பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 31

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“வசந்தம் வந்தால் தான் குயில் பாடும்.

நீங்கள் பாடினால் “வசந்தமே வரும்.” தனது “ரமணமாலை” குறுந்தகட்டை பி.சுசீலாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தபோது இசை ஞானி இளையராஜா எழுதிக் கொடுத்த வாசகம்.

இளையராஜா
இளையராஜா

வாஹினி படப்பிடிப்பு நிலையத்தில் இயக்குநர் ஸ்ரீதரின் “ஊட்டி வரை உறவு” படத்திற்கான பாடலுக்காக மெல்லிசை மன்னர் எக்கச்சக்கமான மெட்டுக்களைப் போட்டுக் காட்டி ஸ்ரீதரின் யூனிட்டில் இருந்த அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு ஓகே செய்த பாடலைப் பி.சுசீலாவை அழைத்துப் பலமுறை கற்றுக் கொடுத்தார் மெல்லிசை மன்னர்.

திரும்பத் திரும்பப் பாடிப்பாடி அந்த மெட்டும் இசையும் அழுத்தமாகப் பி.சுசீலாவின் மனதில் பதிந்து விட்டது.

ஒருவழியாக அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட ரெக்கார்டிங்குக்காக அனைவரும் தயார்.

எப்போதுமே  மெல்லிசை மன்னருக்கு பாடல் பதிவாகும் நேரத்தில் படத்தில் சம்பந்தப்பட்ட  தயாரிப்பாளர், இயக்குநர், உதவி இயக்குநர்,பாடலாசிரியர் என்று எல்லாரும் இருக்கவேண்டும்.  இவர்களில் யாராவது ஒருவர் இல்லாவிட்டால்கூட  அவர் ஒலிப்பதிவை நிறுத்திவிடுவார்.

அன்றும் அப்படித்தான்.

ஹார்மோனியத்தில் எம்.எஸ்.வி.யின்  கை பதிய அதே நேரம் கண்கள் அனைவரும் இருக்கிறார்களா என்று ஒலிப்பதிவுக் கூடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. 

எல்லாரும் இருந்தார்கள்..  இயக்குநர் ஸ்ரீதரைத் தவிர.

“எங்கேய்யா உங்க டைரக்டர்?” என்று சித்ராலயா கோபுவிடம் கேட்டார் எம்.எஸ்.வி.

“அவர் வெளியே மரத்தடியிலே நின்னுட்டு இருக்கார்” – என்ற பதில் வந்தது.

“ரெக்கார்டிங் சமயத்துலே இங்க இல்லாம அங்கே என்ன பண்ணிட்டு இருக்கார்?”

“தெரியலே..  நாங்க போய்க் கூப்பிட்டுப் பார்த்தோம்.  எல்லாம் நீங்களே பண்ணிக்குங்க. நான் வரலேன்னு சொல்லிட்டார். ஏதோ டென்ஷன்ல இருக்கார்.”

இதைக் கேட்டதும் ஒலிப்பதிவை அப்படியே நிறுத்திவிட்டு வெளியே வேகமாகச் சென்றார் எம்.எஸ்.வி.

மரத்தடியில் கறுத்த முகத்துடன் ஒரு கையை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு மறுகையை முகத்துக்கு நீட்டிக்கொண்டு விரல் நகங்களை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

“என்ன ஸ்ரீகளே? ரெக்கார்டிங்குக்கு வராம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி அவரை நெருங்கினார் எம்.எஸ்.வி.

“இல்லே விசு.. ம்ம்.. ஒண்ணும் பிடிக்கலே” என்று அசுவாரசியமாக பதில் வந்தது ஸ்ரீதரிடமிருந்து.

“என்னய்யா இது உள்ளே அத்தனை களேபரம் நடந்துகிட்டு இருக்கு. நீ என்னடான்னா  பிடிக்கலேங்கறே?” என்று அதிர்ந்தார் எம்.எஸ்.வி.

“அன்னிக்கு நீ டியூன் போட்டப்பவே எனக்கு அது பிடிக்கலே. ஆனால் எல்லாரும் சேர்ந்து ஆஹா. ஓஹோ..சூப்பர் அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. உனக்கென்ன? நீ சளைக்காம ஐம்பது அறுபது டியூன்கள் கூட போடுவே . ஆனால் எனக்கு பிடிக்கணுமில்லே?” என்றார் ஸ்ரீதர்.

