பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 30

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“பி. சுசீலாவைப் போல் தமிழை முறையாக உச்சரித்துப் பாடும் பாடகிகள் இல்லை. சுசீலா அம்மையாரை நான் பக்கத்தில் நின்று பார்ப்பேன் என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. “பஞ்சமி” என்றொரு படம். இசை: இளையராஜா. பாட்டு : நான். எனது பாடலைப் பாட வந்தார் பி. சுசீலா. அவருக்கு என் தமிழ் உறுத்தக் கூடாது என்பதற்காக பல்லவியை ஒற்று எழுத்து வராமல் எழுதினேன். “உதய கானமே. நல்ல மேகமே. மொழியின் கதவு திறந்தது. விழியில் விடியல் புலர்ந்தது. அமுதம் பொழிந்து விளைந்த தமிழில் புலமை பிறந்தது.” என்று அந்தப் பல்லவி அமைந்தது. இதில் எந்த இடத்திலும் “க், ச், த், ட், ன்” வராது. சுசீலா அவர்களின் தொண்டையைக் காயப் படுத்தக் கூடாது என்பதற்காக அப்படி எழுதினேன்.” - கவிஞர் வைரமுத்து. (“தேவி” இதழுக்கு அளித்த பேட்டியில்)

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

பெரிய புராணத்தை அடிப்படையாகக் கொண்டு நாயன்மார்கள் சிலரின் வரலாற்றைத் “திருவருட்செல்வர்” என்ற படமாகத் தயாரித்து இயக்கினார் ஏ.பி. நாகராஜன்.

இந்தப் படத்தில் பெண் குரலுக்கான பாடல்களில் இரண்டைப் பாடியிருந்தார்  பி.சுசீலா.

அதிலும் பி. சுசீலாவின் “மாஸ்டர்பீஸ்” பாடல் என்றால் உடனே நினைவுக்கு வரும் பாடல் “மன்னவன் வந்தானடி”.

ஆரம்பத்தில் ராகமாலிகையாக ஒரு தொகையறா. 

“நின் கொடிவாழ்க படை வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க” என்று  கோரஸ் பாடகியர் முடித்ததும் வீணையில் ஒரு சிறிய பிட் .. அது  முடிந்ததும்...

ஒரு அதிர்வான இசைக்குப் பிறகு “மன்னவன் வந்தானடி” என்று எடுத்த எடுப்பிலேயே கம்பீரமும் இனிமையும் நளினமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி ஆரம்பிக்கும்போதே மனதை கவர்ந்துவிடுகிறார் நமது இசை அரசி.

பி. சுசீலா தனது சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டிப் பாடிய பாடல் அல்லவா இது!

நாட்டிய ஜதிகளும் பி. சுசீலாவின் குரலும் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்க “கல்யாணி” ராக தேவதைக்கு கவியரசரின் கவிதாஞ்சலி , கானதேவதையின் குரலில் ஒரு கானாஞ்சலி, நாட்டியப் பேரொளி பத்மினியின் நாட்டியாஞ்சலி – ஆக மூன்று அஞ்சலிகளும் திரை இசைத் திலகத்தின் மகத்தான இசை என்ற ஒற்றைப் புள்ளியில் இணையும்போது காலத்தை வென்று நிலைத்திருக்கும் காவியப் பாடலாக அமையாமல் போகுமா என்ன? Mannavan Vanthanadi Audio Song | Thiruvarutchelvar | Padmini Hits | P Susheela Hits (youtube.com)

“தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நாயகி பாவனை காட்டவரும் ..” மன்னவன் வந்தானடி என்று ஒவ்வொரு சந்தமாக பி.சுசீலாவின் நயம் மெல்லடி எடுத்து வைப்பதுபோல ஆரம்பித்து அருவியின் ஆர்ப்பரிப்பாக

பி. எஸ். கோபால கிருஷ்ணனின் ஜதிகளைப் பக்கவாத்தியமாகக் கொண்டு மெல்ல மெல்ல மேலேறி வரும் அழகில் பிரமிப்பதா?

“தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்

தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்”

“சித்தத்தால் ஒரு காதற் சின்னம்

தத்தித் தாவிய பாவை முன்னம் – என் மன்னவன்...  என்று லேசாக இழுத்து அவர் கொடுக்கும் முத்தாய்ப்பை மெச்சுவதா?

“விரைவினில் நீ, நி

மணமலர் தா, த

திருமார் பா, ப

தாமத மா, ம

மயிலெனை கா, க”

ஸ்வராட்சரங்களாக அமைக்கப்பட்ட வரிகளை நெடில், குறில் தனியாகத் தெரியும்படி பிரித்துப் பாடி, “நி, த, ப, ம, க” என்று ஸ்வரங்களாகத் துரித காலப் பிரயோகத்தில் பாடியிருக்கும் அற்புதத்தில் சிலிர்ப்பதா?

