமையான இணைப்பாடல் “நினைக்கும் போதே ஆஹா. இனிக்குதே என் மனமே” - உண்மையிலேயே இனிக்கும் பாடல். இனிக்குதே என் மனமே என்ற வார்த்தையை பி. சுசீலா அவர்கள் உச்சரிக்கும் அழகே செவிகளில் தேன் பாயவைக்கிறது.

“மாரனே உன் மலர்க்கணை” என்று துவங்கும் ஒரு நடனப்பாடல். பி.பி. ஸ்ரீநிவாஸ் – எஸ். ஜானகி – பி. சுசீலா என்று மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

சரோஜாதேவிக்கு எஸ். ஜானகியும், குமாரி கமலாவிற்காகப் பி. சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.

பாடல் எஸ். ஜானகியின் குரலில் ஆரம்பிக்கிறது. இடையில் “உன் அடிமை அல்லவோ” என்று ஆரம்பிக்கும் இடைச் சரண வரிகளில் பி.சுசீலா இணைந்து கொள்வார். அந்த எடுப்பே பாடலை அவர் வசம் திருப்பிவிடும்.

தொடர்ந்து வந்த கவியரசரின் “மாலையிட்ட மங்கை” படத்தில் “இல்லறம் ஒன்றே நல்லறம்” “அன்னம் போல பெண்ணிருக்கு” ஆகிய இரண்டு பாடல்களை மெல்லிசை மன்னர்களின் இசையில் பாடினார் பி. சுசீலா.

ஆனாலும் “ஆடை கட்டி வந்த நிலவோ”, “நானன்றி யார் வருவார்” ஆகிய பாடல்கள் அளவிற்கு இவை மக்களிடம் சென்று சேராமல் போயின.

“அன்னையின் ஆணை” – படத்தில் இன்றளவும் நம் மனதை விட்டு அகலாத பாடல்கள் மூன்று.

பி. லீலாவின் “நீயே கதி ஈஸ்வரி”, டி.எம்.எஸ். அவர்கள் பாடிய “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” – ஆகிய பாடல்களை அடுத்து, டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பி. சுசீலா பாடிய “கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்ற கு.மா. பாலசுப்ரமணியத்தின் பாடல். மிகச் சிறப்பான மெட்டை எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் அமைத்திருக்கிறார்.

எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் பி. சுசீலா பாடிய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

பாடல் துவங்குவதே நமது இசை அரசியின் ஹம்மிங்கோடு தான். 

அழகான - மனத்தைக் கொள்ளை கொள்ளுகிற  - அந்த ஹம்மிங் முடிந்ததும் “கனவின் மாயா லோகத்திலே...” என்று பி. சுசீலா ஆரம்பிக்கும் அழகே தனி.  ஒவ்வொரு வார்த்தையை முடிக்கும்போதும் அவரது குரலில் ஒரு சிறு மென்மையான – சன்னமான ஒலி நயம் தென்படும்.  அந்தச் சன்னமான ஒலி நயத்தின் இனிமையே தனி.

பல்லவியைத் தொடர்ந்து வரும் இணைப்பிசை முடிவில் முதல் சரணம்.  டி.எம்.எஸ். கம்பீரமாக ஆரம்பிக்கும் எடுப்புக்கு ஈடு கொடுத்து ஒரு சிறு ஹம்மிங்குடன் ஆரம்பித்து  “அலை மோதும் உள்ளம் - நிலை காண உந்தன்  -துணை வேணும் இன்பராஜா” என்று மூன்று வார்த்தைகளுக்கு ஒரு சந்தமாக அந்தச் சரணத்தை முடிப்பார் பி. சுசீலா.

அடுத்த சரணத்தில் வார்த்தைகள்  ஒரு மடங்கு அதிகமாகப் பயணிக்கும்.

அந்த வார்த்தைகளுக்கு ஏற்ற மாதிரி மெட்டும் மாறும்.  குறிப்பாக பி. சுசீலா அவர்கள் பாடும் “அன்பின் உருவே மோகன நிலவில் அமர காவியம் பாடி ஆடுவோமே “ என்ற வார்த்தைகளை  முதல் சரணம் போல முடிக்க முடியாது.

