பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 22

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“சுசீலாம்மா தான் சங்கீத சாகரத்தில் நடமாடும் இனிமையில் தோய்த்தெடுத்த குரல்வளம் கொண்ட ஒரு ராஜஹம்சம். (தலைமை அன்னப் பறவை). இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் ஒரு சங்கீத சரஸ்வதி." இரட்டை இசை அமைப்பாளர்கள் ராஜன் – நாகேந்திரா.

“ஆனந்த ஜோதி”  - வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான திரைப்படம்.  மக்கள் திலகம் எம். ஜி. ஆர். – தேவிகா இணைந்து நடித்த இந்தப் படத்தில் கதாநாயகி தேவிகாவுக்காக பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.

கவியரசர் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர்கள் – டி.எம்.எஸ். – பி. சுசீலா என்ற வெற்றிக்கூட்டணியில் விளைந்த பாடல்கள் அனைத்துமே காலத்தைக் கடந்தும் நினைவலைகளில் இனிமையைப் பரவ விடுபவை.

“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” – இந்த இரு குரலிசைப் பாடலை பி. சுசீலா எடுக்கும் எடுப்பே தனி அழகு. சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னரின் மெட்டும் இசையும் தனித்துவம். அவை டி.எம்.எஸ். – பி. சுசீலா இருவரின் குரலிலும் வர்ண ஜாலம் புரியும்போது பாடல் வெற்றிக்கோட்டை சுலபமாக எட்டிவிடுகிறது. Poiyile piranthu poiyile ... TMS , PS / (youtube.com)

ஆனந்த ஜோதி படத்தில் எம்.ஜி.ஆர் – தேவிகா
ஆனந்த ஜோதி படத்தில் எம்.ஜி.ஆர் – தேவிகா

ஒரே படத்தில் ஒரே ராகத்தில் இரண்டு பாடல்கள். ஆனால் இரண்டையும் ஒன்றுக்கொன்று முழுக்க முழுக்க வித்தியாசமாக – அதாவது இன்றைய பாஷையில் சொல்வதென்றால்  வெரைட்டியாக – (இப்போது எதெதையோ வெரைட்டி வெரைட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்) அமைத்து மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார் நமது மெல்லிசை மன்னர்.

மேலே குறிப்பிட்ட “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த” பாடலும், இதே ஆனந்த ஜோதி படத்தில் இடம்பெற்ற இன்னொரு காதல் ஜோடிப்பாடலான “பனி இல்லாத மார்கழியா” பாடலும் ஒரே சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் அமைத்த பாடல்கள்தான்.

“பனி இல்லாத மார்கழியா” – பாடல் தொடங்குவதே நமது இசை அரசியின் ஹம்மிங்குடன் தான். வார்த்தை உச்சரிப்புகளிலும், இசை நயத்திலும், குரல் இனிமையிலும் தனக்கு நிகர் தானே என்று பி.சுசீலா நிரூபித்த பாடல் இது. PANI ILLAATHA MAARGAZHIYAA SSKFILM018 TMS, PS @ AANANTHA JOTHI (youtube.com)

என்றாலும் இன்றளவும் படத்தின் பெயர் சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வரும் மகத்தான பாடல் என்றால் அது “நினைக்கத் தெரிந்த மனமே” பாடல் தான். நடபைரவி ராகத்தில் வெகு அற்புதமாக மெல்லிசை மன்னர்கள் அமைத்த இசையும், பாடல் வரிகளும், அவற்றை சூழ்நிலை உணர்ந்து பி. சுசீலா அவர்கள் பாடிக்கொடுத்திருக்கும் விதமும்...வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. Ninaikka Therintha Maname Song HD | நினைக்க தெரிந்த மனமே |Kannadasan Song | Devika |Anandha Jothi. (youtube.com)

சூழ்நிலைக்கேற்ப வாத்திய இசைக் கருவிகளை தேர்ந்தெடுத்து ஒரு பாடலை எப்படி அமைப்பது என்பதற்கு மெல்லிசை மன்னரின் இந்தப் பாடல் ஒரு பாடம்.

சரணங்களுக்கிடையேயான இணைப்பிசையில் வயலின், புல்லாங்குழல், வைப்ரபோன், வீணை, மற்றும் ஷெனாய் இசை எல்லாமே அருமையிலும் அருமையாக அமைந்தவை. பாங்கோஸ், தபேலாவின் தாளக்கட்டு.  பல்லவிக்கு பாங்கோஸ் – சரணங்களுக்கு தபேலா என்ற அமைப்பு மெல்லிசை மன்னரின் தனித்துவமான பாணி. இவற்றோடு பி. சுசீலாவின் குரலும் இணையும் போது அது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்த மாதிரி தானே இருக்கும்.