இறுதியில் ஜதிகளுடன் ஒலிக்கும் கனத்த ஆண் சாரீரத்திற்கு ஈடுகொடுத்து

“ஆளப் புவியேழும் கடல் ஏழும் நடமாடும்படி வாரா..ஆ.ய். அருள் தாரா..ய்” என்று சங்கதிகளோடு “அனுதினம் உனை வழிபடும் மடமயில் இனியொரு தலைவனை பணிவதில்லை.” என்று அழுத்தமாகப் பாடி.. “மன்னவன் ..” என்ற வார்த்தையில் சரேலென்று உச்சத்தை எட்டி சட்டென்று “வந்தானடி” என்று சமத்திற்கு இறங்கும் லாவகத்தில் லயிப்பதா?

 பிரமிக்க வைக்கிறார் பி. சுசீலா.

அவர் காட்டியிருக்கும் சிரத்தை,கொடுத்திருக்கும் உழைப்பு எல்லாமே அசர வைக்கிறது.  அவரைத் தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இந்தப் பாட்டிற்கு இப்படி ஒரு மாபெரும் அந்தஸ்தைக் கொடுத்திருக்க முடியாது.

இந்தப் பாடலைப் பாடிய அனுபவம் எப்படி இருந்திருக்கும்?

“ரெக்கார்டிங் அன்னிக்கு அரை நாள் நான் காத்துக்கொண்டு இருக்க வேண்டியதாகி விட்டது.  டான்ஸ் பாட்டுங்கறதால நெறைய வாத்தியங்கள், அவற்றுக்கான ரிகர்சல், ஜதிகள் அமைப்பு என்று மாமாவுக்கு (கே.வி.எம்.) நெறைய வேலை.  ரெக்கார்டிங் முடியறதுக்கு நாலு மணி நேரமாகி விட்டது.

பாடி முடிச்சதும் மாமா என் கிட்டே வந்து “சுசீம்மா, ரொம்ப நல்லாப் பாடினே: நல்லா இருந்தது.” என்று பாராட்டினார் என்றார் பி. சுசீலா.

இதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ பாடல்கள் இந்தக் கல்யாணி ராகத்தில் திரை இசையில் வந்திருக்கின்றன.  ஆனாலும் ராகத்தின் பெயர் சொன்னாலே சட்டென்று முதலிடத்தை ஆக்கிரமிக்கும் பாடல் பி.சுசீலா பாடிய இந்தப் பாடல் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக சிந்துபைரவி ராகத்தில்  நடிகையர்  திலகம் சாவித்திரிக்காக “ஆதிசிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே” பாடலைப் பாடி இருக்கிறார் பி. சுசீலா. சாந்தமும் தன்னடக்கமும், பக்தியின் பணிவும் வெளிப்படும்படி இப்படி எல்லாம் பாட இவரால் எப்படி முடிகிறது என்று அசர வைக்கிறார் பி. சுசீலா. Thiruvarutselvar | Aadhi Sivan song (youtube.com)

**

நட்சத்திரத் தம்பதிகளான ஏ.வி.எம். ராஜன் – புஷ்பலதாவின் பெருத்த வரவேற்பைப் பெற்ற மேடை நாடகங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வர ஆரம்பித்தன.

அவற்றில் முதலில் படமாக்கப் பட்ட நாடகம் “கற்பூரம்”. இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஏ.வி.எம். ராஜனுக்கு 1967-ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கற்பூரம் படத்தில் ஏ.வி.எம். ராஜன்
கற்பூரம் படத்தில் ஏ.வி.எம். ராஜன்

வி.டி. அரசு அவர்களின் தயாரிப்பில் இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதனின் பாசறையில் ஒரு இசையமைப்பாளராக உருவான டி.பி.ராமச்சந்திரனின் இசையில் மூன்று பாடல்களைப் பாடியிருந்தார் பி. சுசீலா.  முத்தான அந்த மூன்று பாடல்களும் அவசியம் குறிப்பிடப்படவேண்டியவை.

முதல் பாடல் படத்தின் டைட்டில் சாங்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய  “வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி” என்ற பாடலை வெகு அருமையாக இசைக்கோர்வைகள் அமைத்து சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – பி.சுசீலா ஆகிய இருவரையும் பாடவைத்தார் டி.பி.ராமச்சந்திரன். Vanangidum Kaikalil (youtube.com)

ஆரம்ப வரிகளை இருவரும் இணைந்தும்  பிறகு ஆளுக்கு ஒரு சரணமாக மாறி மாறியும் பாடுவார்கள்.

சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரல் பி.சுசீலாவின் குரலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சற்றே உயர்த்த ஸ்ருதியில் இனிமை சேர்க்க  ..அந்த இனிமைக்கு மேலும் இனிமை சேர்க்கும் வகையில் பி. சுசீலாவின் குரலோ கம்பீரமாக உயர்ந்து செவிகளில் இனிமை சற்றுக் கூடுதலாக இசை மழை பொழியும் பாடல் இது.

“வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால் பால் போல் தெரியுதடி”

“மாமயில் விரித்த தோகையின் கண்கள் வேலனைத் தேடுதடி.” என்ற சரண வரிகளில் நமது இசை அரசியின் குரல் இழையும் அழகு அப்படியே அந்தத் தேடலை நமது கண்களுக்கும் கடத்தும்.

“முதல் முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி” என்று சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சமத்தில் பாடி நிறுத்த..

“அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன் திருமுகம் தோன்றுதடி” என்று பி. சுசீலாவின் குரல் உயர்ந்து கணீர் என்று கேட்கும்போது அதில் தொனிக்கும் இனிமை தேனையும் வென்று விடுகிறதே!

கவிஞர் மாயவநாதன் அவர்களின் அருமையான வரிகளில் தாராபுரம் சுந்தரராஜன் – பி. சுசீலா இருவரும் இணைந்து பாடியிருக்கும் பாடல் “அழகு ரதம் பொறக்கும் – அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்” என்ற பாடல். அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும் தமிழை போல இனிக்கும் தகப்பன் போல சிரிக்கும்-கற்பூரம் (youtube.com)

முதல் இரண்டு வரிகளை தாராபுரம் சுந்தரராஜன் பாடி முடித்ததும்..

“தமிழைப் போல இனிக்கும்...” என்று பி. சுசீலா ஆரம்பிக்கும்போது.. தமிழ் மொழியின் இனிமையே அந்தக் குரலில் உருவெடுத்து வந்ததை நம்மால் உணரமுடியும்.

இப்படி படத்துக்குப் படம் புதிய இசை அமைப்பாளர்களின் இசையிலும் அருமையாகப் பாடி வெற்றிப்பாடல்களைக் கொடுத்து வந்தார் பி.சுசீலா.

அந்த வகையில் 1967-ஆம் ஆண்டு புத்தாண்டு வெளியீடாக வந்த “மகராசி” படத்தின் மூலம் இரட்டை இசை அமைப்பாளர்களாக திரை உலகில் நுழைந்தார்கள் “சங்கர்-கணேஷ்”.

கவிஞர் கண்ணதாசன் அவர்களை சின்னப்பா தேவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்திவைத்தார்.

அப்போது இளைய தலைமுறை நடிகர்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதற்காக “தண்டாயுதபாணி பிலிம்ஸ்” என்று புதிய பெயரில் கம்பெனி ஆரம்பித்து படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த தேவர் சங்கர்- கணேஷ் இரட்டையர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களை இசை அமைப்பாளர்களாக கால் பதிக்க வைத்தார்.

ரவிச்சந்திரன் – ஜெயலலிதா இணைந்து நடித்த “மகராசி” படத்தில் பி.சுசீலா தனித்தும் , டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்தும் பாடிய இரு பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.

முதல் முதலாக இசை அமைக்கும் இரட்டையர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பாசிட்டிவான வார்த்தைகளை கோர்த்து கவியரசர் புனைந்திருந்த வார்த்தைகளை டி.எம்.எஸ். “வாழ்வில் புது மணம் மணம்

வந்ததம்மா சுகம் சுகம் ” என்று தொடங்க “நினைத்ததெல்லாம் வரும் வரும் : கிடைப்பதெல்லாம் வளரும் பெருகும் உயரும்” என்று ஆசி கூறுவது போல பி.சுசீலா பாடிய வார்த்தைகள் மங்கல வாக்காக அமைந்து அவர்களை உயர்த்தி விட்டன என்பதை குறிப்பிடத்தான் வேண்டும், Vaazhvil puthu manam manam vanthathamma sugam sugam | MAGARASI (1967) | Old Tamil Song | TCP - YouTube

ஒரு இசை அமைப்பாளராக சங்கர் கணேஷ் முதல் படத்திலே முத்திரை பதித்துவிடத்தான் செய்தார்கள். ஆனால் “மகராசி” ஏனோ மக்களின் மனத்தைக் கவரத் தவறிவிட்டாள். 

அதற்கு காரணம் அதே நாளில் வெளியான “பட்டணத்தில் பூதம்” படம்.

ஆர். கோவர்த்தனம் அவர்களின் இனிய இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே தெறி ஹிட்.

“சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.” – ஆபேரி ராகத்தில் அருமையான சிருங்கார பக்தி வகையைச் சேர்ந்த பாடல்.

“நான் யார் யார் என்று சொல்லவில்லை” – சரணங்களில் உச்சத்தில் எடுப்பாக அமைந்து அப்படியே சமத்தில் வந்து சீராகப் பயணித்துப் பி. சுசீலாவின் திறமைக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்த பாடல்.

ஏளனம், வேதனை, வெறுப்பு, ரௌத்திரம், அலட்சியம், இத்தனை உணர்வுகளையும் பாடும் குரலில் அதுவும் ‘ஆஹஅஹா”, “ஓஹ்ஹோஹோஹ்ஹோ” என்ற ஒற்றை வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்திலேயே துல்லியமாக உணர வைக்க முடியுமா.?

முடியும்.. பாடுபவர் பி. சுசீலாவாக இருந்தால்..

அதை நிரூபித்த பாடல்தான் “கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?” பாடல்.

சந்தேகத்தில் காதலி – அவளது சந்தேகத்தைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காதலன்.  இந்தச் சூழ்நிலையில் அமைந்த பாடல் இது. Pattanathil Bhootham | Kannil Kandathellam song (youtube.com)

இந்தப் பாடலில் மேலே சொன்ன அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி காட்சியில் நடிக்கும் கே.ஆர். விஜயாவின் பணியை சுலபமாக்கி இருப்பார் பி. சுசீலா.

**

1967 – தீபாவளித் திருநாள் . நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிச்சியைக் கொண்டுவந்த நாளாக அமைந்துவிட்டது.

ஆம்.  நடிகர் திலகத்தின் “இரு மலர்கள்” “ஊட்டி வரை உறவு” ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் வெளிவந்தன.

“இரு மலர்கள்” முக்கோணக் காதல் கதையை மையமாகக் கொண்டு ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த படம்.

நடிகர் திலகத்திற்கு இணையாக பத்மினி, கே.ஆர். விஜயா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.  இருவருக்குமே பி. சுசீலா பாடி இருந்தார். (இந்தப் படத்தில் தான் இளைய தளபதி விஜய் அவர்களின் தாயான திருமதி. ஷோபா சந்திரசேகர் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் என்பது கூடுதல் தகவல்.)

“மன்னிக்க வேண்டுகிறேன்” – பாடலில் காதலின் இனிமையை இலக்கிய நயத்துடன் வாலி வெளிப்படுத்த அந்த வார்த்தைகளுக்கு தனது குரலால் மேலும் மெருகும் கண்ணியமும் ஏற்படுத்தி இருந்தார் பி.சுசீலா.

“வெள்ளி மணி ஓசையிலே”  -  நாயகனை மனதில் நினைத்து பாடும் பெண்ணின் நயமான மன உணர்வுகளை அருமையாக பிரதிபலித்திருந்தார் பி.சுசீலா.

காற்றில் உதிர்ந்த வண்ண மலரின் வேதனையை அப்படியே குரலில் பி.சுசீலா பிரதிபலித்த பாடல் “கடவுள் தந்த இருமலர்கள்” பாடல்.

“அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு” -  கணவனின் அன்பு திசை மாறுவதாக நினைத்த பெண்ணின் உணர்வை சோகம் பொங்கும் குரலில் வெகு அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார் பி.சுசீலா.

ஒரு பாடலைப் பாடுவதற்காக இசை அமைப்பாளர் அமைத்துக் கொடுத்த மெட்டை உள்வாங்கிக்கொண்டு அதனை பல முறை ஒத்திகை பார்த்து வார்த்தை உச்சரிப்பு முதல் அனைத்தையும் நன்றாக பாடிப் பாடிப் பார்த்து .. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தன்னைத் தயார் படுத்திக் கொண்ட பாடகி   ரெக்கார்டிங் அறைக்குள் பாடுவதற்கு தயாராக ஒலிவாங்கியின் முன்பாக நின்று விட்ட நேரத்தில் வெளியே சென்றிருந்த இசை அமைப்பாளர் உள்ளே வந்து “ரெக்கார்டிங் கான்சல்.  இந்தப் பாட்டுக்கான டியூனையே டோட்டலா மாற்றப்போகிறேன். இங்கே வாம்மா. இப்பவே கத்துகிட்டு ப்ராக்டிஸ் பண்ணி பாடணும்” என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு திரில்லிங்கான அனுபவத்தை பி. சுசீலா சந்திக்க நேர்ந்தது.

பரபரப்பான அந்த அனுபவத்தை அறிந்து கொள்ள  ஒரு வாரம் காத்திருங்களேன் ப்ளீஸ்.

(இசையின் பயணம் தொடரும்..)

logo
Andhimazhai
www.andhimazhai.com