பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 28

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“பி. சுசீலா இதுவரை நான்கு முறை ஜனாதிபதி பரிசைப் பெற்றிருக்கிறார்.  அவரை தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்று சொல்கிறார்கள். லதா மங்கேஷ்கரை ஏன் வடநாட்டு சுசீலா என்று சொல்லக்கூடாது? சுசீலா தமிழில் பாடிய ஒரு பாட்டின் மெட்டை லதா கஷ்டப்பட்டுப் பாட முயற்சித்தார். அதை அவரால் சுசீலா போல பாட முடியவில்லை. அவர்கள் பாடிய பாட்டை இவர்களால் பாட முடிந்தது.  இவர் பாடிய பாட்டை அவரால் பாட முடியவில்லை.  இவ்வளவு திறமை உள்ளவர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் என்றைக்காவது ஒருநாள் பாராட்டும் போதுதான் மக்களுக்குத் தெரிகிறது.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்லும் அதே நேரத்தில் நமது தோட்டத்து மலருக்கு மணம் இல்லை என்கிறோம் நாம். இந்த எண்ணம் நமக்குக் கூடாது.  மாற்றிக்கொள்ள வேண்டும். “ - “பாரத ரத்னா” மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது அதில் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் வாயசைத்து முகபாவனை காட்டி நடிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் நடிக்கும்போது அந்தப் பாடலைப் பாடிய பாடகியின் குரலில் தம்மையும் மறந்து ரசித்து அந்த ரசனையையும் காட்சியில் எந்த நடிகரும் வெளிப்படுத்தியது கிடையாது:

எம்.ஜி.ஆர் ஒருவரைத்  தவிர.

ஆம்.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் அப்படி பாடகியின் குரலில் வெளிப்படும் ஒரு சின்ன சங்கதியைத்  தன்னையும் அறியாமல் மெய்மறந்து ரசிக்க அந்த ரசிப்பும் காட்சியாக படமாக்கப் பட்டு நம்மையும் ரசிக்க வைத்தது.

அந்த சங்கதி நமது இசை அரசி பி. சுசீலா அவர்கள் உதிர்த்த சங்கதிதான்.

1966-ஆம் ஆண்டு வெளிவந்த “சந்திரோதயம்” படத்தில் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய “எங்கிருந்தோ ஆசைகள்” என்ற மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த பாடலில் இசை அரசி உதிர்க்கும் சங்கதி ஒன்றை எம்.ஜி.ஆர். மெய்மறந்து கண்மூடி லயித்து ரசிக்கும் காட்சியை இப்போதும் காணலாம். எங்கிருந்தோ ஆசைகள் Engiruntho Aasaigal Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs (youtube.com)

இந்தப் பாடலில் “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் – என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்” என்று முதல் முறை பாடி முடித்துவிட்டு ஒரு சிறு இணைப்பிசைக்குப் பிறகு மீண்டும் பி.சுசீலா பாடும்போது “எண்ணத்திலே ஓ...சைகள்” என்று வரி காட்சியில் வரும்போது தன்னை மறந்து எம்.ஜி.ஆர் அந்தச் சங்கதியை ரசிப்பதை 0.56ஆவது நொடியில் நாமும் கண்டு ரசிக்க முடியும்.  JUST A FRACTION OF SECOND கண்சிமிட்டும் நேரத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சி பி.சுசீலாவின் அபாரமான திறமைக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்லவேண்டும்.

இதே படத்தில் அவர் பாடியிருக்கும் அனைத்துப் பாடல்களும் தேனாகத் தித்தித்தன.

“சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ” என்ற ஹமீர் கல்யாணி ராகப் பாடலில்

“குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ” என்று பி.சுசீலா எடுக்கும் எடுப்பே மனதை தென்றலாக வருடும். இந்தப் பாடல் காட்சியிலும்கூட  பாடல் முடிவடையும் நேரத்தில் “இளம் சூரியின் உந்தன் வடிவானதோ...ஓ” என்று பி. சுசீலாவின் இனிமைக்குரலில் வெளிப்படும் சிறு சங்கதியையும் ரசித்து அந்த ரசனையைத் தனது நடிப்பிலும் வெளிப்படுத்தி இருப்பார் எம்.ஜி.ஆர். ChandrodayamOru pennanadho - சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ Song |4K VIDEO | #tamiloldsongs #mgrsongs (youtube.com)

**

அந்த வருடப் படங்கள் அனைத்திலும் பி.சுசீலாவின் திறமையைப் பற்றி எழுதுவது என்றால் ஒவ்வொரு பாடலுக்குமே ஒரு அத்தியாயம் ஒதுக்கவேண்டும்.  எதைச் சொல்வது எதை விடுவது?

ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று விதம்.

குழந்தை நட்சத்திரங்களுக்காக பாடும்போது கூட தனது சொந்தக் குரலில் தான் பாடுவார்.  மிமிக்கிரி எல்லாம் பண்ணமாட்டார்.  ஆனால் கேட்கும்போது அங்கு காட்சிப்படுத்தப்படும் குழந்தை நட்சத்திரம் தான் நம் கண்களின் முன் தெரியும்.

அதிலும் கூட படத்திற்கு படம் வித்தியாசமாகக் காட்சிக்கேற்றபடி பாடுவார்.

இதற்குச்  சிறப்பான உதாரணங்களாக “எங்க பாப்பா”, “ராமு”, பக்த பிரகலாதா” ஆகிய படங்களில் சுசீலாம்மா பாடிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

பி.ஆர்.பந்துலு அவர்களின் “எங்க பாப்பா”படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் “ஒரு மரத்தில் குடி இருக்கும் பறவை இரண்டு” என்ற கவியரசரின் பாடல் பிறந்ததுமே தாய் தந்தையை இழந்த சின்னக் குழந்தையை அவளது அண்ணன் தாலாட்டுவதாக அமைந்த பாடல். மாஸ்டர் ஸ்ரீதருக்காக பாடி இருந்தார் பி. சுசீலா. TAMIL OLD--Oru marathil kudi irukkum(vMv)--ENGA PAPPA (youtube.com)

“ஆரி ஆரிரரோ.. ஆரி ஆரிரரோ....” என்று மத்யம ஸ்ருதியில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி “ஆரிரோ ஆரிரோ” என்று எடுத்த எடுப்பிலேயே உச்சத்தைத் தொட்டு நிற்கும்போது... அவரது சன்னமான சாரீரம் மனதைத் தொடுவதை உணர முடியும்.

“அருகில் வைத்துத் தூங்கச் செய்யும் தாய் இல்லாதது

ஆசை, துன்பம் வெளியில் சொல்ல வாய் இல்லாதது..”என்று சரண வரிகளில் அவரது குரல் சஞ்சரிக்கும்போது அதில் தான் எத்தனை உருக்கம்.. அப்படியே கேட்பவர் கண்களில் இரண்டு சொட்டுக் கண்ணீர் எட்டிப் பார்க்கும்.

இதற்கு நேர்மாறான ஒரு தாலாட்டுப் பாடல் ஏ.வி.எம். நிறுவனத்தின் “ராமு” படத்தின் “பச்சை மரம் ஒன்று” பாடல்.

இது பெற்றோரையே தாலாட்டித் தூங்கவைக்கும் மகன் பாடும் பாடல்.  மாஸ்டர் ராஜ்குமாருக்காக பாடி இருக்கிறார் பி. சுசீலா. சந்தோஷச் சூழலில் அமைந்த பாடல் அதே உணர்வை மனதிற்கும் கடத்துகிறது.  Ramu - Pachai Maram ondru song (youtube.com)

இதே பாடலை கே.ஆர்.விஜயாவிற்காகப் பாடும் போது அந்தக் குரலில் ஒரு இளம்பெண்ணின் ஆசை, பாசம், காதல் எல்லாவற்றையும் அப்படியே நம் மனதுக்குக் கடத்தும் ரசவாதத்தை அனாயாசமாகச் செய்துவிடுகிறார் பி.சுசீலா.

டி.கே. ராமமூர்த்தியின் தனித்த இசை அமைப்பில் “மறக்க முடியுமா” படத்தில் சின்னப் பெண்குழந்தையின் சோகத்தை உள்ளடக்கி இவர் பாடியிருக்கும் “காகித ஓடம் கடல் அலை மேலே” பாடலை மறக்கத்தான் முடியுமா? காகித ஓடம் கடலலை மீது | Kaagitha Odam Kadalalai Meley | P. Susheela Evergreem Song HD (youtube.com)

“இந்தப் பாட்டை பாடி முடிச்சதும் அப்படியே அழுதுகொண்டே இருந்தேன்.” என்று இந்தப் பாட்டைப் பாடியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் பி.சுசீலா.

மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி அவர்களைப் பற்றியும் மறக்க முடியுமா படப்பாடல் பற்றியும் குறிப்பிடும்போது “அந்தப் படத்துலே “வசந்தகாலம் வருமோ”ன்னு ஒரு முக்கியமான பாட்டு. நம்ம எல்லாருக்கும் பிடிச்ச யேசுதாஸ் என்னோட பாட்டுக்கு ஹம் பண்ணினார். அரிய ராகமான வாகதீஸ்வரியோட ஜன்யத்துலே எங்களைப் பாடவைச்சார்.  படத்துலே இல்லாமப் போனாலும் பாட்டு ஹிட் ஆயிடுத்து. ராமமூர்த்தி சாரோட காம்போசிஷன் மேதமைக்கு இந்தப் பாட்டு ஒரு எடுத்துக்காட்டு “ என்று மனமாரப் புகழ்ந்திருக்கிறாரே தவிர எந்த இடத்திலும் தன்னை முன்னிருத்திக் கொள்ளவே இல்லை அவர். vasantha kalam varumo (youtube.com)

“பக்த பிரகலாதா” – குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி ரோஜா ரமணி பிரகலாதனாக நடிக்க – அவருக்குப் பின்னணி பாடி இருந்தார் பி.சுசீலா.  எஸ். ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையில் பிற்பகுதி முழுவதும் பிரகலாத – மன்னிக்கவும் – பி. சுசீலாவின் ராஜ்ஜியம் தான்.

ஐம்பதுகளில் “செஞ்சு லக்ஷ்மி” படத்தில் பிரகலாதனுக்குப் பாடிய “பால கடலிபை” பாடலுக்கும் இதில் பாடிய பாடல்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

பக்த பிரகலாதா – என்றதுமே கவிஞர் வாலி எழுதிய “நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்” பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வரும்.

“ஓம் நமோ நாராயணாய” என்று எடுக்கும் எடுப்பிலேயே நம் மனதை வசப்படுத்தி அந்த நாராயணனிடம் ஒப்படைத்துவிடுகிறார் பி.சுசீலா.   

“மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை” என்ற வரிகளைப் பாடும்போது அந்தக் குரலில் தான் எத்தனை நயம்!.  பக்திப் பெருக்கில் பிரகலாதனாகவே மாறி நம்மையும் திளைக்கவைக்கிறார் பி.சுசீலா. Bhaktha Pirahalatha - Om Namo Narayana Song (youtube.com)

இதே படத்தில் அஞ்சலிதேவிக்காக எஸ். ஜானகி பாடி இருக்கிறார்.

என்னைப் பொறுத்த வரையில் இந்தப் படப்பாடல்களில் முதலிடம் பி.சுசீலா – எஸ். ஜானகி இருவரும் இருவரும் இணைந்து பாடியிருக்கும் கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியத்தின் “இருளிலும் ஒளிதரும் இறைவா நீ வா” பாடலுக்குத்தான். Bhaktha Pirahalatha - Irulilum Oli tharum Song (youtube.com)

“ஹே. ஜோதிஸ்வரூபா நாராயணா” என்று எடுத்த எடுப்பிலேயே உச்சத்தை எட்டி நிற்கும் நமது இசை அரசியின் குரல் அப்படியே தணிந்து  பல்லவியை எடுக்கும்போது பிரகலாதனின் அழுத்தமான நம்பிக்கையையும், அசைக்க முடியாத திட பக்தியும் அப்படியே அந்தக் குரலில் வெளிப்படும்.

இப்படிக் குழந்தை நட்சத்திரங்களுக்காகப் பாடுவதிலும் எந்த ஜாலவித்தையும் செய்யாமல் தனது இயல்பான குரலிலேயே பாடி – ஆனால் குழ்ந்தைத்தன்மையை நம்மை உணரவைத்திருக்கிறார் என்றால் அதுதான் பி.சுசீலாவின் மகத்தான சாதனை.

‘வஹ்  கௌன் தீ?” என்ற ஹிந்திப் படத்தை அப்படியே தமிழில் “யார் நீ?” என்று பி.எஸ்.வீரப்பா தயாரிக்க மதன் மோகனின் ஹிந்தி மெட்டுக்களை அப்படியே தமிழில் பாடினார் பி.சுசீலா. தமிழில் இசை வேதா.