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா நாம் கண்கலங்கி கவலைப் பட்டு என்னய்யா” – சுபபந்துவராளி ராகத்தில் அமைந்த மற்றும் ஒரு இனிமையான பாடல். கால மகள் கண் திறப்பாள் | Kaala magal Kan Thiraapal | Anandha Jothi | Kannadasan | Devika | Tms HD (youtube.com)

தாளமுடியாத சோகத்தில் தவிக்கும் நேரத்தில் தனக்குத் தானே தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டு, தைரியத்தையும் வளர்த்துக் கொண்டு தன்னையே ஆறுதல் படுத்திக்கொள்ளும்போது ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? அந்தச் சூழலை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் பி. சுசீலா.

மக்கள் திலகத்திற்கு ஒரு ஆனந்த ஜோதி என்றால் நடிகர் திலகத்திற்கு ஒரு ஆண்டவன் கட்டளை. இரண்டுமே பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பில் ஜாவர் சீதாராமன் அவர்களின் கதை திரைக்கதை வசனத்தில் உருவான வெற்றிப் படங்கள்.

“ஆண்டவன் கட்டளை” படத்தில் விரக தாபத்தைக் கூட துளியும் விரசமே கலக்காமல் பாட முடியும் என்று பி. சுசீலா நிரூபித்த பாடல் தான் “அழகே வா அருகே வா” பாடல்.  கம்பி மேல் நடப்பது போல வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்த பாடலைக் கவிஞர்  நாமக்கல் பாலு எழுதி இருந்தார். 

தீவிரமான பிரம்மச்சரியக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழும் கதாநாயகனின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கதாநாயகி அவனை உறவுக்கு அழைப்பது போன்ற பாடல் வரிகள் கொண்ட பாடல்.  கண்டிப்பாக பி.சுசீலாவைத் தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இந்தப் பாடலுக்கு ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியாது என்பது சர்வ நிச்சயமான உண்மை. Azhage Vaa Audio Song | Aandavan Kattalai | P. Susheela | Viswanathan & Ramamoorthy Hits (youtube.com)

அடுத்து அருமையான மெலடியாக அமைந்த “அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.” பாடல்.  கண்ணை சற்று மூடிக்கொண்டு கேட்டால் நதியில் படகில் பயணம் – அதுவும் பௌர்ணமி இரவில் – பயணிக்கும் அனுபவம் கிடைக்கும். Amaithiyaana Nadhiyinile Video Song | சிவாஜி கணேசன், தேவிகா | ஆண்டவன் கட்டளை | T.M.S, P.Suseela (youtube.com)

இந்தப் பாடலுக்கு ஹரிகாம்போதி ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் வார்த்தெடுத்திருக்கும் இசையின் சிறப்பையும் அதனை உள்வாங்கிக்கொண்டு டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பி. சுசீலா பாடி இருக்கும் அழகையும், இனிமையையும் எடுத்துச் சொல்லவேண்டும் என்றால் அதற்கு   ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் புதிதாக ஒரு வார்த்தையைக்  கண்டு பிடித்தாக வேண்டும்.

“தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது” என்ற சரணத்தைப் பாடி முடித்து பல்லவிக்கு டி.எம்.எஸ். திரும்பி அதை முடிக்கும் நேரத்தில் ஹம்மிங்காக பி. சுசீலா ஆரம்பிக்கும்போதே களை கட்டலின் சிகரத்தை எட்ட ஆரம்பித்துவிடுகிறது.

நான்கு வரிச் சரணத்தை இரண்டு இரண்டு கண்ணிகளாகப் பிரித்துப் பாடலை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி.

“நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது.

நாணமென்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது. (அமைதியான)

அந்தியில் மயங்கிவிடும் காலையில் தெளிந்துவிடும்

அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் (அமைதியான)

இந்த இரண்டு சரணங்களின் கடைசி வரிகளை இரண்டாவது முறை பாடும்போது பி.சுசீலாம்மா அழுத்தம் கொடுக்கவேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்துப் பாடியிருக்கும் விதம் சிறப்புக்கும் ஒரு படி மேலே என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தப் பாடலை அமைதியாக உள்வாங்கி ஒரு முறை கேட்டாலே போதும். உயர் ரத்த அழுத்தம் குறைந்து சமநிலைக்கு வந்துவிடும். கொந்தளித்து படபடப்பின் உச்சத்தில் இருக்கும் மனம் அப்படியே அடங்கி சாந்த நிலைக்கு வந்துவிடும்.

அப்புறம் ரத்தக் கொதிப்பாவது டயாபடீஸாவது?

ஒரு மிகச் சிறந்த இசைச் சிகிச்சையாக இந்தப் பாடலை அதி அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார்கள் டி.எம்.எஸ். அவர்களும் நமது இசை அரசியும்.

