இசையரசி - 10

இசையரசி - 10

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“தாய் மொழி தெலுங்காக இருந்த போதிலும் பி. சுசீலா அவர்களைப்போல தமிழை உச்சரித்த பாடகி வேறு எவருமே கிடையாது”

- திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் உதவியாளரும் இசை அமைப்பாளருமான டி.கே. புகழேந்தி

மாற்றுத் திறனாளி ஒருவனை மணந்துகொண்ட ஒரு பெண் அவனது மனத் தளர்ச்சியைப் போக்கிப் பாடும் காட்சி அமைப்பில் அமைந்த பாடல் தான் “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” பாடல்.

சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் எம்.எஸ்.வி. அவர்கள் அமைத்த மெட்டினை தனது கற்பனைத் திறத்தால் ராமமூர்த்தி அவர்கள் மெருகேற்றிக் கொடுக்க தனது குரலால் பாடலுக்கு உயிரோட்டத்தை அளித்திருக்கிறார் பி. சுசீலா.

“அபிநய சரஸ்வதி” பி. சரோஜாதேவிக்கு பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா.

ஏதாவது பிரச்சினைகளின் காரணமாகக் கொந்தளித்துப் போயிருக்கும் நாம் கூட இந்தப் பாடலைக் கேட்டோமானால் இனம் புரியாத ஒரு அமைதி நம் மனதில் வந்து சேருவதைக் கட்டாயம் உணர முடியும்.

அந்த அளவுக்கு பி. சுசீலா அவர்களின் குரல் நமது செவிகளில் ஊடுருவும் போது மனங்களுமே நிறைவு பெற்று இனம் புரியாத நிம்மதி நம்முள் வியாபிக்கும்.

தபேலா, மாண்டலின், புல்லாங்குழல், வயலின் என்று மிகக் குறைந்த வாத்தியங்களைப் பயன்படுத்தி இசை அரசியின் குரலில் வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக – புலன்களை ஊடுருவும் வகையில் பாடலை அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். Thangathile Oru Kurai (youtube.com)

இரண்டாவது சரணத்தில் “கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா. இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா..காதல் தரவில்லையா” என்று முடிக்கும்போது “காதல் தரவில்லையா....என்று முதல் முறை முடிக்கும்போது லேசாக ஒரு கமகப் பிரயோகம் செய்து தொடர்ந்து முடிப்பாரே..  அந்த இடம் மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போகும். கேட்பவர் மனங்களிலும் காதல் உணர்வு தோன்றும்.

ஏற்கெனவே “சபாஷ் மீனா”, “கல்யாண பரிசு”, ஆகிய படங்களுக்குப் பிறகு சரோஜாதேவிக்கு பொருத்தமான பாடகியாகத் தன்னை பி. சுசீலா அவர்கள் நிலை நிறுத்திக்கொண்ட படமாக “பாகப் பிரிவினை” அமைந்துவிட்டது.

“பாகப் பிரிவினை” – தெலுங்கு, கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டபோது அவற்றிலும் பி.சுசீலா அவர்களே இந்தப் பாடலைப் பாடினார். 

தெலுங்கில் என்.டி.ராமராவ் – சாவித்திரி நடிக்க வேணு மாஸ்டர் இசையில் “கலஸி வுண்டே கலடு சுகம்” என்ற பெயரில் சாணக்யா இயக்கத்தில் வெளிவந்தபோது அதில் பெண் குரலுக்கான அனைத்துப் பாடல்களையும் பி. சுசீலாவே தான் பாடினார்.

கன்னடத்தில் ராஜ்குமார் – ஜெயந்தி நடிக்க “முறியாத மன” என்ற பெயரில் வெளிவந்த படத்தில் “தெரிகே ஹூமுடித்து” (தமிழில் பி. லீலா பாடியிருந்த “தாழையாம் பூ முடித்து” பாடல்) பாடலை அதே மெட்டில் ஜெயந்திக்காகப் பாடி இருந்தார் பி.சுசீலா.

