பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 11

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“இந்தியாவிலேயே பி. சுசீலா அம்மா அவர்களின் இனிமை நிறைந்த குரல் வேறு யாருக்குமே கிடையாது. பாடல்களில் அவர் உதிர்க்கும் பிர்க்காக்களும் , சங்கதிகளும் வேறு யாருக்குமே வராது. உணர்வுகளைக் கொண்டு வருவதற்காக அவர் சிரமப்படவே மாட்டார். தெரியாமலேயே பாடினாலும் கூட தானாகவே அந்தக் குரலில் பாடலுக்குத் தேவையான உணர்வுகள் வெளிப்பட்டுவிடும். அத்தகைய தெய்வீகம் நிறைந்த குரல் அவருடையது. - பின்னணிப்பாடகர் பி. ஜெயச்சந்திரன்.

தொடர்ந்து வந்த 1960 ஆண்டு முதல் பி. சுசீலா பாட ஆரம்பித்த படங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் பிசியாக இயங்க ஆரம்பித்தார் பி. சுசீலா.

தமிழில் மட்டுமே பதினெட்டுப் படங்களில் நாற்பத்தாறு பாடல்களைப் பாடி இருந்தார் அவர்.

தெலுங்கில் கிட்டத்தட்ட பதினேழு (இதில் ஒன்றிரண்டு கூடுதலாகக் கூட இருக்கலாம். ஆனால் குறையாது.)

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

தெலுங்குப் படங்களில் பாடுவது என்பதில் கூட உணர்வுகள் வெளிப்படப் பாடவேண்டும் என்பதால் ஏகப்பட்ட ஒத்திகைக்குப் பிறகே ஒலிப்பதிவுக்குச் செல்வார் அவர் என்றால் பிற மொழிப் படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

குறிப்பாக எஸ். ராஜேஸ்வரராவ் இசை என்றால் அவர் வீட்டில் தான் ஒத்திகைகள் நடக்கும். தினமும் அவர் வீட்டுக்குச் செல்லவேண்டும்.

முதலில் இசை அமைப்பாளரின் உதவியாளர் பாடலின் பொருளை விளைக்கிவிட்டு அந்த சூழலுக்கேற்ற உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று உணர்த்த அதை உள்வாங்கிக்கொண்டு வார்த்தை உச்சரிப்பிலும் கவனத்தைக் கடைப்பிடித்து ஒன்றுக்கு பலமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டு பாடல் பதிவில் உட்கார்ந்தால் அந்த நேரத்தில் கூடப்பாடும் பாடகர் – அல்லது வாத்திய இசைக்குழுவில் ஒரு தவறு – என்று ஏற்பட்டால் மறுபடி முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இப்போதும் முதல் முறை வெளிப்படுத்திய அதே உணர்வை மறுபடி பாடலில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்த நேரத்தில் “தங்கமலை ரகசியம்” படப் பாடல் பதிவின் போது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது இசை அரசி பி. சுசீலா அவர்கள் ஒரு பாடல் பதிவிற்கு எவ்வளவு சிரமங்களை சந்தித்திருக்கிறார் என்று புரியும்.

தங்கமலை ரகசியம் படத்தில் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான பாடல் “அமுதைப் பொழியும் நிலவே”.

படத்தில் மூன்று நிமிடம் பதினான்கு நொடிகளுக்கு இடம் பெறும் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஏகப்பட்ட டேக்குகள் வாங்க வைத்த பாடல் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையும் அதுதான்.

இந்தப் பாடலை காணொளியாக பார்த்திருக்கும் போது பாடல் முடிவடையும் போது பணிப்பெண் கையில் ஒரு பெரிய தட்டைத் தூக்கிக்கொண்டு வருபவள் ஜன்னல் வழியே தெரியும் நடிகர் திலகத்தின் முகத்தைப் பார்த்ததும் வீல் என்று கத்திக்கொண்டு தட்டிக் கீழே போட்டு விடுவதைப் பார்த்திருப்போம். அந்த அளவோடு பாடலும் முடிந்துவிடும்.

பாடல் பதிவில் அதற்காக ஒரு கோரஸ் பாடகி சுசீலாம்மாவின் பின்னால் நின்று தனி மைக்கில் கத்துவது என்று ஏற்பாடானது. ஆனால் சுசீலாம்மா முடிப்பதற்கும் அவர் கத்துவதற்கும் தட்டு கீழே விழும் ஒசைக்குமான டைமிங் சரியாக அமையாததால் மறுபடி மறுபடி ஆரம்பத்திலிருந்து பாட வேண்டியதாகி விட்டது. இப்படி ஏகப்பட்ட டேக்குகள் வாங்கியபிறகே பாடல் ஒலிப்பதிவானது.

