பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 17

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“நல்ல சாந்தமான முகம். பாடல்களைப் பாடும்போது, ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், சுருதியோடு குழைந்து மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பாடுவதில் திருமதி. பி. சுசீலா சிறந்து விளங்குகிறார்.  இதுவரை எத்தனையோ விதமான பாடல்களை நாங்கள் இருவரும் சேர்ந்து பாடி இருக்கிறோம். பாடலின் கருத்தை உணர்ந்து, ரசித்துப் பாடும்போது நான் எந்த முறையில் அனுபவிக்கிறேனோ, அதற்கேற்றார் போல சரியான பாவத்தில் பாடும் ஒரே நபர் சகோதரி சுசீலாதான்.

        - பின்னணிப் பாடகர் திரு. டி.எம். சௌந்தரராஜன்

“தாய் சொல்லைத் தட்டாதே”  -  எம்.ஜி. ஆருக்கும், சின்னப்பா தேவருக்கும் இடையில் இருந்து வந்த பிரிவினையும், விரிசலையும் சரிசெய்து மீண்டும் இருவரையும் ஒன்று சேரவைத்த படம்.

வழக்கப்படி முதலில் பாடல் பதிவு, கதை என்று எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு – நடிகர் நடிகைகள் தேர்வைக் கூட செய்துவிடுவார் சின்னப்பா தேவர்.

ஆனால் தனது படத்திற்குக்  கதாநாயகி சரோஜாதேவிதான் என்று தீர்மானமாக முடிவெடுத்த தேவர் கதாநாயகன் தேர்வில் மட்டும் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் குழம்பி நின்ற படமும் “தாய் சொல்லைத் தட்டாதே” படம்தான்.

அவரது குழப்பத்தைப் போக்கியதோடு மட்டுமல்லாமல் இடைக்கால விரிசலையும் நேர்ப்படுத்தி அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பை இனி காற்றால் கூடப் பிரிக்க முடியாது என்ற அளவிற்கு ஒன்று சேர்த்த பெருமையே திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களின் மகத்தான இசையில் டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து நமது இசை அரசி பாடிய ‘சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்” பாடலுக்குத்தான்.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்றே தெரியாமல் டி.எம். சௌந்தரராஜன் பாடிய இந்தப் படத்தின் பாடல்கள் எம்.ஜி.ஆருக்குக் கச்சிதமாக அமைந்துவிட்ட பொருத்தம்தான்.

பொதுவாக எம்.ஜி. ஆர். படங்களுக்கு டி.எம்.எஸ். பாடுவதென்றால் அவரது குரலுக்கு ஏற்றமாதிரி தனது பாடும் முறையை அமைத்துக்கொண்டு டி.எம்.எஸ். பாடுவார்.  ஆனால் இந்த ஒரே படம் தான் நடிக்கப்போவது எம்.ஜி.ஆர் தான் என்று தெரியாமல் டி.எம்.எஸ். பாடிய படம்.

பாடல் துவங்குவதே “ஹஹ்ஹ ஹஹஹ ஹஹ்ஹஹ்ஹா” என்று டி.எம்.எஸ். – சுசீலா இருவரின் ஹம்மிங்குடன் தான். வாய்ஸ் சிந்தசைசர் முறையைப் பயன்படுத்தி ஹம்மிங்கை ஒலிப்பதிவு செய்தார் ஒலிப்பதிவு மேதை டி.எஸ். ரங்கசாமி. Thai Sollai Thattathe Movie Songs | Siriththu Siriththu Video Song | MGR | Saroja Devi | KVMahadevan (youtube.com)

இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணம் முடிந்த பிறகு மீண்டும் பல்லவிக்கு வரும்போது டி.எம்.எஸ். பல்லவியைப் பாட பி. சுசீலாவோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான ஹம்மிங்குடன் இணைந்து பயணித்து அதே நேரம் வார்த்தை சிறிதும் சிதைந்து விடாமல் அதனைப் பாடிக்கொடுத்திருப்பார் பி.சுசீலா.

கதாநாயகியின் அறிமுகப்பாடலான “காட்டுக்குள்ளே திருவிழா” பாடல் இசை அரசியின் குரலின் இனிமைக்கு கட்டியம் கூறும் பாடல். Thai Sollai Thattathe Movie Songs | Kaatukkulle Thiruvizha Video Song | MGR | Saroja Devi (youtube.com)

“பட்டுச் சேலை காற்றாட”  “பாட்டு ஒரே பாட்டு” என்று டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்துமே இன்றுவரை மெஹா ஹிட் பாடல்கள் என்றால் அது மிகை அல்ல.

கே.வி.மகாதேவனின் இசையில் அனைத்துப் பாடல்களுமே வெற்றிப்பாடல்கள் என்றாலும் – மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் என்றால் அது பி. சுசீலா தனித்துப் பாடி இருக்கும் மற்ற இரண்டு பாடல்கள் தான்.

