பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 25

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“எங்களுக்கு மிகவும் பிடித்த திரையுலகப் பாடகி திருமதி பி. சுசீலா தான்.  தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பின்னணிப் பாடகியும் பி. சுசீலாதான்.  சந்தன மரம் தேயத் தேய மணம் பெருகும். அதுபோல, அவரது இனிய, அடக்க சுபாவம் மேலும் மேலும் அவரிடம் பழகச் செய்யும். தேனும் பாலும் கற்கண்டும் கலந்த இன்பச் சுவையைத் தரும் பாடல்களைப் பாடியவர் அவர். என்றும் மக்கள் நினைவில் அழியாத இடம் பெற்றிருக்கும் பேறும் பெற்றவர்.

சூலமங்கலம் சகோதரிகள் ராஜலக்ஷ்மி – ஜெயலக்ஷ்மி.

“பச்சை விளக்கு” – ரயில் இஞ்சின் டிரைவரை மையமாக வைத்து ராம. அரங்கண்ணல் மற்றும் இரு நண்பர்களுடன் கூட்டுத் தயாரிப்பாக ஏ.வி.எம். சரவணன் தயாரித்த படம்.

பாதிக்கு மேல் வளர்ந்த பிறகும் படத்திற்கு தலைப்பு முடிவாகாமல் இருந்தபோது டி.நகர் ரயில்வே கேட் அருகிலிருந்த சுவரில் மூன்று ‘பேனர்களை” வாடகைக்கு எடுத்து அவற்றில் ‘சிவாஜி நடிக்கும்” என்று போட்டு ஒரு பச்சை விளக்கு படத்தை – சிக்னலில் பச்சை விழுமே அதைப்போல அல்லது கார்டு கையில் வைத்திருப்பாரே பச்சை விளக்கு அதைப்போல ஒரு படத்தை வரைந்து “வருகிறது” என்று பெயர் குறிப்பிடாமல் விளம்பரப் படுத்தி இருந்தார் ஏ.வி.எம். சரவணன்.

அதைப் பார்த்தவர்கள் “சிவாஜி படம் வரப்போகிறது. அது ரயில் சம்பந்தப்பட்ட படம்”  என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகு படத்திற்கு தகுந்த பெயரை தேர்ந்தெடுக்க அலசிக்கொண்டிருந்தபோது படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்,”இதுலே யோசிக்க என்ன இருக்கு? நீங்கதான் “பச்சை விளக்கை”க் காட்டி விளம்பரப் படுத்திட்டீங்களே. அதனாலே படத்துக்கு அதையே பெயராக வைத்துவிடலாம்” என்று கூறிவிட “பச்சை விளக்கு” என்ற பெயரே படத்தின் தலைப்பானது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன.

இந்தப் படத்தில் டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோருடன் இணைந்தும் தனித்தும் பாடல்களைப் பாடி இருந்தார் பி. சுசீலா.

சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சௌகார் ஜானகிக்கு இந்தப் படத்தில் பாடல் காட்சி எதுவும் இல்லை.  ஆனால் பிரதான நாயகியாக – கதாநாயகனின் தங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அண்ணன் தங்கை பாசப் பிணைப்பில் உருவான படம் என்பதால்.. நடிகர் திலகத்தின் தங்கையாக நடித்த விஜயகுமாரிக்குப் பின்னணி பாடியிருந்தார் நமது இசை அரசி.

இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடப் படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட எட்டாயிரம் அடிகள் வளர்ந்துவிட்ட நிலையில் படத்தின் ரஷ் பார்த்த ஏ.வி.எம். அவர்கள் “ஹூஹும்.. சரியாவரல. அப்படியே SCRAP பண்ணிடுங்க.  புதுசா கதை ரெடி பண்ணி மறுபடி எடுங்க. அப்பத்தான் சரியாக வரும்” என்று சொல்லிவிட எடுத்த எட்டாயிரம் அடி பிலிம் சுருளையும் அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக ஏ.வி.எம். ராஜன் – புஷ்பலதா ஜோடியை உள்ளே கொண்டு வந்து மறுபடி படத்தை எடுக்க ஆரம்பித்தனர்.

புஷ்பலதாவுக்கு எல்.ஆர். ஈஸ்வரி பின்னணி பாடினார்.

பி. சுசீலாவிற்குக் கிடைத்த பாடல்கள் அனைத்துமே தேனின் இனிமையைக் குழைத்தெடுத்து செவிகளில் வார்த்த பாடல்கள்.

தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடலாக சந்தோஷச் சூழ்நிலைக்கு ஏற்ப பாவத்தைக் குழைத்தெடுத்து சங்கராபரண ராகத்தின் அடிப்படையில்  மெல்லிசை மன்னர்கள் அமைத்துக்கொடுத்த பாடல் “அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்றைச் சொல்ல நினைத்தாள் – அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை..  ராதை.” – பாடல்.

