பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 32

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்
Published on

“சப்த ஸ்வரங்களை எந்த அளவிற்கு அழகாகத் தனது குரலில் கொண்டுவந்து பாடுவதில் பி. சுசீலா அவர்களுக்கு இணை அவரே தான். அவருக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாது.   எனது பெரும்பாலான படங்களில் எனக்காக அவரே தான் பாடி இருக்கிறார்.  நடிகைகளான எங்களுக்குக் கூட ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குட் பை சொல்ல  நேரிடும்.  ஆனால் சுசீலாம்மாவின் குரலுக்கு மட்டும் வயதே ஆவதில்லை. பிரேம் நகர் படத்தில் எனக்காக அவர் பாடி இருந்த “சக்ரவாகம்”, “எவரோ ராவாலி” ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.” - திரைப்பட நடிகை திருமதி வாணிஸ்ரீ கருணாகரன் .

தொடர்ந்து இசை அரசியின் இனிமைக்குரலில் வெளிவந்த பாடல்கள் இடம் பெற்ற பட்டியலோ நீளம்.

எப்படித்தான் இத்தனைப் படங்களை ஒப்புக்கொண்டு பாடினாரோ என்று வியக்க வைக்கும் அளவுக்கு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் பாடிக் கொண்டே இருந்தார் பி. சுசீலா.

அனைத்தையும் குறிப்பிட்டு எழுதுவது என்றால் அது இந்துமகாசமுத்திரத்தை ஒரே ஒரு சிறிய தேநீர்க் கோப்பைக்குள் அடக்க முயற்சிப்பதற்கு சமமானதாகும்.

“டீச்சரம்மா” – கன்னட இயக்குனர் புட்டண்ணா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்  படத்தில் டி.ஆர். பாப்பாவின் இசையில் அற்புதமான பாடல்கள் பி. சுசீலாவின் வெற்றிக் கணக்கில் சேர்ந்தன.

“அம்மா என்பது தமிழ் வார்த்தை” – தாய்மையின் பெருமையை அற்புதமாக எளிய வார்த்தைகளால் எடுத்துரைக்கும் கவியரசரின் வார்த்தைகளுக்கு “ஹரிகாம்போதி” ராகத்தில் டி.ஆர்.பாப்பா அவர்கள் வார்த்தெடுக்க -  பி.சுசீலாவின் தேன்குரலில் கேட்கத் தெவிட்டாத பாடல். Amma enbathu tamizh vaarthai HD Video Song Teacheramma 1968 (youtube.com)

“டீச்சரம்மா” படத்தில் விஜயகுமாரி
“டீச்சரம்மா” படத்தில் விஜயகுமாரி

பார்க்காமலே கடிதம் மூலம் காதலை வளர்த்துக் கொண்ட காதலன் சந்திக்க வரும்போது பார்க்க நேரிடுவதோ  காதலியின் ஸ்னேகிதியை. அவள் தான் தனது காதலி என்று அவன் தவறாக நினைத்துவிட அவனது அழகில் மயங்கிய அவளோ உண்மையைக் கூறாமல் மறைத்துவிட.

அவன் உண்மையாகக் காதலித்த பெண்ணே அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க –

அவளுக்கு உண்மை தெரிய வரும்போது...

ஏமாற்றமும் சோகமும் அவளைத் தாக்கினாலும் அவற்றைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு தோழியை வாழ்த்திப் பாடுவதான காட்சி அமைப்புக்கு ஒரு பாடல்.

“சூடிக் கொடுத்தவள் நான் தோழி

சூட்டிக் கொண்டவளே நீ வாழி”

“சாருகேசி” ராகத்தில் மெட்டும் இசையும் பாடல் வரிகளை உறுத்தாத ஒரு பாடல்.  அந்தப் பாடலைப் பாடுபவர் பி. சுசீலா என்னும்போது அதற்கு உண்மையிலேயே ஒரு தனிக் கௌரவம் கிடைக்கத்தான் செய்கிறது.

