பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி -19

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“திருமதி. பி.சுசீலா பல மொழிகளிலும் திறமையுடன் பாடும் வல்லமை பெற்றுத் தென்னகத்தில் தனியானதோர், ஏன்? உயர்ந்ததோர் இடம் பெற்று விட்டார். செவிக்கினிய சாரீரம், மிகச் சிறந்த புலமை இரண்டும் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்திருக்கின்றன.” - இசைக்குயில் திருமதி எஸ். ஜானகி.

“காத்திருந்த கண்கள்” – நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பில் புதுப் பரிமாணத்தைக் காட்டிய படம்.

இரட்டை வேடங்கள் ஏற்று நடிக்கும் நடிகை எப்படி இரு வேறுபட்ட கதாபாத்திரங்களையும் வித்தியாசம் காட்டி நடிக்கவேண்டும் என்பதற்கு இன்றைய தலைமுறை நடிகையருக்கு ஒரு பாடமாக அமைந்த படம் என்றால் அது மிகையே அல்ல.

அந்த அளவிற்கு படிப்பறிவே இல்லாத அடக்கமே உருவான ஏழை கிராமத்துப் பெண்ணாகவும், செல்வச் சீமான் வீட்டில் வாழும் நன்கு படித்த நாகரீகமான நங்கையாகவும் நடிப்பில் இரு வேறு பட்ட எல்லைகளையும் அநாயாசமாகக் கையாண்டிருந்தார் அவர்.

அவரது அந்த இரட்டை வேடங்களுக்கும் பாட்டுக்குரலாக மிளிர்ந்தார் பி. சுசீலா.

கிராமத்துப் பெண்ணுக்கு பாடும் போது அவரது குரலில் ஒரு அடர்த்தி நிறைந்த கனம் தெரியும்.  நாகரீக மங்கைக்காக பாடும்போது அந்த அடர்த்திக்குப் பதிலாக ஒரு நளினம் அந்தக் குரலில் தெறிக்கும்.

இப்படிக்கூட ஒருவரால் ஒரே நடிகையின் இருவேறு பட்ட கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் வகையில் பாட முடியுமா என்று வியக்க வைத்தார் பி. சுசீலா.

“வா என்றது உருவம் – நீ போ என்றது நாணம்”

“வளர்த்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா”  -  ஆகிய இரண்டு பாடல்கள் கிராமத்துப் பெண்ணுக்கு.

“காற்று வந்தால் தலை சாயும் ....   நாணல்..” – என்ற டூயட் பாடல் செல்வச் செழிப்பில் வளரும் பெண்ணுக்கு.

மெல்லிசை மன்னர்களின் அற்புத இசையும், கவியரசரின் பாடல் வரிகளும் நமது இசை அரசியின்  குரலில் வெளிப்பட்டபோது பாடுவது பி. சுசீலா என்றே தெரியவில்லை.  மாறாக நடிகையர் திலகம் ஏற்று நடித்த இருவேறு கதாபாத்திரங்கள் பாடுவதாகவே தோன்றின.

காதலை மனதிற்குள் வளர்த்துக்கொண்ட – அதே நேரம் அதை நேரடியாக வெளிப்படுத்த துணிவும் இல்லாத ஒரு பெண் பாடும் பாடல் தான் “வா என்றது உருவம்” பாடல். Vaa Endrathu - Savithri & Gemini Ganesan - Kathirunda Kangal (youtube.com)

காதல் வயப்பட்டு காதலனுடன் இணைந்து பாடும் நாகரீக மங்கை பாடுவதாக அமைந்த பாடல் “காற்று வந்தால் தலை சாயும் -  நாணல்” பாடல்.

காற்று வந்தால் Video Song | Kathiruntha Kangal | Gemini Ganesan | Vishwanathan & Ramamoorthy (youtube.com)

இந்த இரண்டு பாடல்களிலும் இரண்டாவது வரியில் முடிவாக “நாணம்” என்ற  வார்த்தை வருகிறது. அந்த ஒற்றை வார்த்தையை இரு வேறு கதாபாத்திரங்களுக்கும் ஏற்றபடி மாறுபாடு காட்டிப் பாடி இருப்பார் பி. சுசீலா.

கிராமத்துப் பெண் பாடும் பாடலில் இந்த நாணம்  என்ற வார்த்தையை ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் “நீ போ என்றது நா..... ணம்” – என்று நீட்டி உச்சரித்து நாண உணர்வை உச்சரிப்பிலேயே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார் அவர்.

