பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 26

“சுசீலாம்மா ஒரு சிரஞ்சீவிப் பாடகி. எப்படிச் சொல்வது? நான்கு தலைமுறைக்குப் பாட்டுப் பாடிய அம்மா. சூலூர் தியேட்டரில் “கணவனே கண்கண்ட தெய்வம்” படத்தைப் பார்த்தபோதுதான் முதல் முதலாக அவரது குரலைக் கேட்டேன்.  எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ பாடல் தான் சுசீலாம்மாவின் குரலில் நான் கேட்ட முதல் பாடல். உன்னைக் கண்தேடுதே என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்.”

திரைப்பட நடிகர், பல்கலை வித்தகர் திரு சிவகுமார்.

மிழ்த் திரைப்பட வரலாற்றில் அறுபதுகளில் வெளிவந்த சாதனைப் படங்களின் வரிசையைக் குறிப்பிடும்போது “இதய கமலம்” படத்தை தவிர்த்துவிட்டு அந்த வரிசையை அமைக்க முடியாது.

பெரிதாக ஸ்டார் வால்யூ எதுவுமே இல்லாமல் அப்போதுதான் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்த கே.ஆர்.விஜயா – ரவிச்சந்திரன் இவர்களோடு நமக்கு பரிச்சயமான நடிகர்கள்  என்றால் அது டி.எஸ். பாலையாவும், ஷீலாவும் தான். நடிகர் பாலாஜி ஓரிரு காட்சிகளில் காவல் துறை அதிகாரியாக வந்து போவார்.

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசையில் பி.சுசீலா – பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் சேர்ந்துகொண்டு நமது செவிகளில் இன்பத் தேனை பாயவைத்தார்.

“நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ.” பி.பி.ஸ்ரீனிவாஸ்-பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலின் முகப்பிசை முடிந்ததும் ஆரம்பத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் “போ போ. போ..ஓ...ஹோ..ஹோ..”என்று ஹம்மிங்குடன் ஆரம்பிக்க “வா வா வா..வா..ஆ..ஆ..ஹா..ஹா...” என்று பி.சுசீலா ஹம்மிங்கைத் தொடர்வர். Idhaya Kamalam | Nee Pogumidamellam song (youtube.com)

பி.சுசீலாவின் அந்த ஹம்மிங் இரு முறை பாடவைத்து பதிவு செய்யப்பட்டு அதனை ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தி (overlapping) delay technic முறையைக் கையாண்டு இணைத்துப் பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஒரே டேக்கில் பதிவாக்கம் செய்யப்பட்டது.  இப்படி overlapping முறையில் ஒலிப்பதிவாக்கம் செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் என்பதும் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

“தோள்கண்டேன் தோளே கண்டேன் – தோளில் இரு கிளிகள் கண்டேன்” – பி.பி. ஸ்ரீனிவாஸ் தனது கந்தர்வக் குரலில் இசைக்கப் பாடல் முழுவதும் ஹம்மிங்கிலேயே அவரைத் தொடர்வார் பி. சுசீலா. கேட்பவர் மனத்தை அப்படியே வசப்படுத்திவிடும் ஹம்மிங் அது. Thol kanden thole kanden - தோள் கண்டேன் தோளே கண்டேன் (youtube.com)

“மலர்கள் நனைந்தன பனியாலே” – மோகன ராகத்தில் அமைந்த பாடலை மோகனக் குரலில் பாடி நம்மை அப்படியே தனது இசையால் கட்டிப்போட்டு விடுகிறார் பி. சுசீலா.  பாடல் முழுவதும் மத்யம சுருதியிலேயே பயணிக்கிறது அவரது குரல்.. ஏற்ற இறக்கங்களில் வெளிப்படும் சஞ்சாரங்கள்...சரண முடிவில் முத்தாய்ப்பாக அவர் கொடுக்கும் அழுத்தங்கள்..எல்லாமே வேற லெவல் தான். Tamil Song - Idhaya Kamalam - Malargal Nanaindhana Paniyale (HQ) - YouTube.mp4

கதைப்படி இறந்த மனைவியின் நினைவிலேயே வாடிக்கொண்டிருக்கும் கதாநாயகனை உற்சாகப் படுத்த அவனது முறைப்பெண் ஆடிப்படுவதாக காட்சி அமைப்பில் “என்னதான் ரகசியமோ இதயத்திலே” பாடல்.

