பி.சுசீலா
பி.சுசீலா

இசையரசி - 13

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“எனக்குப் பிடித்த பாடகி பி. சுசீலாதான். எனக்கு அதிகமாகப் பின்னணி பாடியவரும் அவர்தான். (பிரேம்)நசீர் என்றால் யேசுதாஸ் குரலும், ஷீலா என்றால் பி. சுசீலாவின் குரலும் தான் மிகப் பொருத்தம்”

- மலையாளத் திரைப்பட நடிகை திருமதி ஷீலா.

“எனக்கு மட்டும் அல்ல. என் குடும்பத்திற்கே பிடித்த பாடகி பி. சுசீலாதான். அவர் பாடும் விதத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.”

- கான கந்தர்வன் கே. ஜே. ஜேசுதாஸ்

முதல் பாடலே மிகுந்த வெற்றியைப் பெற்றுவிட மலையாளப் படவுலகில் உச்சம் தொட ஆரம்பித்தார் பி. சுசீலா.

ஆனால் அந்த முதல் பாடலை பாடுவதற்கு அவர் பட்ட சிரமம் இருக்கிறதே..!

“பாட்டுப் பாடி உறக்காம் ஞான் தாமரப் பூம்பைதலே” - இந்த முதல் வரியில் அடுத்தடுத்து வரும் “ற” “ர” பிரயோகங்களை துல்லியமாக உச்சரிக்க அவர் பட்ட சிரமம். முதல் நாள் ஒத்திகையின் போது அவரது நுனி நாக்கில் இருந்து ரத்தமே வந்துவிட்டது.

அதற்காக அவர் மனம் தளர்ந்து விடவில்லை. சோர்ந்து போய்விடவில்லை. இன்னும் அதிகத் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டு மறுநாள் காலையில் வந்து துல்லியமான மலையாள உச்சரிப்புடன் பாடிக் கொடுத்தார் அவர். அந்தச் சிரமம் வீண் போகவில்லை.

“சீதா” படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட சுசீலா பாடிய “பாட்டுப் பாடி உறக்காம்” பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.

அதன் பிறகு மலையாளத் திரை உலகில் பி. லீலா அவர்களுக்குச் சரிசமமான பாடகியாகி விட்டார் அவர்.

அறுபதுகளில் மலையாளத் திரை உலகில் தட்சிணாமூர்த்தி மாஸ்டரைத் தவிர, ஜி. தேவராஜன், கே. ராகவன், எம்.எஸ். பாபுராஜ் ஆகிய மூவரும் முன்னணி இசை அமைப்பாளர்களாக இருந்து வந்தனர்.

(இடமிருந்து வலம்) ஆர். தேவராஜன்,                              கே. ராகவன்,                            எம்.எஸ். பாபுராஜ்
(இடமிருந்து வலம்) ஆர். தேவராஜன், கே. ராகவன், எம்.எஸ். பாபுராஜ்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருந்து வந்தது.  கர்நாடக இசையில் தட்சிணா மூர்த்தி அவர்கள் மகாமேதை. கர்நாடக இசையிலும் மெல்லிசையிலும் தேவராஜன் அவர்களை முந்த ஆளே இல்லை. ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் என்றால் பாபுராஜ். “கேரள மண்வாசம் வீசும் பாடல்கள் வேண்டுமா கூப்பிடு கே. ராகவனை” என்று சொல்லும் அளவுக்கு ராகவனின் தனித்தன்மை கேரள கிராமிய பாடல்களில் பரிமளித்தது.

மற்ற எந்த மாநிலத்திலும் காணமுடியாத அளவில் எல்லா மதக் கலாச்சாரங்களும் கேரளத்தில் பரவலாக இருந்தது.  மலப்புரம் மாவட்டம் முழுக்க இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களில் ஊறிப்போன ஒன்று. கோட்டயத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் என்பதால் கிருத்துவ மதக் கலாசாரம். மாநிலம் முழுவதிலும் ஹிந்து மதக் கலாச்சாரமும் நிலவி இருந்தது.