தமிழில் அவர் பாடியிருந்த “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” பாடலை முற்றிலும் மாறுபட்ட மெட்டில் அருமையான மெலடியாக “அந்த சந்தவேதகே” என்று கன்னடத்தில் பாடி இருந்தார்.  இசை: விஜயா கிருஷ்ணமூர்த்தி. முதல் சரணம் முடிந்ததும் வரும் இணைப்பிசையில் வரும் புல்லாங்குழல் பிட் - தொடரும் வீணை இசைக்குப் பிறகு –முதலில் புல்லாங்குழலில் வெளிவந்த அதே சங்கதியை  அப்படியே தனது குரலில் ஹம்மிங்காக வெளிப்படுத்தி இருப்பார் பி. சுசீலா...அது அப்படியே கேட்பவரின் மனதை அள்ளிக்கொண்டு போகும்.  Muriyada Mane | Anda Chendavethake song (youtube.com)

மொத்தத்தில் மூன்று மொழிகளிலும் ஒரே பாடலை அதன் நயம் குறையாமல் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அழகாகப் பாடி அசத்தி இருந்தார் நமது இசையரசி.

“அபலை அஞ்சுகம்” – அருணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆர்.எம். கிருஷ்ணசாமி அவர்கள் தயாரித்து இயக்கி டி.ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்த படம். கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் மகாலிங்கத்தின் கணீர்க் குரலுக்கு சரியாக ஈடுகொடுத்தார் பி. சுசீலா.

இந்தப் படத்தில் பெண் குரலுக்காக பி. லீலா, எஸ். ஜானகி ஆகியோரும் பாடி இருந்தார்கள்.

ஆனால் இன்றளவும் நிலைத்திருப்பது “வெண்ணிலா குடை பிடிக்க” என்று டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பி. சுசீலா பாடியிருக்கும் பாடல் ஒன்று தான்.

இந்தப் பாடல் படத்தில் இடம்பெற்ற விதமே ஒரு சுவாரசியமான கதை.

பாடலை எழுதுவதற்காக கவிஞர் உடுமலை நாராயண கவி வந்தபோது படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்.எம். கிருஷ்ணசாமி சும்மா இருக்காமல் அவரிடம் “சமீபத்துலே “தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்துலே சுரதா எழுதி இருந்தாரே “அமுதும் தேனும் எதற்கு”ன்னு அதை மாதிரி எழுதிக்கொடுங்க.” என்று கேட்டுவிட்டார்.

“சுரதா எழுதின மாதிரி பாட்டு வேணும்னா அவரையே கூப்பிட்டு எழுதச் சொல்லி இருக்கலாமே. நான் எதற்கு?” – என்று உடுமலை நாராயண கவிக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது.  ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “கொஞ்சம் இருங்க. நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி வெளியே போய்விட்டார்.

போனவர் சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது தனியாக வரவில்லை.  சுரதாவையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

“சுரதா பாட்டு மாதிரி வேணும்னு கேட்டீங்களே! இதோ சுரதாவே வந்துவிட்டார். இவரை வச்சே பாட்டை எழுதிக்குங்க” என்று சொல்லிவிட்டு போயி விட்டார் உடுமலை நாராயண கவி.

சுரதா பல்லவியை அழகாக எழுதியும் கொடுத்துவிட்டார்.

வெண்ணிலா குடை பிடிக்க

வெள்ளிமீன் தலையசைக்க   

விழிவாசல் வழிவந்து

இதயம் பேசுது ..  .”

 

நடபைரவி ராகத்தில் அமைக்கப்பட்ட  பாடல் பி. சுசீலாவின் நளினமான குரலில் தான் ஆரம்பிக்கிறது.  “வெள்ளிமீன் தலையசைக்க” என்று அவர் பாடும்போது கேட்பவரையும் தலையசைக்க வைக்கிறார் அவர்.  Vennila Kudai Pidikka - Duet (youtube.com)

 

கே.வி.மகாதேவன் பாடலை அவரது வழக்கப்படி மத்யம சுருதியிலேயே பி. சுசீலாவை பாடவைத்திருக்கிறார். நிதான நடையில் தொடங்கும் பாடல் பல்லவியின் முதல் பகுதி முடிந்ததும் ஒரு இணைப்பிசையின் முடிவில் வயலின்களின் மீட்டல் மேலெழும்பி நிற்க...