“ஒருத்தி மகனைப் பிறந்தவனாம்” -  கதாநாயகனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து இறுதியில் அவனை மகிழ்ச்சியில் மிதக்க வைக்கும் பாடல்.  பி. சுசீலாவின் குரலில் தெறிக்கும் உற்சாகத் துள்ளல்  நமக்கும் தொற்றிக்கொள்ளும்.

அடுத்தது  “பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே” பாடல்.

இந்தப் பாடலை விசேஷமாகக் குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் “இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்” நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“இரவு –

 மொட்டை மாடி ................

ஏகாந்த ராத்திரியில் உள்ளூர் ஒலிபெருக்கியிலிருந்து கசிந்து கசிந்து என் காதில் வந்து பாய்கிறது உங்கள் தேன்குரல்.

“பூவுறங்குது பொழுதும் உறங்குது

நீ உறங்கவில்லை நிலவே”

உங்கள் குரல் மட்டும் ஒலிக்க ஆரம்பித்தால் உலகத்தின் எல்லா சப்தமும் மறந்து போகிறதே! எப்படி அம்மா?

ஒருவேளை நீ என் தலைமாட்டில் அமர்ந்து தமிழ் பாடுகிறாயா தாயே” –

என்று திரு. வைரமுத்து அவர்களை வியக்க வைத்த பாடல் இது.

காதலின் பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் இந்தப் பாடல் நமது இசை அரசி அவர்களின் அற்புதத் திறமைக்கு அருமையான எடுத்துக்காட்டு.

“பூவுறங்குது” பாடல் காட்சி
“பூவுறங்குது” பாடல் காட்சி

இரண்டாவது சரணத்தின் இந்த வரிகளைப் பாருங்கள்.:

 “தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி – அது

தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி.

திங்கள் நீயும் பென்குலமும் ஒருவகை ஜாதி

தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி.”

இந்த முதல் வரியில் “பாதி” என்ற சொல்லை லேசாக நீட்டி இரண்டாவது வரியில் “இங்கே” என்ற சொல்லைப் பாடியிருக்கும் அழகு வார்த்தைகளின் அர்த்தத்தை எந்த அளவிற்கு உள் வாங்கிப் பாடி இருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.

பிரிவின் துயரும் விரக தாபமும் ஒரு சேர பி. சுசீலாவின் குரல்வழியாக ஒலிக்கும்போது மனம் முழுக்க ஒரு பெண்ணின் தாபமும், சோகமும் நிறைந்துவிடுகிறது. Thai Sollai Thattathe Movie Songs | Poo Uranguthu Video Song | MGR | Saroja Devi | KV Mahadevan (youtube.com)

விரகம் – என்பதைக் கூட கொஞ்சமும் விரசம் கலக்காமல் பாடி மனத்தை உறையவைக்க பி. சுசீலா ஒருவரால் மட்டும் தான் முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அழுத்தமான சாட்சி.

தொடர்ந்து மூன்று மாத இடைவெளிகளில் சின்னப்பாதேவர் எம்.ஜி.ஆரை வைத்து வெற்றிப்படங்களாக எடுத்துத் தள்ள அவற்றில் பாடல்களை எல்லாம் டி.எம்.எஸ். அவர்களுடன் சேர்ந்தும் தனித்தும் வெற்றிப் பாடல்களாக பரிமளிக்க வைத்துக்கொண்டிருந்தார் பி. சுசீலா.

கண்ணதாசன் – கே.வி. மகாதேவன் – டி.எம்.எஸ். – பி. சுசீலா ஆகிய நால்வர் அணி தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான இசைக் கலைஞர்களாக – கொடுத்த வெற்றிபாடல்களைப் பற்றி எழுதுவது என்றால் அதற்கே ஒரு தனி தொடர் எழுத வேண்டும்.

அதிலும் இந்த “த” வரிசைப் படங்களில் எல்லாம் கண்டிப்பாக கதாநாயகியின் அறிமுகம் ஒரு பாடல் காட்சியோடுதான் இருக்கும்.  அதே போல கண்டிப்பாக கதாநாயகிக்கு ஒரு சோகப் பாடலும் இருக்கும்.

“தாயைக் காத்த தனயன்” – படத்தில் மாமாவின் இசையில் பி.சுசீலாவுக்கு கிடைத்த பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்.