“பின்னாடியே நின்னுட்டு இருப்பாங்க அந்த அம்மா. நான் எப்போ பாட்டை முடிப்பேன்னு. கத்தறதுக்கு ரெடியா இருப்பாங்க. ஆனாலும் டைமிங் சரியா வராம திரும்ப திரும்ப நான் பாட, அவங்க கத்த...நாலு மணிக்கு ஆரம்பிச்ச ரெக்கார்டிங் முடியறப்ப மணி ஒன்பதைக் கடந்து விட்டது. இப்ப நினைக்கிறப்ப சிரிப்பா இருக்கு. ஆனால் அப்போ ஒரே டென்ஷனா இருந்தது.”என்று கூறி இருக்கிறார் பி. சுசீலா.

இதுபோல ஒரு முறை இரண்டு முறை அல்ல. தமிழ், தெலுங்கு,கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் இதைப் போன்ற அவஸ்தையைச் சந்தித்திருக்கிறார் அவர்.

***********

ஏப்ரல் மாத வெளியீடாக வெளிவந்த படம் “ஆட வந்த தெய்வம்” – இன்று வரை இந்தப் படம் ஒரு பாடல்களின் களஞ்சியம் என்று சொல்லலாம். திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் அனைத்துப் பாடல்களும் கேட்பவர் செவிகளை நிறைத்த பாடல்கள்.

டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி, ஈ.வி. சரோஜா ஆகியோர் நடித்த ஒரு முக்கோணக் காதல் கதை. நடனத்திற்கும் பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து புனையப்பட்ட கதை.

“ஆட வந்த தெய்வம்” என்றதுமே பளிச்சென்று நினைவுக்கு வரும் பாடல் “கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்” பாடல் தான். படத்தில் மூன்று முறை திரும்பத் திரும்ப ஒலிக்கும் பாடல் இது. தீம் சாங் என்பார்களே அப்படித்தான் இந்தப் பாடல்.

டி.ஆர். மகாலிங்கத்தின் குரலில் ஒரு முறை, பி. லீலா – பி. சுசீலா இணைவில் மற்றொருமுறை – மீண்டும் டி.ஆர்.மகாலிங்கம் – பி. சுசீலாவின் குரலில் மூன்றாவது முறை என்று மூன்று முறை இடம் பெறும் பாடல் இது.

காஷ்மீர் தேசத்து நாட்டுப்புற மெட்டில் இருந்து பிறந்த ராகம் தான் “பஹாடி” – அமைதி – ஆற்றல்: சோகம் – கோபம் என்று ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை வெகு துல்லியமாக வெளிப்படுத்தக் கூடிய ராகம் இது. அது மட்டுமல்ல. பிரம்மாண்டம் ஏற்படுத்தும் பிரமிப்பையும் , உயர்ந்த குணங்களையும், மேன்மைகளையும் வெளிப்படுத்தக் கூடிய ராகமும் இதுவே தான்.

இந்த ராகத்தில் “கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்” என்ற கவிஞர் மருதகாசியின் பாடலை அருமையான ஒரு சிற்பமாகச் செதுக்கி இருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அந்த சிற்பத்திற்கு தனது குரலால் உயிரூட்டி இருக்கிறார் பி. சுசீலா என்றால் அது மிகை அல்ல.

பி. லீலாவுடன் இணைந்து தனது பகுதியைப் பாடும்போது அப்படியே பாடாமல் லேசான அசைவு கொடுத்து சிறு கமகம் சேர்த்துப் பாடி இருப்பார் பி. சுசீலா. அந்த அசைவு பாடலுக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கும்.

இறுதியில் இருவரும் மாறி மாறி ஸ்வரங்களை “அகார” பிரயோகத்தில் பாடி இருப்பது பாடல் முடிகிறதே என்று தோன்ற வைக்கும். (154) KODI KODI INBAM THARAVEY SSKTAJFILM021 PL, PS @ AADA VANTHA THEIVAM - YouTube

டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து ஈ.வி.சரோஜாவிற்காகப் பாடி இருக்கும் “சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே. மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே.” என்ற பாடல் சரியான தெம்மாங்குப் பாடல் மெட்டு. கணீர் என்று இனிமை பொங்க பி. சுசீலா இசைத்திருக்கும் பாடல் இது. Sottu sottunu - Aada vantha deivam (youtube.com)

“சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே ” என்று டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து ஒரு அருமையான டூயட். வெகு அனாயாசமாக மகாலிங்கத்தின் கணீர்க் குரலுக்கு ஈடு கொடுத்துப் பாடி இருப்பார் பி. சுசீலா. சரணங்களின் முடிவில் அவர் கொடுத்திருக்கும் சிறு ஹம்மிங்.. நம்மை அப்படியே தலையசைக்க வைக்கும். SANGHKAM MUZHANGHKI VARUM SSKTAJFILM021 TRM, PS @ AADA VANTHA THEIVAM (youtube.com)

இறுதியாக உச்ச கட்டக் காட்சிக்காக “நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்” என்ற சோக ரசம் ததும்பும் பாடலை மோகன ராகத்தில் அருமையாகப் பாடி இருக்கிறார் பி. சுசீலா. பொதுவாகவே மோகனம், கல்யாணி போன்ற ராகங்களை மங்கள ராகங்கள் என்று அவற்றை சோகப் பாடலுக்கு கையாளவே மாட்டார் கே.வி. மகாதேவன்.

அப்படி இருக்கும்போது இந்த ஒரு சோகச் சூழ்நிலைக்கான பாடலை மட்டும் மோகன ராகத்தில் கே.வி. மகாதேவன் அமைத்திருக்கிறார் என்றால்...

இதனைப்பற்றி கூறும்போது.”என்னுடைய குரல்லே அவருக்கு இருந்த ஒரு பிடிமானத்தின் காரணமாக இந்த “நிலையாக என் நெஞ்சில்”ங்கிற சோக சிச்சுவேஷனுக்கான பாட்டை மோகன ராகத்துலே போட்டார். எனக்குத் தெரிஞ்சு அவர் மோகனத்துலே போட்ட ஒரே சோகப்பாட்டு இதுதான்.” என்கிறார் பி. சுசீலா. (154) NILAIYAAGA EN NENJIL OLI VEESUM SSKTAJFILM021 PS @ AADA VANTHA THEIVAM - YouTube

பாடலின் இறுதிச் சரணத்தின் வரிகளை ஒரே மூச்சில் பாடி படிப்படியாக உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி பாடலை முடித்திருப்பார் பி. சுசீலா.

“தீ எந்தன் உயிர்க்கூட்டை எரித்தாலும் – அது

நீ இருக்கும் என் நெஞ்சை நெருங்காது”

இந்த வரிகளும் இதற்குப் பின் வரும் வரிகளும் நமது இசை அரசியின் குரலில் வெளிப்படும்போது நம்மையும் அறியாமல் நம் கண்களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கத்தான் செய்யும்.

இந்த ஒரு பாடலை அவர் அஞ்சலிதேவிக்காகப் பாடி இருப்பார். ஈ.வி. சரோஜாவுக்காகப் பாடி இருக்கும் மற்ற பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட குரலில் இந்தப் பாடலைப் பாடித் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி இருப்பார் பி. சுசீலா.

மொத்தத்தில் “ஆட வந்த தெய்வம்” படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் எல்லாமே தேனில் ஊறிய பலாச் சுளைகளாக இனித்தன என்றால் அது மிகையாகாது.

தொடர்ந்து வெளிவந்த “பார்த்திபன் கனவு” படத்தில் வேதாவின் இசையில் அருமையான பாடல்களை ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா.

அனைத்துமே பெருவெற்றி பெற்று அவரது பெயரை நிலைத்திருக்க வைத்திருக்கும் என்றும் பசுமை ரகப் பாடல்கள்.

“பழகும் தமிழே பார்த்திபன் மகனே – அழகிய மேனி சுகமா” என்று வைஜயந்திமாலாவிற்காக அழகாக நலம் விசாரித்திருப்பார் அவர்.

“இதய வானின் உதய நிலவே – எங்கே போகின்றாய்” – நாடு கடத்தப்பட்ட காதலனுக்காக பிரிவாற்றாமை அழகாக வெளிப்படும் அவர் குரலில்.

“கண்ணாலே நான் கண்ட கணமே – உயிர்க் காதல் கொண்டதென் மனமே” - அருமையான இணைப்பாடல் பி. சுசீலாவின் குரலில் துவங்கும் கவிஞர் மருதகாசியின் பாடல். மத்யம ஸ்ருதியில் துளிக்கூட பிசிறே இல்லாத அந்தக் குரல் வெளிப்படுத்தும் நயங்கள் வார்த்தைகளில் அடங்காதவை.

புகழேணியின் உச்சத்தை நெருங்க வைத்த பாடல்கள் இவை.

