பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 18

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தாற்போல” என்று இனிய செயலுக்குச் சொல்வார்கள்.  உண்மையாகவே தேன் குரலில் பாடுகிறார் சகோதரி திருமதி சுசீலா. அவருடன் நான் முதன்முதலில் சேர்ந்து பாடிய பாட்டு ‘எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி’யில் வரும் ‘பட்டணந்தான் போகலாமடி’ என்னும் பாட்டாகும்.

அன்று கேட்ட அதே குரல், அனாயாசமாகப் பாடும் சக்தி, பதட்டமில்லாமல் பாடக்கூடிய தனித்தன்மை, இன்றும் அவரிடம் அப்படியே இருப்பதைக் காண்கிறேன்.”

- பின்னணிப் பாடகர் திரு. சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 

ஒரே பாடலை இரு வேறு பாடகியர் பாடி அதில் ஒருவர் பாட்டை புறந்தள்ளி மற்றொருவர் பாடலை படத்தில் இடம் பெற வைப்பது என்பது திரை உலகில் அடிக்கடி நிகழ்வதுதான்.

அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைப் பி. சுசீலாவிற்கு கொடுத்த படம்தான் “கொஞ்சும் சலங்கை”.

நடிகையர் திலகம் சாவித்திரியின் நூறாவது படமாக 1962 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த படம்.

பொதுவாக பி. சுசீலாவைத் தவிர வேறு யார் பாடினாலும் அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார் சாவித்திரி. 

ஆனால் அவரது நூறாவது படமான “கொஞ்சும் சலங்கை”யில்

சாவித்திரிக்கு பின்னணி பாடியவர்கள் பி. லீலாவும் எஸ். ஜானகியும்தான்.

இதில் கதாநாயகன் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக இணை சேர்பவர் நடனத் தாரகை குமாரி கமலாதான்.  ஒருதலையாக ஜெமினியைக் காதலித்துத்  தனது காதலைத்  தியாகம் செய்யும் கதாபாத்திரம் சாவித்திரிக்கு.

இந்தப் படத்திற்காக  ‘கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு” என்ற கானடா ராகப் பாடல் பி. சுசீலா பாட ஒலிப்பதிவானது.  சுசீலாவும் தேனான குரலில் அழகாகப் பாடலைப் பாடிக் கொடுத்தார்.  பி.சுசீலாவின் இனிமையான குரலில் இந்தப் பாடல் இன்றும் கேட்கக் கிடைக்கிறது.  (164) konjum Salangai oli kettu P. Susheela - Konjum salangai - YouTube

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் மனதை மயக்கும் இசையில் பி.சுசீலாவின் குரலில் பாடல் அருமையாகவே இருக்கிறது.  ஆனால் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி பாடுவதான காட்சி அமைப்பில்  பி. லீலாவைப் பாடவைத்துப் படமாக்கி விட்டார் இயக்குனர் எம்.வி. ராமன்.

“சிங்கார வேலனே தேவா” பாடலின் கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  நாதஸ்வர இசையோடு ஒன்றிப் பாட எஸ். ஜானகியால் தான் முடியும் என்று அவரைப் பாடவைத்த பாடல் அது.

ஆக மொத்தத்தில் சாவித்திரியின் அபிமானத்துக்குரிய பாடகியாக இருந்தும் கொஞ்சும் சலங்கை படத்தில் பி. சுசீலாவால் அவருக்குப் பாடமுடியாமல் போனது. 

இந்தப் படத்தில் குசல குமாரிக்காக “வசந்த காலத் தென்றலில் வண்டு” என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடி இருக்கிறார் பி.சுசீலா.  ஆனால் படம் வெளிவந்த புதிதிலேயே வானொலியிலேயே ஒலிபரப்பப் படாமல் மக்கள் மனதிலேயே பதியாத வண்ணம் மறக்கடிக்கப்பட்ட பாடலாக இந்தப் பாடல் அமைந்துவிட்டது மிகப் பெரிய கொடுமை என்றே சொல்லவேண்டும்.  படத்தின் பிரதிகளில் கூட இந்தப் பாடல் காட்சி முதல் நான்கு வரிகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது.  (படம் வந்த புதிதில் எப்படியோ?!)

சுசார்ல தக்ஷிணாமூர்த்தி அவர்கள் இசையில் வெளிவந்த படம் “பங்காளிகள்”.  ஜெமினி கணேசன், எம்.ஆர். ராதா, அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா, தேவிகா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். முத்தையா, சாரங்கபாணி என்று பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இருந்தது.

இந்தப் படத்தில் ஒரு அருமையான குழந்தையைக் கொஞ்சும் தாலாட்டுப் பாடல் ஒன்று பாடி இருக்கிறார் பி. சுசீலா.