“காற்று வந்தால் தலை சாயும்” பாடல் காட்சி.
“காற்று வந்தால் தலை சாயும்” பாடல் காட்சி.

அதே உணர்வை நாகரீக யுவதி பாடும் கேள்வி பதில் பாணியில் வெளிப்படும் பாடலில் “காதல் வந்தால் தலை சாயும் ... நாணம்” என்று வெளிப்படுத்தும் போதோ  நா..ஆ.. ணம்” என்று பளிச்சென்று வெளிப்படுத்தி முடித்திருப்பார்.

 “வளர்த்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா..

அவள் வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.” என்று ஜெமினிக்காக பி.பி.ஸ்ரீனிவாஸ் புகார் செய்ய..

“குடும்பக் கலை போதுமென்று கூறடா கண்ணா அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா” – என்று பதிளித்து தன்னிலை விளக்கம் தரும் பாடல்... முன்பே சொன்னதுபோல ஒரு அடர்த்தி நிறைந்த கனத்துடன் பாடி இருக்கும் பாடல்.

இப்படி ஒரே நடிகைக்கு அவர் ஏற்ற இருவேறு கதாபாத்திரங்களுக்கும் ஏற்றபடி பாடி அசத்தித் தனது தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார் பி.சுசீலா.

**

1962-ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் சிறப்பு விருதை வென்ற மூன்று படங்களிலும் பி. சுசீலாவின் பங்களிப்பு குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது.

சிறந்த தமிழ்ப் படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தை “நெஞ்சில் ஓர் ஆலயம்” பெற்றதென்றால் (இதில் நமது இசை அரசியின் பங்களிப்பைப் பற்றி சென்ற இடுகையிலேயே விரிவாகப் பார்த்திருந்தோம்) சிறந்த படங்களுக்கான சிறப்புத் தகுதிச் சான்றிதழை (certificate of merit) ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பான “அன்னை”, மற்றும் ஏ.எல்.எஸ். நிறுவனத் தயாரிப்பான “சாரதா” ஆகிய இரு படங்களும் பெற்றன.

ஆர். சுதர்சனம் அவர்களின் இசை அமைப்பில் வெளிவந்த “அன்னை” படத்தில் இளம் கதாநாயகி குமாரி. சச்சு பாடுவதாக அமைந்த “ஓ. பக் பக் பக் பக்.  பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற தனிப் பாடலையும், “அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்” என்ற பாடலைப் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுடனும் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா.

இன்றளவும் “அழகிய மிதிலை நகரினிலே” பாடல் அனைவர் மனதிலும் நிறைந்த பாடல் தான்.. என்றாலும் “அன்னை” என்றதும் முழுப் பெயரும் பெருமையும் நடிகை பி. பானுமதியில் ஆளுமை நிறைந்த நடிப்பிற்கே சென்று விட்டபடியால் இந்தப் பாடலின் புகழ் வெளிச்சம் சற்று மங்கத்தான் செய்தது.. என்றாலும் இன்றளவும் பி. சுசீலாவிற்குப் பெருமை சேர்த்த பாடல்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது.

“சாரதா”வில் திரை இசைத் திலகத்தின் இசையில் பி.சுசீலா விஜயகுமாரிக்காகப் பாடிய இரண்டு பாடல்களுமே வெற்றிப்பாடல்கள் தான்.

“ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன?” பாடலில் ஒவ்வொருவரியிலும் அதற்கேற்ற உணர்வைத் தனது குரலில் பரவ விட்டிருப்பார் பி. சுசீலா. முதல் வரியில் காதல், இரண்டாவது வரியில் அது நிறைவேறி திருமணத்தில் முடிவதால் தோன்றும் நிறைவு.. மூன்றாவது வரியில் “நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த நிலைமையின் பெயரென்ன?” என்ற வரிகளை அவர் பாடி இருக்கும் விதத்திலேயே “துயரம்” என்று பி.பி. ஸ்ரீனிவாசால் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன? Oruthi Oruvanai Saradha (youtube.com)

“கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன்” பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடி இருந்தார் பி.சுசீலா.