தயாரிப்பாளர்களாலும், நட்சத்திரங்களாலும் – இசை அமைப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத ஒரு பாடகியாக உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவருக்கென ஒரு ரசிகர் / ரசிகைகள் கூட்டமே உருவாக ஆரம்பித்த நேரத்தில் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த “படிக்காத மேதை” படம் அவரது ரசிகர்களுக்கு பெரு வியப்பை அளித்தது.

“ஜோக் பியாக்” என்ற வங்காளப் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்த “பாலா மூவீஸ்” கிருஷ்ணஸ்வாமி அவர்கள் ஆரம்பத்தில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களைத் தான் தொடர்பு கொண்டார்.

வங்காளப் படத்தை பார்த்த ஸ்ரீதர், “இந்தக் கதையில் அழுத்தம் இல்லை. தமிழ் ரசிகர்களிடம் எடுபடவே படாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி மறுத்துவிட்டார்.

கிருஷ்ணஸ்வாமி பிடிவாதமாக இருக்கவே வேறு வழி இல்லாமல் தமிழுக்காக திரைக்கதை வசனம் எழுத தனது உதவியாளர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனை கைகாட்டி விட்டு ஸ்ரீதர் விலகி விட்டார்.

இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட கே.எஸ்.ஜி. திரைக்கதை அமைக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அது பிடித்துப்போக பீம்சிங் இயக்கத்தில் தயாரான படம் தான் “படிக்காத மேதை”.

இந்தப் படத்தில் மொத்தம் இடம் பெற்ற பத்து பாடல்களில் பெண் குரலுக்கான பாடல்கள் ஆறு. ஆனால் இவற்றில் ஒரே ஒரு பாடலை மட்டுமே அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா. (இதே படம் தெலுங்கில் என்.டி. ராமராவ் – சாவித்திரி நடிக்க “ஆத்ம பந்துவு” என்ற தலைப்பில் கே.வி. மகாதேவனின் இசையில் தயாரானபோது பெண்குரல் பாடல்கள் அனைத்துமே பி. சுசீலாவின் வசமே வந்தன.)

“இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டம் – நமக்கு

எந்நாளும் வாழ்வினிலே ஒரே கொண்டாட்டம்” – என்ற இந்தப் பாடலை ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிற்காகப் பாடி இருந்தார் பி. சுசீலா. INBA MALARGALL POOTHTHUK KULUNGHKUM SSKFILM020 PS, LRE @ PADIKKAATHA MEYTHAI (youtube.com)

எல்.ஆர். ஈஸ்வரியும் பி. சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இதுதான். இந்தப் பாடலின் முகப்பிசை அன்றைய காலகட்டத்தில் இலங்கை வானொலியின் “விடுமுறை விருப்பம்” நிகழ்ச்சிக்கான தீம் இசையாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒலிபரப்பப் பட்டு வந்தது.

தொடர்ந்து வந்த “எங்கள் செல்வி”யின் “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை” பாடலை இன்று வரை மறக்கவே முடியாதே. TAMIL OLD--Sollathan ninaikiren mudiyavillai(vMv)--ENGAL SELVI (youtube.com)

“நோபடீஸ் சைல்ட்” என்ற ஆங்கிலப் படத்தின் கதையை மூலக்கதையாக அமைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தமிழில் தயாராகிக் கொண்டிருந்தன.

ஒன்று சின்ன அண்ணாமலை திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்த “கடவுளின் குழந்தை”. தாதா மிராசி அவர்கள் இயக்கத்தில் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களின் இசையில் கல்யாண்குமார் – ஜமுனா நடிக்க உருவாகிக் கொண்டிருந்த படம்.

இரண்டாவது ஏ.வி.எம். நிறுவனத்தின் சார்பில் ஏ.வி.எம். அவர்களின் மகன்களான எம். முருகன், எம். குமரன் மற்றும் எம். சரவணன் ஆகிய மூவரும் முதல் முதலாகத் தயாரிப்புத் துறையில் நுழைந்து தயாரிக்க ஆரம்பித்த படம். நட்சத்திர ஜோடியான ஜெமினி கணேசன் – சாவித்திரி பிரதான வேடங்களில் நடிக்க ஜாவர் சீதாராமன் திரைக்கதை வசனம் எழுத – ஆரம்பத்தில் டி. பிரகாஷ்ராவ் இயக்க – பிறகு ஏ.வி.எம். அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் அவர் விலகிக் கொள்ள ஏ. பீம்சிங் படத்தை இயக்கிக் கொடுத்து முடித்தார். இசை : ஏ.வி.எம். அவர்களின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனம் அவர்கள். இந்தப் படத்தின் மூலம் இன்னும் இருவர் திரை உலகில் கால் பதித்தனர்.