“சின்ன அரும்பு மலரும் சிரிப்பைச் சிந்தி வளரும்” என்ற அந்தப் பாடலின் இனிமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. TAMIL OLD--Chinna arumbu malarum Happy(vMv)--PANGALIKAL (1961) (youtube.com)

பாடல் தொடங்குவதே பி. சுசீலாவின் ஹம்மிங்குடன் தான்.

மென்மையான நடையுடன் கூடிய இனிமை நிறைந்த மத்யம ஸ்ருதியில் அமைந்த பாடல்.

பொதுவாக இப்படிப்பட்ட ஸ்ருதியில் பி. சுசீலா பாடும் பாடல்கள் எல்லாமே இனிமை தூக்கலாக அமைந்து அவருக்குப் பெருவெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும் பாடல்களாகவே இருக்கின்றன. இந்தப் பாடலும் அதற்கு விலக்கல்ல.

இந்தப் பாடலின் குறிப்பிடப்படவேண்டிய சிறப்பம்சம் பி. சுசீலாவின் தமிழ் உச்சரிப்புத்தான்.

“சின்ன” என்பதில் வரும் “சி” -  “சிரிப்பை” என்ற வார்த்தையின் ஆரம்ப எழுத்தான “சி” – இரண்டும் ஒரே எழுத்துதான்.  ஆனால் இரண்டையும் பி.சுசீலா உச்சரித்துப் பாடி இருக்கும் அழகு இருக்கிறதே.

பொதுவாக இந்த உச்சரிப்புச் சுத்தம் என்ற அம்சம் இருக்கிறதே..  அது இந்தக் கர்நாடக இசைக் கச்சேரியில் பாடும் பாடகியருக்கே டியூஷன் எடுக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அதிலும் இந்தச்  “ச”காரம் அவர்களிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே.. “ஷ்” “ஸ்” – என்ற இரண்டு மெய் ஒற்றுக்களையும் சேர்த்து இணைத்து “ஷ்ஸ்ச்ச” என்றுதான் உச்சரித்துப் பாடுவார்கள்.

வல்லின எழுத்துதான்.  ஆனால் அதைக்கூட இடத்திற்குத் தகுந்த வண்ணம்   அர்த்தத்துக்கு ஏற்றவகையில் மென்மையாக உச்சரித்துப் பாடும் ஒரே பாடகி பி.சுசீலா தான். இந்தப் பாடல் மட்டும் என்று அல்ல. அவரது பாடல்களைக் கூர்ந்து கவனித்தால் இந்த நுணுக்கமான உண்மை புலப்படும்.

இரண்டாவது சரணம் முடிந்த பிறகு வரும் அடுத்த சரணத்துக்கு ஆரம்ப இணைப்பிசையின் வேலையையும் பி. சுசீலாவின் ஹம்மிங்கே செய்யும்.  அந்தச் சிறு ஹம்மிங்கைத் தொடர்ந்து “உனது மாமன் வருவான் – அணைத்து இன்பம் பெறுவான்” – என்ற வரிகளுக்கு பிறகு “உரிமை எல்லாம் தருவான்” என்ற வரிகளில் லேசாக உச்சத்தை எட்டிப்பார்த்து மீண்டும் துக்கிணியூண்டு ஹம்மிங்கில் சட்டென்று சமத்துக்கு வந்து நிற்கும் குரல் ஒரு அரை வினாடி நிசப்தத்திற்கு பிறகு “அந்த அரிய நாள் வரும்” என்று நிற்கும் அழகு...  பி.சுசீலாவின் குரல் ஒன்றால் மட்டுமே இப்படி எல்லாம் இனிமை ஜாலங்கள் காட்ட முடியும்.

ஆனால்.. படம்..?

அதுவரை ஜோடியாகவே பார்த்துவந்த ஜெமினி கணேசனையும் அஞ்சலிதேவியையும் அண்ணன் – தங்கையாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் “பங்காளிகள்” படம் மிகச் சுமாரான ஓட்டத்தையே சந்தித்தது.

என்றாலும் பி. சுசீலா பாடிய “சின்ன அரும்பு மலரும்” பாடல் அவரது வெற்றிப்பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்தது.  இதே பாடலை எம்.ஆர். ராதாவுக்காக திருச்சி லோகநாதன் பாடி இருந்தார். அதுவும் வெற்றிப்பாடலாகவே அமைந்துவிட்டது.

சொன்னது நீ தானா?
சொன்னது நீ தானா?

தொடர்ந்து வந்த பெரும்பாலான படங்களில் பெண் குரல் பாடல்கள் எல்லாமே பி. சுசீலாவின் குரலைத்தான் தாங்கி வந்தன.

புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” – ஒரே செட்டில் இருபத்தெட்டு நாட்களில் முழுப் படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டார் ஸ்ரீதர்.

