பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 23

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“திருமதி பி. சுசீலாஜி இசைக்கே ஒரு அடையாளச் சின்னமாக விளங்கும் பெரும் புகழ் பெற்ற ஒரு பாடகி. எனது சிறுவயதில் டில்லியில் எங்கள் வீட்டில் வானொலிப்பெட்டி எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  ஹிந்தி விவித பாரதி முடிந்ததும் தமிழ், மற்றும் இதர தென்னிந்திய மொழிப் பாடல்கள் மதியம் 3.30 மணி அளவில் ஒலிபரப்பாகும்.  சுசீலாஜி அவர்களின் மிகுந்த அழகான பாடல்களாக அவை இருக்கும்.  எங்கள் அனைவருக்கும் அவர் தான் தென்னிந்தியாவின் மிகச் சிறந்த பாடகி.

ஸ்படிகம் போன்ற துல்லியமான குரல், அதிசயிக்கவைக்கும் சங்கதிகள்: பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் தெள்ளத் தெளிவாகவும் அழகாகவும் உச்சரிப்பவர். ஆன்மாவை நிறைக்கும் இனிய இசை அவருடையது. என் வாழ்வில் அவரை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். என்னையும் என் கணவரையும் அவர் ஆசீர்வதித்திருக்கிறார். ஒரு பாடகியாக அவர் எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனையை உருவகப் படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த மகத்தான பெண்மணிக்கு எனது பணிவான வணக்கங்கள்.” - பின்னணிப் பாடகி திருமதி கவிதா கிருஷ்ணமூர்த்தி.

நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர், ஒரு தலைசிறந்த கர்நாடக வீணை இசைக் கலைஞர். – இத்தனைப் பெருமைகளும் ஒரே ஒருவரிடம் தஞ்சம் அடைந்திருக்கின்றன என்றால் அவர் பிரபல வீணை இசைக் கலைஞர் திரு. எஸ். பாலச்சந்தர் அவர்கள் தான்.

பாடல்களே இல்லாத படமாக ஒரு “அந்தநாளை”க் கொடுக்க அவரால் மட்டுமே முடியும்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த படம் “பொம்மை”.  ஒரு பொம்மைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் டைம் பாம் வெடித்துச் சிதறுவதற்குள் அது எத்தனை கைகள் மாறுகின்றது என்பதை விறுவிறுப்பாக ஒரு மர்மக் கதை பார்க்கும் ஆவலைத் தூண்டி எஸ். பாலச்சந்தர் இயக்கிய படம் தான் “பொம்மை”

இந்தப் படத்தில் ஒரு அற்புதமான நடனப் பாடலாக ராகமாலிகையில் அமைந்த பாடல் தான் “எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்” என்ற பாடல்.

சிறிதுகூட மேற்கத்திய இசை கலப்பில்லாமல் பாடலை எஸ்.பாலச்சந்தர் அமைத்த விதம் அவரது மேதமையைக் காட்டுகிறது என்றால் அதனை பி. சுசீலா பாடி இருக்கும் விதமோ உயர்த்தியிலும் உயர்த்தி.

ஸஹானா ராகத்தில் தொடங்கும் பாடல்..  “விழி வாசல் தனைக் கடந்து” என்ற முதல் சரணத்தில் சாரங்கா ராகத்திற்கு மாறி...”நிலவுதன்னைப் பழித்தொருநாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார்” என்று வரிகள் வரும்போது நாட்டக் குறிஞ்சியில் நடைபோட்டு “தென்றலைப் போல் ஆடிவரும் திருமகளே என்றழைத்தார்” என்ற சரணவரிகளில் உசேனி ராகத்தில் உருமாறி மீண்டும் ஸஹானாவுக்கு ஒரு சுற்று சுற்றிவிட்டு வரும் பாடல்.

பி. சுசீலாவின் இசை மேதமை – கர்நாடக இசைத் திறமை முழுக்க வெளிப்படும் ஒரு மகத்தான பாடல் இது.

“எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்” என்ற பல்லவியின் முதல் வரிகளில் வரும் “எப்படியோ” என்ற வார்த்தையை ஒவ்வொரு முறை உச்சரிக்கும்போதும் அவர் உதிர்க்கும் சங்கதிகள்..செவிகளுக்கு செந்தேனமுதாகத் தித்திக்கின்றன. Engo Piranthavaram Song (youtube.com)

வித்வான் வே.லக்ஷ்மணன் எழுதிய பாடலின் வரிகளில் சிருங்கார ரசம்  நிறைந்திருக்கிறது என்றால் ரசம்  பி.சுசீலாவின் குரலில் வெளிப்படும் நேர்த்தியும், இனிமையும், அவர் உதிர்த்திருக்கும் சங்கதிகளும்... கேட்கக் கேட்கக் -  கொளுத்தும் கோடை வெயிலுக்கு தென்றலின் குளிர்ச்சியை ஏ.சி. இல்லாமலேயே கொடுத்து மனத்தைக் குளிரவைக்கும் பாடல் இது.

இந்தப் படத்தில் டைட்டில் காட்சியிலேயே ஒரு புதுமையை புகுத்தி இருந்தார் எஸ்.பாலச்சந்தர்.  படம் முடிந்த பிறகுதான் டைட்டில் காட்சி வரும்.  அதுவும் எப்படி.. படத்தில் சம்பந்தப் பட்ட கலைஞர்களை அவர்களே அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதமாக அமைத்திருந்தார் எஸ்.பாலச்சந்தர்.

“பொம்மை”படத்தின் டைட்டிலில் (இடமிருந்து வலமாக) எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா, ரேணுகா.
“பொம்மை”படத்தின் டைட்டிலில் (இடமிருந்து வலமாக) எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா, ரேணுகா.

அந்த வகையில் பாடகியராக எல். ஆர்.ஈஸ்வரி, ரேணுகா ஆகியோருடன் நடு நாயகமாக பி.சுசீலாவை நிற்க வைத்து அறிமுகப் படுத்தி இருந்தார் எஸ்.பாலச்சந்தர்.

இதே படத்தில் “நீதான் செல்வம் நீதான் அமுதம்” என்ற இன்னொரு அருமையான மெலடிப் பாடலையும் அற்புதமாகப் பாடி இருந்தார் பி. சுசீலா. நீ தான் செல்வம் - Neethaan selvam (youtube.com) இனிமையிலும் இனிமையாக அமைந்த பாடல் இது.

அதிலும் சரணங்களின் பிற்பகுதியில் வரும்

“கொடி தந்த பூவாய் -  பூ தந்த மணமாய்

மடிமீது வளர்ந்தாய் மகனே நீ வாழ்க” என்ற வரிகளுக்கு எஸ். பாலச்சந்தர் அமைத்திருக்கும் இசையும், அந்த இசையை அற்புதமாக உள்வாங்கிக் கொண்டு பி. சுசீலா பாடிக் கொடுத்திருக்கும் விதமும் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.  பாடல் வரிகளைச் சிதைக்காத இசையும், வார்த்தைகளை எங்கு எப்படி பிரிக்கவேண்டும், எப்படிச் சேர்க்கவேண்டும் என்பதில் பி. சுசீலா காட்டி இருக்கும் அக்கறையும், ஈடுபாடும் உண்மையாகவே கொண்டாடப்படவேண்டியவை.

ஒரே படத்தில் இருவேறு கதாபாத்திரங்களை ஏற்கும் நடிகையருக்கு – அதிலும் ஒருவருக்கு கொச்சைத் தமிழ் (அதாவது நமது சென்னைத் தமிழ்) மற்றவருக்கு செந்தமிழ் – என்று தமிழில் எத்தனை விதங்கள் உண்டோ அத்தனையிலும் அற்புதமாகப் பாட வல்லவர் பி.சுசீலா என்பதை நிரூபித்த படம்தான் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபால கிருஷ்ணனின் “ஆயிரம் ரூபாய்”. THE MILLION POUND NOTE என்ற ஆங்கிலப் படத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

நடிகையர் திலகம் சாவித்திரி சென்னைத் தமிழில் படம் முழுவதும் சும்மா புகுந்து செமத்தியாக வூடு கட்டி இருந்தார் என்றால் அவருக்கான பாடல்களில் பி. சுசீலாவும் சும்மா சொல்லக்கூடாது புகுந்து விளயாடிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இசை அமைத்த திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனும், அவரது உதவியாளர் டி.கே. புகழேந்தியும் பி.சுசீலாவிடமிருந்து ஒரு புதிய பரிமாணத்தை வெளிக்கொண்டுவந்து விட்டிருந்தார்கள்.