இதனால் வீர தீரக் கதைகள் சொல்லும் வடக்கன் பாட்டுக்கள், நாடோடிப் பாடல்கள், இஸ்லாமியர்களின் “மாப்ளா” பாடல்கள், வள்ளம், தோணிப் பாடல்கள், கிறிஸ்தவ சமுதாயப் பாடல்கள் என்று பலவிதமான பாடல்களை உள்ளடக்கிய படங்கள் வெளிவந்தன.  அவை அனைத்து தரப்பினாராலும் பேதமில்லாமல் ரசிக்கப்பட்டும் வந்தன.

கே. ராகவனின் இசையில் 1961-இல் வெளிவந்த “உன்னியார்ச்சா” என்ற படத்தில் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பி.சுசீலா பாடிய “அந்நு நின்னே கண்டதின் பின்னே” பாடலைப் போல ஒரு மென்மையான பாடலைப் பி. சுசீலா அவர்களின் குரலில் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். Annu Ninne Kandathil Pinne | Unniyarcha | P Bhaskaran | K Raghavan | P Susheela | AM Raja (youtube.com)

“அந்நு நின்னே கண்டதின் பின்னே அனுராகம் இன்னென்னு ஞான் அறிஞ்சு” என்று ஏ.எம். ராஜாதான் ஆரம்பிப்பார். 

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக “அந்நு நம்மள் கண்டதின் பின்னே ஆத்மாவின் ஆனந்தம் ஞான் அறிஞ்சு” (அன்று நாம் சந்தித்த பிறகுதான் ஆத்மாவின் ஆனந்தம் என்னவென்று தான் அறிந்துகொண்டேன்) என்று பி.சுசீலா பாடுவார். “ஆத்மாவின் ஆனந்தம்”என்ற வார்த்தைகளை சிறு விசும்பலோடு அவர் உச்சரிக்கும் அழகு கேட்பவரின் ஆத்மாவை தொட்டு அசைத்துவிடும்.

“ஒரு பாடலைப் புரிந்து கொண்டு, அதன் பாவத்தை உள்வாங்கிச் சரியாகப் பாடுபவர் என்றால் அது பி. சுசீலா தான்” – பி. சுசீலாவைப் பற்றி இசையமைப்பாளர் கே. ராகவனின் கருத்து இது.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடகியரில் ஏற்கெனவே பி. லீலா உச்சத்தில் இருந்தார். எஸ். ஜானகியும் மலையாளத் திரை உலகில் முன்னணிப் பாடகியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்.

மலையாளத் திரை உலகில் அதிகப் படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமைக்குரிய இசை அமைப்பாளராக ஆர். தேவராஜன் இருந்துவந்தார்.

தேவராஜன் மாஸ்டரின் இசையில் பாடுவது என்றால் அது மிகவும் கடினமான விஷயம்.  ஏனென்றால் அவர் நினைத்தது வரும்வரை கடுமையாக வேலை வாங்குவார்.

அவரது இசையில் அதிகப் பாடல்களைப் பாடியவர் என்றால் அது பி. சுசீலா தான்.

“நான் என்ன நினைக்கிறேனோ, அதைப் புரிந்துகொண்டு உள்வாங்கி அதைச் சரியாகப் பாடியவர் பி. சுசீலா மட்டுமே.” என்று பி. சுசீலாவைப் பற்றி பெருமையுடன் குறிப்பிடுவார் தேவராஜன்.  பி.சுசீலாவிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அவர். 

ஆனாலும் மலையாளத் திரை உலகில் பி. சுசீலாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தபோதிலும் அவரால் அவ்வளவாக அவற்றை உபயோகப் படுத்திக் கொள்ள முடியாமல் போனது உண்மை.

அதற்கு காரணம் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரை உலக வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.  அப்போது இருந்த முன்னணிக் கதாநாயகிகள் அனைவருமே தங்களுக்கு பி.சுசீலாதான் பாடவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததுதான்.

