பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 12

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“ஒரு கவிஞரின் வார்த்தைகளுக்கு ஒரு இசை அமைப்பாளர் ஸ்வரங்களாக மெட்டுக்களை அளிக்கிறார். அந்தக் கவிஞர் தரும் பாடலின் பொருளை உணர்ந்துகொண்டு அவர் வெளிப்படுத்த நினைக்கும் எண்ண உணர்வுகளைத் துல்லியமாகத் தனது குரலில் வெளிக்கொண்டு வரும் பாடகியரில் முதன்மை வாய்ந்த பாடகி பி. சுசீலா அவர்கள் தான். அவரது நீண்ட நெடிய அனுபவம் தெலுங்கு திரைப்பட உலகிற்கு மட்டுமல்ல. தென்னிந்திய திரை உலகிற்கே கிடைத்த ஒரு வரம் - தெலுங்கு திரைப்படப் பாடலாசிரியர் திரு. ஆத்ரேயா அவர்கள்.

வாசு மேனன் அவர்களின் தயாரிப்பில் கே. சங்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த “கைராசி” படத்தின் வெற்றி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது.

ஜெமினி கணேசன்-சரோஜா தேவி, எம்.வி. ராஜம்மா - எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.ஆர். ராதா, தங்கவேலு ஆகியோர் நடிப்பில் உருவான படம். கொத்தமங்கலம் சுப்பு, கே.எஸ். கோபால கிருஷ்ணன், கவியரசு கண்ணதாசன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஆர். கோவர்த்தனம் இசை அமைத்தார்.

ஜெமினி கணேசனுக்கு டி.எம்.சௌந்தரராஜன் ஒரே ஒரு பாடலில் பின்னணி பாடி இருந்தார். சரோஜாதேவிக்கு பி. சுசீலா.

கோவர்த்தனம் அவர்களிடம் மறைந்திருந்த திறமையை முற்றிலும் வெளிக்கொண்டு வந்த படம் “கைராசி”.

கேட்பதற்கு இனிமையான மெட்டுக்களில் அவர் வார்த்தெடுத்த இசையை அப்படியே நம் செவிகளில் தேனாகப் பாயவைத்தார் பி.சுசீலா.

காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே

காலமெல்லாம் பயணம் செய்யும் உலகம் அன்றோ – அம்மோவ்

காத்திருந்தால் உங்களுக்கெல்லாம் புரியும் அன்றோ.” என்று படகில் செல்லும் நண்பர்களுடன் செல்லும் கதாநாயகன் அடுத்த படகில் செல்லும் பெண்களை வம்பிக்கிழுத்துப் பாட – பதிலுக்குக் கதாநாயகி

“காதல் என்னும் கலையினிலே கைதேர்ந்த காளையரே கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது – அய்யா காதல் வராது

பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும் – அந்தப்

பாடத்தை நீங்கள் பள்ளியிலே படிப்பது நன்றாகும் - என்று தனது தோழியருடன் பதிலடி கொடுப்பது போல அமைந்த பாடலில் உற்சாகம், குறும்புத்தனம், எதிரணியை வாயடைத்துப் போகச் செய்வதால் ஏற்படும் வெற்றிப் பெருமிதம் என்று உணர்வுகளின் கலவையை அப்படியே தனது குரலில் பிரதிபலித்து அழகாகப் பாடி இருக்கிறார் பி. சுசீலா.

இந்த ஒரு பாடல் தான் இருவரும் இணைந்து பாடும் பாடல்.

காதல் வந்தபிறகு பாடுவதாக இணைப்பாடல்கள் எதுவுமே “கைராசி”யில் கிடையாது.

“அன்புள்ள அத்தான் வணக்கம் – உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்” பாடல் ஒரு அற்புதமான மெலடி.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றால் சரணங்கள் மட்டுமே. முதல் சரணம் இரண்டாவது சரணம் என்று மட்டும் தான் அமைப்பு இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் மேலே சொன்ன இரண்டு வரிகளைப் பல்லவியாக அமைத்து அடுத்து வரும்

“தென்னவன் கையிருக்கும் சிறு வாளைப் போலிருக்கும்

கண்ணிருந்தும் இல்லை உறக்கம்” என்ற இரண்டு வரிகளை அதற்கு அனுசரணையான அனுபல்லவியாக ஆர். கோவர்தனம் அமைத்திருக்கிறார்.

தொடரும் சரணத்தில் விரக தாபம் மனதை அப்படியே ஆக்கிரமிக்கும் வகையில் அற்புதமாகப் பாடி இருக்கிறார் பி.சுசீலா.

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னாலே சட்டென்று வந்து நிற்கும் பாடல். டி.எம்.எஸ். அவர்களுடன் நமது இசை அரசி இணைந்து பாடி இருக்கும் “கண்ணும் கண்ணும் பேசுவதும் உன்னால் அன்றோ” பாடல்தான். சாருகேசி ராகத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கும் பாடல் சரணங்களில் கலவையான ராகங்களால் மனத்தைக் கவர்கிறது.