“இது என்னடா வம்பா இருக்கு.  அன்னிக்கு ஒகே பண்ணறப்ப நீயும் கூடத்தானே இருந்தே?” என்று கேட்டார் எம்.எஸ்.வி.

“ஆனா நான் ஒகே சொன்னேனா?” என்று சீறினார் ஸ்ரீதர்.

“நீ எதுவும் சொல்லாம இருந்தே. அதான் உனக்கும் பிடிச்சிருக்குன்னு நான் நினைச்சிட்டேன்.” இது எம்.எஸ்.வி.

“இதோ பார் விசு. படத்தோட டைரக்டர் நான். எனக்குன்னு தாட்ஸ் இருக்கு. ஒரு  சீனை எப்படி எடுக்கணும். அதுக்கு பாட்டு எப்படி இருக்கணும்னு எனக்குத்தானே தெரியும்? என்னை ஒரு வார்த்தை கேட்காம எல்லாரும் முடிவெடுத்தா எப்படி? அதான் என்னவோ

செய்ஞ்சிக்கங்கன்னு நான் ஒதுங்கிட்டேன்” – என்று பொரிந்து தள்ளினார் ஸ்ரீதர்.

“சரி. இப்ப விஷயத்துக்கு வருவோம்.  நீ என்ன எதிர்பார்க்குறே? வெளிப்படையாச் சொல்லு” என்று கேட்டார் எம்.எஸ்.வி.

“வந்து .... இந்த டியூன் இழுத்து இழுத்துப் பாடுற மாதிரி இருக்கு.  என்னோட ஹீரோயின் ஏமாத்திட்டு வந்து செட்டில் ஆன சந்தோஷத்துலே உற்சாகமா ஆடிப் பாடற மாதிரி இதோ இப்படி.. “ என்று அந்த மரத்தடியிலேயே படத்தில் கே.ஆர்.விஜயாவை எப்படி எல்லாம் ஆட வைக்கவேண்டும் என்று கற்பனை செய்திருந்தாரோ அப்படி எல்லாம் ஆடியே காட்டிவிட்டார் ஸ்ரீதர்.  குட்டிக்கரணம் ஒன்றுதான் போடவில்லை!

“இப்ப என்ன. ஒரு பாஸ்ட் டெம்ப்போ இருக்கணும். அதோட வெஸ்டர்ன் டச் வேணும். அவ்வளவுதானே. நீ வா உள்ளே.” என்று ஸ்ரீதரை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவர் “ரெக்கார்டிங் கான்சல். டைரக்டருக்கு இந்த பாட்டு செட் ஆகலே. அதனாலே வேற புது டியூன் போட்டு அதுக்குத் தான் பாட்டு.” என்றவர் அடுத்த அரை மணி நேரத்தில் புதிதாக அமைத்துக்கொடுத்த மெட்டு ஸ்ரீதரின் முகத்தை மலர வைத்தது.

அதன் பிறகு “இங்கே வாம்மா.  முதல்லே ஆ.ஹ.ஹஹ்ஹோ.. ஆஹ்ஹஹா. ஓஹ்ஹஹோ. ஹோ...” என்று ஹம்மிங்கிலிருந்து ஆரம்பித்து சுசீலாம்மாவிற்கு அந்தப் புதிய மெட்டை கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் எம்.எஸ்.வி.

ஏற்கெனவே பாடிப் பாடி மனதுக்குள் பதிந்து போன மெட்டைப்  பிரயாசைப்பட்டு நீக்கிவிட்டுப்  புது மெட்டைக் கற்றுக்கொண்டு உச்சரிப்புப் பிசகாமல் பாடுவது என்றால் லேசா என்ன?

ஆகக்கூடி மதியம் ஒன்று ஒன்றரைக்கு முடியவேண்டிய ஒலிப்பதிவு நீண்டு கொண்டே போக அன்று பி.சுசீலா வீட்டுக்குத் திரும்பும்போது மணி நள்ளிரவு இரண்டு மணியை தாண்டிவிட்டது.

