பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 24

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“சாமர்த்தியம் சங்கீதம் ஆகாது.  சாரீர சம்பத்துள்ள ஒரு பர்வீன் சுல்தானா பாடினால் வாயைப் பிளக்கிறோம்.  அதைவிடச் சிறப்பாக எந்த இசையையும் பாட வல்லமை பெற்ற பி. சுசீலாவுக்கு ஈடாக வடஇந்தியாவில் யாராவது ஒரே ஒரு கலைஞன் இருக்கிறானா?”

பிரபல இசை நாட்டிய விமர்சகர் திரு. சுப்புடு.

சாதாரணமாக ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்துமே வெற்றிப் பாடல்களாக அமைந்துவிடும் என்று சொல்லிவிடமுடியாது.  சில பாடல்கள் காற்றலைகளில் மிதந்து வந்தாலும் ரசிகர்களின் காதலைகளைக் கடந்தே போய்விடக்கூடும்.

அப்படி இல்லாமல் ஒரு படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் ஓகோவென்று ரசிகர்களால் வரவேற்கப் பட்டன என்றால் அப்படிப்பட்ட குறிப்பிடத் தக்க படங்களில் “படகோட்டி”யும் ஒன்று.

“படகோட்டி” படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடியிருக்கும் நான்கு பாடல்களும் ஒவ்வொருவிதமான உணர்வை உள்ளடக்கியவை.

கவிஞர் வாலியின் வைர வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் அமைத்த மெட்டுக்களின் இனிமை பி.சுசீலாவின் செந்தேன் குரலில் தோய்ந்து நம் செவிகளை வந்தடையும் போது ஒருவிதமான இன்பச் சுகானுபவம் கிடைக்கிறது.

“என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி

தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி..”

- பிரிவுத்துயரால் ஏற்படும் விரகத்தைக் கவிஞர் வாலி விரசமே இல்லாமல் சித்தரிக்க அதை விரசம் என்ற அம்சம் துளிக்கூட எட்டிப்பார்க்காதபடி பாட பி. சுசீலாவைத் தவிர வேறு யாரால் முடியும்? Ennai Eduthu | என்னை எடுத்து தன்னை கொடுத்து | P. Susheela Hit Song | B4K Music (youtube.com)

“போனவன் போனாண்டி” என்ற வார்த்தைகளை ஒவ்வொரு சரண முடிவிலும் அந்தக் குரல் ஒவ்வொரு முறையும் உச்சத்தில் ஏற்றி நிறுத்தும்போது பிரிவுத் துயரின் கொடுமையிலும் இப்படி ஒரு இனிமையான பாட்டு கிடைக்கும் என்றால் அந்தத் துயரும் வரவேற்கக் கூடிய ஒன்றுதானே.

“தொட்டால் பூ மலரும்..” என்று டி.எம். பாடி கைதட்டல் ஒலியுடன் நிறுத்த..

“தொடாமல் நான் மலர்வேன்” – என்று இசை அரசி தொடரும் வார்த்தைகளில் ஒலிக்கும் சங்கதிகளும் கார்வைகளும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை.  சுத்த தன்யாசி ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் அமைத்த இந்தப் பாடலின் இசையும் இனிமையும் கடற்கரை மணலில் கால் புதைத்து நடக்கும் உணர்வை மனதிற்குக் கடத்துபவை. தொட்டால் பூ மலரும் Thottal Poo Malarum Padagotti MGR (youtube.com)

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ ..ஹோய்.

துள்ளிவிழும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ ..”  - பிரிந்திருக்கும் காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தூதனுப்பி பிரிவுத் துயரை பிரிவுத் துயரை வெளிப்படுத்திக் கொள்ளும் பாடல். (560) Padagotti | Paatukku Patteduthu song | MGR | M.G. Ramachandran | Saroja Devi | Tamil Sad Songs - YouTube

இடை இசையில் கடற்காற்றின் வீரியத்தைக் காட்ட ரம்பத்தை ஒரு இசைக் கருவியாக மெல்லிசை மன்னர் பயன்படுத்தி இருக்கும் லாவகம் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

ஒரு உற்சாகத் துள்ளல் ரகத்தைச் சேர்ந்த சிருங்காரப் பாடல் “அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்”  - பி. சுசீலா இனிமை மேலோங்க இந்தப் பாடலைப் பாடியிருக்கும் விதம் அற்புதம் என்றே சொல்லவேண்டும். Azhagu Oru Ragam | அழகு ஒரு ராகம் | P. Susheela Hit Song | B4K Music (youtube.com)