டி.எம்.எஸ். பாடும் வரிகள் அசரீரி வகையாகவும், பி. சுசீலா பாடும் வரிகளுக்கு சரோஜா தேவி வாயசைத்துப் பாடுவதாகவும் அமைக்கப்பட்ட பாடல் இது.

“காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா” - காதல் கைகூடி வரும் எண்ணத்தில் மகிழும் ஒரு பெண்ணின் மனநிலையை அருமையாகப் பிரதிபலித்தார் பி. சுசீலா.

“காதலிலே தோல்வி கண்டோர் கதைகளை நான் படித்ததுண்டு காதலிலே வெற்றி கண்ட கன்னி என்போல் எவருண்டு” – கதாநாயகியின் லேசான கர்வம் கலந்த பெருமிதத்தை கூறும் கவியரசர் கண்ணதாசனின் வார்த்தைகளில் உள்ள நயத்தை அருமையாக உள்வாங்கிக்கொண்டு அதை அப்படியே தனது குரலில் பிரதிபலித்திருப்பார் பி. சுசீலா.

காத்திருந்தேன் காத்திருந்தேன் பாடல் காட்சியில் அபிநய சரஸ்வதி
காத்திருந்தேன் காத்திருந்தேன் பாடல் காட்சியில் அபிநய சரஸ்வதி

இந்தப் படம் முழுக்க சரோஜாதேவிக்காகப் பாடுகிறோம் என்று உணர்ந்து பாடல் முழுவதும் ஒரே விதமான ஸ்ருதியில் – தனது குரலை இழைத்திருப்பார் சுசீலா.  ஆனால் உணர்வுகள் மட்டும் வேறு வேறு விதமாக வெளிப்படும். இந்தப் படத்தில் மட்டும் என்று இல்லை. சரோஜாதேவிக்காக அவர் பாடி இருக்கும் அனைத்துப் பாடல்களையுமே அதிக உச்சமும் இல்லாமல் அதே நேரம் ஒரேயடியாகத் தழைந்தும் இல்லாமல் தான் பாடி இருப்பார் அவர்.

**

தீபாவளிக்கு வெளிவந்த மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோரின் படங்களிலும் பி. சுசீலாவின் திறமை பளிச்சென்று ஒளிர்ந்தது.

“மன்னாதி மன்னனில்” பத்மினிக்காக எம்.எல்.வசந்தகுமாரி இரண்டு பாடல்களை பாடினார் என்றால் பி. சுசீலா மூன்று பாடல்களைப் பாடி இருந்தார்.

“கனியக் கனிய மழலை பேசும் கண்மணி” – டி.எம். எஸ். அவர்களுடன் இணைந்து பாடிய இணைப்பாடல்.

“கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ” -  இராமாயண சுந்தர காண்டத்தின் சாரத்தை இரண்டே வரிகளுக்குள் அடக்கிக் கவியரசர் புனைந்த காவியப் பாடல் இது. பிரிவாற்றாமையின் துயரத்தை வெளிப்படுத்த இன்றளவும் இதை வெல்லும் பாடல் பிறக்கவே இல்லை.

“மன்னாதி மன்னன்” படத்தில் பத்மினி

“நீயோ நானோ யார் நிலவே” – பி.பி. ஸ்ரீநிவாஸ் – ஜமுனா ராணி ஆகியோருடன் இணைந்து பி. சுசீலா பாடியிருக்கும் அருமையான சோக ரசம் ததும்பும் பாடல் இது.

“பாவை விளக்கு” படத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.

“சிதறிய சலங்கைகள் போலே” பாடல் நம் மனதை அதிரவைக்கிறது என்றால் அப்படி அதிர்ந்த மனதை மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல அமைந்த பாடல் “காவியமா நெஞ்சின் ஓவியமா” – பாடல். Pavai Vilakku (youtube.com)

“பாவை விளக்கு” படத்தில் நடிகர் திலகம்-எம்.என். ராஜம்
“பாவை விளக்கு” படத்தில் நடிகர் திலகம்-எம்.என். ராஜம்

சி. எஸ். ஜெயராமனின் குரலில் எந்த வாத்திய இணைவும் இல்லாமல் தொடங்கும் பாடல்.

இசை அரசியின்  குளுமைக் குரல் அதே வார்த்தைகளைப் பாடலாக ஒற்றி எடுக்கும் நயம் செவிவழிப் புகுந்து மனதை நிறைக்கும் அழகே தனி.  அதிலும் 'தெய்வீகக் காதல் சின்னமா' என்று பி. சுசீலாம்மா முடிக்கும் இடத்தில் அந்தக் குரலில் வெளிப்படும் நளினமும், பாவமும் கேட்கும்போதே மனதைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான “தாஜ் மகாலின்” சிறப்பையும் காதலின் சிறப்பையும் ஒரே சமயத்தில் பறைசாற்றும் பாடல் இது.

