பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி -15

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“எனக்குப் பாடத் தெரியாது. ஆனால் சுசீலாம்மாவின் பாட்டில் நான் அப்படியே மெய்மறந்து விடுவேன்.  நல்ல ஒரு மதுரமான இசையால் பரவசமடையாமல் யாரும் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான குயில்களின் குரல்கள் தரும் தேன் மதுரம் பி. சுசீலா அவர்களின் குரலில் இருக்கிறது. - தெலுங்கு நடிகர் திரு. கும்மடி வெங்கடேஸ்வரராவ்

கில இந்தியத் திரை உலகில் சாதனைப் படைத்த திரைப்படங்களை பட்டியலிட்டால் அதில் கே. ஆஸிப் அவர்கள் தயாரித்து இயக்கி நௌஷாத் அவர்கள் இசையில் வெளிவந்த “மொகலே ஆஸம்” படத்தைத் தான் முதலில் குறிப்பிட முடியும்.  இசையில் மகத்தான சாதனை படைத்த படம் அது.  நௌஷாத் அவர்களின் இசையின் வீச்சு உச்சம் தொட்ட படம் அது.

உலக அளவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தக்க வைத்துக்கொண்ட படம் இது.

இந்தப் படம் “அக்பர்” என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.  ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களைத் தமிழில் பாடும் வாய்ப்பு நமது இசை அரசிக்கே கிடைத்தது.

பி. சுசீலா அவர்களின் நீண்ட இசைப் பயணத்தில் இந்தப் படப் பாடலைக் குறிப்பிடாவிட்டால் அது முழுமை பெறாது.

குறிப்பாக சிறைச்சாலையில் அனார்கலி பாடும் “மொஹாபத் கி ஜூட்டி கஹானி பே ரோயே” என்ற பாடல் தமிழில் கம்பதாசன் எழுத்தில் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” என்று பி. சுசீலாவின் தேன்குரலில் சோககீதம் இசைத்தது.

இரும்பு மனத்தைக் கூட இளக வைக்கும் இசையை வார்த்தெடுத்த நௌஷாத் அந்த இசையைத் தமிழில் அற்புதமாக வெளிக்கொண்டு வர பி. சுசீலா அவர்களைத்தான் தேர்ந்தெடுத்துப் பாடவைத்தார்.

இந்தப் படத்தில் பி. சுசீலாவிற்குப் பாடும் வாய்ப்புக் கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான கதை.

இதற்கு முன்பாக 1958-இல் ஓ. பி. நய்யார் அவர்களின் இசையில் வெளிவந்த “நயா தௌர்” என்ற ஹிந்திப் படம் தமிழில் “பாட்டாளியின் சபதம்” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது அதில் இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார் பி. சுசீலா. மும்பையில் நடந்த ஒலிப்பதிவிற்காக அவர் கணவருடன் மும்பை சென்று பாடிவிட்டு வந்தார்.

அதற்கு பிறகு “மொகலே ஆஸம்” ஹிந்திப் படத்திற்காக லதா மங்கேஷ்கர் அனைத்துப் பாடல்களையும் பாடி முடித்து முழு ஒலிப்பதிவும் முடிந்துவிட்டது.  தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட “அக்பர்” படத்திற்காக லதாவின் குரலுக்கு இணையான பாடகி தேவை என்று தேடிக்கொண்டிருந்தார் நௌஷாத்.  அந்த நேரத்தில் தமிழ்ப் படத்திற்காக பாடல்களை எழுதிய கம்பதாசன் பி. சுசீலாவை அழைத்துக்கொண்டு சென்று நௌஷாத் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

நௌஷாத் அவர்கள் பாடக் கொடுத்த முதல் பாடல் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடல்தான்.

முகப்பிசையாக வயலின்களின் வீச்சைத் தொடர்ந்து சாரங்கியின் இசை ‘தர்பாரி கானடா”  ராகத்தில் சோக ரசத்தை வார்த்தெடுக்க “கனவு கண்ட கா..ஆ. தல்” என்று பி. சுசீலா ஆரம்பிக்கும் எடுப்பே மனதை உருக்கிவிடும்.  “காதல்” என்ற ஒற்றை வார்த்தையை லேசாக அசைக்கும் அசைப்பிலேயே அது நிறைவேறாத ஏக்கத்தை வெளிப்படுத்த முடியுமா..?

முடியும் என்று நிரூபித்து விட்டிருக்கிறார் பி. சுசீலா.

தொடரும் சரணத்தில்

முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஏங்கிட்டேனே

எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே” ...

