பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 9

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“பி. சுசீலா அவர்களின் குரலில் வெளிப்படும் இனிமை, துல்லியமான மொழி உச்சரிப்பு, உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.  இந்தக் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகராக வேறு யாருமே இல்லை.” - பின்னணிப் பாடகி எஸ்.பி. ஷைலஜா

1959-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக (9.4.1959) இல் வெளிவந்த புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் “கல்யாண பரிசு” தமிழ்த் திரை உலகையே அடியோடு புரட்டிப்போட்ட ஒரு படம் என்றால் அது மிகையாகாது.

முக்கோணக் காதல் கதை.

அதுவும் அன்றைய இளசுகளை ஈர்க்கும் காட்சி அமைப்புகள். இளமைத் துள்ளலோடு செதுக்கப் பட்ட காட்சிகள் என்று ஸ்ரீதர் அசத்தினார். 

ஏற்கெனவே அவரது நண்பனான ஏ.எம். ராஜாவிற்கு “எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் நீ தான் அந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர்.” என்று கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற ஏ.எம்.ராஜாவையே இசை அமைக்க வைத்தார் ஸ்ரீதர்.

பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

அவரிடம் ஸ்ரீதர் படத்தின் கதையை விவரித்து சொல்லிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், “என்னய்யா பெரிய கதை? காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி. கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி. இதுதானே?” என்று இரண்டே வரியில் சர்வ சாதாரணமாகச் சொல்ல, அதிர்ந்துபோன ஸ்ரீதர் “இந்த வார்த்தைகளை வைத்தே பாட்டை எழுதித் தர முடியுமா?” என்று கேட்க படத்திற்கு ஜீவநாடியான பாடல் கிடைத்தது. இடைவேளைக்கு முன்பு பி. சுசீலாவின் குரலிலும் இறுதியில் ஏ.எம். ராஜாவின் குரலிலும் பாடல் இருமுறை “தீம் சாங்” ஆக இடம்பெற்றது.

இந்தப் படத்தில் நமது இசை அரசி பி. சுசீலாம்மா பாடிய பாடல்கள் அனைத்துமே தேனில் ஊறிய பலாச்சுளைகளாக இனித்தன.

“வாடிக்கை மறந்ததும் ஏனோ”  - சுத்த சாவேரி ராகத்தை தழுவி ஏ.எம்.ராஜா அமைத்த மெல்லிசை மெட்டுக்கு தனது இனிய குரலால் உயிரோட்டம் கொடுத்தார் பி.சுசீலா. (3360) Vaadikkai Maranthathum A.M.ராஜா P.சுசிலா பாடிய பாடல் வாடிக்கை மறந்ததும் ஏனோ - YouTube

“ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்” – பாடல் முழுக்க இசை அரசியின் குரல் அபிநய சரஸ்வதியின் உற்சாகத் துள்ளோட்டத்திற்கு அழகாக இணை சேர்ந்தது. (3360) Kalyana Parisu | Aasaiyinaale Manam song - YouTube

காதலை சகோதரிக்காகத் தியாகம் செய்த கதாநாயகி தனது சகோதரியைத் தனது காதலனுக்குத் திருமணம் செய்துவைத்த பிறகு இருவரையும் ரயில் நிலையத்தில் வழி அனுப்பிவிட்டுத் திரும்பும் காட்சியில் அசரீரியாக பி. சுசீலாவின் குரலில் படத்தின் தீம் பாடல் ஒலிக்கிறது.

‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி

கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி”

சோகச் சூழலை அப்படியே நம் மனதில் கடத்தும் பாடல்.  ஆசையில் பாத்தி கட்டி விதைத்து அல்லும் பகலும் காத்திருந்து வளர்த்த அன்புப் பயிரைச் சகோதரியின் மீது கொண்ட பாசத்திற்காகப் பறிகொடுத்த பெண்ணின் மனநிலையைப்  பி. சுசீலாவின் குரலில் டேப் வாத்தியத்தின் தாளக்கட்டுடன் கேட்பவரின் மனங்களில்   தானும் அதுபோன்ற சூழலில் சிக்கித் தவிப்பது போன்ற நினைப்பை உருவாக்கி விடுகிறதே.