பாடலை சங்கராபரண ராகத்தில் அமைத்த கே.வி. மகாதேவன் இணைப்பிசையையும் தொடரும் சரண வரிகளையும்  சரசாங்கி ராகத்தில் அரேபியப் பிரயோகங்களுடன் அமைத்திருக்கும் அழகும் சரி: அந்த இடைச் சரணங்களின் ஆரம்ப வரிகளை  இசை அரசி துவங்கும் எடுப்பும் சரி மனத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன.

“முகலாய சாம்ராஜ்ய தீபமே – சிரித்த

முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே”

 “எந்நாளும் அழியாத நிலையிலே  – காதல்

ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே.” 

இதேபோல மேலே சொன்ன இரு சரணங்களிலும் சி.எஸ். ஜெயராமனின் பகுதியை அடுத்து வரும் வரிகளை பி. சுசீலாம்மா

“என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே”

“கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவ(து) உண்மைக் காதலே”

- என்று எடுக்கும் லாவகம்  இருக்கிறதே... அது...இந்தத் தேனில் ஊற வைத்த பலாச்சுளையின் இனிப்பு (sweetness) இருக்கிறதே..அதை நமது நாக்குதான் உணரும்.

அந்த இனிமையை நமது செவிகளும் அனுபவித்து மனதிற்குக் கடத்தும் மகத்தான சாதனையை அனாயாசமாகச் செய்திருக்கிறார் பி. சுசீலா.

 ***

 “Quidi No.911” – ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற படம்.  நமது மாடர்ன் தியேட்டர்ஸ் இந்தப் படத்தை “கைதி கண்ணாயிரம்” என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர்.  ஆர்.எஸ். மனோகர், ஈ.வி. சரோஜா, ராஜசுலோச்சனா, தங்கவேலு, ஜாவர் சீதாராமன், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடிக்க திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த படம்.  மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்றாலே பாடல்களுக்கு இரவல் இசைதான் என்பது சொல்லவேண்டியதே இல்லை.

“மீத்தி மீத்தி பதுன் சே சச்னா ஹாரா” என்று தத்தாராமின் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் “கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்” என்று தமிழில்  நமது சுசீலாம்மாவின் குரலில் மனதை மயக்கியது.

இனிமை பொங்கும் பரவசக் குரலில் கேட்பவரின் மனதை மயக்கி இருந்தார் பி. சுசீலா.

படத்தில் இரண்டு முறை இடம் பெறும் பாடல் இது.  ஜெயிலரின் மகனுக்கு டியூஷன் எடுக்க வரும் ஆசிரியை (ராஜசுலோச்சனா) அவனுக்கு பாடல் வழியாக வீரம், தீரம், ஈரம் ஆகியவற்றை போதிக்கும் பாடல்.

நஞ்சை நெஞ்சில் வைத்திருந்து நம்பும் நல்லவரின் குடியைக் கெடுக்கும் வஞ்சகர் நிறைந்த உலகம் இது என்ற உண்மையை உணர்ந்து நன்மை பெறப் படித்து உலகில் பெரும் புகழ் சேர்த்திட வேண்டும் என்று பாடல் வாயிலாக போதிக்கும் ஆசிரியையாக தானே மாறி கனிவும் அன்பும் ததும்பும் குரலில் நயமாக பாடி இருப்பார் பி. சுசீலா. தனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு குழந்தை டெய்சி ராணி உறுதி கூறியதும் “சபாஷ்” என்று ஒரு வார்த்தை சொல்வார் பாருங்கள். அந்த ஒற்றை வார்த்தை இனிமைக்கு இனிமை சேர்த்துப் பாடலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்துவிடும். 

தப்பித்த கைதிகளிடம் பிணைக்கைதியாக மாட்டிக்கொள்ளும் ஜெயிலரின் மகனை மீட்க ஆசிரியை மீண்டும் பாடிக்கொண்டு வரும்போது இப்போது அதே பாடல் வரிகளில் ஒரு ஆர்வம், பதட்டம், தவிப்பு, துடிப்பு எல்லாவற்றையும் ஒருசேரத் தனது குரலில் வெளிப்படுத்துவார் பி. சுசீலா.

அதி அற்புதமாகப் பாடிக் கொடுத்த சுசீலாவிற்கு டைட்டிலில் முதலிடம் கொடுத்து அவரை உயர்த்தினார் டி.ஆர். சுந்தரம்.

கைதி கண்ணாயிரம் படத்தின் டைட்டிலில் முதலிடத்தில் பி.சுசீலா.
கைதி கண்ணாயிரம் படத்தின் டைட்டிலில் முதலிடத்தில் பி.சுசீலா.

