பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 33

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

“ சுசீலாம்மா சாட்சாத் சரஸ்வதியின் ஸ்வரூபம். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு lucky mascod. – ராசியான ஒரு இணைப்பாடகி (singing partner) என்று தான் சொல்வேன்.  காரணம் என்னவென்றால் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் எனது முதல் பாடலை அவருடன்தான் சேர்ந்து பாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  அது எனது முன்னேற்றத்துக்கு ஒரு சுபசகுனமாக அமைந்தது. எந்த மொழியானாலும் சரி வார்த்தை உச்சரிப்பில் அவருக்குத்தான்  முதல் இடம். அவரைப் பார்த்து நான் கற்றுக்கொண்டவை அநேகம்.

பின்னணிப் பாடகர் அமரர் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்கும் இசை அரசி பி. சுசீலா அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே முதல் முறையாகத் தேசிய விருதைத் தமிழ்த் திரை இசைக்காகப் பெற்றவர்கள்.  முதல் முறையாக என்றால்...?

1967க்கு முன்பு வரை இசையைமைப்புக்கு என்று அகில இந்திய விருது கிடையவே கிடையாது. அது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே “கந்தன் கருணைக்காக” அகில இந்திய சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை கே.வி.மகாதேவன் பெற்றார். (அதுவும் பி.சுசீலா பாடிய பாடலுக்காக).

அதே போல சிறந்த பின்னணிப்பாடக / பாடகியருக்கான தேசிய விருது 1968ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்ததும்  அதனைப் பெற்ற முதல் பாடகி பி. சுசீலா அவர்கள் தான்.  அதுவும் தமிழ்ப் படமான “உயர்ந்த மனிதன்” படத்தில் பாடிய “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா” பாடலுக்காக.

கேட்பதற்கு இனிதான இந்தப் பாடலை எப்படிப் பாடினார் ?

இதோ அவரே “குமுதம் ஜங்ஷன்” மாத இதழுக்கு அளித்த நேர்காணலில் இப்படிச் சொல்கிறார்”

“உயர்ந்த மனிதன்” படத்தில் “பால் போலவே” பாடல்.  இப்படி இப்படிப் பாடு என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்லிக் கொடுத்தார்.  ஆரம்பித்த மாத்திரத்தில் உச்சஸ்தாயிக்குச் சர்ரென்று போய் வரவேண்டிய பாடல் அது. என்னால் அன்று ஏனோ சரியாகப் பாட முடியவில்லை. அழுகை அழுகையாக வந்தது. விஸ்வநாதன் தைரியம் கொடுத்தார். மீண்டும் பாடினேன்.  நன்றாக வந்திருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்” என்று சொல்கிறார் இசை அரசி. 

ஆனால் ஒரு மிகப் பெரிய தடங்கல் காரணமாக பாடலே படத்தில் இடம் பெறமுடியாத சூழ்நிலை உருவானது. 

கொடைக்கானலில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு. அதுவும் எட்டு மாதம் தாமதமாக.

ஏ.வி.எம். நிறுவனம் அவர்களது ஹிந்தித் தயாரிப்பான “தோ கல்யாண்” (குழந்தையும் தெய்வமும்) படத்தை விரைவாக முடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட தாமதம்.

கூடவே  படத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் சேர்ந்துகொண்டது. 

ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகு மறுபடி  கொடைக்கானல் போகலாம் என்றால் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. 

ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் “ரிலீஸ் தேதி நெருங்கிடுச்சு.  இன்னும் சென்சாருக்கு வேற அனுப்பணும்.  அதனாலே இந்தப் பாட்டு ஸீன் வேண்டாம்.  இது இல்லாம படத்தை முடிச்சி வெளியிட்டு விடலாம்” என்று அழுத்தமாகக் கூறிவிட்டார்.

அந்த நேரத்தில் படத்தின் கலை இயக்குனர் ஏ.கே. சேகர் புண்ணியம் கட்டிக்கொண்டார். 