என்று உச்சத்தை தொடும்போது அனார்கலியின் குமுறலாகவே அந்தக் குரல் ஒலிக்கிறது. Kanavu Kanda Kaathal (youtube.com)

இந்தப் பாடல் பதிவில் சுவாரசியமான பிரமிக்க வைக்கும் தகவல் ஒன்றும் இருக்கிறது.  அதை பி. சுசீலா அம்மாவே இப்படிக் குறிப்பிடுகிறார்:

“அக்பர் படத்திற்காக மறுபடியும் நேரடியாகவே பிரம்மாண்டமாக நூற்றுக்கணக்கான வாத்தியக் கலைஞர்களை வைத்துக்கொண்டு செட்டிலேயே மீண்டும் ஒலிப்பதிவு செய்தார் நௌஷாத். ஆறு சித்தார், ஆறு சாரங்கிகள், ஐம்பது வயலின்கள், புல்லாங்குழல்கள்,  ரிதம் செக்சனுக்காகவே பத்து நபர்கள் இருந்தாங்க.  அப்போதெல்லாம் மும்பையில் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்கள் அதிகம் கிடையாது. ஒரே ஒரு ஸ்டூடியோ தான் இருந்தது.  ஆனால் பெரிய ஆர்கெஸ்ட்ராக்களுக்கு அந்த ஸ்டூடியோ போதாது என்பதால் படப்பிடிப்புத் தளத்திலேயே ரெக்கார்டிங் நடந்தது. நான் செட்டில் பாடறேன்.  வெளியே ஒளிப்பதிவுக்கருவிகள் எல்லாவற்றையும் ஒரு  vanல  வைத்துக்கொண்டு நௌஷாத் அவர்கள் ரெக்கார்டிங் செய்தார். கண் குளிர வைக்கும் காட்சி அது” – என்று அந்த மறக்கமுடியாத ஒலிப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் பி. சுசீலா.

சுசீலா பாடி முடித்ததும் சந்தோஷம் தாங்கவில்லை நௌஷாத் அவர்களுக்கு.  “என்ன குரல் இது? ஏன் இத்தனை நாட்களாக என்னிடம் அழைத்து வரவில்லை” என்று கம்பதாசனை உரிமையுடன் கடிந்து கொண்டார் அவர்.

அதோடு நிற்கவில்லை நௌஷத். 

பொதுவாகவே யாரையும் வீட்டுக்கு அழைக்காத மனோபாவம் கொண்ட நௌஷாத் அவர்கள் பி. சுசீலாவை தனது வீட்டுக்கே வரவழைத்து அவரது மனைவியின் கையாலேயே சமைக்கச் சொல்லி அருமையான டின்னர் கொடுத்து உபசரித்தார்.

நௌஷாத் அவர்களுடன் இசை அரசி.
நௌஷாத் அவர்களுடன் இசை அரசி.

இந்த நேரத்தில் முன்பே மலையாளத் திரைப்படம் ஒன்றில் இசை அமைக்க அழைத்தபோது “சுசீலா பாடுவதாக இருந்தால் சொல்லுங்கள். நான் இசை அமைத்துக் கொடுக்கிறேன்” என்று திரு. நௌஷாத் அவர்கள் நிபந்தனை விதித்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

அதைப் பற்றிக் குறிப்பிடும் போது “வடக்கில் நூர்ஜஹான், லதா மங்கேஷ்கர், ஷம்ஷுத் பேகம் ஆகியோரை எல்லாம் பாடவைத்த நௌஷாத் அவர்கள் தெற்கில் என் குரலின் மீது ஒரு அபிமானத்தை வைத்து நான் பாடினால் தான் இசை அமைப்பேன் என்கிறார் என்றால் அதை எனது அதிர்ஷ்டம் என்றே தான் கூறவேண்டும்” என்று மனம் நெகிழ்கிறார் பி. சுசீலா.

“த்வனி” என்ற அந்தப் படத்தில் இரண்டு பாடல்களை நௌஷாத் அவர்களின் இசையில் பாடினார் பி. சுசீலா.  ஜேசுதாசுடன் ஒரு டூயட்.  இன்னொன்று அவர் குரலின் இனிமையின் உச்சத்தை உணரவைத்த ஸோலோ பாடல்.

 “ஜானகி ஜானே ராமா” என்ற அந்தப் பாடலை  யமன் கல்யாணி ராகத்தில் நௌஷாத் அவர்களின் இனிமையான இசையில் பி. சுசீலாவின் தேமதுரக் குரலில் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். (488) Malayalam Film Song || Jaanaki Jaane || Dhwani || P. Susheela - YouTube.  இனிமை நிறைந்து தெய்வீக நிலைக்கே நம்மைக் கொண்டு சேர்க்கும் பாடல் இது.