“பாசத்திலே பலனைப் பறி கொடுத்தாள்

கனிந்தும் கனியாத உருவெடுத்தாள்”

பாடல் முழுவதும் மத்யம சுருதியிலேயே இசை அரசியின் குரல் இந்திர ஜாலம் புரியும் லாவகம் தனி. பாசத்திலே என்ற வார்த்தையை முடிக்கும்போது கீழிறங்கி அடுத்தவரியில் மீண்டும் மத்யமத்திற்கு வந்து அங்கேயே சஞ்சாரம் புரியும் போது நம் மனதை உருக்கும் ஏதோ ஒன்று அந்தக் குரலில் தென்படும்.  ஏ.எம். ராஜாவின் இசையில் வன்மையான டேப் வாத்தியத்தின் தாளக்கட்டு மென்மையாகப் பி.சுசீலாவின் குரலை ஓவர்டேக் செய்யாமல் பாடல் முழுவதும் சரியான பக்க வாத்தியமாக இணை சேரும். பாடல் வரிகளும் ஒரு முறை கேட்டபோதே மனதில் பதிந்துவிடும்.

https://www.youtube.com/watch?v=s_YbbsEClNc

ஜமுனாராணி “மங்கையரின் முகத்தில்”என்று தொகையறாவாக ஆரம்பிக்க ““அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு”- என்று பி. சுசீலா தொடரும் பாடல் கொண்டாட்ட சூழ்நிலையை அப்படியே பிரதிபலிக்கும் இனிமையும் உற்சாகத் துள்ளலும் நிறைந்த ஒரு பாடல்.

1959-க்கு முன் எப்படியோ..  1959-க்கு பிறகு..  இன்று வரை “கல்யாண பரிசி”ல் நமது இசை அரசி பாடியிருக்கும் “உன்னைக்கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீயாட” என்ற பாடல் இல்லாமல் தீபாவளியே கிடையாது. (3360) Unnai Kandu Naan Aada A.M.ராஜா இசையில் P.சுசிலா பாடிய பாடல் உன்னைக்கண்டு நான் ஆட - YouTube

அந்த அளவுக்கு சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட பாடல் இது.

பாகேஸ்ரீ ராகத்தை ஒரு கோடு போட்டு அவுட் லைன் போடுவதுபோல போகிறபோக்கில் ஏ.எம்.ராஜா அமைத்த மெட்டும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளும் நம் காதுகளில் பி. சுசீலாவின் குரலில் பாயும்போது பாடல் வியக்கவைக்கிறது.

உற்சாகத் துள்ளல் நிறைந்த ஒரு கொண்டாட்டப்பாடலை கேட்பவர் கால்கள் தாளமிட தலை தானாக அசைய இணைப்பிசையால் ஏ.எம். ராஜா அதகளப் படுத்த அதனை அனாயாசமாக வார்த்தைகளுக்கே வலிக்காத வண்ணம் தனது குரலால் உயிரூட்டி இருக்கிறார் பி. சுசீலா.

1959-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளிவந்த கல்யாணபரிசு இருபத்தைந்து வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்று வெள்ளிவிழாக் கொண்டாடியது.  பி. சுசீலாவை புகழேணியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல பேருதவி புரிந்தது.

அதற்கு சற்று முன்னதாகவே பொங்கல் வெளியீடாக வந்த இரண்டு தமிழ்ப் படங்களும் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.

ஒன்று ஜூபிடர் நிறுவனத்தின் “தங்கப் பதுமை” – சிவாஜி – பத்மினி இணைந்து நடித்த சிலப்பதிகாரத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். “கோட்டு தைப்பதாக நினைத்துக் கொண்டு ஷர்ட் தைக்க ஆரம்பித்து கடைசியில் ஜிப்பாவாகத் தைத்து முடித்திருக்கிறார்கள்” என்று நையாண்டியாக விமர்சனம் செய்தது கல்கி.

இந்தப் படத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையில் ஒரே பாடலை இருமுறை இருவேறு உணர்ச்சிகள் பொங்கப் பாடினார் பி. சுசீலா.

“என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் – ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்” – என்று மனம் கவர்ந்த காதலனுடன் திருமணம் நிச்சயிக்கப் பட்ட சந்தோஷத்தில் பாடும் பெண்ணின் மனநிலையைச் சித்தரிக்கும் ஒரு உற்சாகத் துள்ளலான பாடல். பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. 

“காணாத நிலையைக் கண்டதனாலே

கன்னி மனம் இங்கே பொங்கும்

கடல் போலே ஆனேனே. இது

கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ..” என்ற வரிகளைத் தொடர்ந்து ஒரு சிறு ஹம்மிங்கோடு பி. சுசீலா முடித்து மீண்டும் பல்லவிக்கு திரும்பும் அழகே தனி.