‘காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை” இந்தப் பாடல் பி. சுசீலாவின் ஹம்மிங்குடன் தான் ஆரம்பமே ஆகிறது.  இந்த ஹம்மிங் பாடும்போது லேசாக தனது குரலைச் சுரபேதம் செய்து (voice modulation) சுசீலாம்மா பாடியிருப்பது ஒரு எதிரொலி எபெக்டைப் பாடலுக்குக் கொடுக்கிறது.  அதே போல “இங்கு காவல் காக்க கடவுளை அன்றி ஒருவரும் இல்லை” என்ற வரி முடிந்ததும் “ஓஹோ..ஓஹோஹோ. ஓஹோஹோ ஓஹோஹோ..”என்று வரும்  ஹம்மிங்கிலும் இந்தக் குரல் மாறுதல் மூலம் ஒலிக்கும் எதிரொலியைக் கேட்கமுடியும்.  இதனை எப்படித்தான் செய்து பாடினாரோ என்று வியக்க வைக்கும் பாடல் இது. Katturani Kottaiyile K.V.மகாதேவன் இசையில் P.சுசீலா பாடிய பாடல் காட்டு ராணி கோட்டையிலே (youtube.com)

“காவேரிக் கரை இருக்கு கரை மேலே பூவிருக்கு” – கே.வி. மகாதேவனும், டி.கே. புகழேந்தியும் ஆளுக்கு ஒரு பக்கமாக நம் தோள் மீது கைபோட்டுக்கொண்டு “வாங்க சார்.. கொஞ்சம் கிராமத்துப் பக்கம் ஜாலியா ஒரு நடை போயிட்டு வந்துடலாம்” என்று டி.எம். எஸ். – பி. சுசீலாவின் குரல்களோடு நம்மை காவேரிக்கரை கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு செல்வது போல இருக்கும் பாடல். Kaveri Karaiyirukku T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் காவேரி கரையிருக்கு (youtube.com)

அதிலும் ஒவ்வொரு வரி முடிந்ததும் ஒலிக்கும் அக்கார்டியனின் இழுவை வீச்சும், தபேலா, டேப் வாத்தியத்தின் தாளக்கட்டும் நம்மை அப்படியே அள்ளிக்கொண்டு போகும்.  ஆரம்பம் முதல் இறுதிவரை உற்சாகம் குறையாமல் டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.

“மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது” என்ற டூயட் பாடலைக் கேட்கும்போது எப்படி எல்லாம் அந்தக் காலத்தில் சிந்தித்திருக்கிறார்கள் என்று வியக்க வைக்கும் பாடல் இது.  கே.வி.எம் – புகழேந்தி இருவரின் வியக்க வைக்கும் கற்பனை வளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.  இணைப்பிசையில் யூனி வாக்ஸ் இசைக்கருவியை பேக் பைப்பர் போல ஒலிக்க வைத்திருக்கும் திறமையை என்னவென்பது!  Moodi Thirantha K.V.மகாதேவன் இசையில் T.M. சௌந்தர்ராஜன் P சுசிலா பாடிய பாடல் மூடி திறந்த இமை இரண்டும் (youtube.com)

உண்மையிலேயே பி. சுசீலா – டி.எம்.எஸ் இருவரும் கொடுத்துவைத்தவர்கள் தான் என்று சொல்லவேண்டும்.  அவர்கள் திறமை முழுவதுமாக வெளிப்படும்படிப் பாடக் கிடைத்த முத்தான வாய்ப்பை நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

“பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா” – பி. சுசீலாவின் தனித்த குரலில் பாடலாகவும் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல்.

கதாநாயகி சரோஜாதேவிக்குப் பாடியதோடு நகைச்சுவைப் பாத்திரமேற்ற ஜி.சகுந்தலாவுக்காக “சண்டிக்குதிரை நொண்டிக்குதிரை” என்ற பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடலை அருமையாக பாடி தான் ஒரு வெரைட்டி பாடகி என்று நிரூபித்திருக்கிறார் பி. சுசீலா.

“நீதிக்குப் பின் பாசம்” -  வழக்கம்போல சரோஜாதேவியின் அறிமுகக் காட்சிப் பாடலான “காடு கொடுத்த கனி இருக்கு” – அவ்வளவாகப் பிரபலமடையாமல் போனாலும் சோடை போகாத பாடல்.

“அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக்கண்டு மிரளாதே” – கதாநாயகிக்கு சைக்கிள் ஓட்டக் கதாநாயகன் கற்றுக்கொடுக்கும்போது பாடும் ஜோடிப்பாடல்.  பாடலைக் கேட்கும் அனைவருக்கும் முதல் முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட சம்பவம் கண்டிப்பாக நினைவில் நிழலாடும். Akkam Pakkam T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் அக்கம் பக்கம் பார்க்காதே (youtube.com)

“வாங்க வாங்க கோபாலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா” – கதாநாயகனை சீண்டி அதே நேரம் தனது காதல் ஏக்கத்தையும் வெளிப்படுத்திப் பாடும் பாடல்.  அருமையாக ஸ்கோர் செய்துவிட்டார் நமது இசை அரசி. வாங்க வாங்க கோபாலய்ய | Vaanga Vaanga | Neethikku Pin Paasam | P. Susheela | B4K Music (youtube.com)