 “ஆனாக்க அந்த மேடம்

ஆவாட்டி சந்தை மடம்

அதுவும் கூட இல்லாக்காட்டி

பிளாட்டுபாரம் சொந்த இடம்”

 - வறுமையைக் கூட சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு சேரிப்  பெண்ணின் கதாபாத்திரத்தை சர்வ அலட்சியமாக வெளிப்படுத்திப் பிரமிக்க வைத்த நடிகையர் திலகத்தின் பாட்டுக் குரலாக மாறி பாடல் காட்சியில் அவருக்குள்ளே கூடு விட்டு கூடு பாய்ந்திருந்தார் பி.சுசீலா. Aanaakka Antha Madam Song ஆனாக்க அந்த மடம் ... P.சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல் (youtube.com)

பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து பாடிய டூயட் பாடல் “பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கலே” என்ற பாடல். PAARTHTHAALUM PAARTHTHEYN NAAN PBS, PS @ AAYIRAM ROOBHAAI (youtube.com)

கதாநாயகன் ஜெமினிக்காக பி.பி. ஸ்ரீநிவாஸ் செந்தமிழில் இசைக்க “பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போல பாக்கலே” என்று கொச்சையான சென்னைத் தமிழில் பிளந்து கட்டியிருப்பார் பி.சுசீலா.

அதிலும் சரணத்தின் பிற்பகுதியில் இப்படி எழுதியிருப்பார் கவியரசு கண்ணதாசன்:’

“படபடத்து வெடவெடத்து சடசடத்து போவுது.

பக்கத்துலே நீ இருந்தா இன்னான்னமோ ஆவுது’

அந்த “இன்னான்னமோ ஆவுது” என்ற வார்த்தைகளை சற்று நீட்டி இழுத்து நிறுத்தி முடித்திருப்பார் பி. சுசீலா.

உண்மையிலேயே இந்தப் பாடல் ஒரு அசுர சாதனையின் வெளிப்பாடாக இருந்திருக்கவேண்டும்.  தாய் மொழியோ தெலுங்கு.  அப்படி இருக்கும்போது வேற்றுமொழியில் – அதிலும் அந்த மொழியின் குறிப்பிட்ட வட்டார வழக்கைச்  சரியாக உள்வாங்கிக்கொண்டு பாடுவதென்பது – சிரம சாத்தியமான ஒன்று.  அதை சாதித்துக் காட்டி இருக்கிறார் பி. சுசீலா.

இதே படத்தில் இரண்டாவது கதாநாயகியான ராகினிக்காக “நிலவுக்கும் நிழலுண்டு- அந்த நிழலுக்கும் ஒளியுண்டு” என்ற இனிமையான பாடலையும் அற்புதமாகப் பாடிக் கொடுத்திருந்தார் பி.சுசீலா. NILAVUKKUM NIZHALUNNNDU PS @ AAYIRAM ROOBHAAI (youtube.com)

மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் – நடிகர் திலகத்தின் “கர்ணன்” – இரண்டுமே ஒரே நாளில் – பொங்கல் திருநாளில் வெளிவந்த படங்கள்.  இரண்டுமே ஒரு ஆரோக்கியமான போட்டியாக வெற்றிக்கோட்டைத் தொட்டன.

வேட்டைக் காரன் –  படத்திற்காக இசை வேட்டை ஆடிவிட்டிருந்தார் திரை இசைத் திலகம். கர்ணனுக்கோ – மெல்லிசை மன்னர்கள் இசை வெள்ளத்தை வாரி வழங்கி இருந்தார்கள்.  இரண்டிலும் பெண் குரலுக்கான பிரதான பாடகியாக பி. சுசீலாவே தான் இருந்தார்.

இரண்டிலும் தான் எத்தனை வித்தியாசத்தை குரலில் காட்டி இருந்தார் அவர்?

வேட்டைக்காரனில் – சாவித்திரிதான் கதாநாயகி.