இதே பாடலை தனக்குக் குழந்தை பிறந்து அதன் பெயர் சூட்டுவிழாவில் கணவனால் இருக்கும் சொத்தை எல்லாம் இழந்து வீதிக்கு வரும் சோகச் சூழ்நிலையில் கதாநாயகியின் மனக்குமுறலை  அசரீரியாக பாடுவார்.

அதே வரிகள் தான் ... ஆனால் இப்போது காட்சியின் சூழலும் அர்த்தமுமே வேறாக தொனிக்கும்.

அதற்கேற்ப மெல்லிசை மன்னர் நடையை முற்றிலும் மாற்றி இருப்பார்.  அந்த நடைமாற்றத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு ஒரு பெண்ணின் மனக்குமுறலை தனது குரலில் வெகு அற்புதமாகப் பிரதிபலித்திருப்பார் பி. சுசீலா.

தொடர்ந்து  தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழித் தயாரிப்பாக வெளிவந்த படம் “மஞ்சள் மகிமை”.

ஏ. நாகேஸ்வரராவ், சாவித்திரி, கே.ஏ. தங்கவேலு, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், கண்ணாம்பா ஆகியோரின் தேர்ந்த நடிப்பில் வெளிவந்த படம் இது.

முதல் முதலாக உதகையில் வெளிப்புறப்படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் இதுதான்.  எம். வேணு அவர்கள் இசை அமைத்த இந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அவற்றில் பி. சுசீலா தனித்தும் பிற பாடகர்களுடன் இணைந்தும் பாடிய பாடல்கள் ஆறு. அவற்றில் காலத்தை வென்று இன்றும் நிலைத்திருப்பவை அவர் கண்டசாலாவுடன் இணைந்து பாடிய இரண்டு டூயட் பாடல்கள் தான்.

“கோடை மறைந்தால் இன்பம் வரும் – கூடிப்

பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்”  - என்ற பாடலும், (3371) Manjal Mahimai | Kodai Marainthal song - YouTube

“ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா” பாடலும் பி. சுசீலாவின் குரல் இனிமைக்கு இனிமை சேர்க்கும் பாடல்கள். (3371) Aagaya veediyil Manjal magimai YouTube 240p - YouTube

ஆகாய வீதியில் – பாடல் இனிய முகப்பிசைக்கு பிறகு அதனை அப்படியே பிரதி எடுக்கும் பி. சுசீலாவின் ஹம்மிங்குடன் ஆரம்பமாகும்.  ஹம்மிங் முடிந்ததும் “ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா” என்று ஆலாபனையாகப் பாடி நிறுத்தி பிறகு பாடலாக மறுபடி ஆரம்பிப்பார் பி.சுசீலா. இதில் அழகான என்ற வார்த்தையை அப்படியே இசைக்காமல் ஒரு சிறு கமகப் பிரயோகம் செய்து லேசாக அசைத்து பாடுவார்.  அந்த அசைவு வார்த்தைக்கே ஒரு தனி அழகை கொடுத்துவிடும்.

மஞ்சள் மகிமை” – சாவித்திரி – ஏ. நாகேஸ்வரராவ்
மஞ்சள் மகிமை” – சாவித்திரி – ஏ. நாகேஸ்வரராவ்

“அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் பாடுதே.” என்ற வரிகளில் வரும் “தாரகை” என்ற வார்த்தையில் வரும் “தா” “கை” என்ற இரண்டு வல்லின சொற்களையும் பி. சுசீலா உச்சரிக்கும் அழகில் வல்லினத்திற்கே ஒரு மென்மை வந்து சேர்ந்து விடுகிறதே!

இந்த இடத்தில் மற்ற மொழிகளுக்கும் நமது தமிழ் மொழிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழிகளை எடுத்துக் கொண்டாலும் க, ட , த, ப, ம, ச  ஆகிய எழுத்துக்கள் உச்சரிப்பை மையமாக வைத்து நான்கு நான்காக இருக்கும். தமிழில் மட்டுமே எந்த வகை உச்சரிப்பாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரே எழுத்துத்தான்.  ஆனால் இடத்திற்கேற்றவாறு – பொருளுக்குத் தகுந்தபடி – உச்சரிப்பு மாறும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தந்த இடத்திற்குத் தகுந்தமாதிரி எந்த இடத்தில் எந்த அளவிற்கு உச்சரிப்பில் அழுத்தம் கொடுக்கவேண்டும். மென்மையாக உச்சரிக்கவேண்டும் என்ற வித்தியாசத்தை துல்லியமாக உணர்ந்துகொண்டு அதற்கேற்றமாதிரி வார்த்தைகளை உச்சரித்துப் பாடவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் பி. சுசீலா.  அதனால்தான் இன்று வரை அவரது பாடல்களில் ஒரு இடத்தில் கூட மொழியில் ஒரு சிறு பிழையைக் கூட யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.

