பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 27

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“பி. சுசீலா எனக்கு மூத்த சகோதரி மாதிரி.  நான் நடிக்க வந்த காலம்தொட்டு எனக்காக நிறையப் பாடி இருக்கிறார்கள். அவர் பாடலில் வெளிப்படுத்தும் பாவத்தில் பாதியை நடிப்பில் கொண்டுவந்துவிட்டாலே போதும். கண்டிப்பாக அந்தப் படம் வெற்றிதான்.” - திரைப்பட நடிகை திருமதி. ஜமுனா

எத்தனை படங்கள்: எத்தனை பாடல்கள்: அவற்றில் தான் ஒன்றுக்கொன்று எத்தனை வித்தியாசங்கள்; ஒரே குரலை வைத்துக்கொண்டு இத்தனை இத்தனை விதமான உணர்வுகளை ஒரு பாடகியால் வெளிக்கொண்டு வர முடியுமா என்று தொடர்ந்து வந்த படங்களில் பிரமிக்க வைத்தார் பி. சுசீலா.

ஒரே படத்திலேயே ஒரே கதாபாத்திரத்திற்குப் பாடும்போது ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் கூட அவர் காட்டிய வித்தியாசம் கதையின் போக்குக்கு ஏற்றபடி அமைந்திருந்தது. இந்த மாறுபாட்டை வேறு யாரும் அவருக்கு முன்னாலும் சரி: பின்னாலும் சரி செய்ததே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1965-இல் வெளிவந்த “திருவிளையாடல்”. திரை இசைத் திலகத்தின் மகத்தான இசைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்த படம்.

இந்தப் படத்தில் இரண்டே இரண்டு பாடல்களைத்தான் அவர் பாடியிருந்தார்.அந்த இரண்டு பாடல்களையுமே சற்று நுணுக்கமாகக் கவனித்தால் அவர் காட்டிய ஈடுபாடு புலப்படும்.

“சம்போ மகாதேவா” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே வைத்துக்கொண்டு “தேவா – மகாதேவா – சம்போ மகாதேவா” என்ற மூன்று வரிகளை மட்டுமே சீர்காழி கோவிந்தராஜனை மோகன ராகத்தில் சஞ்சாரம் செய்யர்...அதைத் தொடர்ந்து வரும் வீணை இசை – தனி ஆவர்த்தனம் –

அவை முடிந்ததும் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க –இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க ” என்ற மாணிக்க வாசகரின் சிவபுராண வரிகள் இசை அரசியின் குரலில் சாந்தமாக ஒலிக்கும்போது அதுவரை ஆர்ப்பாட்டமாக ஒலித்த இசையால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மனம் அப்படியே அடங்கி ஒடுங்கி லயத்தில் நிறைகிறது.  

தொடர்ந்து “ஓம் நமசிவாய” என்று கோரஸ் பாடகியரின் குரல்கள் மத்யம சுருதியிலேயே படிப்படியாக உச்சத்தை எட்டி நின்றவுடன்.. Shambho Mahadeva | சம்போ மகாதேவா (youtube.com)

“ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..” என்று பி.சுசீலாவின் தேன்குரலில் அர்ச்சனை மலர்களாக உதிரும்போது..ஒரு தெய்வீக பரவசம் கேட்பவர் மனதை நிறைக்கும்.

திருக்கயிலாயத்தில் மலைமகளான அன்னை பார்வதி சிவபூஜை செய்வதாகக் காட்சி அமைப்பு. அதுவும் தமிழ் மொழியில் அர்ச்சனை.