அதே போல எட்டு வார்த்தைகள் தான்.  ஆனால் முதலில் வந்தது போல மூன்றுக்கு ஒன்று என்று அல்லாமல் இரண்டுக்கு ஒன்று என்று இசை மாறுபடும்.

“அன்பின் உருவே – மோகன நிலவில் – அமர காவியம் – பாடி ஆடுவோமே” என்று மாறு படும் மெட்டை அற்புதமாக உள்வாங்கிக்கொண்டு அனாயாசமாகப் பாடி அசத்திப் புருவத்தை உயர்த்த வைத்திருப்பார் பி. சுசீலா.

இருமடங்கான இந்தச் சரணத்தில் முடிக்கும்போது முதல் சரண முடிவைப் போல அல்லாமல் “காதல் இல்லாது – வாழ்வே நில்லாது – கண்ணா என்ஆவி நீ...யே..” 2+2+3 என்று சந்தங்களை அருமையாக மாற்றி  எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் அமைத்த மெட்டை அற்புதமாகப் பாடி  முடிப்பார் பி. சுசீலா.

மீண்டும் “கனவின் மாயா லோகத்திலே” என்று பல்லவியின் ஆரம்ப வரிகளுக்கு இருவரும் வந்து  “உல்லாசம் காண்போமே” என்று முடிக்கும்போது டி.எம்.எஸ்.ஸின் குரல் மத்யமத்தில் இசைக்கப் பி. சுசீலாவின் குரல் உச்சத்தை எட்டிப் பாடலை முடித்து வைக்கும் அழகே தனி. Kanavin Maayaa Logathile Songs HD-Annaiyin Aanai - YouTube

எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கம்பீரமும், இனிமையும், நளினமும்  ஒன்றிக் கலந்த அருமையான பாடல் இது.

***

தொடர்ந்து வெளிவந்த “பாட்டாளியின் சபதம்” (“நயா தௌர்” என்ற ஹிந்திப் படத்தின் மொழிமாற்று வடிவம்), ராமண்ணாவின் “காத்தவராயன்”, “மணமாலை” “நான் வளர்த்த தங்கை” என்று பி. சுசீலாவிற்கான படங்களின் எண்ணிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே இருந்தன.

பெண்டியாலா அவர்கள் இசையில் “ஆண்கள் மனமே அப்படித்தான்” என்ற பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து “நான் வளர்த்த தங்கை”க்காகப் பாடினார் பி. சுசீலா. 

இதே படத்தில் “இன்ப முகம் ஒன்று கண்டேன்” என்று அவர் தனித்துப் பாடிய பாடல் மனதை அள்ளும் ஒரு பாடலாக மலர்ந்தது. TAMIL OLD SONG--Inba mugam ondru kanden(vMv)--P SUSEELA--NAN VALARTHA THANGAI - YouTube

“மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பான “பெற்ற மகனை விற்ற அன்னை” படத்திற்காக ஏ.எம். ராஜாவுடன் இணைந்து “தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா – காதல் கண்கள் உறங்கிடுமா” என்று மெல்லிசை மன்னர்களின் இசையில் கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய காதல் கீதத்தை இசைத்தார் பி. சுசீலா. 

இதில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள். 

அவற்றில் பெண் குரல் பாடல்களுக்கென்று பி. சுசீலாவைத் தவிர டி.எஸ். பகவதி, ஏ.ஜி. ரத்னமாலா, ஜமுனா ராணி, பி. லீலா, ஜிக்கி ஆகியோரும் இருந்தனர்.  நமது இசை அரசிக்கு இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தான்.

மற்றவர்கள் பாடிய பாடல்கள் எல்லாவற்றையும் விஞ்சி  காலத்தை வென்று நிலைத்திருப்பது பி. சுசீலா பாடியிருக்கும் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான். Thendral Urangiya Podhum Petra Maganai Vitra Annai YouTube 240p - YouTube

“பிள்ளைக்கனியமுது” “சபாஷ் மீனா” “சாரங்கதாரா” “செஞ்சு லக்ஷ்மி” “தேடி வந்த செல்வம்” என்று படங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே வந்தது.