பல்லவிக்கு அனுசரணையாகத் தொடரும் “பாடிக் கொடுத்தவள் நான் தோழி – பாட்டை முடித்தவள் நீ... வாழி” என்ற அனுபல்லவியில் இறுதி வார்த்தைகளில் ஒரு அழுத்தம் கொடுத்து பி.சுசீலா முடிப்பார் பாருங்கள்.  நம்மையும் அறியாமல் அந்தச் சாருகேசி கண்ணிமைகளை லேசாக ஒரு முறை மூடித் திறக்க வைக்கும். TEACHERAMMA (1968)--Soodi koduthaval naan thozhi sootti kondavale nee vaazhi--OLD SONG BOOK (vMv) (youtube.com)

தொடரும் சரணத்தில்

நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன் – அதன் நிறத்தைப் பார்த்த உயிர் வைத்தேன்

முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன் – வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்

நயம் மெல்லடி எடுத்து வைப்பது போன்ற வார்த்தைகளை அந்த வார்த்தைகளுக்கே வலிக்காத வண்ணம் அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் நமது இசை அரசி.

““ஏழை எழுந்தேன் எனக்கென்று” என்ற வரிகளை இருமுறை பாடும்போது ஒவ்வொரு முறையும் அவர் கொடுக்கும் இழைவு அப்பாவிப் பெண்ணின் மன வேதனையை அப்படியே பிரதிபலிக்க,  “அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று” என்று முடிக்கும்போது மனம் சமநிலைக்கு வந்து நிற்பதை தனது குரலாலேயே உணர்த்திவிடுவார் பி. சுசீலா.

விஜயகுமாரிக்காக இந்த இரண்டு பாடல்களைப் பாடியவர் அடுத்து வாணிஸ்ரீக்காகப் பாடிய பாடல் “இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு” –  இனிமையோடு கலந்து பாடிக் கொடுத்தார் பி. சுசீலா. (309) இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலை மோதும் காடு- படம்: டீச்சரம்மா - YouTube

கவியரசர் சொந்தமாகத் தயாரித்த “லட்சுமி கல்யாணம்”. படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ராமபிரானின் வடிவங்கள் அனைத்தையும் பன்னிரண்டு வரிகளில் வரிக்கு ஒன்றாக கவியரசர் எடுத்துரைத்த பாடல்தான் “ராமன் எத்தனை ராமனடி” – சிந்துபைரவி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை பி.சுசீலாவைத் தவிர வேறு யார் குரலிலும் கற்பனையே செய்து பார்க்க முடியாது. Raman Ethanai Ramanadi M.S.விஸ்வநாதன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் ராமன் எத்தனை ராமனடி (youtube.com)

“ராமன் எத்தனை ராமனடி” பாடல் காட்சியில் வெண்ணிற ஆடை நிர்மலா
“ராமன் எத்தனை ராமனடி” பாடல் காட்சியில் வெண்ணிற ஆடை நிர்மலா

ஒரு பாடலை எப்படிப் பாடவேண்டும் ?

எந்த இடத்தில் எப்படிக் கார்வைகள் கொடுக்கவேண்டும்?

எந்த வகையான உணர்ச்சிகளை பிரயோகிக்க வேண்டும்?

என்று கற்றுக்கொள்ள பி. சுசீலாவின் இந்தப் பாடல் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

“ராமன் எத்தனை ராமனடி” – பக்திப் பரவசம் என்றால் “பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்” பாடலோ கொந்தளிக்கும் மனதின் ஆவேசக் குமுறல், ஏமாற்றம், கோபம், அழுகை என்று உணர்ச்சிகளின் கலவை இந்தப் பாடல்   Birunthavanathirku Varukinrean Song Laxmi Kalyanam (youtube.com)

ஏற்ற இறக்கங்களில் சுசீலாம்மாவின் குரல் தான் எத்தனை லாவகமாகப் பயணித்து உணர்வுகளை அப்படியே நமது மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது!