 

நமது இசை அரசியின் குரலும் மேல்நோக்கி நகர்கிறது.

 

“இனி நீ என் வசமே

இங்கு நான் உன் வசமே

இணையாய் நாம் காணும் ஆனந்தம் மேகமே” – என்று நம்மையும் ஆனந்த மேகங்களின் நடுவில் பயணம் செல்ல வைக்கின்றன  கே.வி.மகாதேவனின் இசையும், பி. சுசீலாவின் குரலும்.

ஆனால்..  பல்லவியைத் தொடர்ந்து சரணம் எழுதும்போது இசை அமைத்த கே.வி. மகாதேவனுக்கும் சுரதாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு பெரிதாகிவிட கோபித்துக்கொண்டு சுரதா மேற்கொண்டு பாடலை எழுதாமல் வெளியேறி விட்டார்.

கவிஞர் சுரதா
கவிஞர் சுரதா

மறுநாள் வழக்கம் போல கம்பெனிக்கு வந்தார் உடுமலை நாராயண கவி.

“என்ன நேத்து சுரதா நீங்க ஆசைப்பட்டபடி பாட்டை எழுதிக் கொடுத்தாரா?” என்று கிருஷ்ணசாமியிடம் கேட்டார் அவர்.

“எங்கே? அவர் தான் மாமா கிட்டே கோவிச்சிக்கிட்டு சரணம் எழுதாம கிளம்பிப் போயிட்டாரே.” என்று ஆரம்பித்த கிருஷ்ணசாமி நடந்த சம்பவத்தை அப்படியே விவரித்தார்.

“அப்படியா? எங்கே அந்தப் பல்லவியைக் கொடுங்க. நான் ஏதாவது பண்ணமுடியுமா என்று பார்க்கிறேன்.” என்று சொன்ன உடுமலை நாராயண கவி சுரதா எழுதிக் கொடுத்த பல்லவியை ஒரு முறை படித்துவிட்டு “ம்ம். நல்லாத்தான் எழுதி இருக்காரு” என்று சிலாகித்தவர் ஒரு கணம் கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தவர் மறுகணம்

“கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே

சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே....”

 

என்று சரணத்தை தொடங்கி பாடலை முடித்துக் கொடுத்தார்.

ஆனால் பாடல் சுரதாவின் பெயரில் தான் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததோடு நிற்காமல் சுரதாவிற்குச் சேரவேண்டிய பணத்தையும் வாங்கிக் கொடுத்தார் உடுமலை நாராயண கவி. அதே போல சுரதாவின் பெயரும் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றது.

கல்கி பத்திரிகை தனது விமர்சனத்தில் இந்த ஒரு பாடலை மட்டும் தனியாகக் குறிப்பிட்டு   “டி.ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடி இருக்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது.”என்று எழுதி இருந்தது.

***

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒரு பாடலுக்கு பல்லவியாக மாறியது.

பட்டுக்கோட்டையாரை அழைத்துக்கொண்டு அவரது அண்ணன் பெண்பார்க்கச் சென்றார்.  அண்ணனுக்கு பெண்பார்க்கும் வைபவம் என்று அவருடன் சென்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பெண்ணைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவரது சகோதரர் அவரிடம் “பொண்ணு எப்படி? பிடிச்சிருக்காடா?” என்று கேட்டிருக்கிறார்.

“உங்களுக்கு பார்த்திருக்குற பெண்ணைப் பத்தி நான் என்ன அபிப்பிராயம் சொல்லுறது” என்று திகைப்புடன் கேட்டார் கல்யாண சுந்தரம்.

“பொண்ணு பார்க்க போனது எனக்கு இல்லே. உனக்குத்தாண்டா” என்றார் அண்ணன்.

அடுத்த கணம் ஒரு காகிதத்தை எடுத்து அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு நான்கு வரிகள் கவிதையாகவே   கடகடவென எழுதி விட்டார் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்.

அந்த நான்கு வரிகள்  ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலை இயக்குனர் ஏ.கே. சேகர் இயக்கிய “அமுதவல்லி” படத்திற்காக மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பில் பாடலாக விரிந்தது.