“ஹும். ஹூஹும்..” என்று ஒரு சிணுங்கலோடு ஆரம்பித்து “மெதுவா மெதுவா தொடலாமா” என்று அவசரப்படும் நாயகனை எச்சரிக்கும் நாயகியாக சிருங்காரத்தை குரலில் தோய்த்தேடுத்தவர் .. Medhuva Medhuva | Vettaikaran | MGR,Savitri | Tamil Movie Hit Song HD (youtube.com)

“கண்ணனுக்கெத்தனை கோவிலோ – காவலில் எத்தனை தீபமோ” என்று சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தார். கண்ணனுக்கு எத்தனை கோவிலோ - Kannanukkethanai kovilo Song 4K HD Video Song #mgrsongs #tamiloldsongs (youtube.com)

“கொஞ்சும் தமிழே வருக கோடானு கோடி தருக” என்று மக்கள் திலகத்தை ‘மஞ்சள் முகமே வருக” பாடலில் வரவேற்றார். Vettaikaran Tamil Movie Songs | Manchal Mugame Video Song | MGR | Savitri | MR Radha | KV Mahadevan (youtube.com)

கர்ணன் – படத்திலோ சாவித்திரி – தேவிகா என்று இரு கதாநாயகியர். 

இருவருமே மகாராணியர்.  இருவருக்கும் பாடும்போது அதில் அரச கம்பீரமும் பெண்மையின் நளினமும் குரலில் ஒரே சமயத்தில் வெளிப்படவேண்டும். வெளிப்படுத்தி இருந்தார் பி. சுசீலா..

“என்னுயிர்த் தோழி கேளொரு சேதி” – அந்தப்புரத்தை மறந்திருக்கும் தலைவனிடம் தூதனுப்பும் பாடல்.  அமீர் கல்யாணியில் அப்படியே நம் மனத்தை கரையவைத்தார் பி.சுசீலா. Karnan | En Uyir Thozhi song (youtube.com)

“கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே” – சுத்த தன்யாசியில் தோய்த்தெடுத்த விரகத்தை வெளிப்படுத்தும் பி.சுசீலாவின் குரலில்  ராஜ கம்பீரமும் – பெண்மையின் ஏக்கமும் சரிசமாக பாலன்ஸ் செய்யப்பட்டிருக்கும். கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே...| 4K Video Song | Karnan | Sivaji | Savitri | NTR | Raj 4K Songs (youtube.com)

இதேபோல “இரவும் நிலவும் வளரட்டுமே” – சுத்த சாரங்கா ராகப் பாடலிலும் சரி, “மகாராஜன் உலகை ஆளலாம் ” – என்ற கரஹரப்ரியா ராகப் பாடலிலும் சரி ராஜ கம்பீரம் கூடவே இழைந்து வரும்.

தன்னை வீரத்தால் வெல்ல முடியாதவர்கள் தனது பிறப்பைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்து துவண்டு போக வைப்பதால் மனம் குமுறும் கர்ணனைத் தேற்ற அவனது மனைவி சுபாங்கி பாடுவதாக அமைந்த பாடல் “கண்ணுக்குக் குலமேது” .  பஹாடி ராகத்தைப் பயன்படுத்தி மெல்லிசை மன்னர்கள் அமைத்த பாடலை வெகு அழகாகப் பாடி வெற்றிப் பாடலாக்கிவிட்டார் பி. சுசீலா.

“மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி

கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே”

கர்ணனின் மனைவிக்கு வளைகாப்பு விழா பாடல்.   மெல்லிசை மன்னரின் இனிய மெட்டும் அதை இசை அரசி பி. சுசீலா அவர்கள் பாடி இருக்கும் அழகும் மனதை நிறைப்பவை.

ஆரம்பத்தில் துள்ளி வரும் மெட்டு அப்படியே சரணத்தில் முற்றிலும் மாறுபட்ட நடையில் பயணிக்கும் பாடல்.

“கர்ணன்” படத்தின் பாடல்கள் அனைத்துமே பெருவெற்றி பெற்ற பாடல்கள்..அதிலும் பெண் குரலில் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சி நின்றன.