பாடல் முடியும் போது ஒரு பெரிய  அலை அடித்து ஓய்ந்த உணர்வு மனதுக்குள் ஏற்படுவதை நம்மால் உணரமுடியும்.

அத்தனை அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.

**

அறுபத்தெட்டில் சாதனைச் சிகரத்தின் உச்சத்தை எட்டிப் பிடித்துவிட்டார் நமது இசை அரசி என்றால் அது மிகையே இல்லை. அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்தன.  அவரது ஒரு பாடலை வெல்ல அவர் பாடிய இன்னொரு பாடலால் மட்டுமே முடிந்தது.

அந்தவகையில் குறிப்பிடத்தக்க படங்களில் அதி முக்கியமான இடத்தைப் பிடித்த படம் “தில்லானா மோகனாம்பாள்”.

இந்தப் படத்தில் பி. சுசீலா பாடிய இரண்டு பாடல்களுமே இதயத்தை நிறைப்பவை.

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – ஸ்வாமி” என்று அவர் ஒரு அரை நொடி நிறுத்திவிட்டு மறுபடி “மறைந்திருந்து ..” என்று ஆரம்பிக்கும்போது..அப்படியே சொக்க வைப்பார்.

ஷண்முகப்ரியா ராகத்தில் திரை இசைத் திலகம் அமைத்த பாடலின் இசையின் அழகு பி.சுசீலா அவர்களின் இனிமைக்குரலால் மெருகேறும் பாடல் இது.

“மாலவா, வேலவா, மாயவா.. என்று பாடிக்கொண்டே வருபவர் ஒரு நொடி நிறுத்தி “ஷண்முகா” என்று லேசான அழுத்தம் கொடுத்து முடிக்கும்போது நாயகனைச் சீண்டும் நாயகியின் குறும்புத்தனம் அந்தக் குரலில் தொனிக்கும்.

“எனை ஆளும் ஷண்முகா.. வா..” என்று கார்வையோடு முடித்து மீண்டும் பல்லவிக்குத் திரும்பும் அந்த லாவகம் நமது இசை அரசிக்கே கை வந்த கலை. Marainthirunthu Audio Song | Thillana Mohanambal | Sivaji Ganesan (youtube.com)

“நலந்தானா” – நீலமணி ராகத்தில் அமைந்த பாடல்.  இந்தப் பாடலில் ராஜவாத்தியமான நாதஸ்வரத்திற்கு ஈடு கொடுத்து நமது மனதில் நாயகியின் பரபரப்பு, காதல், சோகம், தவிப்பு, நம்பிக்கை என்று பலதரப்பட்ட உணர்வுகளையும் பரவ வைக்கும் விதமாக நாட்டியப் பேரொளி பத்மினியின் குரலாகவே உருமாறி இருக்கிறார் பி.சுசீலா.

இந்தப் பாடல் அவரது திறமைக்கு ஒரு சவாலாக அமைந்த பாடல்.

“இதுலே என்ன சார் சவால் இருக்கு? மற்ற எல்லா வாத்திய இசைக் கருவிகளையும் போல நாதஸ்வரமும்  ஒரு மியூசிகல் இன்ஸ்ட்ருமென்ட். அதோட சேர்ந்து பாடி இருக்கார் அவ்வளவுதானே?” என்று கேட்பவர்களுக்கு...

மற்ற வாத்தியங்களுக்கும் நாதஸ்வரத்திற்கும் வித்யாசம் உண்டு. அது ராஜ வாத்தியம்.

“நாபி ஹ்ருத் கண்ட ரசனா” என்று தியாகையர் கூறுவதுபோல நாபிக்கமலத்தில் இருந்து எழும்பும் ஒலியை அப்படியே மூச்சை நிறுத்தி இசைக்க வைப்பது நாதஸ்வரத்தில் தான்.

அதன் கம்பீர நாதத்திற்கு ஈடு கொடுத்து அதற்கு இணையாகப் பாடுவது என்பது கம்பி மேல் நடப்பது போன்றது.