அந்தப் பாடல் தான் இன்று வரை காலத்தை வென்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்

“(முகில்) ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில்

 மேடை கட்டி ஆடும் எழிலோ – இவள்

ஓடையில் மிதக்கும் மலர்

ஜாடையில் சிரிக்கும் இவள்

காடு விட்டு வந்த மயிலோ  – நெஞ்சில்

கூடு கட்டி வாழும் குயிலோ “ 

என்ற எவர் கிரீன் பாடல்.

“பொதுவாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கொடுக்கும் சந்தத்துக்குத் தான் நான் மெட்டுப் போடுவேன். ஆனால் இந்தப் பாட்டைப் பொருத்தவரைக்கும் நான் கொடுத்த சந்தத்துக்கு அவர் பாட்டுக் கொடுத்தார்.  ஆனால்  என்ன ? கொஞ்சம் லேட் ஆச்சு. அவரா எழுதுறதுன்னா வேகமா எழுதிடுவார். ஆனால் மெட்டுக்கு எழுதுவதுன்னா நேரம் எடுத்துக்குவாரு.” என்று மெல்லிசை மன்னர் இந்தப் பாடல் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பு பாடலுக்கு காலத்தை கடந்து நிலைக்க வைத்திருக்கிறது.  சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் டி. ஆர் மகாலிங்கத்துடன் நமது இசை அரசி இணைந்து பாடியிருக்கும் பாடல் இது.

பாடல் மகாலிங்கத்தின் குரலில் தான் ஆரம்பிக்கிறது.  இணைப்பிசை முடிந்ததும் வரும் சரணம் “துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை” என்று பி.சுசீலாவின் குரலில் ஆரம்பிக்கும். 

அமுதவல்லி படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் – தாம்பரம் லலிதா
அமுதவல்லி படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் – தாம்பரம் லலிதா

அந்தக் குரல் நயம்.... அதை என்னவென்று சொல்வது... கணீர் என்று பாவமும் நயமும் இளமையும் மிளிர ஒரு சின்னஞ்சிறிய பச்சைக்கிளி பாடுவது போல ஒலிக்கும்..  பச்சைக் கிளி இப்படித்தான் பாடுமோ!

அந்தச் சரணத்தின் இறுதி வரிகளான “கண்ணாளனுடன் கலந்தானந்தமே பெறக் காவினில் ஆடும் கிளிதானே” என்ற வரிகளை ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடிக் கொடுத்திருக்கும் அழகே தனி.  கடைசி வார்த்தையை சற்று நீட்டலுடன் சமத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.  (134) Aadai Katti Vandha Nilavo... ஆடை கட்டி வந்த நிலவோ... Singers: T. R. Mahalingam & P. Susheela. Audio - YouTube

தொடரும் சரணம் டி.ஆர். மகாலிங்கத்தின் ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் “அந்தி வெயில் பெற்ற மகளோ “என்ற சரணத்தின் முதல் பகுதி முடிந்ததும் ஒரு ஹம்மிங் நமது இசை அரசியின் குரலில் ..  சரியாக முப்பது நொடிகள் – அந்த முப்பது நொடிகளுக்குள் கேட்கும் நம் செவிகளில் பாயும் இனிமைக்கு அளவுகோல் இல்லை. YES. THERE IS NO YARDSTICK FOR THAT SWEETNESS.

கெம்பராஜ் அர்ஸ் (கர்நாடகாவில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த அமரர் திரு. தேவராஜ் அர்ஸ் அவர்களின் சகோதரர்) அவர்கள் இயக்கிய தமிழ்ப் படம் “அழகர் மலைக் கள்வன்” 1959 டிசம்பர் வெளியீடாக வந்த படம்.

கண்டசாலா, மாண்டலின் ராஜு, எஸ். ராஜேஸ்வரராவ் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து இசை அமைப்பாளராக மாறிய பி. கோபாலம் இசை அமைப்பில் வெளிவந்த படம் இது.

இந்தப் படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா – உலகம் ஒரு நாள் உனதம்மா” என்று தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை அழகாகப் பாடி திரை உலகில் ஒரு புதிய கவிஞரின் வரவுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார் பி. சுசீலா.

