பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 29

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“டி.எம்.எஸ். என்றதும் உடனே சட்டென்று ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பெயர் பி. சுசீலா. குயிலும் நைட்டிங்கேல் பறவையும் கூட சுசீலாவின் குரலுக்கு இணையாகாது. குற்றால அருவிக் குளியலை வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்? அமிர்தத்தின் ருசி எப்படியிருந்தது என்று யாரரவது வர்ணித்திருக்கிறார்களா? இதையெல்லாம் வர்ணித்தால், சுசீலாவின் குரலையும் வர்ணிக்கலாம்.  அவரது தீங்குரல் நம்மைக் காலம் கடந்த ஒரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதற்குமேல் அதை விவரிக்க வார்த்தையேது? எத்தனை பாடல்கள், எத்தனை பாடல்கள்.......... ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பாவம், ஒவ்வொரு குழைவு.  இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலும், இதை நீங்கள் படிக்கிற நேரத்திலும் கூட எங்காவது ஒரு மனிதன் டி.எம்.எஸ்.சையும், பி.சுசீலாவையும் கேட்டுக்கொண்டுதானிருப்பான். தவறு.  ஒருவரல்ல, பலர் திரும்பத் திரும்ப, உயிருள்ளவரை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

- “மறக்க முடியாத மனிதர்கள்” தொடரில் எழுத்தாளர் வண்ண நிலவன் -  துக்ளக் 8.10.2003 இதழில்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் – பி.சுசீலா.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் – பி.சுசீலா.

“தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பெண்ணைச் செல்வச் சிறப்போடு நாட்டுக்கே  அரசியாக்கி அந்த சரஸ்வதி அருள்பெற்றவனை இவள் காலடியில் விழ வைக்கிறேன்.” என்று சபதம் செய்துவிட்டுச் செல்லும் திருமகள் அருளுக்குப் பாத்திரமாகும் பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த கே.ஆர்.விஜயாவிற்காகச்   “சரஸ்வதி சபதம்” படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார் பி.சுசீலா.

இரண்டிலும் தான் எத்தனை வித்தியாசங்கள்!

முதலில் பிச்சை எடுத்து வரும்போது பாடும் பாடல் “தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா” பாடல். Thai Thantha Pichaiyile Video Song | Saraswathi Sabatham | Sivaji Ganesan | KV Mahadevan, Kannadasan (youtube.com)

பாடல் முழுவதுமே யாசிக்கும்போது காட்டவேண்டிய பணிவும், கழிவிரக்கமும், தனது நிலையை எண்ணிக் குமுறும் குமுறலும் அந்தக் குரலில் வெகு உருக்கமாக வெளிப்படும்.

“ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா..

இது இறைவனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா...” என்ற இறுதி வரிகளில் அவர் கொடுக்கும் சிறு சங்கதி மனதை உருக்கும்.

“படைத்தவன் கைசலித்து ஓய்ந்தானம்மா”

“இளமையில் கொடுமை இந்த வறுமையம்மா” ஆகிய வரிகளை உச்சத்தில் ஏற்று நிறுத்திப் பாடும்போது அந்தப் பெண்ணின் மனக்குமுறல் அந்தக் குரலில் அழகாக வெளிப்படும்.

இதற்கு முற்றிலும் நேர்மாறாக அவர் பாடியிருக்கும் பாடல் “உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி” பாடல்.   பஹாடி ராகத்தை கையாண்டு திரை இசைத் திலகம் அமைத்திருக்கும் இனிய இசையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அரச கம்பீரமும் அகம்பாவமும் தெறிக்கப் பாடியிருப்பார்.  ஒரே கதாபாத்திரம் தான்.  ஆனால் அதன் இரு வேறு குணாதிசயங்கள் இரண்டு பாடல்களிலும் வெளிப்படும். ஒன்றின் சாயலோ பிரதிபலிப்போ கொஞ்சம் கூட மற்றதில் இருக்காது.  அந்த வகையில் அசத்தி இருக்கிறார் பி.சுசீலா. Uruvathai Kattidum Kannadi Full Video Song l Saraswathi Sabatham l Sivaji Ganesan l Savitri... (youtube.com)

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசை மிகப்பெரிய உச்சத்தை எட்டிய 1967-இல் வெளியான படங்கள் அனைத்திலும் பி.சுசீலாவே பிரதான பாடகியாக இருந்தார்.