இந்தப் பாடலில் முடியும் சரணத்தில் “நடந்ததெல்லாம் மறந்திருப்போம் – நடப்பதையே நினைத்திருப்போம்” என்று பி. சுசீலாவின் குரலோடு மதுரை என்.பி.என். சகோதரர்களின் இரட்டை நாதஸ்வரமும் இணைந்து இசைக்கும். 

ஒரு நாதஸ்வர இசைக்கு ஈடு கொடுப்பதே பெரும் பாடு. 

இதில் இரட்டை நாதஸ்வரங்களின் நாத இசைக்கு ஈடுகொடுத்து அவற்றோடு இணைந்து பாடுவது – அதுவும் ஒரு பெண் பாடகி பாடுவது என்பது .. கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத ஒன்று  .

கடைசியில் வரும் “கட்டுண்டோம் பொறுத்திருப்போம் – காலம் மாறும் சந்திப்போம்” என்ற வரிகளின் போது நாதஸ்வர இசையை முதன்மைப் படுத்தினால்  பி. சுசீலாவின் குரல் அப்படியே அழுந்திப் போக நேரிடும். அவரது குரலை முதன்மைப் படுத்தினாலோ நாதஸ்வர இசை கீழே இறங்கிப் பாடலே எடுபடாமல் போய்விடக்கூடிய அபாயம். இந்தச் சூழலில்  இரட்டை நாதஸ்வர இசைக்கு சரி சமமாகத்  தனது குரலை பாலன்ஸ் செய்து

நாதஸ்வர இசையுடன் இணைந்து பாடுவதென்பது ஒரு சாதனைதானே.

அதனை அனாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நமது இசை அரசி.

 ***

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூறாவது படமான “ஒளிவிளக்கு” படத்தில் பி. சுசீலாவிற்கு இரண்டு பாடல்கள்.  ஒன்று டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” பாடல். 

கவிஞர் வாலியின் பாடலில் அரசியல் நெடி சற்று வீசினாலும் நரிக்குறவர் சமுதாயம் பெருமைப்படும் பாடலாக அமைந்துவிட்டது.

 “நரிக் கொம்பு வித்தாலும் விப்போமுங்க – ஆனா

நரிபோல வஞ்சனைகள் செய்யமாட்டோம்.

பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க – ஆனா

காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்” என்று அவர்களை பெருமைப்படுத்தி கவிஞர் வாலி அமைத்த பாடலை டி.எம். எஸ். அவர்களின் கம்பீரக்குரலோடு அழகாக இணைந்து பாடி வெற்றிப்பாடலாக்கினார் பி. சுசீலா.. Oli Vilakku | Nanga Pudhusa song (youtube.com)

அடுத்து “இறைவா உன் மாளிகையில்  எத்தனையோ மணிவிளக்கு ” –ஒரு சரித்திரச் சாதனைப் பாடல். Andavane un - Oli vilakku (youtube.com)

கதைப்படி தீ விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்றச் சென்று தீக்காயங்களின் மிகுதியால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் உயிர் பிழைக்க சௌகார் ஜானகி இறைவனை வேண்டிப்பாடும் பாடல்.

“ஒளிவிளக்கு” படத்தில் சௌகார் ஜானகி
“ஒளிவிளக்கு” படத்தில் சௌகார் ஜானகி

சிவரஞ்சனி ராகத்தில் அருமையாக மெல்லிசை மன்னர் வார்த்தெடுத்த கவிஞர் வாலியின் வார்த்தைகளுக்கு உள்ளத்தை உருக்கும் இனிய குரலால் உயிரூட்டி இருந்தார் பி. சுசீலா

அதிலும் இறுதியில் “உன்னுடனே வருகின்றேன் : என்னுயிரைத் தருகின்றேன். மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று இறைவனுக்கே கட்டளை பிறப்பிக்கும் ஆவேசக் குரலில் அமைந்த இந்தப் பாடலை நூறு சதவிகித அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடியிருக்கிறார் பி.சுசீலா.