பாடி ஆடுவதென்னவோ அவனது மாமன் மகள்தான்.  ஆனால் அவன் மனக்கண் முன் மனைவி தோன்றிப்  பாடுவதாக காட்சி அமைப்பு. 

பொதுவாக இப்படி இரு பெண்கள் பாடுவதாக அமைந்த காட்சிப் பாடல் என்றால் இரு பாடகியரைப் பாட வைப்பார்கள்.  

ஆனால் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களோ இந்தக் காட்சியில் நடித்திருக்கும் நடிகையர் ஷீலா, கே.ஆர். விஜயா இருவருக்குமே பி. சுசீலாவையே பாடவைத்திருக்கிறார். 

ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும் சரணங்களும்  காபி ராகத்திலும் , கே.ஆர். விஜயாவிற்கான பகுதிகள்  “திலங்” ராகத்திலும் அமைந்த இந்தப்  பாடலில் சுருதி, தாள வாத்தியம் உட்பட அனைத்தையும் மாற்றி பாடலை அமைத்திருக்கிறார்.  ஷீலா பாடுவதாக அமைந்த பகுதிக்குத்  தபேலா, கே.ஆர். விஜயா பாடுவதாக அமைந்த பகுதிக்கு டேப் வாத்தியம் என்று  கே.வி. மகாதேவன் வித்தியாசப் படுத்தி அமைத்திருக்கும் அழகைச் சொல்வதா அதனை நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் நமது இசை அரசி பாடிக்கொடுத்திருக்கும் நயத்தைச் சொல்வதா.?

ஷீலா பாடுவதாக அமைந்த பகுதிகளில் உயர்ந்து ஒலிக்கும் குரல் அப்படியே கே.ஆர்.விஜயா பாடுவதாக அமைந்த பகுதிகளில் கீழே தணிந்து மனதை வசீகரிக்கும். Ennathan ragasiyamo - Ithaya kamalam (youtube.com)

இப்படி ஒரே பாடலில் இரு வேறு கதாபாத்திரங்களையும் வித்தியாசப் படுத்திக் காட்டும் லாவகத்தை இவரைத் தவிர வேறு யாராலும் செய்யமுடியாது என்ற அளவிற்கு இருந்திருக்கிறது பி.சுசீலாவின் இந்தப் பாடல்.

“இதய கமலம்” என்று படத்தின் பெயரைச் சொன்னாலே பளிச்சென்று நினைவில் வந்து வசீகரிக்கும் முதலிடப் பாடல் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..” பாடல். பாடல் வரிகளைப் பார்த்த மறுகணமே பளிச்சென்று மகாதேவனின் மனதில் உதித்த மெட்டு.

இன்றளவும் இந்தப் பாடலில்  - குறிப்பாக மேற்கத்திய இசையில் காணப்படும் sevanths என்னும் அமைப்பு குறிப்பிடப்படவேண்டிய வேண்டிய ஒன்று.  sevanths என்றால்? “ Interval in melody or harmony when 2 notes, major or minor, are 7 steps apart (counting bottom and top notes)” என்கிறது ஆக்ஸ்போர்ட் இசை அகராதி.  இரண்டு இசைக் குறிப்புகளை (அவை மேஜர் அல்லது மைனர் ஸ்கேலாகக் கூட இருக்கலாம்.) ஏழு வரிசைகளில் முன்னேற்றி அமைக்கும்போது இடைவெளிகளில் தோன்றும் மெல்லிய இசை நயம் வெளிப்படுத்தும் இனிமைதான்  “sevanths”. பாடலில் இந்த நயத்தை முதல் நான்கு வரிகளில் அக்கார்டியனின் ஏற்ற இறக்கத்துடன் கூடிய chords , வைப்ரபோனின் ஏறுவரிசைக் கிரமங்கள், ரிதம் கிடார் (rhythm guitar) ஆகியவை வெகு அழகாக வெளிப்படுத்தும் இசை வடிவங்கள்- இன்றுவரை வேறு யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை.  Idhaya Kamalam | Unnai Kaanatha song (youtube.com)

“இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி....” என்று பி. சுசீலாவின் குரல் மெல்ல மெல்ல மேலெழும்பி சஞ்சாரம் செய்து உச்சத்தை எட்டி நிற்கும் அந்த ஒரு கணம்..  அந்த ஒரே ஒரு கணம் போதும்.. இந்தச் “சுகானுபவம்” என்று சொல்கிறார்களே அது இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கும்.  தேனும் பாலும் முக்கனிகளும் தேன்பாகும் கூட இந்தப் பாடலில் அவரது குரல் வெளிப்படுத்தும் இனிமைக்கு முன்னால் நிற்கக்கூட முடியாது.

பி.சுசீலா அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு மிகவும் ஸ்பெஷலான பாடல் இதுதான்.

ஏனென்றால் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடி இருந்தாலும் அவரது அன்புக் கணவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்  இது என்னும் போது அது கண்டிப்பாக ஒரு ஸ்பெஷலான பாடல் தானே.

****

“மூச்சு விடாமல் தம் கட்டிப் பாடுவது” என்பது இப்போதெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இந்தச் சாதனையை சத்தமே இல்லாமல் 1964லேயே செய்து காட்டிவிட்டு இரண்டு பாடகிகள் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.  நமது இசை அரசியும், எல்.ஆர். ஈஸ்வரியும் தான். அவர்களைப் பாடவைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

“பணக்காரக் குடும்பம்” படத்தில் பெண்களின் கபடி  விளையாட்டுக் காட்சிக்காக கவியரசரின் பாடலை விளையாட்டை நேரில் பார்க்கும் போது ஏற்படும் பரபரப்புக் கொஞ்சமும் குறையாமல் மெல்லிசை மன்னர் அமைத்துக் கொடுத்த இசையில்தான்  இருவரும் மூச்சு விடாமல் அனாயாசமாகப் பாடி சாதித்துக்காட்டி இருக்கிறார்கள்.

இந்தக் காட்சியில் மணிமாலாவிற்காக எல்.ஆர். ஈஸ்வரியும், சரோஜாதேவிக்காக பி. சுசீலாவும் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலின் கடைசிச் சரணத்தில்

“வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது

புலிக் கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது

முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது

முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது... தோ..தோ..தோ..தோ”..

என்று ஆரம்பம் முதல் இறுதிவரை ஐம்பது வினாடிகள் மூச்சு விடாமல் அனாயாசமாகப் பாடி அசகாயச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் பி.சுசீலா. Vaadiamma Vaadi Song HD | Panakkara Kudumbam | B. Sarojadevi | Kannadhasan. (youtube.com) 

“தோ..தோ..தோ..தோ” என்று ஒற்றை வார்த்தையை ஏற்ற இறக்கங்களுடன் மூச்சுவிடாமல் பாடுவது என்பது சாதாரண விஷயமல்ல.  அந்த வகையில் தான் ஒரு “கில்லி” என்பதை பி. சுசீலா பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். 

***

அடுத்து பி. சுசீலா அவர்களின் சாதனைப் பயணத்தில் முக்கியமான படம் ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை”.  கலைச் செல்வி ஜெயலலிதா அவர்கள் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம்.

இந்தப் படத்தில் ஜெயலலிதாவிற்காகப் பி. சுசீலாவின் பாடல்கள் அனைத்துமே தேன்சொட்டுக்கள்.