“பிள்ளைக்கனியமுது” – வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா ஒரு தயாரிப்பாளராக பி.எஸ்.வி. பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கித் தயாரித்த முதல் படம் இது.  எம்.ஏ. திருமுகம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.  முதல் முதலாகப் படம் எடுக்க விரும்பும் தயாரிப்பளர்களின் ராசியான இசை அமைப்பாளராக இருந்துவந்த திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து மூன்று பாடல்களைப் பாடினார் பி. சுசீலா.

கிராமிய மெட்டில் புகுந்து விளையாடி இருந்தார் கே.வி. மகாதேவன் என்றால் அவரது மெட்டுக்களை அருமையாக உள்வாங்கிப் பாடி இருந்தார்கள் சீர்காழி கோவிந்தராஜனும் நமது இசை அரசியும்.

பிள்ளைக்கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் – அதை

அள்ளிக் கையால் அணைத்து இன்பம் பிறந்திட வேணும்.”   -  ஒரு அருமையான மெலடி. இந்தப் பாடலைச் சுசீலாம்மா அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு இனிமை பொங்கப் பாடி இருக்கவே முடியாது.  

Pillai Kaniyamuthu 1958 -- Pillai Kaniyamuthu Onnu (youtube.com)

கிராமிய மெட்டின் சிகரம் தொட்ட பாடல் கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய

“ஓடுகிற தண்ணியிலே ஒரைச்சு விட்டேன் சந்தனத்தை

சேந்துதோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே” – என்று தொடங்கும் பாடல்தான்.

இந்தப் பாடல் வரிகளை வேறு எங்கேயோ கேட்ட நினைவு வருகிறதா?

கே. பாலச்சந்தரின் “அச்சமில்லை அச்சமில்லை” படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியதாக ஆரம்பிக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் இவைதான்.  (அந்தப் பாடலையும் நமது இசை அரசிதான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுடன் இணைந்த பாடி இருக்கிறார்)

கே.வி.மகாதேவனின் கிராமிய இசைத் திறமைக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு இந்தப் பாடல் என்றால் அது மிகை அல்ல. (3620) TAMIL OLD--Odukira thanniyila--PILLAIKANI AMUTHU - YouTube அதை பி.சுசீலா அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் பாடி இருப்பதை வருணிக்க வார்த்தைகளே இல்லை.

கேட்பவர் செவிகளில் இனிமையை இருவரும் இணைந்து பாய வைக்கின்றனர்.

ஏ.கே. வேலன் அவர்களது தயாரிப்பில் – திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த படம் தான் “பெரிய கோவில்”. 

பெற்ற தாயே ஒரு பெரிய கோவில் என்ற உயர்ந்த கருத்தை உள்ளடக்கிய இந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் “வலை வீசம்மா வலை வீசு வாளை மீனுக்கு வலைவீசு” என்று சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா.

வலையை வாளை மீனுக்கா வீசினார்?  கேட்கும் நம் மனங்களுக்கெல்லாம் அல்லவா சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து  வீசி இருக்கிறார்!

இப்படித் தொடர்ச்சியாக முன்னேற்றப்பாதையில் தனது தனித் திறமையால் வெற்றி நடை போட ஆரம்பித்த நமது இசை அரசிக்காக “தேவர் பிலிம்ஸ்” தனது கதவைத் திறந்து வைத்து வரவேற்கக் காத்திருந்தது - “செங்கோட்டைச் சிங்கம்” படத்தின் மூலமாக.

இந்தப் படத்தில் நடிகை பண்டரிபாய்க்காக “இதுவும் இறைவன் லீலையா” என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடி இருந்தார் பி. சுசீலா.  இந்த ஒரு பாடலுடன் “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்தில் தனது கணக்கைத் தொடங்கினார் பி. சுசீலா.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழித் தயாரிப்பாக வெளிவந்த  “செஞ்சு லக்ஷ்மி” படத்தில்  இவர் பாடிய “பால கடலிபை சேஷதல்பமுல” – (தமிழில் “பாற்கடல் தனிலே சேஷ சயனத்தில்”) என்ற பாடல் குறிப்பிடப்படக் கூடிய ஒன்று.  இசை எஸ். ராஜேஸ்வரராவ் அவர்கள். 