ஆனால் வானொலியில் மிகக் குறைந்த அளவிலேயே இந்த இனிமை கொஞ்சும் பாடல் ஒலிபரப்பப்பட்டு வந்ததால் இந்தப் பாடலின் நயமும் இசை அரசியின் குரல்  செய்யும் சஞ்சாரங்களும் – ஏற்ற இறக்கங்களும் உச்சரிப்பு சுத்தமும் – கவனிக்கப் படாமலே போய்விட்டன. என்றாலும் இன்றளவும் காற்றலைகளில் நிலைத்திருக்கும் பாடல்.

திரை இசைப் பாடல்களில் சில பாடல்கள் அனைத்து ரசிகர்கள் மனதிலும் நிலைத்து நிற்பதோடு அல்லாமல் காலங்களைக் கடந்தும் எப்போது கேட்டாலும் அப்போதுதான் புதிதாகக் கேட்பதைப் போன்ற உணர்வை எற்படுத்திக் கொண்டே இருக்கும்: காலத்தினாலும் மறக்கடிக்க முடியாமல் நிலைத்து நின்று கொண்டே இருக்கும்.  அப்படிப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் நமது இசை அரசியின் தீங்குரலில் வெளிவந்த பாடல்களாகத்தான் இருக்கும். 

அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் “புதிய பறவை” படத்தில் பி. சுசீலா பாடியிருக்கும் “உன்னை ஒன்று கேட்பேன்” – பாடல்.

மெல்லிசை மன்னர்கள் – குறிப்பாக எம்.எஸ்.வி. அவர்கள் ரசித்து அனுபவித்து செதுக்கி எடுத்திருக்கும் பாடல் இது.

கைதட்டலையும் ஒரு வாத்தியக் கருவியாகப் பயன்படுத்த மெல்லிசை மன்னரால் மட்டும்தான் முடியும்.

ROCK & ROLL ரிதத்துடன் கைத்தட்டல் ஓசையுடன் பாடலை ஆரம்பிப்பார் எம்.எஸ்.வி.

ஒரு கைத்தட்டல் (நடிகர் திலகம்) ஒலித்ததும் மற்றவர்களும் கைதட்ட ஆரம்பிக்க சூழ்நிலையின் உற்சாகத்தை அப்படியே மனதிற்குள் பரவவிடுவார் எம்.எஸ்.வி.  இருமுறை கைத்தட்டலுடன் இணைந்து பியானோவில் ஒரு அருமையான மெலடி இசை. தாளவாத்தியக் கருவியாக பாங்கோஸ் .. அதேநேரம் மென்மையாக மரக்காஸ் எழுப்பும் சிக் சிக் ஓசை.. இத்தனை முன்னேற்பாடுகளுக்குப் பிறகு  ரோலிங் டிரம் புதுமையான ROCK & ROLL இசையுடன் ஒலிக்க.. பியானோவின் அழகான பயணம் பல திருப்பங்களைக் கடந்து சின்னதான தீர்மானத்துடன் நிற்க..

நடிகர் திலகத்திடமிருந்து ஒரு கெஞ்சலான “ப்ளீஸ்” வெளிவர...

இத்தனை முன்னேற்பாடுகளைக் கடந்த பிறகு பாடலை “உன்னை ஒன்று கே..ட்..பேன்” என்று நமது இசை அரசி ஆரம்பிக்கும்போது .... Unnai Ondru Ketpen | உன்னை ஒன்று கேட்பேன் | MSV - RAMAMOORTHY | P.SUSHEELA (youtube.com)

நமது மனமோ தங்க நாற்கரச் சாலையில் சுகமான மெர்சிடெஸ் பென்ஸ் காரில் சொகுசாக பவனிவரும் சுகானுபவத்தில் லயிக்க ஆரம்பித்துவிடும்.

“உன்னை ஒன்று கேட்பேன் – உண்மை சொல்லவேண்டும்

என்னைப் பாடச் சொன்னால் – என்ன பாடத் தோன்றும்”

இந்தப் பல்லவியை இரண்டாம் முறையாக பி. சுசீலா பாடும்போது ஒவ்வொரு முத்தாய்ப்புக்குப் பிறகு வரும் சிறு இடைவெளியை அற்புதமாக வயலின்கள் இசைத்து நிரப்ப....

பியானோ – பாங்கோஸ் இணையும் இணைப்பிசையைத் தொடர்ந்து.. 