வார்த்தைகளில் தான் எத்தனை துல்லியம். ஒவ்வொரு வார்த்தையும் அதற்கேற்ற மாத்திரை அளவைச் சற்றும் மீறாமல் குறிப்பாக “ஈசனடி” என்ற வார்த்தையில் இருக்கும் “ச”காரம் உச்சரிக்கப்பட்டிருக்கும் லாவகம்.. என்னதான் இசை அமைப்பாளர் சொல்லிக்கொடுத்தாலும் “எனக்கு இப்படித்தான் வரும்”என்று அடமாக நிற்காமல் அதை அப்படியே குரலில் கொண்டுவருவதில் அவர் காட்டி இருக்கும் சிரத்தை, ஈடுபாடு இவை எல்லாம் இப்போது வரும் பாடகியர் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

மலைமகளே பாடுவதாக அமைந்த பாடல் என்பதால் தெய்வத்திற்குள்ள கம்பீரமும், சாந்தமும் துலங்கப் பாடவேண்டும் என்பதை மனதில் கொண்டு அர்ப்பணிப்புடன் பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.

இதற்கு முற்றிலும் மாறுபட்ட பாடல்தான்  இடைவேளைக்குப் பிறகு இடம்பெறும் “நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பொண்ணு” பாடல்.

சாபத்தால் பூமியில் மானிடப் பெண்ணாக அதுவும் பரதவர் குலத்துப் பெண்ணாகப் அவதரிக்க நேர்ந்த “கயல்கண்ணி அம்மா” பாடும் பாடல்.

பருவத்தில் வாயிலில் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப் பெண்ணின் விரகமும் ஏக்கமும் வெளிப்படும் பாடல்.

அருமையான “பஹாடி” ராகத்தில் அதி அற்புதமாகக் கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் இசையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு நிலைக்கண்ணாடியைப் போலத் தனது குரலில் பிரதிபலித்திருப்பார் பி.சுசீலா.

“ஏலே ஏலோ ஏலேலேலோ .’ என்ற ஆண்பெண் கோரஸ் பாடகியரின் குரல் ஹோய் ஹோய்யா” என்று முடிவுக்கு வரும் இடத்தில் “ஓஹோ.ஹோ.ஹோ..”என்று இசை அரசியில் குரலில் ஹம்மிங்கோடு ஆரம்பித்து..   “ஏலே ஏலோ ஏலேலேலோ..ஓ.” என்று முடித்தவர் “நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பொண்ணு” என்று மத்தியம காலத்தில் தொடங்கி.. “நீ நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு”  என்று தொடரும் அழகு.  இதில் “பார்ப்பதென்ன” என்ற ஒற்றை வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் அதில் தொனிக்கும் பாவம் ..விவரிக்க முடியாத ஒன்று. Neela Selai Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ... (youtube.com)

சரணங்களுக்கு இடையே வரும் இணைப்பிசையில் கடலின் பிரம்மாண்டத்தை அப்படியே உணர வைத்திருப்பார் கே.வி. மகாதேவன்.

******

சற்றேறக்குறைய மெல்லிசை மன்னர்களின் பிரிவு உறுதியான காலகட்டத்தில் வெளிவந்த படம் “சாந்தி”.  இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய எப்போது கேட்டாலும் மனதில் இனிமையைப் படரவிடும் பாடல் தான் “நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்”.  

எம்.எஸ்.ராஜு அவர்களின் விசில் தான் எத்தனை ஸ்டைலாக ஆண்மையின் கம்பீரத்துடன் ஒலிக்கிறது.  அதற்கு ஈடுகொடுக்கும் பெண்மையின் நளினம் இசை அரசியின் குரலில் சிறப்பாக அமைத்திருக்கிறது.

“கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்”,

“காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்களிரண்டில் நிம்மதி எது?”

“நீ தரவேண்டும் நான் பெறவேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி எது?”  ஆகிய வரிகளில் அதீத பாவம் மிளிர வேண்டும் என்பதற்காக ஸ்வரங்களை மாற்றி அமைத்து சாருகேசியின் சாயலைக் கொடுத்து மெல்லிசை அமைத்த மெட்டை அப்படியே உள்வாங்கிக்கொண்டு தனது குரலில் பிரதிபலித்திருக்கும் பி. சுசீலாவின் தேனிசை மெய்மறக்கவைக்கிறது. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் | nenjathile nee netru vanthai song | Susheela Hit Songs . (youtube.com)