“சிரித்தாலும் போதுமே” – சரண வரிகளின் முடிவில் “ஹஹ்ஹஹஹ்ஹா” என்று சிரிப்பை வெளிப்படுத்தி இசை அரசி பாடும் பாடல்.  இப்படி எல்லாம் வித்தியாசமாகக் கூட ஹம்மிங் பாட வைக்க முடியுமா என்று திரை இசைத் திலகம் வியக்க வைத்த பாடல். Sirithalum Pothume Video Song | Neethikku Pin Paasam Tamil Movie | MGR, Saroja Devi (youtube.com)

*******

“தர்மம் தலைகாக்கும்” – இந்தப் படத்தில் “அழகான வாழை மரத்தோட்டம்” என்ற கதாநாயகியின் அறிமுகப் பாடல் கோரஸ் பாடகியரின் ஹம்மிங்குடன் பி. சுசீலாவின் இனிய ஹம்மிங்கும் வாய்ஸ் சிந்தசைசர் முறையில் இரட்டை மடிப்புகளாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட உற்சாகப் பாடல்.  இந்தப் பாடலின் ஹம்மிங்குக்காகவே பி. சுசீலாவுக்கு தனியாக ஒரு பாராட்டுக் கொடுக்கலாம். அதுமட்டுமல்ல சரணங்கள் முடிந்து மீண்டும் பல்லவிக்கு வரும்போது சரேலென்று குரல் உச்சத்தை எட்டி மீளும் லாவகம் பி. சுசீலாம்மா ஒருவரால் மட்டும் தான் இப்படி எல்லாம் பாட முடியும். (82) அழகான வாழை மரத்தோட்டம் முழு பாடல் | Azhagana Vaalai Marathottam Video Song | Dharmam Thalai Kaakkum - YouTube

“பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க” பாடலும் போனசாக ஒலிக்கும் உற்சாகப் பாடல்.

டி.எம்.எஸ். அவர்களுடன் பாடும் இரண்டு டூயட் பாடல்களும் இரண்டுவிதம்.

“தொட்டுவிட தொட்டுவிட தொடரும்” குற்றால அருவியின் ஆர்ப்பரிப்பான வேகம் என்றால்.. தொட்டுவிட தொட்டுவிட தொடரும் முழு பாடல் | THOTTUVIDA THOTTUVIDA THODARUM FULL VIDEO SONG HD (youtube.com)

அதே அருவி சமதளத்தில் நதியாகப் பயணிக்கும் போது மேற்கொள்ளும் அமைதியான நீரோட்ட நடைக்கு.. 

“மூடு பனி குளிரெடுத்து” – பாடல்.  முகப்பிசை, இணைப்பிசை இரண்டும் கே.வி. மகாதேவனின் தன்னிகரற்ற திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த பாடல் – இணைப்பிசையோ மேற்கத்திய இசையின் “நாற்சர இசை” (string quartet) வகையைச் சேர்ந்தது.

அது என்ன சார் “நாற்சர இசை” ?

இரண்டு வயலின்கள்,  ஒரு வயோலா, ஒரு செல்லோ அல்லது டபுள் பாஸ் (Double Bass) ஆகிய நான்கே நான்கு இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்படும் இசைக் கோர்வைக்கு “string quartet” என்று பெயர்.

இதில் பங்குபெறும் நான்கு இசைக்கலைஞர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்ட – அதே நேரம் இசை இலக்கணத்தை ஒட்டியே இசை அமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட – இசைக் கோர்வைகளை இசைப்பார்கள்.

இந்த வேறுபட்ட இசை வடிவங்களை ஒரே நேரத்தில் ஒரு சேரவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ, பிரித்தோ.. பிறகு இறுதியில் ஒருசேர வாசிக்கும் போது ஒரு அற்புதமான இசை வடிவமாக அது முழுமை பெறும்.

 நாற்சர இசை (STRING QUARTET)
நாற்சர இசை (STRING QUARTET)

 “மூடு பனி குளிரெடுத்து” பாடல் - முகப்பிசையையும் இணைப்பிசையையும் நாற்சர இசை வடிவத்திலேயே மேற்கத்திய பாணியில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாடல்.  மூடுபனி குளிரெடுத்து | Moodu Pani Kulireduththu | Dharmam Thalai Kaakkum |MGR | Sarojadevi (youtube.com)

மொத்தத்தில் தேவரின் “த” வரிசைப் படங்கள் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உச்சத்திற்கு நமது இசை அரசி அவர்களைக் கொண்டு சென்று நிறுத்திவிட்ட படங்களாக அமைந்துவிட்டன.

(இசையின் பயணம் தொடரும்...)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com