இந்தப் பாடலில்  வியக்க வைக்கும் அம்சம் ஒன்று உண்டு. 

அது ஸ்ரீராமரைப் சமஸ்கிருதத்தில் யூசுப் அலி கெச்சேரி என்ற இஸ்லாமியரால்  எழுதப்பட்ட பாடல். இசை அமைத்த நௌஷாத் அவர்களும் இஸ்லாமியர்.  பாடிய பி. சுசீலாவோ ஹிந்து.

இந்தப் பாடல் படத்தில் சமஸ்கிருதத்தில் பி. சுசீலாவின் குரலிலும், மலையாளத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரலிலும் படத்தில் இரண்டு முறை இடம் பெற்ற பாடல்.

மொழி, மதம், இனம் ஆகிய பேதங்கள் அனைத்தையும் கடந்தல்லவா இசை!

****

தொடர்ந்து வெளிவந்த “புனர்ஜன்மம்” படத்தில் டி. சலபதிராவ் அவர்கள் இசையில் பத்மினிக்காக பாடினார் பி. சுசீலா.

ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடிய “உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய டூயட் பாடல் இன்றளவும் காற்றலைகளில் நம் கருத்தைக் கவரும் பாடல்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் ஒரு மறக்க முடியாத காதல் கதைதான் “பாலும் பழமும்”.

அனைத்துப் பாடல்களும் தேனாகத் தித்தித்தன.

படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களில் டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து மூன்று பாடல்களையும், தனியாக நான்கு பாடல்களையும் பாடி இருந்தார் பி. சுசீலா.

“ஆலய மணியின் ஓசை நான் கேட்டேன்” – பாடல் இன்றளவும் மெல்லிசைக் கச்சேரி மேடைகளில் முதலில் இசைக்கப்படும் பாடலாக இருந்து வரும் பாடல்.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்”  கவியரசரின் கற்பனை ஆதர்ச தம்பதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமே வகுத்த பாடல். சிவரஞ்சனி ராகத்தில் மெல்லிசை மன்னர்களின் மெட்டு பயணிக்கும் விதத்தைச்  சரியாகப் பற்றிக்கொண்டு அழகாக பி. சுசீலா பாடி இருக்கும் பாடலில் இரண்டு வரிகளில் மட்டுமே டி.எம்.எஸ். சேர்ந்துகொள்வார்.  அதன் பிறகு சரணங்களின் கடைசி வரிகளில் மெல்லியதாக ஒரு ஹம்மிங் மட்டுமே கொடுப்பார்.  மற்றபடி இந்தப் பாடல் முழுவதுமே இசை அரசியின் ராஜ்ஜியம் தான்.

பிரிந்த கணவனை மீண்டும் சந்திக்கப்போகும் பரபரப்பில் ஒரு பெண்ணின் மனம் எப்படி எல்லாம் துடிக்கும்; என்னவெல்லாம் செய்ய நினைக்கும்.  அந்தப் பரபரப்பைத் தானே அவளாகி அவளுக்குள்ளே தான் அடங்கிக் கவியரசர் எழுதிக் கொடுத்த பாடல்தான்...

காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா” – பாடல். 

காபி,கரஹரப்ரியா, ஹரிகாம்போதி ஆகிய மூன்று ராகங்களையும் மாறி மாறிக் கையாண்டு மெல்லிசை மன்னர்கள் நம்மை மயக்கிய பாடல் இது.  அந்த ராக மாறுதல்களைச் சரியாகப் பற்றிக்கொண்டு பி. சுசீலா தனது தேன்குரலில் செய்யும் இந்திர ஜாலங்கள் வேறு யாருக்குமே சாத்தியப்படாது. முழுக்க முழுக்க பி. சுசீலாவின் பாட்டு என்ற ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்ற பாடல் இது.

“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.” – இதில் “அழுதால்” என்ற வார்த்தையில் மிகத்துல்லியமான ஒரு கார்வை கொடுத்துப் பி. சுசீலா பாடி இருப்பதைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் மனம் கனத்துப் போவார்கள்.

“பேசமறந்து சிலையாய் இருந்தால் பேச மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் காதல் சன்னதி – அதுதான் காதல் சன்னதி ” என்ற வார்த்தைகளுக்குப் பிறகு அவர் கொடுக்கும் ஹம்மிங் அப்படியே காதல் தெய்வத்தின் பாதங்களில் அர்ச்சனைப் பூக்களாய் மலரும் அழகில் லயிக்காமல் இருக்க முடியாது.