அடுத்து பி. சுசீலாவை புகழேணியில் மேலும் ஒரு படி ஏற்றிய திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்”.  இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதனுக்கு “ஆசியா கண்டத்திலேயே சிறந்த இசை அமைப்பாளர்” என்ற பெருமையைக் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்றுத் தந்த படம்.

ஜி. ராமநாதனின் இசையில் இந்தப் படத்தில் முத்தான மூன்று பாடல்கள் பி.சுசீலாவிற்கு.

யாராலும் அடக்கமுடியாத காளையை வளர்க்கும் வெள்ளையம்மாளின் பெருமிதமும் கர்வமும் தெறிக்க “அஞ்சாத சிங்கம் என் காளை – இது பஞ்சாய்ப் பறக்கவிடும் ஆளை” என்று பத்மினிக்காக பாடினார் பி. சுசீலா.  பொதுவாக சோகத்துக்கென்றே முத்திரை குத்தப்பட்ட வாத்தியமான ஷெனாய் இந்தப் பாடலில் வெள்ளையம்மாளின் உற்சாகத்திற்காக பி. சுசீலாவின் குரலோடு வெகு அழகாக இணை சேர்கிறது.

அடுத்து ஜி. ராமநாதனின் ஸ்பெஷல் ராகமான “பீம்ப்ளாஸ்” ராகத்தில் இன்று வரை காலத்தை வென்று நிலைத்திருக்கும் காதல் டூயட் பாடல் – “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே” – கு.மா. பாலசுப்ரமணியம் இயற்றிய இந்தப் பாடலை பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா.  பி.பி.ஸ்ரீனிவாஸுடன் பி. சுசீலாம்மா இணைந்து பாடிய முதல் பாடல் இதுதான்.

இந்தப் பாடலின் சரணங்களில் முதல் பகுதியின் முடிவில் பி. சுசீலா அவர்கள் இசைக்கும் ஹம்மிங் செல்லும் பாதைகளும் அதில் வெளிப்படும் ஏற்ற இறக்கங்களும் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் பயணிக்கும் லாவகத்துடன் அமைந்தவை.

மூன்றாவது பாடல் “டக்கு டக்கு என அடிக்கடி துடிக்கும்” என்ற விடுகதைப் பாடல்.  எஸ். வரலக்ஷ்மி, ஏ.பி. கோமளா ஆகியோருடன் சேர்ந்து பி. சுசீலா பாடிய பாடல். இந்தப்பாடலின் இரண்டாவது சரணத்தில் கட்டபொம்மனின் பெருமைகளை விடுகதையாக “வேலனைப் பாடும் திருநீறு போடும் வீதியில் தூங்கிடும் சாமியல்ல” என்று பி. சுசீலா ஆரம்பிக்க “நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும் கொள்ளை அடித்திடும் கள்வனல்ல” என்று ஏ.பி. கோமளா தொடர்வார்.  முதல் சரணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் இந்தச் சரணத்தை அமைத்திருப்பார் இசைச் சக்ரவர்த்தி. அதனை சரியாக உள்வாங்கிக்கொண்டு தனது தேன்குரலில் வெளிப்படுத்தி இருப்பார் நமது இசை அரசி.

தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையில் பி. சுசீலா பாடிய “வண்ணக்கிளி” பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சில் செந்தேனை வார்த்தன என்றால் அது மிகை அல்ல.

இந்தப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோருடன் இணைந்து தலா ஒரு பாடலையும், தனித்து இரண்டு பாடல்களையும் பாடும் வாய்ப்பு பி. சுசீலாவிற்குக் கிடைத்தது.

அதிலும் படத்தில் இரண்டு கதாநாயகியர்.  பி.எஸ். சரோஜா, மைனாவதி. இருவருக்குமே பி. சுசீலாவே பாடி இருந்தார்.