ஒருவர் உதவி இயக்குனராக தனது கணக்கை ஆரம்பிக்கத் தொடங்கிய பின்னாளைய இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.

மற்றவர்...?

நமது உலக நாயகன் கமலஹாசன்.

ஆம். “களத்தூர் கண்ணம்மா” படம் தான்.

இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாரானபோது தங்களது படத்தை விரைவில் முடிக்கவேண்டும் என்று ஏ.வி.எம். சகோதரர்கள் அவசரம் காட்ட ஆரம்பித்த நேரத்தில் ஏ.வி.எம். அவர்களோ குழந்தை நட்சத்திரம் கமலஹாசன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் மறுபடி ரீ-ஷூட் செய்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.

“இன்னொரு படத்தை முந்த வேண்டும் என்பதற்காக அரைகுறையாக படத்தை முடிக்க அவசரம் காட்ட வேண்டாம். அது முதலில் வந்தால் வரட்டும். நமது படத்தை முழுமையாக நமக்கே திருப்தி ஏற்படும் வகையில் எடுத்து முடித்துவிட்டே ரிலீஸ் செய்வோம். முடிவை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.” என்று ஆணித்தரமாக சொல்லிவிட...

“கடவுளின் குழந்தை” படம் வெளிவந்து பன்னிரண்டு நாட்கள் கடந்த பிறகே “களத்தூர் கண்ணம்மா” படம் வெளிவந்தது.

இரண்டிலும் பி. சுசீலாவே ஜமுனாவிற்கும், நடிகையர் திலகத்திற்கும் பாடி இருந்தார்.

ஏ.வி.எம். அவர்களின் கணிப்பு பொய்க்கவில்லை.

கடவுளின் குழந்தை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. மாறாக “களத்தூர் கண்ணம்மா”வோ திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நடிகையர் திலகத்துடன் மாஸ்டர் கமலஹாசன்
நடிகையர் திலகத்துடன் மாஸ்டர் கமலஹாசன்

களத்தூர் கண்ணம்மா படத்தில்  தான் பாடிய இரண்டு பாடல்களையும் அருமையாகப் பாடி வெற்றிப் பாடல்களாக்கினார் பி. சுசீலா.

“கண்களின் வார்த்தைகள் புரியாதோ...

காத்திருப்பேன் எனத் தெரியாதோ...” என்று நிதானமாக நயம் மென்னடை எடுத்தாற்போல பி. சுசீலா ஆரம்பிக்கும் அழகே தனி.

“ஆடாத மனமும் ஆடுதே”  - கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் எழுதிய இந்தப் பாடலை கௌரி மனோஹரி ராகத்தில் ஆர். சுதர்சனம் அமைக்க – ஏ.எம். ராஜாவுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.

“கடவுளின் குழந்தை” படத்தில் இசைச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதன் இசையில் பி. சுசீலா பாடியிருந்த பாடல்கள் சிறப்பாகவே அமைந்திருந்தாலும் படம் அடைந்த தோல்வியினால் வானொலியில் கூட அவ்வளவாக ஒலிபரப்ப மறந்த பாடல்கள். என்றாலும் இலங்கை வானொலியின் உபயத்தால் பாடல்களை எழுபதுகளின் இறுதிவரை கூட அவ்வப்போது கேட்க முடிந்தது.

மெல்லிசை மன்னர்களின் இசையில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் சத்யன், எல்.விஜயலட்சுமி இணைந்து நடித்த “ஆளுக்கொரு வீடு” படத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸுடன் இணைந்து பி. சுசீலா பாடி இருக்கும் “அன்பு மனம் கனிந்தபின்னே அச்சம் தோன்றுமா – அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா” பாடல் அவரது புகழேணியில் இன்னொரு மகுடமாக அலங்கரித்த பாடல்.

1960ஆம் வருட தீபாவளிக்கு மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் அவர்கள் நடித்த மன்னாதி மன்னன் படமும், நடிகர் திலகம் நடித்த பாவை விளக்கு படமும் நேரடியாக மோதின.

ஆனால் இந்த இரண்டு படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு மினிமம் பட்ஜெட் படம் நூறு நாட்கள் கடந்து ஓடி வசூலை வாரிக் குவித்து அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. பெண் குரலுக்கான அனைத்துப் பாடல்களும் பி. சுசீலாவின் இனிய குரலில் சிறப்பாக அமைந்து அவருக்குக் கை கொடுத்த ராசியான அந்தப் படம்தான்...

 “கைராசி” 

(இசையின் பயணம் தொடரும்..)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com