“பாட்டு நல்லா வந்திருக்கு. கொடைக்கானல் போக முடியாட்டா என்ன? இங்கே ஸ்டூடியோவிலேயே கொடைக்கானல் அட்மாஸ்பியரை உருவாக்கி நான் செட் போட்டு கொடுத்துடுறேன்” என்று அவர் சொல்ல, அதனை ஏ.வி.எம். அவர்கள் ஏற்றுக்கொள்ள ஸ்டூடியோவிலேயே செட் போட்டுப் படமாக்கினார்கள்.

ஆர்.கே. சேகர் மட்டும் அப்படிச் சவாலாக ஏற்றுச் செயல்படாமல் இருந்திருந்தால்   அருமையான இந்தப் பாடல் படத்தில் இடம்பெறாமலேயே போயிருந்திருக்கும். தேசிய விருதும் பி.சுசீலாவிற்குக் கிடைத்திருக்காது.

ரெக்கார்டிங் முடிந்ததும் எம்.எஸ்.வி. “நான் சொல்றேன். எழுதி வச்சிக்க. உனக்கு இந்தப் பாட்டுக்காக பெரிய ரிவார்டு ஒண்ணு கிடைக்கப்போகிறது பாரேன்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.  அவரது வாக்குப்  பலித்தது.  சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே அவரைத் தேடி வந்தது. (377) P.SUSHEELA - FIRST NATIONAL AWARD 1968 - YouTube

முதல் முறை தேசிய விருது – குடியரசுத் தலைவர் வி.வி. கிரி வழங்குகிறார்.
முதல் முறை தேசிய விருது – குடியரசுத் தலைவர் வி.வி. கிரி வழங்குகிறார்.

இந்தச் சோதனை போதாது என்பது போல வேறொரு இக்கட்டையும் பி. சுசீலாவும், டி.எம்.சௌந்தரராஜனும் சந்திக்கவேண்டி இருந்தது.

அது.. “என் கேள்விக்கென்ன பதில்” பாடல் சம்பந்தப்பட்டது.

அந்த நாட்களில் படம் வந்த புதிதில் வானொலியில் இந்தப் பாடலை ட்ரம்பெட், வயலின், குழலிசை, கிட்டார் என்று ஆர்ப்பாட்டமான பின்னணி இசையுடன் கேட்டிருப்போம்.

“என் கேள்விக்கென்ன பதில் – உன்பார்வைக்கென்ன பொருள்

மண மாலைக்கென்ன வழி – உன் மௌனம் என்ன மொழி”

என்று டி.எம்.எஸ். பாடி நிறுத்தியதும் “ஓ..ஹோ.ஹோ.ஹோ...” என்று பி. சுசீலாவின் ஹம்மிங் பாடலை வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்லும். 

தொடர்ந்து “ஹஹ்.ஹஹா. ஓஹ்ஹஹோ..” என்று டி.எம்.எஸ். அவர்களின் ஹம்மிங், கிட்டாரின் மீட்டல், தொடரும் வயலின்களின் விறுவிறுப்பான இசை .. பாங்கோஸ்ஸின் விறுவிறுப்பான தாளக்கட்டு .. என்று பாடல் போகும்.  (374) uyarntha manithan - YouTube

ஏ.வி.எம். அவர்கள் நிராகரித்த பாடல் காட்சி.
ஏ.வி.எம். அவர்கள் நிராகரித்த பாடல் காட்சி.

ரிச்னெஸ் தெறிக்கும் மெட்டுக்கு ஏற்றபடி கோட் சூட் அணிவித்துச் சிவகுமாரையும் – இளமை தெறிக்கும் காஸ்ட்யூமில்  பாரதியையும் மேற்கத்திய இசைக்கேற்ப ஸ்டெப்ஸ் வைத்து ஆடவைத்துக் காட்சியைப் படமாக்கிவிட்டார்கள்.  

“ரஷ்” பார்த்த ஏ.வி.எம். அவர்கள் “இந்த ஸீன் சரி இல்லே. நீக்கிடுங்க” என்றார். ஒட்டுமொத்த யூனிட்டுமே அதிர்ந்தது.