பிற்காலத்தில் 1984 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் உண்மையிலேயே உயிராபத்தான நிலையில் அமெரிக்காவில் “ப்ரூக்ளின்” மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டபோது இங்கு தமிழ் நாட்டில் பட்டிதொட்டி எங்கும் ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும், திரை அரங்குகளில் இடைவேளைகளிலும் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப் பட்டு அவருக்கான பிரார்த்தனை கீதமாக பி. சுசீலா பாடிய இந்தப் பாடலால் தான் தமிழக மக்கள் அனைவரும் கூட்டாக வேண்டிக் கொண்டு அவரை மீண்டு வர வைத்தனர்.

முகலாயப் பேரரசர் அக்பரின் மகளைத் தனது இசையால் தான்சேன் உயிர் பிழைக்க வைத்தார் என்று கேட்டிருப்போம். அது கதை.

ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மீண்டு வர பி.சுசீலாம்மா பாடிய இந்தப் பாடல் ஒரு சரித்திரம்.

உலகம் முழுவதும் தேடினாலும் இப்படிப்பட்ட ஒரு சரித்திரச் சாதனையைப் புரிந்த பாடகி நமது பி.சுசீலா ஒருவரைத் தவிர வேறு ஒருவருமே இல்லை.

ஆனால் இந்தச் சாதனையை ஒரு போதும் பெருமையாகப்  பி. சுசீலா அவர்கள் பறைசாற்றிக் கொண்டதே கிடையாது. 

“அதெல்லாம் அவர் (எம்.எஸ்.வி.) சொல்லிக் கொடுத்தாரு. அதை அப்படியே பாடிட்டு வந்தேன். அது இந்த அளவுக்கு எம்.ஜி. ஆரோட உயிரையே காப்பாத்தற ஒரு பிரார்த்தனைப் பாடலா அமையும்னு எல்லாம் நினைச்சே பார்க்கலே. அதெல்லாம் கடவுள் செயலே தவிர நம்ம கிட்டே என்ன இருக்கு?” என்று தனது வெகுளித்தனமான சிரிப்புடன் கடந்துவிட்டார் அவர்.

அதே வருடம் வெளிவந்த ஏ.வி.எம். நிறுவனத்தின் “உயர்ந்த மனிதன்” படத்திற்காக மெல்லிசை மன்னர் வாலியின் பாடலைக் கற்றுக்கொடுத்து அவரைப் பாடவைத்தார்.

“பால் போலவே... வான் மீதிலே..

யார் காணவே நீ காய்கிறாய்” – என்று தொகையறாவாக ஆரம்பிக்கும்  பாடல்..

ஏற்ற இறக்கங்கள், மெல்லிய ரவை சங்கதிகள் நிறைந்த ஒரு கடினமான பாடல்.

ஒத்திகையின் போது சுசீலாவிற்கு அழுகை வராத குறை.  எம்.எஸ்.வி. அவர்கள் பாடிக்காட்டிய அளவிற்குத் தன்னால் பாடமுடியுமா என்ற அச்சம் ஏற்பட அதை மெல்லிசை மன்னரிடமே வெளிப்படுத்தினார் பி. சுசீலா.

“எல்லாம் முடியும்.  தைரியமா பாடு” என்று ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துப் பாடவைத்த மெல்லிசை மன்னர் ஒலிப்பதிவு முடிந்ததும் “எழுதி வச்சுக்க.  இந்தப் பாட்டுக்கு உனக்கு மிகப்பெரிய அவார்ட் கண்டிப்பா கிடைக்கப் போறது பார்.” என்று சவாலாகவே சொன்னார் எம்.எஸ்.வி.

அவர் வாக்குப் பொய்க்கவில்லை.

அந்த வருடத்தின் சிறந்த பாடகிக்கான தேசிய விருது முதன்முதலாக இந்த “உயர்ந்த மனிதன்” படப்பாடலுக்காக அவரைத் தேடி வந்தது.

(இசையின் பயணம் தொடரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com