“காதல் பாட்டுப் பாட – காலம் இன்னும் இல்லை

தா.ஆ.லாட்டுப் பா..ட – தாயாகவில்லை.” என்று கார்வைகள், சங்கதிகளை பி.சுசீலா வெளிப்படுத்தும் விதம்...  சொன்னால் புரியாது.. கேட்டுக் கேட்டு அனுபவிக்க வேண்டும் அவர் பாடும் அழகை. 

இந்த வரிகளை அவர் பாடும்போது பின்னால் அழகாக வயலின்கள் சுருதி சேர்ப்பதுபோல மென்மையாகத் தொடர்ந்து CATCH AND ROUND செய்யும் லாவகம்..  .காற்றில் அப்படியே மிதக்க விடுவதுபோல இருக்கும். மேற்கத்திய இசையில் இதனைக் COUNTER POINT என்பார்கள்

அடுத்த சரணத்திற்கு முகப்பிசையை  சாக்ஸபோன் தொடங்க, புல்லாங்குழலும் வயலினும் அதகளப் படுத்த..  “நிலவில்லா வானம்...” என்று இசை அரசியின் குரல் உச்சத்தை எட்டி “நீரில்லா மேகம்” என்று அடுத்தவரியில் அங்கேயே சமத்தில் சஞ்சாரம் செய்து “பேசாத பெண்மை பாடாது உண்மை” என்று லாவகமாக கீழே இறங்கும்போது ஓடுகளப் பாதையில் சுகமாக தரை இறங்கும் விமானத்தின் அழகு மிளிர்ந்து நிற்கும்.

பாடல் முழுவதும் ஒரு ரிச்னெஸ் தெரியும்.  மனதிற்கும் அந்த ரிச்னெஸ் பரவும்.

இது ஒருவகை என்றால் “பார்த்த ஞாபகம் இல்லையோ” இன்னொரு வகை ரிச்னெஸ்.

தந்தி வாத்தியக் கருவிகளின் நயமிகு இசை காற்றில் வரைபடம் எழுதியதும் பாங்கோஸின் தாளக்கட்டு ...முடிந்ததும் முன்போல மீண்டும் தந்தி வாத்தியக் கருவிகளின் இசை – மறுபடி பாங்கோஸின் தாளக்கட்டு..  Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV (youtube.com)

இப்படி முகப்பிசை முடிந்ததும் “ஆஹா..ஆஹ ஆஹ ஹா.. என்று இசை அரசி பி. சுசீலாவின் ஹம்மிங்.. அந்த ஹம்மிங்கில் தெறிக்கும் கம்பீரம் ..

“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்று அவர் ஸ்டைலாக ஆரம்பிக்கும் எடுப்பில் தெறிக்கும் அனாயாசம்.. இவர் ஒருவரால் மட்டும் தான் இப்படி எல்லாம் பாட முடியும் என்று தீர்மானமாகச் சொல்லவைக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்னவென்றால்..

மேலே சொன்ன இரு பாடல்களும் படத்தில் மீண்டும் வேறுவிதமான சூழ்நிலையில் மறுபடி இடம்பெறும்.

“உன்னை ஒன்று கேட்பேன்”பாடல் அமைதியான இரவில் தாலாட்டும் சுகமான தென்றலின் வருடலாக பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும். (560) Unnai Ondru Ketpen HD Video Song (Thalattu Version) | 5.1 Audio | Sivaji Ganesan | Saroja Devi - YouTube

“பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலோ சோகம் இழையோடும் அதே நேரத்தில் திகிலையும் மனதில் பரவ விடும் சூழலில். Partha Nyabagam Illaiyo - Sad Version | HD 5.1 Audio | Sivaji Ganesan | Sowcar Janaki | Saroja Devi (youtube.com)

இப்படி இரண்டு பாடல்களை முற்றிலும் வெவ்வேறு விதமாகப் பாடுபவர் பி. சுசீலா என்ற ஒருவர்தானா . என்று சந்தேகமே தோன்றிவிடும். 

எப்படி நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை நடிகர் திலகம் ஒரே படத்தில் தாம் ஏற்கும் இரு வேடங்களிலும் அனாயாசமாக வெளிப்படுத்திப் பிரமிக்க வைக்கிறாரோ அதே போல ஒரே படத்தில் ஒரே பாடலை வெவ்வேறு பரிமாணங்களில் அனாயாசமாகப் பாடிப் பிரமிக்க வைப்பவர் பி. சுசீலா தான்.  அந்த வகையில் பாடகியரில் இவர் ஒரு சிவாஜி என்றும் கூடச் சொல்லலாம்.