“பின்னே என்ன? கதைப்படி சிவகுமார் படிப்பு வாசனையே இல்லாம வீட்டுலே எடுபிடி வேலை பார்க்குற வேலைக்காரப் பையன். லவ் என்கிற வார்த்தையையே “லொவ்”என்று உச்சரிப்பவன்.  பாரதியோ கார் டிரைவர் பொண்ணு. ரெண்டு பேரும் ரிச் காஸ்ட்யூம்ல வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுற மாதிரி காட்டினா ஜனங்க எப்படி ஏத்துக்குவாங்க.” என்று பாடல் காட்சியையே நீக்கச் சொல்லிவிட்டார் ஏ.வி.எம்.

அந்த நேரத்தில் எம்.எஸ்.வி. “ட்யூன் நல்லா வந்திருக்கு.  நான் வேணும்னா இதை மாத்தி நீங்க நெனைக்கிற மாதிரி பின்னணி இசை அமைத்து தருகிறேன். கேட்டுட்டு முடிவெடுங்க” என்று சொல்லிவிட்டு இப்போது பாடல் காட்சிகளில் நாம் காணும் காட்சிக்கேற்ற மென்மையான இசைச் சேர்க்கையுடன் அமைத்துக்கொடுக்க – சரண வரிகளைக் கவிஞர் வாலி மாற்றிக் கொடுக்க  – ஏற்கெனவே பாடிய பாடலை மீண்டும் கற்றுக்கொண்டு பாடவேண்டிய நிர்ப்பந்தம் டி.எம்.எஸ். – பி.சுசீலா இருவருக்கும் ஏற்பட்டது. என் கேள்விக்கென்ன பதில் -En kelvikkenna badhil ? uncensored (youtube.com)

திருத்தி அமைக்கப்பட்ட இப்போது நாம் காணும் பாடல் காட்சி
திருத்தி அமைக்கப்பட்ட இப்போது நாம் காணும் பாடல் காட்சி

“வெள்ளிக்கிண்ணம் தான்” பாடல் முழுவதும் இசை அரசியின் ஹம்மிங்தான் ஆட்சி செய்யும்.  ஆஹஅஹ்ஹா..  ஹஹ்ஹ்ஹஹா.. இவற்றை ஒவ்வொரு முறை பாடும்போது ஒவ்வொரு உணர்வு தெறிக்கப் பாடிக் கொடுத்திருக்கிறார் அவர்.

சௌகார் ஜானகிக்காக பியானோவின் பின்னணியில் “அத்தானின் முத்தங்கள்” பாடலை அற்புதமாகப் பாடிக்கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.

ஆகக்கூடி ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் தனது தனித்திறமையால் எதிர்கொண்டு வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டே இருந்தார் பி.சுசீலா.

அடுத்த வருடம் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரே நேரத்தில் மெல்லிசை மன்னர் – திரை இசைத் திலகம் ஆகிய இரண்டு ஜாம்பவான்களால் அறிமுகப்படுத்தப் பட்டார் அவர்.

“சாந்தி நிலையம்” படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் “இயற்கை என்னும் இளைய கன்னி”  - அதே நேரத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் “அடிமைப்பெண்” படத்திற்காக “ஆயிரம் நிலவே வா” -  ஆகிய இரு பாடல்களும் பதிவாகின.  ஆனால்.. அவரது அறிமுகம் தன்னால் தான் நடக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பியதால் “அடிமைப் பெண்” படம் அவரது முதல் படமாக வெளிவந்தது. 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றாலும் இந்த இரண்டு பாடல்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் எஸ்.பி. பி. அவர்களின் முதல் பாடல்களிலும் அவருடன் பாடியவர் பி. சுசீலாதான்.

திரு.எஸ்.பி.பி. அவர்களுடன் இணைந்த பாடிய முதல் பாடல் அனுபவமே பி. சுசீலாவின் உயர்ந்த குணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

முதல் நாள் பாடல் பதிவிற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வருவதற்கு மிகவும் காலதாமதமாகிவிட்டது.