“அம்மம்மா காற்று வந்து” – நடபைரவி ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இந்தப் பாடலில் சரண முடிவில் அம்மம்மா...ஆ...என்று பி. சுசீலாவின் குரல் கம்பிப் பாகு பதம் என்பார்களே அதுபோல .. இழுத்த இழுப்புக்கெல்லாம் ஏற்றபடி வளையும் அந்தக் குரல் புரியும் ஜாலவித்தை ....வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. அம்மம்மா காற்று | Ammamma Kaatru | Vennira Aadai | Susheela | Viswanathan & Ramamoorthy | Kannadasan - YouTube

இந்தப் படத்தில் ஒரே ராகத்தில் மூன்று பாடல்களை ஒன்றின் சாயல் துளிக்கூட மற்றதில் தெரியாதபடி அற்புதமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.

“என்ன என்ன வார்த்தைகளோ” பியானோவின் இசைக்குப் போட்டியாக நமது இசை அரசி பாடிய பாடல். என்ன என்ன வார்த்தைகளோ பாடல் | Enna Enna Vaarththaigalo song | P. Susheela | Jayalalitha love song . (youtube.com)

சரணங்களில் “உன்னைத் தான் கண்டு சிரித்தேன்” “நிலவே உன்னை அறிவேன்” என்ற ஆரம்ப வரிகளில் மேலே உயர்ந்து பஞ்சமத்தைத் தொட்டு கீழே இறங்கி சமத்தில் அவரது கணீர்க்குரல் பயணிக்கும் போது கண்டிப்பாக நமது மனத்தை ஆக்கிரமிக்கத் தவறாது.

ஒரே வரியில் வெட்க உணர்வையும் ,அடுத்த வரியில் நாணம் என்னும் உணர்ச்சியையும் உச்சரிக்கும் அழகிலேயே வேறுபடுத்திக் காட்ட முடியுமா? 

முடியும் என்று பி. சுசீலா நிரூபித்த பாடல் தான் “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”.

இந்தப் பாடலில் இரண்டாவது சரணத்தில்

“அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்

அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்..”

அந்த “வெட்கம் வெட்கம்” என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்தையும் “நாணம் நாணம்” என்ற வார்த்தைகளை பாடும் அழகையும் கேட்டுப் பாருங்கள்.  வார்த்தைகளின் விளக்கம் துல்லியமாகப் புரியும் வண்ணம் மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இசையை உள்வாங்கிக்கொண்டு அப்படியே பிரதிபலித்திருப்பார் பி.சுசீலா. 

படம் வெளிவந்த நேரத்தில் இந்தியாவின் மீது வல்லடியாக ஒரு ஆக்கிரமிப்புப் போர் தொடுத்தது சீனா.

எல்லையில் ராணுவ வீரர்களுடன் – கணவர் மற்றும் ஜெமினி கணேசன் சாவித்திரியுடன் இசை அரசி.
எல்லையில் ராணுவ வீரர்களுடன் – கணவர் மற்றும் ஜெமினி கணேசன் சாவித்திரியுடன் இசை அரசி.

அந்த நேரத்தில் போர்முனையில் இருந்த ராணுவ வீரர்களின் முகாமுக்கே சென்று அவர்களை உற்சாகப் படுத்த நடிகர் திலகம் அவரது தலைமையில் ஜெமினி கணேசன்-சாவித்திரி, ராஜசுலோச்சனா, சந்தியா – ஜெயலலிதா, தேவிகா, அஞ்சலிதேவி, வி.கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு  என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன்  மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் – பி. சுசீலா ஆகியோரும் வடக்கில் இருந்த ராணுவ முகாமுக்கே கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழ் நாட்டிலிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

அங்கு சேர்ந்து கலை நிகழ்சிகள் நடத்திவிட்டு ராஷ்ட்ரபதி பவனில் அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பிலும் கலந்துகொண்டு அவர் முன்பாக கலை நிகழ்சிகளையும் நடத்தினார்கள்.