பட்ட சிரமம் எல்லாம் வீண் போகவில்லை. பாடல்  சூப்பர் டூப்பர் ஹிட். 

அந்தப் பாடல்தான் “தேடினேன் வந்தது”.

ஊட்டி வரை உறவு – படத்தில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா
ஊட்டி வரை உறவு – படத்தில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

பாடலே சுசீலாம்மாவின் ஹம்மிங்கோடு தான் ஆரம்பம்.  ஏற்ற இறக்கங்களோடு அந்தக் குரல் செய்யும் இசைப் பயணம் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கொள்ளை கொள்கிறது.

Thedinen Vanthathu From Movie Ooty Varai Uravu (youtube.com)

“தேடினேன் வந்தது...  நாடினேன் தந்தது...  ஒவ்வொரு அடி முடிவிலும் கிட்டாரின் மீட்டலும் பாங்கோஸ் + மரக்காஸ் வெளிப்படுத்தும் தாள லயமும் மனதை அள்ளுகின்றன.

“வாசலில் நின்றது.... வாழவா என்ற......து..”என்று பி. சுசீலாவின் குரல் உச்சத்தை எட்டும் நேரத்தில் தொடரும் வயலின்களின் மீட்டலோடு ....சேர்ந்து இனிமையில் இழைந்து நிற்கும் லாவகம்..

அடுத்து ஆபேரி ராகத்தில் அமைந்த “பூமாலையில் ஓர் மல்லிகை” மென்மையான ஒரு டூயட் பாடல்.  Poo Maalaiyil //tamil 5.1 HD video song (youtube.com)

சரணங்களில் “சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்” என்று டி.எம்.எஸ். பாடி முடித்ததும் ஒரு ஹம்மிங் கொடுப்பார் பாருங்கள்... ஒரு வரைபடம் போல ஏற்ற இறக்கங்களுடன் அந்த ஹம்மிங் பயணிக்கும் விதம்..  செவிகளின் வழியாக செந்தேனை மனதுக்குள் அப்படியே இறக்கி விடும் ஹம்மிங் அது.

“அங்கே மாலை மயக்கம் யாருக்காக ..” பாடலில் “அங்கே...” என்ற வார்த்தையை ஒவ்வொரு முறை நீட்டி முடிக்கும் விதங்களில் தான் எத்தனை வித்தியாசங்கள்..

மனதில் உற்சாகம் பொங்கச் செய்யும் பாடல் “ஹாப்பி இன்று முதல் ஹாப்பி.” Poo Maalaiyil //tamil 5.1 HD video song (youtube.com)

அருமையாக எல்லாப் பாடல் பந்துகளையும் அனாயசமாக சிக்சர்களாக விளாசித் தள்ளிவிட்டார் பி.சுசீலா.

**

ஏ.எல்.எஸ். நிறுவனத்தின் “ஆனந்தி” படத்தில் நடிகை விஜயகுமாரிக்காக பி. சுசீலா பாடிய இரண்டு பாடல்களும் சிறப்பாக கவனிக்கப் படவேண்டிய பாடல்கள்தான்.  மெல்லிசை மன்னரின் இசையில் “கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்” – பாடல் வானொலியில் ஒலிக்காத நேரமே குறைவு.

இந்தப் படத்திற்காக அவர் பாடி – அதே நேரம் படத்தில் இடம்பெறாமல் இசைத் தட்டுகளில் மட்டுமே உலவி வந்த பாடல் “உன்னை அடைந்த மனம் வாழ்க”. உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக- திரைப்படம்: ஆனந்தி (youtube.com)

மென்மையாக ஒலிக்கும் இந்தப் பாடலில் “இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக.” என்ற வரிகளை முதல் முறை எந்த வாத்திய இசையும் இல்லாமல் தனித்து இசைக்கும் பொது கவனித்துப் பாருங்கள். “ மஞ்சம், நெஞ்சம்” என்ற இரண்டு வார்த்தைகளையும் அவர் உச்சரிப்பில் வேறுபாடு காட்டிப்  பாடியிருக்கும் அழகைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்.  மெல்லின மெய்யை அடுத்து வரும் வல்லின எழுத்தை எவ்வளவு அழகாக உச்சரிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் இந்த விஜய நகரத்து இசை அரசி.