ஒரு தாலாட்டுப் பாடல் எப்படி இசைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடலில் ஒரு இலக்கணமே வகுத்துக் கொடுத்துவிட்டிருக்கிறார் பி. சுசீலா.

இந்தப் பாடலில் இறுதிச் சரணத்தில்

“மீன் போலவே விழி தாவுதே.

நீ தூங்கவே குயில் கூவுதே..” என்ற வரிகளில் கூவுதே என்ற வார்த்தையின் முதல் எழுத்தை சற்று நீட்டி  பாடி அதன் பிறகு ஒரு சிறு ஹம்மிங் இசைத்திருப்பார்.  அப்படியே கண்கள் அந்த ஹம்மிங்கிலேயே சொக்க ஆரம்பித்துவிடும்.

சட்டென்று குரல் மேலெழும்ப “நேரமிதே ஆரமுதே..”என்று இசைக்கும்போது சத்தியமாகச் சொல்கிறேன்.. தூக்கமின்மை (insomnia) அவதிப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி இரவு நேரத்தில் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டாலே போதும் .. கண்டிப்பாக அந்த உபாதையில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். அவ்வளவு இனிமையாக, நயமாக தாயன்பும் வாத்சல்யமும் மிளிரும் வண்ணம் பாடி இருக்கிறார் பி. சுசீலா .

AZHAGAR MALAI KALVAN (1959)--Nilavum thaarayum neeyamma--Vaali's 1st song--OLD SONG BOOK (vMv) (youtube.com)

அவரது உதடுகளில் என் தமிழ் உட்கார்ந்த நேரம், வறுமையிலிருந்து மீட்டு என்னை வளமையில் சேர்த்தது” என்று நன்றிப்பெருக்குடன் பி. சுசீலா அவர்களை நினைவு கூர்வார் அந்தக் கவிஞர்.

அவர் வேறு யாருமல்ல.

தலைமுறை கடந்து கொண்டாடப்படும் நமது வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் தான்.

ஆம். கவிஞர் வாலி அவர்கள் முதல் முதலாக எழுதிய பாடலைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர் நமது இசை அரசி அவர்கள் தான். 

அதுமட்டுமல்ல.  நான் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எழுதிய முதல் பாடலையும் திரு. டி. ஆர்.பாப்பா அவர்கள் இசையில் பாடியவர் பி. சுசீலா தான். இவை தவிர படவுலகில் எனக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்த  படமான “கற்பகம்” படத்தில் என் அனைத்துப் பாடல்களையும் பி. சுசீலா அவர்களே பாடியிருக்கிறார்கள். அதில் ஆண் பாடகரின் பங்களிப்பே இல்லை. இந்தப் பாடல்களின் பிராபல்யத்திற்கு சுசீலா அவர்களின் சுருதி சுத்தமான சாரீரமே காரணம். இப்படி என் முன்னேற்றப் பாதையில் நிகழ்ந்த ஒவ்வொரு நல்ல திருப்பு முனையிலும் சகோதரி சுசீலாவின் சாரீரம் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது” என்று பி. சுசீலா அவர்களைப் பற்றி கவிஞர் வாலி அவர்களின் நன்றியறிதலுடன் கூறிய வார்த்தைகள் இவை.

தொடர்ந்து “எங்கள் குல தேவி” படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் பாலாஜி – பண்டரிபாய் ஜோடிக்காக “வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ” என்ற இன்றளவும் நிலைத்திருக்கும் பாடலைச் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் இணைந்து பாடினார் பி. சுசீலா.

கேள்வி பதிலாக விரியும் இந்தப் பாடலில் கேள்வியாக சீர்காழி கோவிந்தராஜன் பாடி முடித்ததும் .. ஒரு சின்னஞ்சிறிய ஹம்மிங்குடன் ஆரம்பித்து “அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு” என்று விடையாகப் பாடி முடிப்பார் பி. சுசீலா.   நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்ற மூன்று மொழிகளிலும் முத்திரை பதித்து வெற்றிப் பாடகியாக முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்த  பி. சுசீலாவை அடுத்து வந்த 1960 ஆம் வருடம் மலையாளத் திரை உலகமும்  ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருந்தது.

‘சீதா” படத்தின் மூலமாக.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com