**

புதிய பறவையில் மேற்கத்திய இசையில் அசரவைத்த மெல்லிசை மன்னர் கர்நாடக இசையில் கலக்கி ‘எடுத்த’ படம் “கலைக் கோவில்” . 

ஆம். இது அவரே எடுத்த படம்.  இதற்காக இயக்குனர் ஸ்ரீதரிடம் போட்டி போட்டார் அவர்.

ஸ்ரீதர் ஒரே நேரத்தில் இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருந்தார்.

இசையை மையமாக வைத்து ஒரு சீரியசான கதை. அதே நேரம் இதுவரை சீரியசான படங்களையே எடுத்து வந்த அவர் முதல் முதலாக நகைச்சுவையில் முத்திரை பதிக்க ஒரு காமெடி கதை.  இரண்டிற்கும் மெல்லிசை மன்னர்கள் தான் இசை.

சொந்தப் படமெடுக்க விரும்பிய மெல்லிசை மன்னர் தானும் ஒரு இசையமைப்பாளராக இருந்ததால் இசை சார்ந்த படம் தனது முதல் தயாரிப்பாக இருக்க விரும்பினார்.  ஆனால் ஸ்ரீதர் அதை ஏற்கவில்லை. 

“முதல் முதலா தயாரிப்பிலே இறங்குறீங்க. ஜாலியான காமெடியா இருக்கட்டுமே.  சீரியசான கதை ஜனங்க கிட்டே சரியா ரீச் ஆகாவிட்டால் உங்களை அது ரொம்பப் பாதிக்கும்.  வேண்டாம். இது என்னுடைய தயாரிப்பிலே வரட்டும்.” என்று உறுதியாக நின்றார் ஸ்ரீதர்.

மெல்லிசை மன்னரும் பிடிவாதமாகவே இருந்தார்.  கடைசியில் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து தேர்ந்தெடுப்பது என்று முடிவாகி அதன்படியே செய்ததில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் – கலை இயக்குனர் கங்கா இருவரும் இணைந்து தயாரிக்க ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “கலைக்கோவில்”.

இந்தப் படத்தில் இசை அரசி பி. சுசீலா பாடிய மூன்று பாடல்களுமே செந்தேனாக செவிகளில் வலம்வந்த பாடல்கள்.

“நான் உன்னைச் சேர்ந்த செல்வம்” என்று பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் ஒரு டூயட்.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் “நம் காதல் உள்ளம் கலைக்கோவில்” என்று எடுத்த எடுப்பிலேயே பி. சுசீலாவின் தேன்குரல் உச்சத்தை எட்டி நம் மனத்தைக் கவர்ந்துவிடும்.

இந்தப் பாடலில் இரண்டாவது சரணத்தில் ‘உன் விரல்கள் என் அழகை மீட்டும். உன் விழிகள் என் உயிரை வாட்டும்.” என்ற வரிகளில் “வாட்டும்” என்ற வார்த்தையில் அவர் கொடுக்கும் சங்கதி.. கேட்பவரை அப்படியே மெய்மறக்க வைக்கும். TAMIL OLD SONG--Naan unnai serntha selvam(vMv)--KALAIKOVIL (youtube.com)

கர்நாடக இசை மேதை டாக்டர் எம். பாலமுரளிக்ருஷ்ணா அவர்களுடன் இணைந்து “ஆபோகி” ராகத்தில் பி. சுசீலா பாடியிருக்கும் பாடல்தான் “தங்கரதம் வந்தது வீதியிலே” பாடல். 

ஆரம்பத்தில் இருவரும் மாறி மாறிப் பாடும் ராக ஆலாபனை..முடிக்கும்போது இருவர் குரலும் இணைந்து ஒலிக்க “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று பாலமுரளி பாடலை எடுக்க... மரகதத் தோரணம் அசைந்தாட – என்று பி. சுசீலா தொடரும் இனிமை அப்படியே மனங்களை அள்ளிக்கொண்டு போகும். Thangaratham Vanthathu Song | Kalaikkoil | M. Balamuralikrishna & P. Susheela (youtube.com)