படத்தின் தீம் சாங்கான “நானே வருவேன்” பாடல் பி.சுசீலாவின் இனிமையான குரலில் அப்படியே மயக்கியது. Yaar Nee | Naane Varuven song (youtube.com)

“பொன்மேனி தழுவாமல்...” பாடலில் விரகத்தையும் ஏக்கத்தையும் துளிக்கூட விரசமே இல்லாமல் தனது குரலில் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார் நமது இசை அரசி. Ponmeni Thazhuvamal | HD Video Song | Kannadasan,P. Suseela,Vedha | Yaar Nee | 7thchannelmusic (youtube.com)

“கௌரி கல்யாணம்” – ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா, ஷீலா ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்ற பக்திப் பாடலை கேட்கும் நம் மனங்களில் பக்தி மணம் கமழும் வண்ணம் மெல்லிசை மன்னரின் இசையில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா. Bhakthi - Thiruppukazhai Paadap Paada - (dips) (youtube.com)

இப்படி இரு பெண்குரல்கள் இணையும் பாடல்களில் தனது தேன்குரலால் ஏற்ற இறக்கங்களை அநாயாசமாகக் கையாண்டு அருமையாக ஸ்கோர் செய்துவிடுவார் பி. சுசீலா. இந்தப் பாடலிலும் அப்படியே.

டி.ஆர்.பாப்பாவின் இசை அமைப்பில் வெளிவந்த “காதல் படுத்தும் பாடு” – நடிகை வாணிஸ்ரீயின் முதல் தமிழ்ப் படம்.

இந்தப் படத்தில் பி.சுசீலா பாடியிருக்கும் “வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா” பாடல் காலத்தை வென்று காற்றலைகளில் நிலைத்திருக்கும் அருமையான பாடல். Velli Nila Vaanathile (youtube.com) ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர் உதிர்த்திருக்கும் சங்கதிகளும் சஞ்சாரங்களும் அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போகும் தன்மை படித்தவை.

 “நீர்க்குமிழி”, “மேஜர் சந்திரகாந்த்” “நாணல்” ஆகிய படங்களில் பாடி இருந்த பாடல்கள் அடைந்த வெற்றியின் காரணமாக தனது பாடல் பதிவுகளில் முதல் பாடலை பி. சுசீலாவின் குரலில் ஒலிப்பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார் மெல்லிசை மாமணி வி. குமார்.

ஒரே படத்தில் பாடிய அனைத்துப் பாடல்களுமே இனிமை என்றாலும் படத்தின் பெயர் சொன்னாலே உடனே பளிச்சென்று செவிகளில் இனிமையாக ரீங்காரமிடும் பாடல் என்றால் அது பெரும்பாலும் பி.சுசீலாவின் பாடலாகத்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட பெருமையை அவருக்குக் கொண்டு வந்து சேர்த்தது திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின்  இசையில் வெளிவந்த “சரஸ்வதி சபதம்”.

பாடல் “கோமாதா எங்கள் குலமாதா”. Gomatha Video Song | Savithri, Jayalalithaa, Sivaji, Gemini Ganesan | Saraswathi Sabatham TamilMovie (youtube.com)

“மாமாவோட மியூசிக்லே பாடறப்போ நான் ரொம்ப ஹோம்லியா உணர்வேன். மறக்க முடியாத எத்தனையோ பாடல்களை அவர் எனக்குக் கொடுத்திருக்கார். அதுலே இந்தக் “கோமாதா” பாட்டும் ஒண்ணு.” – என்று இந்தப் பாடலை தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் பி.சுசீலா.

பிரம்மாண்டமான இசைக் கோர்வைகளும், கவியரசரின் கருத்தாழமிக்க வரிகளும், பி.சுசீலாவின் இனிய குரலும் கலைவாணியே நேரில் வந்து பாடினால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும் பாடல்.

வீணையின் இனிய சுனாதத்திற்கு இணையான குரலோடு நமது இசை அரசி கானசரஸ்வதியாகவே கானம் இசைத்த பாடல் என்று கூட இதைச் சொல்லலாம்.

“கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே”... என்று முடிக்கும் இடத்தில் செய்யும் கமகப் பிரயோகத்தில் தான் எத்தனை நேர்த்தி.

இப்படி எல்லாம் இசை அமைக்க திரை இசைத் திலகத்தால் மட்டுமே முடியும்: அந்த இசையின் தெய்வீகத்தையும் பிரம்மாண்டத்தையும் உள்வாங்கி பாடுவதற்குப் பி.சுசீலா ஒருவரால் மட்டுமே முடியும் என்று மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.

மத்யம ஸ்ருதியில் ஆரம்பிக்கும் பாடலை “உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வா.யே...” என்று உச்சத்தில் ஏற்றி பி.சுசீலா நிறுத்தி முடிக்கும்போது.. மனதில் தோன்றும் பிரமிப்பு நீங்க சற்று நேரம் ஆகத்தான் செய்கிறது.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

இசையரசி - 23

இசையரசி - 24

இசையரசி - 25

இசையரசி - 26

இசையரசி - 27

logo
Andhimazhai
www.andhimazhai.com