படம் அமைந்த அபார வெற்றிக்குக் கண்ணதாசன் – விஸ்வநாதன்-ராமமூர்த்தி- பி. சுசீலாவின் பாடல்களுக்கும் சிறப்பான இடம் இருந்தன.

பி. சுசீலா என்ற கான தேவதையின் குரல் காட்டிய வர்ண ஜாலங்கள்.

என்னதான் செய்யவில்லை அந்தக் குரல்?

“முத்தான முத்தல்லவோ” என்று குழந்தையைக் கொஞ்சியது.

“துள்ளி வரும் மான்குட்டி துயில் மடுத்துக் கிடக்கின்றாள்

பள்ளி கொள்ள வைத்தவனே பரம்பொருளே கண்திறவாய்” – என்று உளமுருகப் பிரார்த்தனை செய்தது.

 

“சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்று விசும்பியது.

“என்ன நினைத்து என்னை அழைத்தாயோ” என்று சோகத்தின் உச்சத்துக்கே நம்மைக் கொண்டு சென்றது.

குறிப்பாக “சொன்னது நீதானா” , “என்ன நினைத்து என்னை” பாடல்கள் இரண்டுமே சோக ரசம் ததும்பும் பாடல்கள் தான்.  ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

“ஆபரேஷனில் ஒருவேளை நான் இறந்துவிட்டால்  என் மனைவியை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும்” என்று அவளை வைத்துக்கொண்டே டாக்டரிடம் கணவன் கூறுவதைக் கேட்ட அவனையே உலகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் பெண்ணின் மனத்தவிப்பு  மட்டுமே இந்தப் பாடலில் தெரியும். சொன்னது நீ தானா

“இன்னொரு கைகளிலே ... யார் யார்.  நானா?” என்று கேட்கும்போது “எவ்வளவு  மலிவாக என்னை எடைபோட்டுவிட்டாய்” என்ற ஆதங்கத்துடன் கூடிய அறச் சீற்றம் நிறைந்த குமுறல் அந்தக் குரலில் வெளிப்படும். அடுத்த கணமே “எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என்னுயிரே” என்று உருகும்.

“என்ன நினைத்து என்னை அழைத்தாயோ” பாடலோ இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

பொழுது விடிந்தால் அறுவை சிகிச்சை.  அதில் தனது கணவன்  பிழைப்பானா மாட்டானா  என்பது கேள்விக்குறியான ஒன்று. மதில்மேல் பூனை நிலையில் இருக்கும் கணவன் – மனைவி.  நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் தருணம்.  திருமண நாளன்று அவள் இருந்த மணக்கோலத்தில் அவளைக் காண ஆசைப்படும் கணவனின் ஆசையை (அது கடைசி ஆசையாகக் கூட இருக்கலாமே என்ற தவிப்பில்) நிறைவேற்ற மணப்பெண்ணின் கோலத்தில் அவன் கண்முன் நிற்கும் ஒரு பெண்ணின் மனதில் ஏற்படும் அச்சமும் வேதனையும் – அதே நேரம் அவளது கணவனின் மன நிலையும் அதேதான் – இருவரது நினைவோட்டங்களையும் ஒரே குரலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஸ்ரீதர் கவியரசரிடம் இந்தக் காட்சி அமைப்பை விளக்கியதும் சிறிதும் தாமதிக்காமல் அவர் சட்டென்று நான்கு வரிகளைச் சொன்னார்:

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ

முகத்தைப் பார்த்துக் கொள்ளத் துடித்தாயோ”

கவியரசரின் வார்த்தைகளை நூல் பிடித்த மாதிரி மெல்லிசை மன்னர் மெட்டமைக்க .. சத்தியமாகச் சொல்கிறேன் பி. சுசீலா ஒருவரைத் தவிர வேறு யார் பாடி இருந்தாலும்,  அச்சம், துக்கம், பதற்றம்  என்ற கலவையான  உணர்வுகளை – இத்தனைத்  துல்லியமாக வெளிப்படுத்தி இருக்க முடியாது. Enna ninaithu ennai

ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் சிறு கேவலும் லேசான விசும்பலும் நாளை எப்படி அமையுமோ என்ற அச்சத்தை தாங்கி நிற்கும்வண்ணம் அனுபவித்துப் பாடி கேட்கும் நம் மனதிலும் அந்த சூழலை வெளிப்படுத்தி இருப்பார் பி.சுசீலா.

இறுதி சரணத்தில் “நீங்க பயப்படுகிற மாதிரி எதுவும் ஆகாது.  நான் இருக்கேன். கவலையே படாதீங்க” என்று ஆறுதல் சொல்வது போல..