ஜனாதிபதி மாளிகையில்
ஜனாதிபதி மாளிகையில்

அந்த நேரத்தில் “கண்ணன் என்னும் மன்னன் பேரை” பாடலுக்கு ஜெயலலிதா நடனமாட முற்பட்டபோது ஒலிநாடாவில் சிக்கல். 

சற்றும் தயங்காமல் மெல்லிசை மன்னர் பி.சுசீலாவையே நேரடியாகப் பாடவைத்தார்.

மெல்லிசை மன்னர் ஹார்மோனியம் இசைக்க, பி.சுசீலா பாட ஜெயலலிதா நடனமாட..”எல்லாம் லைவ். ஆமா. லைவாவே நடந்தது.  என்னாலே மறக்கவே முடியாது” என்று இந்தச் சம்பவம் பற்றித் தனக்கே உரிய பாணியில் பி.சுசீலா எப்போதும் நினைவு கூர்வார்.

இந்தப் படத்தில் இடம்பெறாத ஆனால் இசைத்தட்டுகளில் இடம் பெற்ற ஒரு இனிமையான சோகரசம் ததும்பும் பாடல் தான் “நீராடும் கண்கள் இங்கே – போராடும் உள்ளம் அங்கே” பாடல்.  இந்தப் பாடலில் பி.சுசீலாவின் குரலில் வெளிப்படும் சங்கதிகளும் பாடியிருக்கும் விதமும் இவ்வளவு அழகான ஒரு பாடலை வெட்டி இருக்கிறாரே என்று இயக்குனர் ஸ்ரீதரின் மீது கோபமே வரவழைத்தது. அந்த அளவிற்கு பாவமும் நயமும் இசை அரசியின் குளுமைக் குரலில் மிளிர்கின்றன.

ஏ.வி.எம். தயாரிப்பாக வெளிவந்த “காக்கும் கரங்கள்” படத்தில் பெண் குரல் பாடல்கள் அனைத்தையும் கே.வி. மகாதேவனின் இனிய இசையில் பாடியிருந்தார் பி. சுசீலா.  நடிகர் சிவகுமார் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமான அவரது முதல் படம் இது.

“திருநாள் வந்தது தேர் நின்றது” – கவிஞர் வாலியின் வார்த்தைகள் ஊனமுற்ற ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் ஆதங்கத்தை உள்ளடக்க.. வார்த்தைகளுக்கும் வலிக்காத வண்ணம் பி. சுசீலா பாடி இருக்கும் அழகு.

மகாதேவனின் இசையும் பி. சுசீலாவின் குரலும் ஒரே நேர்க்கோட்டில் அற்புதமாகச் சங்கமிக்கும் பாடல் இது.

“ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது....” என்ற வரிகளை லேசாக இழுத்தாற்போல நிறுத்தி...”ஓட முடியாமல் தேர் நின்றது” என்ற வரிகளைப் பாடும்போது அவர் குரலில் தெறிக்கும் லேசான மெல்லிய விசும்பல். கூடுதலாக மெருகூட்டும் பாங்கோஸின் மென்மையான தாள லயம். இவை எல்லாம் ஒன்றாக இணையும் பாடல்.

“ஞாயிறு என்பது கண்ணாக” டி.எம்.எஸ். அவர்களின் கம்பீரக் குரலுடன் பி.சுசீலாவின் மென்மையும், குளுமையும் நிறைந்த குரல் இணையும்போது பெண்மையின் நளினம் கேட்பவரை வசீகரிக்காமல் இருக்குமா என்ன?

“அல்லித் தண்டுக் காலெடுத்து அடி மேல் அடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்”  - டி.எம்.எஸ். அவர்களுடன் பி. சுசீலா பாடலை ஆரம்பிக்கும் அழகில் அந்தச் சின்னக் கண்ணனே மயங்கி இருப்பானே!

(இசையின் பயணம் தொடரும்..)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com