“அவள் மெல்லச் சிரித்தாள்” பாடல் பதிவில் மெல்லிசை மன்னருடன் ...
“அவள் மெல்லச் சிரித்தாள்” பாடல் பதிவில் மெல்லிசை மன்னருடன் ...

கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே நினைவுக்கு வரும்.  அதற்கேற்ப இந்தப் பாடலில் குழலிசைக்கே பிரதானம் கொடுத்து மெல்லிசை மன்னர் இசை அமைக்க... அதனைக் குழலையும் மிஞ்சும் இனிமை தெறிக்கும் குரலில் அதி அற்புதமாகப் பாடி இருக்கிறார் பி.சுசீலா. Aval mella sirithal - Pachai vilakku (youtube.com)

தாள ரிதத்திற்கு பாங்கோஸ் சூழ்நிலையின் உற்சாகத்தை இன்னும் துள்ளலாக மனதில் நிரப்புகிறது.

சரணங்களை பி. சுசீலா பாடி இருக்கும் அழகு... எடுத்த எடுப்பிலேயே  “ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்” என்ற வரிகளில் மேல்சஞ்சாரம்.. அப்படியே சமத்தில் அடுத்த வரிகளில் சஞ்சாரம் செய்யும் லாவகம்.. குரலினிமையின் உச்சம் இந்தப் பாடல்.

அடுத்து “வாராதிருப்பானோ...வண்ண மலர்க் கண்ணனவன்.”

கவியரசரின் காவிய வரிகள் – மெல்லிசை மன்னர்களின் இனிய இசையோடு கலந்து டி.எம்.எஸ். – பி. சுசீலா இருவரின் குரல்களோடு வெளிப்படும் போது கும்பகோணம் டிகிரி காபியின் சுவை செவி வழி நம் மனதை நிரப்பும் பாடல் இது. Vaaraathiruppano vanna malar kannan | வாராதிருப்பானோ | Pachai vilakku movie (youtube.com)

“குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க .

மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க..” என்று பி. சுசீலாவின் குரலோடு பாடல் தொடங்குகிறது..   இந்த ஆரம்ப தொகையறா வரிகளில் அவர் செய்யும் நுணுக்கமான சஞ்சாரங்கள்...காத்திருக்க என்று ஒரு நீட்டலாக பாடி நிறுத்தியதும்... தொடரும் ஷெனாயின் இனிமையான இழுவை....ஒரு வீச்சு முடிந்ததும்..

“வாராதிருப்பானோ...” என்று பி.சுசீலா ஆரம்பிக்கும்போது அவருக்கு இணையாக பாங்கோஸின் நயமான தாளக்கட்டு இணை சேர... அற்புதமாக அமைந்த பாடல் இது.

பெண் பாடகியர் இருவர் இணைந்து பாடும் பாடல்களை “FEMALE DUET” என்று குறிப்பிடுவார்கள்.

அந்தவகையைச் சேர்ந்த ஒரு பாடல் தான் “தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி” என்ற பாடல். 

பொதுவாக தலைவி கதாபாத்திரத்திற்குத் தான் பி. சுசீலா பாடுவார்.  காட்சிப்படி தோழியருடன் சுற்றுலா சென்றிருக்கும் வேளையில் கதாநாயகி தனது தோழியின் காதலை அறிந்துகொண்டு அவரைச் சீண்டிப் பாடும் பாடலாக அமைந்த பாடல் என்பதால் பாடல் காட்சியில் தோழிக்கு பி. சுசீலாவும் – தலைவிக்கு எல்.ஆர். ஈஸ்வரியும் என்று மாற்றிப் பாட வைத்திருந்தார் மெல்லிசை மன்னர். Thoothu sella oru thozhi...PS , LRE./ (youtube.com)

ஏற்கெனவே பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து படிக்காதமேதை, பாத காணிக்கை, இதயத்தில் நீ ஆகிய படங்களில் பாடியிருக்க.. இந்தப் பாடலுக்கு ஒரு தனி இடம் உண்டு.  ஒரே நேரத்தில் காதலும் தாபமும் மிளிரும் ஒரு இனிமையான பாடல்.  இந்தப் பாடலில் சரணங்களின்  இணைப்பிசையில் சாரங்கி வெகு அற்புதமாகக்  கையாளப்பட்டிருக்கிறது.  பி.சுசீலாவின் குரலில் இனிமையோடு லேசான கம்பீரமும் தெரியும். ஆரம்ப வரிகளில் அவரது குரலை அடியொற்றி கிட்டாரின் லாவகமான மீட்டல்கள் தாள வாத்தியத்தின் வேலையை அந்த தந்தி வாத்தியம் தான் என்ன அழகாகச் செய்கிறது. கூடவே மரக்காசின் சிக் சிக் – பாங்கோசின் உற்சாகமான தாளக்கட்டு.. இந்தப் பாடல் முழுவதும் பாங்கோஸின் தாள லயம் இளமைத்துள்ளலுடன் மனதை நிரப்புவது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய எல்லாப் பாடல்களுமே ஹிட் அடித்த பாடல்கள் தான். ஒன்று கூட சோடை போனதே இல்லை.” என்று எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.