அவரது குரலின் பல்வேறு பரிமாணங்களை வெகு அழகாக வெளிக்கொண்டு வந்தார் கே.வி.மகாதேவன் என்றால் அது மிகையில்லை.

“சரஸ்வதி சபதம்” வெளியான அதே காலகட்டத்தில் அதற்கு இணையாக வெளிவந்த படம் “சின்னஞ்சிறு உலகம்”.

முன்னதில் கர்நாடக இசையில் கலக்கியிருந்த கே.வி.மகாதேவன் இதில் கிராமிய இசையிலும் மேற்கத்திய இசையிலும் பின்னி எடுத்திருந்தார்.

இந்தப் படத்தில் ஜெமினி கணேசனுக்கு தங்கையாக கே.ஆர்.விஜயாவும் அவருக்கு இணையாக (மாஜிக்) ராதிகாவும் நடித்திருந்தனர்.

இருவருக்கும் பி.சுசீலாவே பாடி இருந்தார்.  கே.ஆர்.விஜயா – நாகேஷ் இணைந்து பாடும் டூயட் பாடலில் விஜயாவுக்கு எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருந்தார்.

“மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சைப் புள்ளையாட்டம்” என்ற கிராமிய மெட்டில் கே.வி.மகாதேவன் இசையில்  டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து பி.சுசீலா பாடியிருக்கும் பாடலில் கிராமத்துப் பூ விற்கும் பெண்ணின் வெள்ளந்தியான சுபாவம் அப்படியே தெரியும்.  இனிமை கூடுதல் போனஸ். Manasirukkanum 4K TMS, P.சுசீலா பாடிய பாடல் மனசிருக்கணும் மனசிருக்கணும் கலரில் (youtube.com)

பட்டணத்து நாயகியின் அறிமுகப் பாடல் “புதுமைப் பெண்களடி – பூமிக்குக் கண்களடி” – இளம்பெண்ணின் உற்சாகத் துள்ளல் தெறிக்கப் பாடி இருந்தார் பி.சுசீலா. புதுமை பெண்களடி HD Video Song | சின்னச்சிறு உலகம் | ஜெமினி கணேசன் | விஜயா | K.V மஹாதேவன் (youtube.com)

இடையில் வசன நடையில் “பெண்களா இல்லை என்ன செய்யவில்லை பெண்கள்” என்று கேட்கும்போது பெருமிதம் அந்தக் கேள்வியில் தொனிக்கும்.

இந்த வரிகளைப் பாருங்கள்

கவிக்குயில் சரோஜினி – கணக்குக்கு சகுந்தலா

ஐ.நா. தலைமைப் பதவியிலே அமர்ந்தவர் விஜயலட்சுமி”

சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு வசனம்.  இந்த வசனத்திற்குக் கூட ஒரு கவிதையின் அந்தஸ்தைக் கொடுத்து இசையமைத்துப் பாடலாக்க கே.வி.மகாதேவனால் மட்டுமே முடியும் என்றால்  அதை இனிமையில் நனைத்துக் கொடுக்க சுசீலாம்மாவால் மட்டுமே முடியும்.

இந்திய அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட முதல் வருடமே அதனைப் பெற்ற முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைக் கே.வி. மகாதேவன் பெறக் காரணமாக இருந்த படம் “கந்தன் கருணை”.

இந்தப் படத்தில் பி.சுசீலா பாடியிருக்கும் பாடல்களின் இனிமையைச் சொல்லச் சொல்ல இனித்துக்கொண்டே இருக்கும்.  கேட்கக் கேட்க மனதை நிறைத்துக் கொண்டே இருக்கும்.

இந்தப் படத்தில் நான்கு கதாபாத்திரங்களுக்காகப் பாடி இருக்கிறார் அவர்.

முருகப் பெருமானின் அன்னையான பார்வதி தேவிக்காகவும், தெய்வயானைக்காகாவும், வள்ளிக்காகவும் மட்டுமல்ல குறி சொல்ல வரும் குறத்திக்காகவும் கூடப் பாடிக் கொடுத்திருக்கிறார்.

“தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து” என்று தொகையறாவாகத் தொடங்கி “சொல்லச் சொல்ல இனிக்குதடா” என்று குந்தலவராளி ராகத்தில் பி. சுசீலா பாடும் பாடல் இனிமையின் சிகரம்.