“இது சத்தியம்” – ரா. கி, ரங்கராஜன் குமுதம் வார இதழில் எழுதிய தொடர்கதை திரைப்படமாக மெல்லிசை மன்னர்கள் இசையில் ஜி.என்.வேலுமணி அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த படம்.

இந்தப் படத்தில் கதாநாயகி சந்திரகாந்தாவுக்காக டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து “மனம் கனிவான இந்தக் கன்னியைக் கண்டால்” என்ற கவியரசர் பாடலை மெல்லிசை மன்னர்களின் முத்தான இசையில் அற்புதமாகப் பாடிக் கொடுத்திருந்தார் பி.சுசீலா.

இதே படத்தில் “காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை” என்ற ஒரு தாலாட்டுப் பாடலை பி. சுசீலா இசைத்த விதத்தில் இளகாத மனிதர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். Kaadhalile Patru Vaiththaal | காதலிலே பற்று வைத்தால் | P. Susheela Superhit Song HD (youtube.com)

இந்தப் படத்திற்காக அனைத்துப் பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதி முடித்துவிட்டார். ஒரே ஒரு முருகன் பாடல் மட்டுமே பாக்கி இருந்தது.  அந்தப் பாடலை எழுதும் வாய்ப்பை கவிஞர் வாலிக்குக் கொடுக்கலாம் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியிடம் பரிந்துரை செய்தார்.

“நல்லா எழுதுவார்ன்னு சொல்லுறீங்க.  அவருக்கு ஒரே ஒரு பாடலை கொடுத்தா மத்த பாடல்களுக்கு இடையிலே அமுங்கிப் போயி பிரபலமடையாமல் போகவும் வாய்ப்பு இருக்கு.  அதனாலே இந்தப் பாட்டையும் கவிஞரே எழுதட்டும். அவருக்கு அடுத்ததா எடுக்கப்போகிற கலர் படத்துலே எல்லாப் பாட்டையுமே எழுத வச்சு ஒரு ரிச்சான ஒப்பனிங்கை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.” என்று கூறிவிட்டு கவியரசரையே எழுதவைத்தார்.

“சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்பேன் முருகனிடம்” என்ற அந்தப் பாடலுக்கு சிவரஞ்சனி ராகத்தில் அருமையாக மெல்லிசை மன்னர் இசை அமைக்க பி.சுசீலா பாட..இந்தப் பாடல் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் பாடலாகி விட்டது.

“அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை” என்ற வரிகளில் உச்சத்தை எட்டிவிட்டு அடுத்த வரியிலேயே “அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை” என்று சமத்தை எட்டும்போது அந்தக் குரலின் சுருதி சுத்தமும் சஞ்சாரமும் ஒரு சாதாரணப் பாடலை சிரஞ்சீவிப் பாடலாக்கி விட்டன. சரவணா பொய்கையில் நீராடி | Saravana Poikaiyil | P. Susheela Super Hit Song HD (youtube.com)**

மெல்லிசை மன்னரிடம் வாக்களித்த படியே தனது அடுத்த வண்ணப் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பைக் கவிஞர் வாலிக்குக் கொடுத்தார் ஜி.என்.வேலுமணி.

அதுவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரான படத்திற்கு ..

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசையில் பாடல்களைப் பாடியவர்கள் டி.எம்.எஸ். – பி. சுசீலா.

அனைத்துப் பாடல்களும் பெருவெற்றி பெற்ற பாடல்கள் .. இசையரசி பி. சுசீலாவின் புகழ் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக் கற்களாக அமைந்த பாடல்கள்.  காதல், பிரிவாற்றாமை, விரகம், சோகம் என்று பலவிதமான உணர்ச்சிக் குவியல்களாக அமைந்த பாடல்களைப் பி. சுசீலா அவர்கள் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்திப் பாடிக் கொடுத்தார்.

அதன் கதை விவாதத்தில் எம்.ஜி.ஆருடன் கலந்துகொண்டபோது படத்திற்கு சரியான தலைப்பைக் கொடுத்ததற்காக அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பரிசாகப் பெற்றார் கவிஞர் வாலி.

அந்தப் படம்தான்..

“பாட்டுக்கொரு படகோட்டி” என்று சொல்வழக்கில் சிறப்பிக்கப் பட்ட “படகோட்டி”.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com