“பறவை பறந்து செல்ல விடுவேனா – அந்தப்

பரம்பொருள் வந்தாலும் தருவேனா – உன்னை

அழைத்துச் செல்ல என்னும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா” – என்று “என்று ஆறுதல் சொல்லிக் கவியரசர் பாடலை முடித்துவைக்க – அந்த ஆறுதலையும், தெம்பையும், சுசீலாவின் குரல் ஒரு மாற்றுக்கூடக் குறையாமல் வெளிப்படுத்தி இருக்கும்.

“முத்தான முத்தல்லவோ” பாடல்.  கவியரசர் வீட்டிலிருந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போது இடையில் குறுக்கிட்ட ரயில்வே லெவல் கிராசிங்கில் காத்திருந்த நேரத்தில் ஐந்து நிமிடத்திற்குள் எழுதிக்கொடுத்த பாடல்.

குழந்தை ஒன்றின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கதாநாயகி பாடுவதாக அமைந்த பாடல். முத்தான ஒரு பாடல். Take the first step | #BeSensitiveToOralHealth | #worldoralhealthday #honey | English (youtube.com)

மரணப் படுக்கையில் இருக்கும் குழந்தை குட்டி பத்மினிக்காக பிரார்த்தனை செய்து தேவிகா பாடுவதாக அமைந்த பாடல் “துள்ளி வரும் மான்குட்டி துயில் மடுத்துக் கிடக்கின்றாள்”. Nenjil Oru Aalayam - Song - Thulli Vantha Man Kutti

இரண்டு நிமிடம் பதிமூன்று வினாடிகளே இடம்பெறும் இந்தப் பாடல் தொகையறா – அதாவது விருத்த வகையைச் சேர்ந்தது.  மெல்லிசை மன்னரின் இசையும் பி. சுசீலாவின் குரலும் காட்சிக்கேற்ற அழுத்தத்தை மனதில் பரவவிடுவதில் முன்னிலை வகித்தன.

இப்படித் தனது இனிமையான குரலால் ரசிகர்கள் நெஞ்சில் ஓர் இசை ஆலயமே எழுப்பிவிட்டார் பி. சுசீலா.

தொடர்ந்து வெளிவந்த படங்களின் பட்டியலும் நீளம்.  அவற்றில் பி சுசீலா அவர்களின் பங்களிப்பும் நீளம்.

அவற்றில் பெரும்பாலானவை மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த பாடல்களே.

நிச்சயதாம்பூலம் – படத்தில் ஜமுனாவுக்காக “மாலை சூடும் மணநாள்” பாடலை இசைத்தார் பி. சுசீலா.

அடுத்த அவர் பெயர் சொல்ல அமைந்த படங்களாக “ஆடிபெருக்கு”, “வீரத் திருமகன்”, காத்திருந்த கண்கள் என்று வரிசை கட்டிக்கொண்டு நின்றன.

ஏ.எம். ராஜாவின் இசையில் “ஆடிப்பெருக்கு” படத்தின் பாடல்கள் அனைத்துமே இசை அரசியின் தனித்துவமான குரலில் தேனாக இனித்தன.

வீரத் திருமகன் படத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக அறிமுகமான குமாரி சச்சுவுக்காக “ரோஜா மலரே ராஜ குமாரி” பாடலில் பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து செவிகளில் செந்தேன் பாயவைத்தார் பி. சுசீலா.

“வாராய் அருகே  மன்னவன் நீயே காதல் கணமன்றோ

பேதம் இல்லையன்றோ காதல் நிலையன்றோ” – எடுத்த எடுப்பிலேயே உச்சத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கீழிறங்கி சமத்தில் பயணித்து “ஏழை என்றாலும் ராஜகுமாரன்” என்று தனக்கான பல்லவியைத் தொட்டு முடியும் பி.சுசீலாவின் குரல். Veerathirumugan - Roja Malarae Song

இந்தப் பாடலில் ஆண்குரல் ஒரு பல்லவியிலும் பெண் குரல் முற்றிலும் வேறுபட்ட பல்லவியிலும் பயணித்து ஆகக்கூடி ஒரு பாடலில் இருவேறு தனித் தனிப் பல்லவிகள் அமைந்த பாடல் இது.

இன்று வரை படத்தின் பெயர் சொன்னதுமே நம் உதடுகள் தானாக உச்சரிக்கும் பாடல் இது.

தொடர்ந்து..

மீண்டும் நடிகையர் திலத்தின் பாட்டுக்குரலாக இணைந்தார் பி. சுசீலா.

விளைவு...?

காலத்தால் அழிக்க முடியாத சிறப்பான பாடல்கள் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர்கள் – பி. சுசீலா – பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் இணைவில் பொற்காலத் திரை இசையை ஆக்கிரமிக்கக் காத்திருந்தன.

படம் : “காத்திருந்த கண்கள்”

(இசையின் பயணம் தொடரும்...)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com