***

கலைச் செல்வி ஜெயலலிதாவிற்காக பி. சுசீலா குரலால் அசத்திய படம் “ஆயிரத்தில் ஒருவன்”

கதாநாயகியின் அறிமுகக் காட்சிப்பாடலான “பருவம் எனது பாடல்” பாடலைப் பி. சுசீலா அவர்கள் பாடியிருக்கும் விதம் ஒரு தனி.. எடுத்த எடுப்பில் தொனிக்கும் இளமை கலந்த இனிமை பாடல் முழுவதும் கொஞ்சம் கூடக் குறையாமல் அவரால் எப்படித்தான் பாட முடிந்ததோ? Paruvam Enathu Paadal | HD Video Song 5.1 | Jayalalitha | P Susheela | Viswanathan Ramamoorthy (youtube.com)

இணைப்பிசையில் கோரஸ் பாடகியரின் “ஹூம்..ஹூஹூ..ஹூம்..” பின்னணியில் தொடர சன்னமாகத் தொடர அதற்கு மேலாக பி.சுசீலாவின் “அ’கார ஹம்மிங் மூச்சு விடாமல் ஏறி இறங்கி பயணிக்கும் லாவகம் “கவுண்ட்டர் பாயின்ட்” வகையில் மெல்லிசை மன்னர்கள் அந்த ஹம்மிங்கை அமைத்திருக்கும் அழகு.. பிரமிக்க வைக்கும் ஒரு கற்பனைத்திறன்.

“உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்” – காதலின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் அற்புதமான பாடல்.  “பொன்னைத்தான் உடல் என்பேன்:சிறு பிள்ளை போல் மனம் என்பேன்.”என்று சரணத்தில் எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்கு உச்சத்துக்கு செல்லும்போது சன்னக்கம்பி போல...அடித்தொண்டையில் மூச்சுக் காற்று லேசாகப் பாயும்போது ஏற்படும் விவரிக்க முடியாத அனுபவம் பி. சுசீலாவின் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏற்படும்.

கடற்கொள்ளையரின் அடிமைச் சந்தையில் விலை பேசப்படும் கதாநாயகியை சவுக்கால் அடித்து ஆடச் சொல்லும் நேரத்தில் அவள் பாடும் பாடல் “ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்”  -  சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர்கள் அமைத்திருக்கும் இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாராலுமே இப்படிப்பாட முடியாது என்று அடித்துச் சொல்லலாம். Aadaamal Aadugiren 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1AUDIO | Jayalalitha (youtube.com)

குறிப்பாக சரண முடிவில் “ஆண்டவனைத் தேடுகிறேன் வா...வா. வா.. வா.. “  என்று முடிக்கும்போது அந்த “வா” என்ற ஒற்றை வார்த்தையில் தான் எத்தனை பாவங்கள். அச்சம், தவிப்பு, துடிப்பு.வேதனை..என்று அனைத்தையுமே வெளிப்படுத்தி நிறுத்தும் லாவகம் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

“நாணமோ இன்னும் நாணமோ” பாடல் காதல் வயப்பட்ட இரு உள்ளங்களின் ஆனந்த டூயட். ஆரம்பத்தில் பல்லவியை டி.எம்.எஸ். பாடி நிறுத்தும்போது .. “ஓ. ஓஹோஹோ..”என்று லேசான ஹம்மிங்கோடு பி. சுசீலா பாடலை ஆரம்பிக்கும் அழகே தனி. Aayirathil Oruvan | Naanamo song (youtube.com)

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தோடு மெல்லிசை மன்னர்களின் இணைவு ஒரு முடிவுக்கு வந்தது.  கிட்டத் தட்ட எண்ணூறு பாடல்களுக்கு இசை அமைத்துக் கேட்பவர் செவிகளில் இன்பத்தேனை அள்ளி வார்த்த இருவரும் தனித்து இயங்கத் தொடங்கினர்.

“கலங்கரை விளக்கம்” – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தனி இசையில் வெளிவந்த முதல் படம்.