“தெய்வீகமான பாட்டு இது.  காலம் போகப்போக எவ்வளவோ அழுத்தங்கள் மனதைப் பாதிக்கின்றன.  அந்த நேரத்தில் சுசீலாம்மாவின் தெய்வீகமான குரலில் இந்தப் பாட்டு மனதுக்கு ரொம்ப ஆறுதலைக் கொடுத்து அமைதிப்படுத்தும் பாட்டு.” என்று இந்தப் பாடலைப் பற்றி மிகவும் மனம் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார் கந்தன் கருணை படத்தின் கதாநாயகர் திரு. சிவகுமார். Solla Cholla Inikkuthada Muruga | சொல்ல சொல்ல இனிக்குதடா | Tamil Movie Song (youtube.com)

“மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு”  - நாதஸ்வர இசையுடன் மங்களகரமாக ஆரம்பிக்கும் பாடலில் எடுத்த எடுப்பிலேயே மலைத்தேனை அப்படியே குழைத்து எடுத்து செவிகளில் சுசீலாம்மாவின் குரல் வார்க்கிறது. Manam Padaithen | மணம்படைத்தேன் உன்னை | P.Susheela Hits | Tamil Movie Song (youtube.com) இசை அமைத்த கே.வி.மகாதேவனுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த பாடல் இது.

“குறிஞ்சியிலே பூ மலர்ந்து”  - பாடலில் “வெள்ளிமலை மான்களெல்லாம் துள்ளுதடி வலையிலே” என்று சரணத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை எட்டும்போது அந்த இனிமையை வருணிக்க வார்த்தைகளே கிடையாது. Kandhan Karunai Tamil Movie Songs | Kurinjiyile Poo Malarnthu Video Song | P Susheela | KV Mahadevan (youtube.com)

தினைப்புலத்தில் இருக்கும் வள்ளிக்குக் குறி சொல்லும் குறத்தியின் வாயிலாக வள்ளி திருமணம் முழுமையுமே ஒரே பாடலில் காட்சிப் படுத்தி விட்டிருக்கிறார் அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன்.

“வெள்ளி மலை பொதிகை மலை 
எங்கள் மலை அம்மே” – என்று தொடங்கும் பாடலில் சரணத்துக்குச் சரணம் மாறிப் பயணிக்கும் இசையை அப்படியே உள்வாங்கிப் பாவபூர்வமாக பி. சுசீலா பாடியிருக்கும் அழகே தனி.

பூவை செங்குட்டுவனின் “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்” பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மியுடன் இணைந்து பாடியிருக்கிறார் பி.சுசீலா.

“திருச் செந்தூரிலே வேலாடும்” என்று அவர் எடுக்கும் எடுப்பிலேயே பாடலுக்கு ஒரு கம்பீரமான அழகு வந்துவிடுகிறது.

ஆகமொத்தத்தில் “கந்தன் கருணை” பி.சுசீலாவின் குரல்வளத்தின் மீது அபரிமிதமாகப் பொழிந்தது.

****

பி.சுசீலாவின் குரலின் இனிமையும் அழகும் அதன் எல்லையைத் தொட்ட படம் “அரசகட்டளை”

எம்.ஜி.ஆருக்கு இரு இணைகளாக சரோஜாதேவி – ஜெயலலிதா நடிக்க இருவரின் பாட்டுக் குரலாக வெகு அழகாகப் பரிமளித்திருந்தார் பி. சுசீலா.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன்” இந்தப் பாடல் ஒரு அழகான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும்.  மனம் கவர்ந்த நாயகனின் பெருமைகளை விவரிக்கும் பாடலில் எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருப்பார் கவிஞர் வாலி.  அதை அழகாக உற்சாகம் பொங்கப் பாடி இருப்பார் பி.சுசீலா.  ennai paada vaithavan song arasakattalai (youtube.com)

பொதுவாக எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் அவருக்கென்று ஒரு தத்துவப் பாடல் டி.எம்.எஸ். குரலில் கட்டாயம் இருக்கும்.  இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் ஒரு தத்துவப் பாடல்.  அதுவும் பி.சுசீலாவின் குரலில்.