வீணை இசைக் கலைஞர் சிட்டிபாபுவின் வீணை இசையுடன் பி. சுசீலாவின் குரல் இணையும் பாடல் தான் “தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு” என்ற ஸ்ரீராகத்தில் அமைந்த பாடல்.  பாடலின் இணைப்பிசையில் பி. சுசீலா வீணையின் நாதத்துக்கு இணையாக வெளிப்படுத்தும் ராக ஆலாபனை..கான சரஸ்வதியே வீணை மீட்டிக்கொண்டு பாடுவதைக் கேட்கும் உணர்வில் மனதை லயப்படுத்துகிறது. THEYVIYAR IRUVAR MURUGHANUKKU SSKFILM006 PS@ KALAIK KOVIL (youtube.com)

இனிமையான இசையுடன் கூடிய ஒரு அருமையான கலைப்படமாக அமைந்துவிட்டது கலைக்கோவில் – அதாவது ஒரு ART FILM  என்றால் அதற்கு என்ன கதி ஏற்படுமோ  அந்தக் கதி கலைக் கோவிலுக்கு ஏற்பட்டுவிட்டது.  வணிக ரீதியான வெற்றியை படம் அடையாமல் போனது ஒரு தயாரிப்பாளராக எம்.எஸ்.வி.க்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திய போதிலும் அந்தப் பாதிப்பில் இருந்து அவர் சுலபமாக மீண்டு விட்டார்.  ஆனால் இசை அமைப்பாளராக அவர் வெற்றி பெற்றுவிட்டார்.  அந்த வெற்றிக்குக் காரணமாக நமது இசை அரசியின் உளப்பூர்வமான உழைப்பு தனது மறைமுகப் பங்களிப்பை அளித்தது.

*****

கலைக் கோவிலின் தோல்வியை ஸ்ரீதரும் மெல்லிசை மன்னரும் ஈடுகட்டிவிட்டார்கள் “காதலிக்க நேரமில்லை” படத்தின் மூலமாக.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் பெருவெற்றி பெற்ற பாடல்கள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபணமானவை.

படம் தொடங்குவதே இசை அரசியின் பாடலுடன் தான். அவருடன் இணைபவர் கான கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் என்னும் போது சொல்லவும் வேண்டுமா என்ன?

“என்ன பார்வை உந்தன் பார்வை” என்ற பாடலிலும், “நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா.” பாடலிலும் இருவரும் மனதை உற்சாகக் கடலில் மிதக்க விட்டார்கள்.

“காதலிக்க நேரமில்லை” படத்தின் அன்றைய நாயகியருடன் இசை நாயகி.
“காதலிக்க நேரமில்லை” படத்தின் அன்றைய நாயகியருடன் இசை நாயகி.

பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து “அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்” பாடலையும் “நாளாம் நாளாம் திருநாளாம்” பாடலையும் பாடி இருந்தார் பி. சுசீலா.

ராகேஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் அற்புதமாக அமைத்த நாளாம் நாளாம் திருநாளாம்” பாடல் இசை நயம், பொருள் நயம்,இனிமை நயம் அனைத்திலும் சிறந்த ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் தபேலாவின் தாளக்கட்டு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.  இசை விமர்சகர் சுப்புடு அவர்கள் “நாளாம் நாளாம் திருநாளாம் பாடலில் தபேலாவின்  தாளக்கட்டின் லயம் பிரபல மிருதங்கமேதை பாலக்காடு மணி அய்யரின் லயத்திற்கு சற்றும் குறைந்ததல்ல” என்று மதிப்பிடுகிறார்.

பி. பி.ஸ்ரீநிவாஸ் – பி. சுசீலா இணைந்து பாடிய ஒரு அருமையான செமி கிளாசிகல் வகையைச் சேர்ந்த பாடலாக “நாளாம் நாளாம் திருநாளாம்” பாடல் அமைந்துவிட்டது. Naalam Naalam Thirunalam Song P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா பாடிய பாடல் நாளாம் நாளாம் திருநாளாம் (youtube.com)

காதலிக்க நேரமில்லை படம் பெற்ற பெருவெற்றி பொற்காலத் திரை இசையில் இசை அரசி பி. சுசீலா அவர்களின் புகழ் மகுடத்தில் ரத்தினக் கல்லாகப் பிரகாசித்து  அவரது புகழை இன்னும் மெருகேற வைத்தது.

இப்படித் தொய்வே இல்லாமல் சென்று கொண்டிருந்த அவரது இசைப் பயணத்தின் வேகத்தை அதிகரிக்க ஏ.வி.எம். நிறுவனம் கையசைத்துக் காட்டியதுதான்....

“பச்சை விளக்கு”.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

இசையரசி - 23

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com