“வண்டி உருண்டோட அச்சாணி தேவை – என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே இரண்டு அன்புள்ளம் தேவை” என்று மைனாவதிக்காக பாடிய இந்தப் பாடலில் ஒரு கன்னிப்பெண்ணின் துள்ளலும், அலட்சியமும் அவர் குரலில் தெறிக்கும்.

இதற்கு  முற்றிலும் மாறுபட்ட மத்யம ஸ்ருதியில் பி.எஸ். சரோஜாவிற்குப் பாடியிருக்கிறார். 

“அடிக்கிற கைதான் அணைக்கும்” , “சின்னப் பாப்பா என் செல்லப் பாப்பா”, குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” ஆகிய பாடல்களைக் கேட்டோமானால் நமக்கே அந்த வித்யாசம் புரியும்.  அமைதியும், தாய்மையின் முதிர்ச்சியும் இந்த மூன்று பாடல்களிலும் அவரது குரலில் வெளிப்படும்.

பாடல்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க “வண்ணக்கிளி”படம் பெருவெற்றி பெற்றது.

****

1959-ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் “பாகப் பிரிவினை” – ஜி.என். வேலுமணியின் தயாரிப்பில் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம்.

“ராஜா ராணி” – படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மோதலால் கவியரசு கண்ணதாசனும் நடிகர் திலகமும் பிரிந்திருந்த நேரம் அது.

இனிமேல் சிவாஜி கணேசன் நடிக்கும் படங்களுக்கு நான் பாடல் எழுதமாட்டேன் என்று கவியரசரும், என் படங்களுக்குக் கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது என்று நடிகர் திலகமும் முறுக்கிக் கொண்டிருந்த நேரம் அது.

ஆகவே “பாகப்பிரிவினை” – படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும், கவிஞர் மருதகாசியும் தான் பாடல்களை எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 

படத்தில் ஒரு முக்கியமான காட்சியாக ஒரு கை, கால் விளங்காத தந்தை தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தூளியில் இட்டுத் தாலாட்டும் காட்சி.  இந்தக் காட்சிக்கு உருக்கமான ஒரு தாலாட்டுப் பாடல் எழுத வேண்டிய சூழலில் அதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தவிர்த்துவிட்டார். “எனக்கு தாலாட்டு பாட்டு மட்டும் அவ்வளவு சிறப்பா எழுத வராது. அதுலேயும் இந்த மாதிரி காட்சிக்கு கண்ணதாசனை விட்டா வேற யாராலும் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு எழுத வராது. அதனாலே இந்த ஒரு பாட்டை மட்டும் அவரையே எழுதச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

விஷயம் நடிகர் திலகத்தின் காதுகளுக்குச் சென்றது. 

“அவர் எழுதுறதுன்னா எழுதட்டும். அதுலே எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை.” என்று பட்டும் படாமல் சம்மதம் தெரிவித்துவிட்டார் அவர்.

ஆரம்பத்தில் படத்தின் தயாரிப்பாளரான திரு, ஜி.என். வேலுமணி, இயக்குனர் பீம்சிங், மெல்லிசை மன்னர் ஆகியவர்களே கவியரசரை நேரில் சந்தித்துக் கேட்டபோது கண்ணதாசன் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவே இல்லைதான்.

அவருடனேயே இருந்த பஞ்சு அருணாசலம் அவர்கள் தான் கவிஞரின் மனதை மாற்றிச் சம்மதிக்கவைத்தார்.

“ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” என்று கவிஞர் எழுதிக்கொடுத்த பாடலை டி.எம்.எஸ். பாட ஒலிப்பதிவானது. நடிக்க வந்த நடிகர் திலகம் பாடலில் மனதைப் பறிகொடுத்தார்.

கவியரசரை அப்படியே ஆரத்தழுவிக் கொண்டு “உன்கிட்டே சரஸ்வதி இருக்காடா” என்று மனதார அவர் பாராட்ட அதுவரை இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பூசல் அப்படியே மறைந்து போனது.

விளைவு..  ஒரே ஒரு பாடல் எழுத வந்த கண்ணதாசனுக்கு நான்கு  பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒரு பாடல் தான் நமது இசை அரசி பி. சுசீலா அவர்கள் பாடிய “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ” – என்று ஆரம்பிக்கும் பாடல். படத்தில் பி. சுசீலா பாடிய ஒரே பாடல் இதுதான்.

பி. சுசீலாவின் குரலில் ஒரு மாற்றுக்கூட குறையாமல் சொக்கத் தங்கமாக ஜொலிக்கும் பாடல் இது.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

logo
Andhimazhai
www.andhimazhai.com