அதே வருடம் இதே சாரதா படம் தெலுங்கிலும் ஆதுர்த்தி சுப்பராவ் அவர்களின் இயக்கத்தில் “சுமங்கலி” என்ற பெயரில் நடிகையர் திலகம் சாவித்திரி, ஏ. நாகேஸ்வரராவ் ஆகியோரின் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் சாவித்திரிக்காக பாடினார் பி.சுசீலா. 

“கனலு கனுலதோ கலபடித்தே” என்று கண்டசாலாவுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா.  ஒரே மெட்டு என்றாலும் இணைப்பிசையில் வழக்கமாக கையாளும் சதுச்ர நடைக்கு பதியாக திஸ்ர நடையைக் கையாண்டு (ஆங்கிலத்தில் இதனை “seven beat cycle” என்பார்கள்) ஆந்திர மண்ணின் மனத்தோடு இசை அமைத்து அசத்தி இருந்தார் கே.வி. மகாதேவன்.

படமும் வெற்றி. பாடல்களும் பெருவெற்றி.  பி. சுசீலாவின் திறமைக்கும் தனித்த வெற்றி.

இயக்குனர் கே. சங்கரின் “பாதகாணிக்கை” ஆகிய படங்களும், பி.ஆர். பந்துலுவின் “பலே பாண்டியா”, பீம்சிங்கின் “பார்த்தால் பசி தீரும்”, “பந்த பாசம்” ஆகிய படங்களும் நமது இசை அரசியின்  புகழுக்குக் கிடைத்த மணிமகுடங்கள் என்றே சொல்லவேண்டும்.

“பாதகாணிக்கை” – படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து மெல்லிசை மன்னர்களின் இசையில் அருமையான மெலடிப் பாடல்கள் நடிகையர் திலகம் சாவித்திரிக்காக பாடி இருந்தார் பி.சுசீலா.

“காதல் என்பது எதுவரை” – பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜெ.பி.சந்திரபாபு,எல்.ஆர்.ஈஸ்வரி  ஆகியோருடன் பி.சுசீலாவின் குரல் சரணகளின் முதல் வரிகளில் இணைந்தது.

“அத்தை மகனே போய் வரவா” – நயம் மெல்லடி எடுத்துவைத்தார்போல மெல்லிசை மன்னர் இசை அமைக்க அந்த இசைக்குத் தனது குரலால் உயிரூட்டி இருந்தார் இசை அரசி.

“உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே” – எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்த பாடல்.  நடிகை விஜயகுமாரிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், சாவித்திரிக்குப் பி.சுசீலாவும் பாடி இருக்கும் பாடல் இது.

ஒருவனுக்காக இருவர் போட்டி போடும் முக்கோணக் காதலில் ஒருத்தியை மற்றவர் வெற்றி கொள்ளத் துடிக்கும் பாடல் இது.

இன்றளவும் படத்தில் பி.சுசீலாவின் பாடல் என்று சொன்னதுமே நினைவுக்கு வரும் பாடல் “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” பாடல் தான்.  நடிகையர் திலகத்தின் தேர்ந்த நடிப்புக்கு தனது குரலால் இன்னும் மெருகேற்றி இருந்தார் பி.சுசீலா.

ஆனால்.. பாடல்கள் வெற்றி அடைந்த அளவிற்கு “பாத காணிக்கை” படம் தயாரிப்பாளருக்கு ஒரு வெற்றிக் காணிக்கையாக அமையவில்லை.

“A meaning or purpose is difficult to deduce from this shoddy yarn." என்றும் “திறமை வாய்ந்த நட்சத்திரங்கள் மோசமான வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்” (the actors "make the best of a bad job") என்றும் கடுமையாக விமர்சித்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

ஆனால்.. இதனை தனது இன்னொரு படமான “ஆலயமணி”யின் மூலமாக நேர் செய்துவிட்டார் இயக்குனர் கே. சங்கர்.

“ஆலயமணி”யில் டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இருவருடனும் இணைந்து தனது பங்களிப்பை அருமையாகக் கொடுத்திருந்தார் பி.சுசீலா.

சரோஜாதேவிக்காக இரண்டு பாடல்களைப் பாடி இருந்தார் பி. சுசீலா.

“கண்ணான கண்ணனுக்கு அவசரமா” என்ற டூயட் பாடலை சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடியவர் தனிப்பாடலாக “மானாட்டம் தங்க மயிலாட்டம்” என்று மானையும் மயிலையும் அருமையாகத் தனது குரல்வழி ஆடவைத்திருந்தார்.