“பண்பாடும் பறவையே என்ன தூக்கம் – உன்

பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்” –

என்று பழம் பெருமையைப் பேசிக்கொண்டே பொழுதைக் கழித்துக்கொண்டு அடிமையாக வாழ்வதில் இன்பம் கண்டுகொண்டு தூங்கிக் கழிக்கும் மனிதரைப் பல்லவியிலேயே சாடுகிறார் கவிஞர் வாலி. பண்பாடும் பறவையே என்ன தூக்கம் | Pan Paadum Paravaiye Song | MGR Saroja Devi | Arasa Kattalai Song HD (youtube.com)

உரிமையைக் கிளர்ந்தெழ வைக்கும் இந்தப் பாடலை வீரம் கொப்பளிக்கும் குரலில் அற்புதமாகப் பாடி இருக்கிறார் பி.சுசீலா.

“ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு”  என்று தேசத்தின் பெருமையைப் பெருமிதம் பொங்கும் குரலில் பாடிக்கொண்டே வருபவர் – அதன் தற்போதையை நிலையை பிரதிபலிக்கும் சரணத்தின் கடைசி வரியான...

“தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு” – என்ற வரிகளில் கழிவிரக்கமும் சோகமும் வெளிப்படப்பாடும் அழகு..  ஒரு பாடலின் வார்த்தைகளுக்கு ஏற்றபடி இசை அமைப்பாளர் கொடுக்கும் இசையை அந்தப் வார்த்தைகள் கெடாதபடி எப்படிப் பாடவேண்டும் என்பதை உணர்ந்து பி.சுசீலா பாடி இருக்கும் அழகு.  இசையை ஒரு தவமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி எல்லாம் பாட முடியும்.

தொடர்ந்து

“பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் - அவர்

பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும் - அவன்

பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்” – என்று ஆவேசம் கொந்தளிக்கும் குரலில் பாடிக்கொண்டே வருபவர்

“குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பிறகும் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்து வா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே விழித்து எழுந்து வா
எழுந்து வா……எழுந்து வா…”
என்று வீர உணர்ச்சியைத் தூண்டும் போது.. உண்மையிலேயே சோர்ந்து கிடக்கும் நெஞ்சம் கூடச்  சோர்வை உதறிவிட்டு புத்துணர்ச்சியுடன் சவால்களைச் சந்திக்க தயாராகுமே!

அரசகட்டளை படம் தயாரிப்பில் இருந்த அதே நேரம் இன்னொரு எம்.ஜி.ஆர். படமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் தயாரிப்பில் இருந்தது.  அந்தப் படத்திற்காகக் கவிஞர் வாலி ஒரு டூயட் பாடலை எழுதி எம்.எஸ்.வியிடம்  கொடுத்தார்.  அதனை வாங்கிப் படித்த எம்.எஸ்.வி. “இது ரொம்பக்  கவித்துவமான பாட்டு. இந்தப் படத்துக்கு இது சரியாவராது. இதை ரொம்பக் கிலாசிக்கலாப் போட்டத்தான் நிக்கும். இதை மாமா கிட்டே கொண்டு கொடு. அவர் மியூசிக் தான் இந்தப் பாட்டுக்கு எடுபடும்” என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.

மதியம் “அரசகட்டளை” படப்பிடிப்பில் கே.வி.மகாதேவனிடம் அந்தப் பாட்டைக் கொடுத்தார் வாலி.

அருமையாக “கல்யாணி” ராகத்தில் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்து அதனை டி.எம்.எஸ். அவர்களுடன் பி.சுசீலாவைப் பாடவைத்து மிகப் பெரிய வெற்றிப் பாடலாக அதனை மாற்றிவிட்டார் கே.வி.மகாதேவன்.

அந்தப் பாடல் தான் “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” – பாடல். (130) Arasa Kattalai | Putham Puthiya song - YouTube

அருமையாக உள்வாங்கிக்கொண்டு அற்புதமாகப்  பாடிக் கொடுத்த பி.சுசீலாவிற்கு “கல்யாணி”ராகம் என்ற அளவிலேயே சட்டென்று நினைவில் வரும் அளவிற்கு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொடுக்க அந்த ராகதேவதை நினைத்த காரணத்தாலோ என்னவோ மாபெரும் பாடல் ஒன்று அவர் குரலின் இனிமையில் நனைவதற்காகக் காத்திருந்தது...

அந்த நல்ல நாளும் வந்தது..

“மன்னவன் வந்தானடி” பாடலும் நமக்கு இசை விருந்தாகக் கிடைத்தது.

(இசையின் பயணம் தொடரும்)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

இசையரசி - 23

இசையரசி - 24

இசையரசி - 25

இசையரசி - 26

இசையரசி - 27

இசையரசி - 28

logo
Andhimazhai
www.andhimazhai.com