ஒரு திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரிக்காக எஸ். ஜானகி அவர்களைப் பாட வைத்துப் பாடல் பதிவும் முடிந்துவிட்டது.  அந்த நேரத்தில் சாவித்திரி பி.சுசீலாவைத் தவிர வேறு யார் பாடினாலும் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட மறுபடியும் அந்தப் பாடலை பி. சுசீலாவைப் பாடவைத்துப் பதிவாக்கினார்கள். (அந்தப் படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று போனது வேறு விஷயம்!) முன்னணி நடிகைகள் மட்டுமல்லாமல் புதிதாக அறிமுகமாகும் நாயகிகள் கூட தங்களுக்குப் பி.சுசீலாதான் பாடவேண்டும் என்று விரும்பினார்கள்.

ஆகவே மலையாளத் திரை உலகில் பாடுவதற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போனது.

குறைந்தபட்சம் ஒரு பாடல் பதிவுக்காக இரண்டு வாரங்கள் காத்திருக்க வைக்க வேண்டியதாயிற்று. 

மலையாளத்தில் அப்போதெல்லாம் தயாரிப்பு நிறுவனங்களும் குறிப்பிடக்கூடிய அளவிலேயே இருந்து வந்தன.  மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக அப்பச்சன்  அவர்களின்“உதயா” நிறுவனம் இருந்தது.  (நம்ம ஊர் ஏ.வி.எம். மாதிரி). அவரது மகன் குஞ்சாக்கோ அவர்கள் தான் திரைப்படங்களை இயக்கினார்.  (இவரது மகன்தான் பிரபல நடிகர் குஞ்சாக்கோ போபன்). அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்திலுமே      பி. சுசீலாவைத்தான் பாடவைத்தார்கள்.  

இந்த நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகளில் ஜி.தேவராஜன் தான் இசை.  அவரும் பி.சுசீலாவை தவிர்த்து வேறு பாடகிகளைப் பாட வைக்க முயற்சித்தாலும் அவருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை.  பி.சுசீலாவுக்காக அவர் ரெக்கார்டிங்கை நிறுத்தி வைத்துக் காத்திருந்த காலங்களும் உண்டு.

ஆனால் இந்த நிலை வெகு நாட்கள் நீடிக்கவில்லை.  காரணம் சிக்கனத்திற்குப் பெயர் பெற்ற மலையாளத் திரை உலகில் பதினைந்து நாட்களுக்குள் ஒரு முழுப் படத்தையே முடித்துவிடுவார்கள். ஒரு பாடலுக்காக இரண்டு வாரங்கள் காத்திருப்பது எல்லாம் அங்கு கஷ்டம்தான். 

ஆகவே பி.சுசீலாவிற்கு ஒரு மாற்றாக தேவராஜன் கொண்டு வந்த பாடகி தான் மாதுரி.

என்றாலும் குறிப்பிட்ட பாடலை பி.சுசீலா பாடினால் தான் எடுபடும் என்று தேவராஜன் முடிவெடுத்துவிட்டால் சுசீலாவிற்காக காத்திருந்து அவரைப் பாட வைப்பார் அவர்.

அவர் மட்டும் என்று அல்ல.  வடஇந்திய இசை மேதை நௌஷத் அலி அவர்கள் “த்வனி” என்ற மலையாளத் திரைப் படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தம் ஆனபோது, “பி. சுசீலா பாடுவதாக இருந்தால் மட்டுமே நான் இந்தப் படத்திற்கு இசை அமைத்து தருவேன்.”என்ற நிபந்தனையைச் சேர்த்த பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் மலையாளத் திரை உலகில் பாடி இருக்கிறார் பி. சுசீலா.

அவற்றில் எதைச் சொல்ல?  எதை விட?