வி. தக்ஷிணாமூர்த்தி மலையாளத் திரை உலகில் முத்திரை பதித்த இசை அமைப்பாளர். தட்சிணாமூர்த்தி சுவாமி என்றே அனைவராலும் போற்றப்படுபவர்.  இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு கர்நாடக இசை கற்றுத்தந்த குரு என்றாலே போதும். இவரை தமிழ் தேசத்திற்கு அறிமுகப் படுத்த வேறு எதுவும் தேவை இல்லை. 

பி. சுசீலாவை மலையாளத் திரை உலகில் முதல் முதலாக கால் பதிக்க வைத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர்.

1960-இல் இவரது இசையில் தான் “சீதா” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கேரள தேசத்தில் தனது வெற்றிக்கொடியைப் பறக்க விட அறிமுகமானார் நமது இசை அரசி.

இந்தப் படத்தின் மூலம் உதவி இசை அமைப்பாளராக தக்ஷிணாமூர்த்தி அவர்களிடம் முதல் முதலாகச் சேர்ந்தார் ஆர்.கே. சேகர். பி. சுசீலாவிற்கு மலையாள மொழி உச்சரிப்பை கற்றுத் தந்து பாடவைத்தார் இந்த உதவியாளர்.

எம்.எல். வசந்தகுமாரி, எஸ். ஜானகி, ஜிக்கி ஆகியோர் ஏற்கெனவே மலையாளத் திரை உலகில் கால் பதித்திருந்த நேரத்தில் மலையாளத்தில் சுத்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரியாத பி. சுசீலாவை உற்சாப்படுத்தி தக்ஷிணாமூர்த்தி சாமியின் இசையில் பாடவைத்தார் உதவியாளர் ஆர்.கே. சேகர். 

“யார் சார் இந்த ஆர்.கே. சேகர்?” என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு ஒற்றை வரியில் இவரை அறிமுகப்படுத்தட்டுமா?

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை தான் இந்த ஆர்.கே. சேகர்.

“சீதா” படத்தின் கதை நமது லவகுசா கதையேதான்.  பிரேம்நசீர் ராமராகவும். குசலகுமாரி சீதையாகவும் நடித்திருந்தனர்.

பூரண கர்ப்பிணியாக இருந்த சீதா தேவியைத் துறக்க ராமர் முடிவு செய்த நேரத்தில் இரவில் உறக்கமில்லாமல் தவித்த சீதா தேவியை பணிப்பெண் மஞ்சத்தில் படுக்க வைத்து வீணை மீட்டிப் பாடும் பாடல் “வீணே பாடுக ப்ரியதரமாய்” என்ற பாடல். Veene Paaduka Priyatharamaay.....(Preetha Madhu) (youtube.com)

தேனினும் இனிய பி.சுசீலாவின் குரலில் சுருதி சுத்தமாக உச்சரிப்பு சுத்தமாக ஒலிக்கும் பாடல்.  பாடிக்கொண்டே வரும் பணிப்பெண் ஏற்கெனவே சீதையை வனத்திற்கு ராமர் அனுப்பப்போகும் விஷயத்தை அறிந்தவள்.  அதை சொல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டு சீதாதேவியை அமைதிப்படுத்த பாடுபவள் இறுதி வரிகளை உச்சத்தில் ஏற்றி நிறுத்தி மயங்கி விழுவது சீதாவிற்கு இன்னும் படபடப்பை உருவாக்கும்.  பி.சுசீலாவின் குரலை உச்சத்தில் ஏற்றி நிறுத்தி பாடலை முடித்திருக்கிறார் தட்சிணா மூர்த்தி.  (மலையாளத் திரை உலகில் உச்சம் தொடப்போவதை குறிப்பால் உணர்த்தி இருக்கிறாரோ.!)

அடுத்து கானகத்தில் குழந்தையை சீதாதேவி தாலாட்டும் பாடல் “பாட்டுப்பாடி  உறக்காம் ஞான்” பாடல் இன்று வரை சூப்பர் ஹிட் பாடலாக அமைந்து விட்ட பாடல். Paattu Paadi Urakkaam Njan...... (youtube.com)

“ராரிராரோ ராரிரோ” என்று ஆரம்பித்து அதே வார்த்தைகளில் பாடலை பி. சுசீலா முடிக்கும்போது நமது கண்களும் மனமும் உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்து விடுவதை உணர முடியும்.

இதுதான் பி. சுசீலா மலையாளத்தில் பாடிய முதல் பாடல்.  இன்று வரை அவருக்கு அழியாப் புகழை சேர்த்துவிட்ட பாடலாகவும் அமைந்து விட்டது.

(இசையின் பயணம் தொடரும்)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

logo
Andhimazhai
www.andhimazhai.com