சரவணா பிச்சர்ஸ் – சரவணா ஸ்க்ரீன்ஸ் – நிறுவனர் ஜி.என். வேலுமணி அவர்களின் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். – சரோஜாதேவி இணைந்து நடித்து வெளிவந்த வெற்றிப்படம் தான் “பணத்தோட்டம்”.

டி.எம்.எஸ். அவர்களுடன் இணை சேர்ந்து பாடிய பாடல் “பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா” –  பாடலின் பல்லவியை  நடபைரவி ராகத்திலும், சரணங்களைச் சாருகேசி ராகத்தின் அடிப்படி ஸ்வரங்களிலும் அமைத்து மெல்லிசை மன்னர்கள் மயக்கி இருக்கிறார்கள். Pesuvadhu Kiliyaa HD Song (youtube.com)

“பேசுவது கிளியா” பாடல் காட்சி
“பேசுவது கிளியா” பாடல் காட்சி

பல்லவி முடிந்ததும் சரணம் ஆரம்பிப்பதற்கு முன் வரும் இணைப்பிசையில் அக்கார்டியனின் இசையின் வழியாக நடபைரவி ராகத்தின் சாதாரண காந்தார(க2) ஸ்வரத்தை அந்தர காந்தாரமாக (ka3) மாற்றி சாருகேசிக்கு தாவி மெல்லிசை மன்னர்கள் லாவகமாக  ராகத்தை மாற்றி இருக்கும் மேதமை வியக்க வைக்கிறது.  அந்த மாறுதலை அற்புதமாக உள்வாங்கிக் கொண்டு பி. சுசீலா டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடிக் கொடுத்திருக்கும் லாவகத்தை அற்புதம் என்ற ஒரே வார்த்தையில் அடக்கி விட முடியாது.

இந்தப் படத்தின் உச்ச கட்டக் காட்சி முதல் நாள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் மாலை ஏழு மணிவரைக்கும் படமாக்கப் பட்டது என்பது இப்போதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.

அந்த உச்ச கட்டக் காட்சிக்கு நெருக்கமாக அமைந்த பாடல் தான் “ஜவ்வாது மேடையிட்டு” பாடல்.

போதையின் மயக்கத்தில் இருப்பது போல நடித்து வில்லன் கோஷ்டியின் இருப்பிடத்திருக்குள் நாயகனும் நாயகியும் நுழைந்து பாடுவது போல அமைந்த பாடல்.

போதை மயக்கத்தையும் அழகாகச் சித்தரிக்க முடியும் என்று ஒரே நேரத்தில் இனிமையையும் போதையையும் ஏற்படுத்தும் வண்ணம் இசை அரசி பாடி இருக்கும் பாடல். 

இந்தப் படத்தில் “ஒரு நாள் இரவு கண்ணுறக்கம் பிடிக்கவில்லை” பாடல் பதிவின்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு பி.சுசீலாவின் தொழில் பக்தியையும் ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

மெஜெஸ்டிக் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு.  திலங்” ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் அமைத்த   டியூனில் அவரே பாடலை எப்படிப் பாடவேண்டும் என்று பாடிக் காட்டினார்.  ஒத்திகை எல்லாம் முடிந்து ஒலிப்பதிவுக்கு போகவேண்டிய நேரம். PANATHOTTAM (1963)-Orunaal iravil kan urakkam-P.Suseela-Viswanathan, Ramamoorthi (youtube.com)

விருட்டென்று கண்களில் கண்ணீரோடு அழுதபடியே ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியே வந்த பி. சுசீலா அங்கிருந்த டெலிபோன் பூத்திற்குள் நுழைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அப்படியே வெளியேறி வீட்டுக்கே கிளம்பிச் சென்றுவிட்டார்..

அனைவரும் அப்படியே அதிர்ந்து போய்விட்டார்கள்.  ஒலிப்பதிவு மேதை ரங்கசாமியின் அதிர்ச்சி கோபமாக மாறி மெல்லிசை மன்னரின் பக்கம் திரும்பியது.

அப்போது எம்.எஸ்.வி. அங்கு இல்லை. சொல்லிக்கொடுத்துவிட்டு அவர் வெளியே ஏதோ வேலையாகச் சென்றுவிட்டார்.  அவர் திரும்பி உள்ளே நுழைந்ததும்  எடுத்த எடுப்பிலேயே “விசு. நீ சுசீலாவை திட்டினாயா?” என்று கேட்டார் ரங்கசாமி.

எம்.எஸ்.வி.க்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. 

“ஏன்? என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.

ரங்கசாமி விடுவதாக இல்லை.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.  நீ அவங்களை ஏதாவது சொன்னியா?”

“இல்லையே. நான் ஒண்ணும் சொல்லலியே?” என்றார் மெல்லிசை மன்னர்.

“பொய் சொல்லாதே. நீ அந்தப் பெண்ணை சரியாப் பாடலேன்னு திட்டி இருப்பே.” என்று நம்பாமல் பேசினார் ரங்கசாமி.