1963-இல் வெளிவந்த “டாக்டர்” படத்தில் தேவராஜன் இசையில் “கல்பனயாகும் யமுனாநதியுடே” என்று கே.ஜே. ஜேசுதாசுடன் இணைந்து பி.சுசீலா பாடிய பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் பாடலானது.  ஜேசுதாஸ் அவர்கள் பாடிய முதல் டூயட் பாடலும் இதுதான். அந்த வகையில் ஜேசுதாசின் முதல் டூயட் பாடலில் அவருடன் இணைந்து பாடிய பெருமையும் பி. சுசீலாவிற்கே கிடைத்தது. (362) Doctor | Kalpanayaakum song - YouTube

“சகுந்தலா” படத்தில் இவர் பாடிய “ப்ரியதமா ப்ரியதமா” பாடல் படம் வெளிவந்து ஐம்பத்தொன்பது வருடங்களைக் கடந்தும் இன்றும் மங்காத பெருமையுடன் நிலைத்திருக்கும் பாடல்.  Priyathama (youtube.com)

“தத்து புத்திரன்” – பிரேம் நசீர், ஷீலா, ஜெயபாரதி நடித்து 1970இல் வெளிவந்த படம். இதில் “துறந்நிட்ட ஜாலகங்கள் அடைச்சோட்டே” என்று ஜெயபாரதிக்காக பி.சுசீலா பாடிய பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். https://www.youtube.com/watch?v=fmKLRi7-Z8k

பிரபல மலையாள நடிகர் மறைந்த திரு. நெடுமுடி வேணு அவர்கள் பி. சுசீலா அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது “பாடகின்னா அது பி. சுசீலாதான். “துறந்நிட்ட ஜாலகங்கள்- பாட்டு ஒண்ணே போதாதா.?” என்று இந்தப் பாடலை சுசீலாவின் தன்னிகரற்ற திறமைக்கு ஒரு அடையாளமாகக் குறிப்பிடுவார்.   

1973-இல் தேசிய விருது பெற்ற சிறந்த மலையாளத் திரைப்படம் கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய “பணி தீராத்த வீடு” – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தில் பி. சுசீலா பாடிய “அணியம் மணியம் பொய்கையில் “ என்ற பாடல் இனிமையிலும் இனிமை.  மெல்லிசை மன்னரின் இசையும் நமது இசை அரசியின் குரலும் இணையும் போது பாடல் வெற்றிபெறாமல் போகுமா? Aniyam maniyam poykayil pandorarayannam undaayirunnu - Pani Theeratha Veedu (1973) (youtube.com)

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த படம் “அடிமகள்” (தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் “நிழல் நிஜமாகிறது” என்று ரீ மேக் செய்யப்பட்ட படம்).

இந்தப் படத்தில் வயலார் ரவிவர்மா எழுதிய “செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலைகள் சார்த்தி” என்ற பாடலை பி. சுசீலா பாடி இருக்கும் அழகும், அந்தக் குரலில் வெளிப்படும் மதுரமும் ஈடு இணை இல்லாதவை. Chethi Mandaaram Thulasi...| Super Hit Malayalam Devotional Song | Adimakal | Ft.Sharada, Sheela (youtube.com)

“பூந்தேனருவி பொன்முடி புழையுடே” என்ற பாடலை “ஒரு பெண்ணிண்டே கதா” படத்திற்காக தேவராஜன் இசையில் பாடினார் என்பதை விட செவிகளில் இசைத் தேனைப் பாயவைத்தார் என்றே சொல்லலாம்.  இந்தப் பாடலுக்காக கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது. Poonthenaruvi Ponmudi Puzhayude - Oru Penninte Kadha (1971) (youtube.com)

“வாழ்வே மாயம்” படத்தில் பி. ஜெயச்சந்திரனுடன் இணைந்து “சீதாதேவி ஸ்வயம்வரம் செய்தொரு த்ரேதாயுகத்தினில் பண்டொருநாள்” – என்ற பாடலை தேவராஜன் மாஸ்டர் இசையில் நடிகை ஷீலாவிற்காகப் பாடினார். இவை எல்லாம் குரலினிமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்த பாடல்கள்.