“பலே பாண்டியா”வில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகனுக்கு தெம்பூட்டி நம்பிக்கை கொடுக்கும் விதமாக  “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்று பி. சுசீலா கேட்கும்போது தளர்ந்த மனதிற்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கத் தவறாது. கவியரசரின் வரிகளும் – மெல்லிசை மன்னர்களின் இசையும் பி. சுசீலாவின் குரலும் இணைந்த அற்புதச் சங்கமம் இந்தப் பாடல்.

“காதுக்கு இனிமையானது “வாழ நினைத்தால் வாழலாம்” பாட்டு என்று விமர்சனம் செய்திருந்தது ஆனந்த விகடன்.

**

“தெய்வத்தின் தெய்வம்” -  மெல்லிசை மன்னர்களின் புதிய அலைக்கு ஈடுகொடுத்து இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்கள் தனது பாணியை மாற்றிக்கொண்டு இசையமைத்த படம்.

இந்தப் படத்தில் முதல் முதலாக எஸ். ஜானகியுடன் இணைந்து “அன்னமே சொர்ணமே” பாடலைப் பாடி இருந்தார் பி. சுசீலா.

ஒரு கவிஞராக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் எழுதி ஜி. ராமநாதன் சிவரஞ்சனி ராகத்தில் இசை அமைத்த பாடல் தான் “பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ” என்ற பாடல்.

இன்றளவும் இந்தப் படத்தில் ஜி. ராமநாதனின் தனி முத்திரை பதித்த பாடலாக அமைந்துவிட்ட பாடல் “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை” பாடல் தான்.  பி. சுசீலாவின் பெருமைக்கு பெருமை சேர்த்த பாடல்களின் வரிசையில் இணைந்துவிட்ட பாடல் இது.

**

“நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்திற்குப் பிறகு ஸ்ரீதர் இயக்கிய “போலீஸ்காரன் மகள்”, “சுமைதாங்கி” ஆகிய இரண்டு படங்களுக்கும் பி.சுசீலாவைத் தவிர்த்துவிட்டு எஸ். ஜானகியைப் பாடவைத்த ஸ்ரீதர், தனது அடுத்த படமாக 1963 ஆம் ஆண்டு இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்காக மீண்டும் பி.சுசீலாவையே பிரதானப் பாடகியாக பாடவைத்தார் .

பூர்வ ஜென்ம நினைவுகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப் படத்தில் “தீம் பாடலாக” அமைந்த பாடலுக்கான  ஆரம்ப மெட்டே மனதை வேட்டையாடும் விதமாக (Haunting tune) அமையவேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீதர்.

அதற்காக மெல்லிசை மன்னர்கள் மெட்டுக்களை அமைக்க ஆரம்பித்தார்கள்.  ஆனால் எதுவுமே ஸ்ரீதரின் மனதுக்கு பிடித்த மாதிரி அமையவே இல்லை.  பயம், இனிமை இரண்டின் கலவையான ஒரு மெட்டை எதிர்பார்த்தார் ஸ்ரீதர்.  ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி மெட்டு லேசில் அமையவே இல்லை. “பயமூட்டும் எபக்ட் இருந்தால் அதில் இனிமை இல்லை. இனிமை இருந்தால் அதில் பயம் தரும் எபக்ட் இல்லை.” 

மற்ற பாடல்கள் எல்லாமே ஒலிப்பதிவாகிப் படமும் முடிவடையும் கட்டத்தை நெருங்கி விடவே  அந்தப் பாடலைக் கைவிடும் முடிவுக்கே ஸ்ரீதர் வந்துவிட்டார்.  ஆனால் எம்.எஸ்.வி. அதற்கு சம்மதிக்கவில்லை. “ஸ்ரீ.உங்களுக்கு முழு திருப்தி ஏற்படும் வரை நான் ஓயவே மாட்டேன்.” என்று தனது முயற்சியைக் கைவிடாமல் போராடிக்கொண்டிருந்தார் அவர்.

“புதுபுது ட்யூன்கள் அவரது இதயவீணையில் பிறந்துகொண்டே இருந்தன. விரல்களோ ஆர்மோனிய இசையை எழுப்பிய வண்ணமே இருந்தன” என்று அந்தச் சம்பவத்தை நினைவு கூர்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.

கிட்டத் தட்ட ஆறுமாத காலங்களுக்குப் பிறகு....

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com