அது வாஸ்தவம்தான்.

இருவரின் இணைவில் எல்லாப்பாடல்களுமே நவரசங்களையும் பிரதிபலித்த விதம் காலத்தால் அழிக்க முடியாத வண்ணம் அமைந்தவை.

இதற்கு இன்னொரு உதாரணம் “பெரிய இடத்துப் பெண்” படத்தின் “கட்டோடு குழலாட ஆட...கண்ணென்ற மீனாட ஆட...” பாடல்

“கட்டோடு குழலாட” பாடல் காட்சியில் மக்கள் திலகம் – மணிமாலா – ஜோதிலட்சுமி
“கட்டோடு குழலாட” பாடல் காட்சியில் மக்கள் திலகம் – மணிமாலா – ஜோதிலட்சுமி

கிராமியச் சூழ்நிலையில் அருமையான குழலிசை துந்தனாவின் மீட்டல் ஆகியவற்றோடு தொடங்கும் பாடல்.

இருவரின் குரலிலும் தான் என்ன ஒரு பாவம், சுருதி சுத்தம், உச்சரிப்புத் தெளிவு, இனிமை.. Kattodu Kuzhal Aada HD Song (youtube.com)

முகப்பிசையில் குழலிசை காபி ராகத்தை குழலில் பரவ விடும்போது.. பின்னைனியில் துந்தனாவின் மீட்டலும், லேசான கிட்டார் இசையும், கடத்தின் தாளமும் ...  அதிகாலை நேரத்து தென்றல் வயலில் இருக்கும் நெற்கதிர்களின் மீது பரவும் போது தென்படும் காற்றலைகளின் சுகத்தை அப்படியே நம் மனதிலும் பரவிடும் பாடல்.

காபி ராகப் பல்லவி, சரணங்களோ காபி மற்றும் ஹரிகாம்போதியின் கலவையாக கிராமிய வாசனையை அப்படியே நமது மனங்களில் பரவச் செய்ய... நயம் மெல்லடி எடுத்து வைத்த மாதிரி நமது இசை அரசியின் குளுமைக் குரலும்,  எல்.ஆர். ஈஸ்வரியின் இனிமைக் குரலும் இணையும் போது ஒருவிதப் பரவச உணர்வு மனதை நிறைக்கிறது.

இது இப்படி என்றால்...

“எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் இருவரும் இணைந்து பாடும் “மலருக்குத் தென்றல் பகையானால்” பாடலோ இன்னொரு விதம்.

காதலின் ஏமாற்ற உணர்வு இருவர் குரலிலும் வெளிப்படும்.

கவிஞர் ஆலங்குடி சோமுவின் பாடல் வரிகளின் சிறப்பு – மெல்லிசை மன்னர்களின் இசையில் பி. சுசீலா – எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் குரலிலும் கேட்கும்போது ...காதலனால் ஏமாற்றப்பட்டால்  கூட இப்படி ஒரு மனதை நிறைக்கும் பாடல் கிடைக்கும் என்றால்  ஒரு முறை என்ன ஓராயிரம் முறை கூட ஏமாறலாம்.! மலருக்கு தென்றல் | Malarukku Thendral | Enga Veettu Pillai Video Song | Sarojadevi | L.R.Eswari HD (youtube.com)

இந்தப் பாடல் காட்சிக்கு ஒளிப்பதிவு செய்த வின்சென்ட் – சுந்தரம் – ஏகப்பட்ட கட் ஷாட்கள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள் என்றால் அவற்றை சரியான முறையில் இணைத்து தொகுத்த எடிட்டர் சி.பி. ஜம்புலிங்கம் அவர்களின் உழைப்பும் கண்டிப்பாக மெச்சத் தகுந்த ஒன்று.

இந்த வகையில் பி.சுசீலாம்மா – எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் இணைவில் குறிப்பிடப் படவேண்டிய இன்னொரு பாடல் “சர்வர் சுந்தரம்” படத்தில் “பாட்டொன்று தருவார் பாடடியம்மா” பாடல்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் கிசுகிசுப்பான வசீகரக் குரலில் ஆரம்பிக்கும் பாடலில் இசை அரசி சரணங்களில் இணையும் இடங்கள் எல்லாமே தெவிட்டாத தேன்சுவைதான்.