வி.குமாரின் இசையில் வெளிவந்த “நினைவில் நின்றவள்” படத்தில் “என்ன தெரியும் இந்தச் சின்னப் பெண்ணுக்கு” என்ற கதாநாயகியின் அறிமுகப் பாடல் பதினெட்டு வயதுப் பருவ மங்கையின் பிரகடமாக ஒலித்தது அவரது முப்பத்திரண்டு வயதுக் குரலில்.

இதே படத்தில் “தொட்டதா தொடாததா” என்ற டூயட் பாடலையும் வெகு நேர்த்தியாகப் பாடி ஹிட் பாடல் வரிசைக்கு அனுப்பி வைத்தார் பி.சுசீலா.

”ஸ்ரீதரின் “நெஞ்சிருக்கும் வரை” படத்தில்  மெல்லிசை மன்னரின் இசையில் “முத்துக்களோ கண்கள்” பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து அருமையாகப் பாடிக் கொடுத்திருந்தார் பி.சுசீலா. 

“படித்த பாடம் என்ன – உன்

கண்கள் பார்க்கும் பார்வை என்ன..” என்று ஆரம்ப வரிகளிலேயே இழைவும், குழைவும் அந்தக் குரலில் எத்தனை லாவகமாக வெளிப்படுகின்றன. Muthukkalo Kangal M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் முத்துக்களோ கண்கள் (youtube.com)

சிந்துபைரவியில் “எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” பாடல் தூய்மையான அன்பின் பிரகடனம். இப்படிப்பட்ட பாடல்களை பி.சுசீலாவின் குரலில் கேட்கும்போது மனதிலும் அந்த அன்பும் விவரிக்க முடியாத சாந்தியும் பரவும் என்பதில் சந்தேகமே இல்லை.  Engey Neeyo (youtube.com)

அடி மேல் அடியாக விழுந்து விரக்தியின் எல்லைக்கே சென்ற நடிகர் மதன் பாப் அவர்கள் இனி என்ன செய்வது என்று சோர்வின் உச்சத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் செவிகளில் இந்தப் பாடலின் இரண்டு வரிகள் தேநீர்க்கடை வானொலியிலிருந்து வந்து விழுந்திருக்கின்றன.

“காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்

காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்”

அழகாக, மென்மையாக, கொந்தளிக்கும் மனதை சாந்தப் படுத்தும் பி. சுசீலாவின் இனிய குரலில் வந்து விழுந்த வார்த்தைகள் அவருக்குள் புது உற்சாகத்தையும் , தெம்பையும் பிறப்பிக்க புத்துணர்ச்சியுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து .. இன்று தனக்கென நகைச்சுவை நடிப்பில் தனி இடம் பிடித்திருக்கிறார் அவர்.

கவியரசரின் வார்த்தைகளும், மெல்லிசை மன்னரின் இசையும், இசையரசியின் குரலும் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய ரசவாதம் இது.

ஹமீர் கல்யாணியில் நடிகை கீதாஞ்சலிக்காக “கண்ணன் வரும் நேரமிது” என்ற பாடலையும் இனிமையாக பாடிக் கொடுத்திருந்தார் பி. சுசீலா.

“நெஞ்சிருக்கும் வரை” நினைவில் இனிக்கும் பாடல்களாகப் பாடியிருந்தார் பி. சுசீலா.

கே.பாலச்சந்தரால் படவுலகில் இசை அமைப்பாளராக உயர்ந்த மெல்லிசை மாமணி வி.குமார் தனது படங்களில் பி.சுசீலாவின் குரலை வித்தியாசமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதுவரை காதல், சோகம், விரகம் என்றே பாடி வந்த பி. சுசீலாவை நகைச்சுவையிலும் கலக்க வைத்த பெருமை இவரையே சேரும்.

‘எதிர் நீச்சல்” படத்தின் “அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா” பாட்டு ஒன்றே போதுமே.  தான் ஒரு வெரைட்டி சிங்கர் என்று பி. சுசீலா நிரூபித்த பாடலல்லவா இது.