அபிநய சரஸ்வதியுடன் கான சரஸ்வதி.
அபிநய சரஸ்வதியுடன் கான சரஸ்வதி.

அடுத்து சிந்து பைரவி ராகத்தில் “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” பாடல்.

ஏற்கெனவே இசை அரசி தொண்டைக் கட்டுடன் பாடி ஹிட் அடித்த  பாடல் “அத்தான் என் அத்தான்” என்றால் ஜலதோஷத்தால் கம்மிப் போன குரலில் குறைந்த ஸ்ருதியில் டி.எம்.எஸ். பாடி பெருவெற்றி பெற்ற பாடல் இது.

இந்தப் பாடல் முழுவதுமே டி.எம்.எஸ். அவர்களின் குரல் உச்சத்தை எட்டும் போது வழக்கமான ஸ்ருதிக்கு சற்று குறைவாக கம்மலாகவே ஒலிக்கும்.  மாறாக நமது இசை அரசியின் குரலோ உச்சத்தில் கணீர் என்று சஞ்சாரம் செய்யும்.

“என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா

சருகான மலர் மீண்டும் மலராதைய்யா.

கனவான கதை மீண்டும் தொடராதைய்யா

காற்றான அவள் வாழ்வு திரும்பாதைய்யா” என்ற

சரண வரிகளுக்குப் பிறகு “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..” என்று பல்லவிக்கு மீண்டும் வரும்போது நீ...என்ற எழுத்தை தொடர்ந்து பார்..ர்.க்.கிறா...ய்” என்று முடிக்கும் இடம் இருக்கிறதே.. நம்மை அறியாமல் கதாபாத்திரத்தின் உள்ளத் தவிப்பை நமக்குள் கடத்திவிடும்.

சோகத்திற்கு என்றே முத்திரை குத்தப்பட்ட ராகமான சுபபந்துவராளியில் “இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா.. அம்மம்மா.. எத்தனை நாளம்மா.” பாடலில் ராகத்தின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்து விடுகிறார் பி. சுசீலா.

இத்தனை பாடல்களுக்கும் மேலாக ஒரு உற்சாகப் பாடலும் “பாலும் பழமும்” படத்தில் இசை அரசியின் குரலில் இசைத் தட்டுகளிலும் வானொலியிலும் மட்டுமே கேட்க முடியும்.

அதுதான் “தென்றல் வரும் சேதிவரும் திருமணம் பேசும் தூது வரும்” என்ற பாடல்.

இந்தப் பாடலை சௌகார் ஜானகிக்காகப் பாடி இருந்தார் பி. சுசீலா.  மனதில் நினைத்தவனே மணாளனாக வரவிருப்பதில் ஒரு பெண் அடையும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அப்படியே தனது குரலில் கொண்டு வந்திருந்தார் பி. சுசீலா.

இந்தப் பாடலுக்காக மிகுந்த சிரத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு நடனம் எல்லாம் ஒத்திகை பார்த்து ஆடி இருந்தார் சௌகார் ஜானகி.  ஆனால் அவருக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் விதமாக படத்தில் இந்தப் பாடல் காட்சி இடம் பெறவே இல்லை.

படத்தின் நீளம் அதிகமானதால் இந்தப் பாடல் காட்சி படத்திலிருந்தே நீக்கப் பட்டுவிட்டது.

என்றாலும் காற்றலைகளில் பி. சுசீலாவின் குரல் இசைத் தென்றலைச் சுமந்து கொண்டே வந்து நமது செவிகளைக் குளிர வைக்கிறது.

“பாலும் பழமும்” படப் பாடல்களின் மூலம்  அபிநய சரஸ்வதி சரோஜாதேவிக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமான பாடகி என்றால் அது பி. சுசீலா தான் என்று அழுத்தமான முத்திரையைப் பதித்தார் பி.சுசீலா. 

இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் சரோஜாதேவிக்கு அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே ஒரே மாதிரி இருக்காது. அவரது நடிப்பின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் தகுந்த படி மாறுபட்ட வகையில் பி. சுசீலா பாடிக் கொடுத்திருக்கிறார். 

விளைவு. சரோஜாதேவியின் நெருங்கிய தோழியாக ஆனார் பி. சுசீலா. எப்போது பெங்களூரில் இருந்து சென்னை வந்தாலும் பி. சுசீலாவை அவரது இல்லத்தில் சென்று சந்திக்காமல் இருக்கமாட்டார் சரோஜாதேவி.

(இசைப் பயணம் தொடரும்)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com