அப்போது சீனியர் பாடகி என்ற அந்தஸ்தில் இருந்த பி. சுசீலா நினைத்திருந்தால் பாடல் பதிவையே கான்சல் செய்துவிட்டுப் போயிருந்திருக்க முடியும்.  ஆனால் பொறுமையுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சுசீலா.  “ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா”  என்ற அந்தப் படத்தின் பாடல் பதிவின் போது அப்போதுதான் முதல் முறை பாடுபவர் என்பதால் மைக்கின் முன் எப்படி நிற்கவேண்டும் சில வார்த்தைகளை உச்சரிக்கும் போது முகத்தை எப்படி வைத்துக்கொண்டு பாடவேண்டும் என்பதையெல்லாம் அவருக்கு அன்போடு கற்றுக்கொடுத்து – சற்று படபடப்புடன் இருந்த பாலசுப்ரமணியத்தைச் சமாதானப் படுத்தி உற்சாகம் கொடுத்து ஊக்குவித்துப் பாடவைத்தார் பி. சுசீலா.

“அடிமைப் பெண்” படத்தில் எஸ்.ஜானகியுடன் இணைந்து “காலத்தை வென்றவன் நீ” என்ற பாடலையும் பி. சுசீலா பாடி இருந்தார்.  இந்தப் பாடல் பதிவிற்கு வந்திருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் “இந்தப் பாட்டு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டிப் பாட்டு.  யார் ஜெயிக்குறீங்க பார்க்கலாம்” என்று உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார்.

பாடலை எஸ். ஜானகி ஆரம்பிக்க முதல் சரணம் முடிந்ததும் ஒரு ஹம்மிங்குடன் பி. சுசீலா இணையும் போது அந்தக் குரலில் தெறிக்கும் இனிமை, கம்பீரம், லாவண்யம் எல்லாமே வேற லெவல் தான். Kaalathai Vendravan Nee Video Song | Adimai Penn Movie Songs | M. G. R|Jayalalitha|Pyramid Music (youtube.com)

“சாந்தி நிலையம்” படத்தில் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே அவர் பெயர் சொல்லும் பாடல்களாகவே அமைந்துவிட்டன.

“இறைவன் வருவான்”,

கடவுள் ஒரு நாள் உலகைக் காண”

“செல்வங்களே” ஆகிய தனிப்பாடல்களும் சரி. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதல் பாடலான “இயற்கை என்னும் இளைய கன்னி” பாடலும் சரி இன்றளவும் காலத்தை வென்று நிற்கும் பாடல்கள். 

அதே நேரம் தேவரின் தண்டாயுத பாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களாகி விட்டனர் இசை இரட்டையரான சங்கர் – கணேஷ்.  “மாணவன்”, “அக்கா தங்கை” ஆகிய படங்கள் அவர்களை வெற்றிப்படிகளில் ஏற வைத்தன.

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிரந்தரப் பாடகியாக பி.சுசீலா மட்டுமே இருந்ததனால் இவர்களின் இசையோடு இணைந்த பி. சுசீலாவின் தேன்குரல் பாடல்கள் பெருவெற்றி பெற ஆரம்பித்தன.

அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டு பி. சுசீலா அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு பொன்னான ஆண்டாக அமைந்துவிட்டது. 

திருமணமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகு முதல் முதலாக தாய்மை அடைந்தார் பி.சுசீலா.

அந்த நேரத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லக்ஷ்மி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரின் நடிப்பில் “கண்ணன் வருவான்” திரைப்படம் தயாரிப்பில் இருந்தது. இசை சங்கர்-கணேஷ்.

“பூவினும் மெல்லிய பூங்கொடி” என்ற பாடல் படத்தில் இருமுறை இடம் பெறும் பாடல். 

டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் குரலில் ஒரு முறை பாடல் பதிவாகி விட்டது. 