இப்படி இரு தோழியர் – சகோதரியர் இணைந்து பாடும் பாடலா அப்படி என்றால் பி.சுசீலாவோடு  எல்.ஆர். ஈசவரியும் சேர்ந்து பாடினா கண்டிப்பா சக்சஸ்தான்” என்று சொல்லும் அளவுக்கு FEMALE DUET பாடல்கள் படத்துக்கு படம் இடம் பெற்றபடி இருந்தன

மெல்லிசை மன்னர்களின் இசையில் ஜி.என்.வேலுமணி அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த படம் “பஞ்சவர்ணக்கிளி”.

இந்தப் படத்தில் இசை அரசியின் பாடல்கள் அனைத்துமே பெருவெற்றி அடைந்த பாடல்கள்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்” – புரட்சிக் கவி பாரதிதாசனின் பாடலை மெல்லிசை மன்னர்கள் பெஹாக் ராகத்தில் இனிமை நிறைய அமைக்க பி.சுசீலாவின் குரலில் தமிழ் மொழியின் சிறப்பான “ழ”கர உச்சரிப்பு விஜய நகரத்து கானதேவதையின் குரலில் லாவகமாக தேனில் ஊறிய பலாச்சுளையின் தித்திப்போடு செவிமடல்களை தழுவும் பாடல். தமிழுக்கும் அமுதென்று பேர் HD Video Song | பஞ்சவர்ண கிளி | முத்துராமன் | K.R. விஜயா (youtube.com)

கவிஞர் வாலியின் “அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்” – பாடல் வெற்றிப் புதையலில் கிடைத்த கோஹினூர் வைரம்.

தபேலாவின் தாளக்கட்டும் வயலின்களின் ஒற்றை வீச்சும் பாடலை ஆரம்பித்துவைக்க “சத்தியம் சிவம் சுந்தரம்” என்று எடுப்பாக ஆரம்பிக்கும் பி.சுசீலாவின் குரலில் தெறிப்பது இனிமையா, கம்பீரமா, நளினமா, மென்மையா – இல்லை இவை எல்லாம் கலந்த ஒன்றா..  தனியாக இதுதான் என்று உறுதியாகச் சொல்லமுடியாத படி.. உன்னதமான ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்தி லேசான ஒரு அதிர்வுடன் தான் பாடல் தொடங்குகிறது.

இசை அரசியின் குரலுக்கு ஈடுகொடுக்கும் புன்னகை அரசி.
இசை அரசியின் குரலுக்கு ஈடுகொடுக்கும் புன்னகை அரசி.

“அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்” என்று பாடலை இசை அரசி

தொடரும் போது..  மனம் அப்படியே லயத்தில் தோய்ந்து விடுகிறது.

முதல் பாடலில் தமிழின் சிறப்பை இனிமையில் தோய்த்தெடுத்துச் சிகரத்தில் ஏற்றி வைத்தவர் இந்தப் பாடலில் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமையை – சிருங்கார பக்தி உணர்வு வெளிப்படப் பாடிக் கொடுத்திருக்கிறார். அழகன் முருகனிடம் Video Song | Panchavarna Kili | Muthuraman | KR Vijaya | Viswanathan–Ramamoorthy (youtube.com)

“கண்ணன் வருவான் கதை சொல்லுவான்” பாடல் குழந்தையைக் கொஞ்சும் சாக்கில் தனது மனம் நிறைந்த காதலனைப் பாடும் பெண்ணின் உற்சாகம் தெறிக்கும் பாடல். Kannan Varuvaan Kadhai Solluvaan | கண்ணன் வருவான் கதை சொல்லுவான் | P.Susheela Hit Song HD (youtube.com)

ஐந்து நிறங்கள் கொண்ட கிளி என்பதை பஞ்சவர்ணக்கிளி என்று சொல்கிறோம். இந்தப் படத்தில் பி. சுசீலாவின் குரல் வழி நமது செவி மடல்களில் ஊடுருவி மனதை நிறைத்த பாடல்களோ ஆயிரக்கணக்கான வர்ண ஜாலங்கள் புரிந்த பாடல்கள்.

**

இப்படி மெல்லிசை மன்னர்களின் இசைச் சாம்ராஜ்யத்தில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த பி.சுசீலாவை திரை இசைத் திலகம் கே.வி. மாகாதேவன் ஒரே படத்தின் மூலம் கானச்சக்ரவர்த்தினியாகவே மாற்றிவிட்டார்.

அந்தப் படம்தான்  “இதயக் கமலம்”.

(இசையின் பயணம் தொடரும்..)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

இசையரசி - 23

இசையரசி - 24

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com