“இதேதடா வம்பாப் போச்சு. நான் அவங்களை ஒண்ணுமே சொல்லலியே” என்று ஆணித்தரமாக அழமாட்டாத குறையாகப் பேசினார் எம்.எஸ்.வி.

“இல்லாமப் போனா அந்தப் பொண்ணு ஏன் ரிக்கார்டிங்லே இருந்து அழுதுகிட்டே வெளியே போகணும்? நீ சும்மா இருந்திருக்க மாட்டே. சரியாப் பாடலே அது இதுன்னு ஏதாவது சொல்லி இருப்பே.  அப்படி சொல்லக்கூடியவன் தானே நீ.” என்றார் ரங்கசாமி.

சற்று நேரத்தில் பி.சுசீலாவின் வீட்டிலிருந்து எம்.எஸ்.வி.க்குத்  தொலைபேசி அழைப்பு.  பி.சுசீலாவின் கணவர் ராம்மோகன் ராவ் தான் பேசினார்:

“ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலே என்ன நடந்தது? சுசீலா வீட்டுக்கு வந்ததுலே இருந்து அழுதுகிட்டே இருக்காங்க?”

என்னவென்று சொல்வார் எம்.எஸ்.வி. 

“இல்லீங்க. இங்கே யாரும் எதுவும் சொல்லவே இல்லே.  நான் பாடிக் காட்டிட்டு வெளியே போயிட்டேன். என்ன ஏதுன்னே தெரியலே. அவங்க ஏன் அழுதுகிட்டே போனாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியலே” என்றார் அவர்.

விஷயம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது. அதுவும் வதந்”தீ”யாக.

“ரெக்கார்டிங் ஸ்டூடியோவிலே எம்.எஸ்.வி. திட்டினதாலே பி.சுசீலா அழுதுகிட்டே வீட்டுக்குப் போயிட்டாங்க. இனிமே எம்.எஸ்.வி. மியூசிக்லே அவங்க பாடுவாங்களா என்பதே சந்தேகம் தான்.”

எம்.ஜி.ஆர்.காதுக்கும் செய்தி எட்ட அவரும் கூட “என்ன விசு? சுசீலாவை என்ன சொன்னே?”என்று தொலைபேசியில் கேட்டுவிட்டார்.

பி. சுசீலாவின் வீட்டுக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஏன்மா பாதியிலேயே போயிட்டீங்க? விஸ்வநாதன் ஏதாவது சொன்னாரா?” என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, “இல்லே. அவர் ஒண்ணும் என்னைத் திட்டலே. அவர் பாடிக்காட்டி சொல்லிக் கொடுத்த அளவுக்கு என்னாலே பாட முடியலே . அந்த வேதனையிலே எனக்கு அழுகை வந்துவிட்டது. அதான் வீட்டுக்கு வந்துட்டேன். என்னாலே அந்த அளவுக்குப் பாடமுடியுமான்னு தெரியலே. வேற யாரையாவது வச்சு அந்தப் பாட்டை எடுத்துக்கச் சொல்லுங்க ப்ளீஸ்” என்று கேட்டுக்கொண்டார் பி.சுசீலா.

இதைக் கேள்விப்பட்டதும் தானே பி.சுசீலாவை மறுநாள் தொலைபேசியில் அழைத்து “அதெல்லாம் இல்லே. உன்னாலேதான் இந்தப் பாட்டை பாடமுடியும். நீ தான் பாடறே. கிளம்பி வா” என்று தீர்மானமாக உரிமையோடு மெல்லிசை மன்னர் அழைத்ததும் மறுக்கமுடியாமல் வந்து பாடிக்கொடுத்தார் பி. சுசீலா.  பாடல் பதிவும் சிறப்பாக முடிந்துவிட்டது.

இதுபற்றி குறிப்பிடும்போது மெல்லிசை மன்னர், “பி.சுசீலா ஒரு பிரபலமான பாடகியா இருந்தும் கூட “தான் இன்னும் நன்றாகப் பாடி இருக்கலாமோ என்கிற ஒரு “இன்வால்மென்ட்”தான் அவரை அப்படிக் கண்ணீர் விட வைத்திருக்கிறது. இந்த அக்கறையும் ஆர்வமும் இருந்ததால் தான் அந்தக் காலத்தில் டி.எம்.எஸ்.-சுசீலா பாடாத பாடாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு அக்கறை காட்டி சிரத்தை எடுத்துக்கொண்டு  பாடிக் கொடுத்த பாடல் சிறப்பாக அமைந்துவிட்டது.

இந்த அக்கறையும், உழைப்பும்தான்  அவரை திரை இசை உலகின் முடிசூடாத பேரரசியாக உயர்த்தி இருக்கின்றன.

(இசையின் பயணம் தொடரும்)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com