எதிர் நீச்சல் படத்தில் ஸ்ரீகாந்த் – சௌகார் ஜானகி
எதிர் நீச்சல் படத்தில் ஸ்ரீகாந்த் – சௌகார் ஜானகி

ஆரம்பத்தில் கணவனுடன் சண்டையாக ஆரம்பித்துப் பெண்களின் கடைசி ஆயுதமான அழுகையில் முடியும் பாடல் இது. Aduthaathu Ambujathai Video Song - Edhir Neechal | Srikanth | Sowcar Janaki | TMS | P Susheela (youtube.com)

“அடிச்சதுக்கொன்ணு புடிச்சதுக்கொன்ணு  பொடவையா வாங்கிக்கறா – பட்டுப்

பொடவையா வாங்கிக்கறா” என்று பாடும்போது “பட்டு” என்ற வார்த்தையில் அவர் கொடுக்கும் லேசான அழுத்தம் என்ன?

“எப்போ இருந்தது இப்போ வரத்துக்கு

எதுக்கெடுத்தாலும் சாக்கு .. க்கும்..” என்று சிணுங்கும் சிணுங்கல் என்ன?

“அதுக்கும் மேலே..” என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது வெளிப்படும் அப்பாவித்தனம் என்ன?

ஆ.. அஹஹ..” என்று ஆரம்பிக்கும் கேவல் கலந்த அழுகை என்ன?

எல்லாமே “ஏ..கிளாஸ்” தான் போங்கோ!!!

இதே படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் பாடிய “தாமரைக் கன்னங்கள்” பாடலோ முற்றிலும் நேர்மாறான இனிமை தோய்ந்த பாடல்.

“மாலையில் சந்தித்தேன்

மையலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன் – காதலன் தீண்டும்போது

கைகளை மன்னித்தேன் -  என்று ஒவ்வொரு வரிகளையும் “தேன்..தேன்..” என்று முடிக்கும்போது பி.சுசீலாவின் குரலில் வெளிப்படும் இனிமைத்தேன் மனதை அல்லாமல் போகுமா என்ன?

இதே படம் தெலுங்கில் தயாரான போது நடந்த ஒரு சுவையான சம்பவம் ;

“சம்பரால ராம்பாபு” என்ற பெயரில் சலம் – சாரதா நடிப்பில் தெலுங்கில் டி.மோகன்ராவ் அவர்களின் தயாரிப்பில் “எதிர்நீச்சல்” படத்திற்கான பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  வி.குமாரேதான் இசை.

“நீர்க்குமிழி” படத்தில் தான் இசை அமைத்த வெற்றிப் பாடலான “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” பாடல் மெட்டை மாறுபட்ட டியூனில் பதிவு செய்துகொண்டிருந்தார் வி. குமார்.

“மாமா சந்தமாமா” பாடல் காட்சியில் சாரதா
“மாமா சந்தமாமா” பாடல் காட்சியில் சாரதா

வேறு ஒலிப்பதிவை முடித்துவிட்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் வழியாகச் சென்று கொண்டிருந்த பி.சுசீலாவின் காதுகளில் அந்த மெட்டு விழுந்திருக்கிறது.

போகிற போக்கில் தயாரிப்பாளரிடம் “டியூன் ரொம்ப நல்லா இருக்கே.  எனக்கெல்லாம் இந்த மாதிரி டியூன் கொடுக்க மாட்டீங்க” என்று விளையாட்டாகப் பேசிக்கொண்டே நகர்ந்துவிட்டார் பி.சுசீலா.

ஆனால் தயாரிப்பாளர் மோகன் ராவ் அந்த வார்த்தைகளை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.  “அம்மகாரு ஆசைப்பட்டுக் கேட்டுட்டாங்க” என்று அதற்காகப் புதியதாகக் காட்சி அமைப்பையே உருவாக்கிப்  பி.சுசீலாவைப் பாட வைத்து விட்டார் அவர்.

“மாமா சந்த மாமா வினராவா நா கதா” என்ற அந்தப் பாடல் பெருவெற்றிப்  பாடலாக அமைந்துவிட்டது. Mama chandamama vina ravaa naa katha - Sambrala rambabu (youtube.com)

ஒரு பாடகிக்கு இதைவிட உச்ச பட்ச மரியாதை வேறு என்ன வேண்டும்?

(இசையின் பயணம் தொடரும்..)

logo
Andhimazhai
www.andhimazhai.com