இரண்டாம் முறை அதே பாடலை புகுந்த வீட்டு வரவேற்பில் கதாநாயகி பாடுவதாகக் காட்சி.  கடந்த கால காதலின் நினைவுகளில் புழுங்கும் பெண்ணின் மன உணர்வுகளின் வெளிப்பாடாகப் பாடலை கவியரசர் வடித்திருந்தார்.  ஒரே மெட்டுத்தான். ஆனால் குரலில் மட்டுமே ஏமாற்றம், ஏக்கம், மனக்குமுறல் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாடல்.

ஆனால் பி.சுசீலாவினால் பாடல் பதிவிற்கு வரமுடியவில்லை.  காரணம் அப்போது பிரசவத்திற்கு நாள் நெருக்கத்தில் இருந்த நேரம்.  எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கக் கூடிய சூழ்நிலை. 

(சங்கர்) கணேஷ் நேரடியாகப் பி. சுசீலாவின் வீட்டிற்கே வந்துவிட்டார்.

“ரெக்கார்டிங்கை தள்ளி வச்சிக்க முடியாதா கணேஷ்?  இந்தச் சூழல்லே என்னாலே எப்படிப்பா வரமுடியும்? வேற யாரையாவது பாட வச்சு ரெக்கார்டிங் பண்ணிக் கொள்ளேன்.” என்று கனிவாக மறுத்தார் சுசீலா.

ஆனால் சங்கர் கணேஷ் ஒப்புக்கொள்ளவில்லை.

“நீங்க பாடினால் தான் சரியாவரும். பயப்படாதீங்கம்மா. நான் பொறுப்பெடுத்துக்கிட்டு உங்களை பத்திரமா கொண்டு வந்து விட்டுடுறேன். ப்ளீஸ். வாங்கம்மா.” என்று பணிவும், கெஞ்சலும் கலந்த குரலில் வற்புறுத்தி அழைத்து வந்து பாட வைத்தார் கணேஷ்.  பாடலும் பெருவெற்றிப் பாடலாக அமைந்துவிட்டது. பூவினும் மெல்லிய பூங்கொடி பாடல் | poovinum melliya poongodi song | Tms Love sad song . (youtube.com)

பாடி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் அழகான ஆண் குழந்தைக்குத்  தாயானார் பி. சுசீலா.

தாயான பிறகு “தெய்வ சங்கல்பம்” படத்தில் விஜயகுமாரிக்காக “அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னைக் கேட்கிறேன் – என் அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்” என்ற கண்ணதாசனின் பாடலை வி.குமாரின் செவிக்கினிய இசையில் பாடினார் பி.சுசீலா. அச்சம் விட்டு நாணம் விட்டு. (படம் - தெய்வ சங்கல்பம்) (youtube.com)

“தாயாவதற்கு முன் இருந்த அதே இனிமையும் குளுமையும் – அதற்கு அதிகமாகக் கூட – அவர் குரலில் இருக்கின்றன. இந்தப் பாடல் பாராட்டுப் பெறுவது நிச்சயம்” என்று அப்போது முன்னணியில் இருந்த சினிமாப் பத்திரிகை கூறி இருந்தது.  ஆனால் இனிமை தூக்கலாகவே இருந்த பாடல் படம் வெற்றிபெறாததால் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறாமல் போனது.

ஆனால் தாய்மையின் சந்தோஷத்தை அவர் முழுமையாக அனுபவிக்க முடியாதபடி பிறந்த சில மாதங்களிலேயே தனது குழந்தையை நோய்க்குப் பறிகொடுக்க நேர்ந்தது.

(இசையின் பயணம் தொடரும்)

 இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15

இசையரசி -16

இசையரசி-17

இசையரசி - 18

இசையரசி -19

இசையரசி - 20

இசையரசி - 21

இசையரசி - 22

இசையரசி - 23

இசையரசி - 24

இசையரசி - 25

இசையரசி - 26

இசையரசி - 27

இசையரசி - 28

இசையரசி - 29

இசையரசி - 30

இசையரசி - 31

இசையரசி - 32

logo
Andhimazhai
www.andhimazhai.com