அது மட்டுமல்ல.   மலையாளத் திரை உலகில் பின்னால் நுழைந்த பாடகியர் அனைவருக்குமே ஒரு ஆதர்ச பாடகியாக முன்னோடியாகத் திகழ்ந்தவர் பி. சுசீலா தான்.

மலையாளத் திரைப்படப் பாடகி திருமதி அம்பிலியுடன் பி. சுசீலா.
மலையாளத் திரைப்படப் பாடகி திருமதி அம்பிலியுடன் பி. சுசீலா.

“சிறுவயதில் இருந்தே நான் பின்னணிப் பாடகி ஆவதற்கு சுசீலாம்மா தான் உத்வேகம். அவர் உண்மையில் சரஸ்வதி தேவியின் அவதாரம். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கும்,  நாங்கள் பல பாடல்களை ஒன்றாகப் பாடுவதற்கும் வாய்ப்புகளைப் பெற்ற நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.” என்று பி.சுசீலாவைப் பற்றிய தனது நினகிவுகளை என்னிடம் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார் 1970களில் பின்னணிப் பாடகியாக மலையாளத் திரைப்பட உலகில் நுழைந்த  பாடகி திருமதி அம்பிலி அவர்கள்.

பிரபல பின்னணிப்பாடகி திருமதி சுஜாதா மேனன் அவர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடகி பி. சுசீலாதான்.

சுஜாதா
சுஜாதா

“எங்க குடும்பத்திலே எல்லாருமே சுசீலாம்மாவோட அதி தீவிர ரசிகர்கள் தான்.  எங்க அப்பாவும், சுசீலாம்மாவின் கணவரும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள்.  நினவு தெரிந்து நான் கேட்ட முதல் பாடலே பி. சுசீலாம்மா பாடல் தான்.. அவரது குரலின் இனிமையை தேன் என்பதா இல்லை கற்கண்டு என்பதா”-என்று வியக்கிறார் திருமதி சுஜாதா மேனன்.

1960-இல் தொடங்கி  1980 வரை மலையாளத் திரை உலகில் முன்னணிப் பாடகியாக இருந்து வந்தார் நமது இசை அரசி.  உதயா, மஞ்சிலாஸ், மெர்ரிலான்ட் சுப்பிரமணியம் அவர்களின் நீலா தயாரிப்பு நிறுவனம் ஆகிய  பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே பி.சுசீலா அவர்களையே பாட வைத்தனர்.

இத்தனைக்கும் தமிழ்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான பாடகியாக இருந்துகொண்டு மலையாளத் திரை உலகில் கிடைத்த வாய்ப்புகளையும் விட்டுவிடாமல் சரியாக பாலன்ஸ் செய்து கொண்டு  கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடுவது என்பது பிரமிக்க வைக்கும் சாதனை.  அந்தச் சாதனையை அனாயசமாக நிகழ்த்திக் காட்டிய பெருமை பி. சுசீலாவையும் எஸ். ஜானகி அவர்களையும் சேரும்.

***

இந்த இடுகை முழுவதும் நமது இசை அரசியின் மலையாளத் திரைப் பிரவேசத்திற்கே அர்ப்பணிக்க வேண்டியாகிவிட்டது.

தொடர்ந்து அவர் பிசியாக இயங்க ஆரம்பித்த தமிழ்ப் படப் பாடல்களைப் பற்றி எழுதும்போது, நடு நடுவில் மலையாளத் திரைச் சாதனைகளை கொண்டுவந்து ஒரு வேகத் தடையையும், வாசகர்களுக்குக் குழப்பமும் ஏற்படுத்தவேண்டாம் என்று கருதியதன் விளைவே இது.

தொடர்ந்து வரும் வாரங்களில் வெற்றிச் சிகரத்தின் உச்சியில் பி சுசீலா அவர்கள் முத்திரை பதித்த பாடல்களின் தேன் சுவையை பருக தயாராவோம்.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com