இந்தப் படத்தில் பி.சுசீலா தனித்தும் டி.எம்.எஸ். – சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இருவருடனும் இணைந்து பாடிய பாடலால் அனைத்துமே பெருவெற்றி பெற்ற பாடல்கள்.

“என்னை மறந்ததேன் ? தென்றலே சென்று நீ என் நிலை சொல்லிவா”  பாடல் பிரிவுத் துயரால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே வெளிக்கொண்டு வந்த பாடல்.

“பொன்னெழில் பூத்தது புதுவானில் “ கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிய இலக்கிய நயம் நிறைந்த ஒரு அற்புதப் பாடல்.  டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து நிறைவாகப் பாடியிருந்தார் பி.சுசீலா.

“சங்கே முழங்கு” மோகன ராகத்தில் செண்டை மேளம், தவில், சங்கநாதம் முழங்கும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் சங்கநாதக் குரலின் கம்பீரத்திற்குக் சற்றும் குறையாமல் எடுப்பான தொனியில் அழகாகப் பாடிக் கொடுத்திருந்தார் பி.சுசீலா. சங்கே முழங்கு (Color) | Sange Muzhangu | Seerkazhi Govindarajan, P. Susheela,chorus | B4K Music (youtube.com)

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று வீர ரசம் கொப்பளிக்கும் குரலில் கம்பீரக் கர்ஜனை புரிந்தார் பி.சுசீலா.

**

“நீலவானம்” – எம்.எஸ்.வி. அவர்களின் தனியான இசையில் வெளிவந்த முதல் சிவாஜி படம்.

படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று வந்து நிற்கும் பாடல் “ஓஹோஹோ. ஓடும் எண்ணங்களே” – பாடல் தான்.  காட்சி அமைப்பின் சூழலுக்கேற்ப பாடலைக் கொடுப்பதில் தான் என்றும் மன்னர் தான் என்று எம்.எஸ்.வி. நிரூபித்த பாடல் இது. பல்லவி ஹரிகாம்போதி ராகத்தின் அடிப்படையிலும், சரணங்கள்  சங்கராபரண ராகத்தின் அடிப்படையிலும் அமைந்த இந்தப் பாடலை மிகவும் அனுபவித்து சிறப்பாக இசைத்திருப்பார் பி. சுசீலா. Odum ennangale song | ஓடும் எண்ணங்களே பாடல் | Susheela | Msv | Sivaji | Love Song . (youtube.com)

பி.சுசீலாவின் குரலில் தான் எத்தனை உல்லாசம் ..உற்சாகம்..தேனிலவின் இன்பத்தை முழுக்க அனுபவிக்கப் போகும் பெண்ணின் சந்தோஷம் இந்தப் பாடலில் அவர் குரலில் தெறிக்கும்.

இதே படத்தில் ஒரே பாடலில் இன்பம் சோகம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டி பி.சுசீலா பாடியிருக்கும் பாடல் தான் “சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று” பாடல்.  குறிஞ்சி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் பல்லவியும் முதல் சரணமும் இன்ப உணர்வில் மனதை நிறைக்க கடைசிச் சரணம் சோக உணர்வில் திணற வைக்கும். . சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று HD | சிவாஜி கணேசன் | தேவிகா | M.S.விஸ்வநாதன் ஹிட் பாடல்கள் (youtube.com)

**

“கிரகஸ்தி” ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவமாக ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரித்த திரைப்படம் “மோட்டார் சுந்தரம் பிள்ளை”. இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

இந்தப் படத்தில் இளம் ஜோடியான ஜெயலலிதா – ரவிச்சந்திரன் பாடுவதாக அமைந்த “காத்திருந்த கண்களே” பாடலில் பி.பி. ஸ்ரீநிவாஸுடன் இணைந்து பி. சுசீலா பாடிய பாடல் இன்றளவும் மனதை உற்சாகத்தில் மிதக்க வைக்கும் ஒரு காதல் டூயட். 

“துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு”என்ற நடனப்பாடலை எல்.ஆர். ஈஸ்வரி – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகிய இருவருடன் இணைந்து பாடியிருந்தார் பி. சுசீலா.

“கிரகஸ்தி” படத்தின் இசை அமைப்பாளரான ரவி அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த “ஜீவன ஜோட்டு ஜலே” என்ற பாடலை விடவே சிறப்பாக மெல்லிசை மன்னர் அமைத்த பாடல் தான் ராதா ஜெயலக்ஷ்மி பாடிய “மனமே முருகனின் மயில் வாகனம்” என்ற ஹிந்தோள ராகப் பாடல்.

இதே படம் தெலுங்கில் “மஞ்சி குடும்பம்” என்று தயாரான போது இதே பாடலை “மனஸா அந்தால பிருந்தாவனம்” என்று தெலுங்கில் பி.சுசீலா மிகச் சிறப்பான சங்கதிகளுடன் பாடியிருந்தார்.  இரவல் மெட்டுத்தான் என்றாலும் இசை அமைப்பாளர் கோதண்டபாணி அவர்கள் சேர்த்திருந்த அதிகப்படியான சங்கதிகள் பி. சுசீலாவின் தேன்குரலில் கனஜோராக வெளிவந்தன.  Manase Andala Brundavanam Song | Kanchana, Sowcar Janaki | Manchi Kutumbam Movie | Old Telugu Songs (youtube.com)

மெல்லிசை மன்னரின் தனி இசைச் சாம்ராஜ்ஜியம் விரிவடைய அவருக்கு பக்க பலமாக நின்றவர்கள் என்று டி.எம்.எஸ். – பி. சுசீலா இருவரையும் கூறலாம்.

அந்த வகையில் உலக இசைத் திருவிழா என்று கொண்டாடப்பட்ட “அன்பே வா” படத்தில் இருவரும் இணைந்தும் தனித்தும் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

அதிலும் பி. சுசீலாவின் தனிக்குரலில் இடம் பெற்ற காலங்களைக் கடந்தும் அழிவில்லாத காதலுக்கு இணையாக நிலைபெற்ற பாடல் தான் “லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்” பாடல்.  மேஜர் ஸ்கேலில் சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் இசை அமைத்த இந்தப்பாடலில் “காதில் மெல்ல .. காதல் சொல்ல..” என்ற வரிகளை பி.சுசீலாவின் தேன்குரலில் கேட்கும்போது “அனுபவித்துப் பாடுவது” என்ற சொல்லின் அர்த்தம் புரியும்.இந்தப் பாடலில் பாங்கோஸின் தாள லயத்தை அப்படியே சரணங்களின் கடைசி வரிகளில் தபேலாவின் முற்றிலும் மாறுபட்ட நடைக்கு மாற்றி அமைத்து அதகளப் படுத்தி இருப்பார் மெல்லிசை மன்னர்.

“நடபைரவி” ராகத்தின் அடிப்படையில் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்” பாடலில் “ஒரு நாள் இல்லை ஒருநாள் வந்து” என்று பி.சுசீலா ஆரம்பிக்கும் சரணவரிகள் நயம் மெல்லடி எடுத்து வந்ததைப் போல மனதை வசீகரிக்கும்.

“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடலோ முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரம்மாண்டமான பாடல்.  பாடலுக்கான இசையும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் என்று எல்லாவற்றிலுமே ஒரு மிகப்பெரிய “ரிச்னெஸ்” தெரியும்.  அதே ரிச்னெஸ் பாடி இருக்கும் பி.சுசீலா – டி.எம்.எஸ். இருவரின் குரலிலும் தெறிக்கும்.

இப்படி முழுக்க முழுக்க மெல்லிசை மன்னரின் தனிச் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த “அன்பே வா” படத்தின் வெற்றியும் பாடல்களும் இசை அரசி பி. சுசீலாவை இமாலய வெற்றியின் சிகரத்தை நோக்கி விரைய வைத்தன.

(இசையின் பயணம் தொடரும்..)

logo
Andhimazhai
www.andhimazhai.com