இந்தப் பாடலை பிரகலாதன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாஸ்டர் பாப்ஜி (நடிகை புஷ்பவல்லியின் மகன்) என்ற சிறுவனுக்காகப் பாடியிருந்தார் பி. சுசீலா. கண்டிப்பாகக் கேட்கத் தவறக்கூடாத பாடல் இது.  இந்தப் பாடலின் தமிழ் வடிவம் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்குப் பதிப்பு இன்றும் கேட்கக் கிடைக்கிறது.  பொதுவாகக் குழந்தைக் குரல் பாடல் என்றால் குரலை மாற்றி மழலை தொனிக்கப் பாடுவது வழக்கம்.  ஆனால் நமது இசை அரசி என்ன மாயம் தனது குரலில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை!

அவரது இயல்பான குரலிலேயே குழந்தைக் கதாபாத்திரத்திற்கு பாடுவார் பி. சுசீலா. குரலை மாற்றிப் பாடுவது எல்லாம் கிடையவே கிடையாது.  ஆனால் கேட்கும்போது நமது செவிகள் ஒரு குழந்தைக் கதாபாத்திரத்தை நமது மனதுக்குக் கடத்தி விடும். 

கவிஞர் ஆருத்ரா – இசை அமைப்பாளர் எஸ். ராஜேஸ்வரராவ் – பி. சுசீலா ஆகிய மூவரும் இணைந்த ஒரு அற்புத சங்கமம் இந்தப் பாடல்.  Chenchu Lakshmi - Paala Kadalipai Sesha Thalpamuna - YouTube

“நான் சின்னப் பையனாக இருந்த போது இந்தப் பாடல் என் மனதுக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.  இதனை நான் அடிக்கடி பாடிக்கொண்டு இருப்பேன்.” மறைந்த நமது “பாடும் நிலா” எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கூறிய தகவல் இது.

இதனை பி. சுசீலா அவர்களிடமே அவர் பகிந்துகொண்டதோடு அவர்களிடம் பாடியே காட்டியும் இருக்கிறார். 

அதன் பிறகு வெகு நாட்களுக்கு எப்போது அவரைச் சந்தித்தாலும் “ஏனு பால கடலிபை? பாக உன்னாரா?” என்று தான் நலம் விசாரிப்பாராம் பி.சுசீலா. 

ETV – யின் “ஸ்வராபிஷேகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தப் பாடலைப் பாடியபோது எஸ்.பி.பி. அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல் இது. 

“காணா இன்பம் கனிந்ததேனோ” – என்று பாடகர் டி. ஏ. மோதி அவர்களுடன் இணைந்து “சபாஷ் மீனா”வில் பி. சுசீலா  பாடிய அருமையான காதல் கீதம் இன்று கேட்டாலும் நம் மனதை அள்ளத் தவறாத பாடல். TAMIL OLD---kana inbam kaninthatheno--T A MOTHI--SABASH MEENA - YouTube

“பாகேஸ்ரீ” ராகத்தில் இசை அமைப்பாளர் டி.ஜி. லிங்கப்பா அவர்கள் அற்புதமான இசைக் கோர்வைகளை வார்த்துக் கொடுத்து – கஜல் பாணியின் – ஹிந்துஸ்தானி இசையையும் கலந்து கொடுத்திருக்கும் இந்தப் பாடலின் சங்கதிகளும் ராக ஆலாபனைகளும் அவ்வளவு சுலபமாக வேறு யாராலும் பாட முடியாத அளவுக்கு அமைந்தவை.  பாடல்களின் இடையில் பி. சுசீலா அவர்கள் தனது தேன் குரலில் இசைக்கும் ஆலாபனைகளும் , சங்கதிகளும் .. அவரது தேர்ந்த உழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் திரை இசைத் துறையில் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய மாறுதல் தொடர்ந்து வந்த வருடங்களில் அவரை - அவரை மட்டுமே – ஒரு முன்னணிப் பாடகியாகக் கொண்டு வந்து நிறுத்த ஆரம்பித்தது.

(இசையின் பயணம் தொடரும்)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

logo
Andhimazhai
www.andhimazhai.com