“இசைக்குயில் சுசீலா அவர்களின் குரல் மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்று மென்மையானது. விடிந்தும் விடியாத காலைப்பொழுதின் ரம்மியம் நிறைந்தது. தென்றல் போல் பலதலைமுறைகள் கடந்து நம்மை, மொழியை, மனித உணர்வுகளை வாஞ்சையுடன் தாலாட்டுவது. அவர் பாடிய பாடல்களை அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுக்கவே அலுக்காது. உண்மை இது, வெறும் புகழ்ச்சி இல்லை. நீண்ட பயணங்களில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டபடி பயணக்களைப்பே தெரியாமல் பயணித்திருக்கிறேன்.” - கவிஞர் கல்பனாதாசன்
திரைப்படங்களைத் தவிர்த்த தனி இசை ஆல்பங்கள் – அதுவும் பக்தி இசை ரெக்கார்டுகள் பி. சுசீலாவின் குரலில் அறுபதுகளிலேயே வர ஆரம்பித்துவிட்டது.
அறுபதுகளின் ஆரம்பத்தில் கொலம்பியா நிறுவனம் கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடங்கிய இசை ஆல்பங்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது. அதில் பி. சுசீலா பாடியிருந்த பாடல்கள் கிறிஸ்தவ சகோதரர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருந்தன.
கிறிஸ்தவம் தமிழகத்தில் பரவ ஆரம்பித்தபோது நமது கர்நாடக இசை வடிவங்களிலேயே ராகங்களை முதன்மையாகக் கொண்ட பாடல்கள் இயற்றப்பட்டன. ப்ராடெஸ்ட்டென்ட் கிறிஸ்தவர்களின் தேவாலயங்களில் பாடப்படும் பாடல்கள் மேற்கத்திய இசையிலும், நமது கர்னாடக இசை வடிவிலும் ராகம் சார்ந்து பாடுவதற்கு எளிதாக மெட்டமைக்கப் பட்டிருந்தன. தஞ்சை வேதநாயகம் சாஸ்திரி மற்றும் பாளையங்கோட்டை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் எழுதிய கிறிஸ்தவ கீதங்களை நடராஜ முதலியார் என்பவரும், ஜிக்கி, பி. சுசீலா ஆகியோரும்தான் பாடி இருந்தார்கள்.
“தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே” – என்ற ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த பாடல் டி. ஏ. கல்யாணம் அவர்களின் இசையில் பி. சுசீலாவின் இனிய குரலில் ப்ராடெஸ்ட்டென்ட் கிறிஸ்தவர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பாடல்.
அதே போல “இடை விடாத சகாய மாதா” பாடல் ஒலிக்காத கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இல்லங்களே இல்லை. Idaivida Sahaya Matha | Yesupiran | P.Susheela | Christian Devotional Songs Tamil | Lord Jesus (youtube.com)
திரைப்படங்களிலும் அவர் பாடிய கிறிஸ்தவ மதப் பாடல்கள் பெருவெற்றி அடைந்த பாடல்களாகவே அமைந்துவிட்டன. அன்னை வேளாங்கண்ணி படத்தின் “கருணை மழையே மேரி மாதா”, கண்ணே பாப்பா படத்தின் “சத்தியமுத்திரை கட்டளை இட்டது” ஆகிய பாடல்கள் இல்லாமல் கிறிஸ்துமஸ் இல்லை.
இந்துமதப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்கள் தமிழில் எச்.எம்.வி. நிறுவனத்தினரால் 1969 ஆம் ஆண்டில் இசை அரசியின் குரலில் வெளிவந்தது.
டி.கே. புகழேந்தி அவர்களின் “முருகன் பாமாலை” அவரது தேன்குரலில் வெளிப்பட்ட தெய்வீகத்தை அகிலமெல்லாம் கொண்டு சேர்த்தது.
முதல் பகுதி முழுமைக்கும் , இரண்டாம் பகுதியில் நான்கு பாடல்களுக்கும் டி.கே. புகழேந்தி இசை அமைக்க, மற்ற பாடல்களுக்குத் திரு. ரகு, குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோரும் இசை அமைத்திருந்தனர். பாடல்களை எம்.பி.சிவம், தவசீலன், கனக கிருஷ்ணன், கலைவாணன் ஆகியோர் இயற்றி இருந்தனர்.
ஒரு பகுதியில் கந்தபுராணம் முழுமையும் – மறுபகுதியில் “அம்மையப்பா என் அன்பு வணக்கம்”, “தேன் மணக்கும் தேவன் மலை”, “எனக்கும் உனக்கும் இருக்குதையா உறவு” (இந்தப் பாடலில் “முருகா..” என்ற ஒற்றை வார்த்தையை ஒரு கார்வை கொடுத்து இழுத்து எனக்கும் உனக்கும் என்று வார்த்தையோடு இணைத்து முடிப்பார் பாருங்கள். செவிகளில செந்தேன் மழையாகப் பொழிவதை உணர முடியும்.) ஆகிய பாடல்கள் மனதோடு உறவாடும் பாடல்கள். Murugan Pamalai Part2 (youtube.com)
“தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி” – த்விஜாவந்தி ராகத்தில் இப்படி ஒரு மெல்லிசைப் பாடலை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது.
தொடர்ந்து வந்ததுதான் ஐம்பது லட்சத்திற்கும் மேலாக விற்பனையில் சரித்திரச் சாதனை படைத்த “அம்மன் பாமாலை”.
இதில் கவிஞர் கல்பனாதாசன், கே. சோமு ஆகியோரின் பாடல்களுக்குத் திரு. கே. வீரமணி இசை அமைத்திருந்தார்.
“ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா” என்ற ஆரம்பப் பாடலிலேயே ஆனந்த பைரவியில் அசத்தி இருந்தார் பி. சுசீலா. P Susila Bakthi 3 Ratcha Ratcha Jegan Matha (youtube.com)
இந்தப் பாடலில் அடுத்த வரி “மங்கள வாரம் சொல்லிட வேணும் மங்கள சண்டிகை ஸ்லோகம்” என்று வரவேண்டும்.
ஆனால்.. பி. சுசீலா பாடும்போது “மங்கள சண்டிகை” என்ற வார்த்தையை “மங்கள கண்டிகை” என்று பாடியிருக்கிறார்.
“இது என்ன உச்சரிப்புப் பிழை? அதுவும் பி.சுசீலாவிடமிருந்தா?” என்று மனம் ஒரு கணம் அதிரத்தான் செய்தது.
ஆனால். அது அவர் தவறல்ல.
நடந்ததைப் பாடலாசிரியர் கல்பனாதாசன் அவர்களே விளக்கினார்.
பொதுவாக ஒரு பாடல் பதிவின் போது இசை அமைப்பாளருடன் உச்சரிப்புப் பிசகு ஏற்பட்டால் அதனைத் திருத்திக் கொடுப்பதற்காக பாடலாசிரியரும் இருப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஒலிப்பதிவின்போது கவிஞர் கல்பனாதாசன் அவர்களுக்குத் தவிர்க்க முடியாத சொந்த அலுவல் காரணமாக வெளியூர் சென்றாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே பாடலை எழுதிக் கே.வீரமணியிடம் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்.
“எப்பவுமே நான் எழுதும்போது ஒருவார்த்தையை மற்றொரு வார்த்தையோடு இணைத்து வேகமான நடையில்தான் ((Running Handwriting) எழுதுவேன். அப்படி எழுதிக்கொடுத்த பிரதியில் சண்டிகை என்ற வாசகத்தில் நான் எழுதி இருந்த முதல் இரண்டு எழுத்துக்களும் பார்ப்பதற்குக் “கண்டிகை” என்பது போல இருக்கவே கே. வீரமணி அவர்களும் அப்படியே சுசீலாம்மாவுக்குச் சொல்லிக்கொடுத்தபடியே பாடிவிட்டார். அதனால் நேர்ந்த பிசகுதான் இது. இதற்குச் சுசிலாம்மாவையோ, திரு. வீரமணி அவர்களையோ குறையே சொல்ல முடியாது.ஒலிப்பதிவு எல்லாம் முடிந்து இசைத் தட்டாக வெளியான பிறகுதான் இந்தப் பிழையை உணர முடிந்தது. அந்த நேரத்துலே எதுவுமே செய்யமுடியாமல் போய்விட்டது. "இந்தத் தவறுக்கு முழுக்க முழுக்க தெளிவாக எழுதிக் கொடுக்காத நான் தான் பொறுப்பு.” என்று இந்தச் சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார் கவிஞர் கல்பனாதாசன்.
அதனால் என்ன? தனது திருநாமத்தை எப்படிச் சொன்னாலும் உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளும் அம்பிகை தனது மகளின் மழலையாக இதனை ஏற்றுக்கொண்டு விட்டதால் பாடல் பெருத்த வரவேற்பைப் பெற்று இல்லம் தோறும் அன்னையின் காப்பை ஒரு ரட்சையாகவே கொண்டுவந்து சேர்த்துவிட்டது.
“ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்” – துர்க்கை அம்மனைத் துதித்துத் துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்ள வைக்கும் அற்புதமான பாடல்.
“ஆதி லக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி” என்று விருத்தமாகத் தொடங்கி
“திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக - என்று அன்னை மகாலக்ஷ்மித் தாயாரை வரவேற்று “அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக” என்று வேண்டுதலாக முடியும் பல்லவியுடன் கூடிய பாடல்..
இசை அரசியின் குரலில் விநயம், பக்தி, நயம், பெருமிதம் என்று நானாவித உணர்வுகளும் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் பாடல்.
இத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பிறகும் எப்படித்தான் இப்படி அனைத்து உணர்வுகளும் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் விதமாக ஒரு வற்றாத ஜீவநதியாக அந்த குரலில் இனிமை இருக்க முடிகிறது என்று வியக்க வைக்கும் பாடல் இது.
அடுத்து கமல மனோஹரி ராகத்தில் அமைந்த “மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி” என்ற கே. சோமு அவர்கள் இயற்றிய பாடல். ஸ்ருதி, லயம் அனைத்தும் துளிக்கூடப் பிசகாமல் பி. சுசீலா அவர்கள் பாடிக்கொடுத்திருக்கும் இந்தப் பாடலை இன்றுவரை மிஞ்ச வேறு பாடல் இல்லை .
சாட்சாத் கலைமகளே அவதாரமெடுத்துப் பாடினால் தவிர இப்படி இனிமைத் தேனில் சாரீரத்தைத் தோய்த்தெடுத்துப் பாட முடியாது என்ற அளவிற்குப் பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா.
அதிலும் “அம்மா பாட வந்தோம்’ என்ற வரிகளில் வரும் “அம்மா” என்ற ஒற்றை வார்த்தையை ஒவ்வொரு முறை பாடும் போதும் ஒவ்வொருவித உணர்வு தொனிக்கப் பாடியிருக்கிறார் நமது இசை அரசி.
எந்த வீட்டு நவராத்திரி கொலுவிற்குப் போனாலும் தங்களையே சுசீலாவாகப் பாவித்துக் கொண்டு இந்தப் பாடலை சுருதி ஒரு பக்கம் சாரீரம் ஒருபக்கமாகப் போனாலும் பாடாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே தாய்மார்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார் பி.சுசீலா.
“தாமரைப் பூவில் அமர்ந்தவளே,
“ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ என் தேவி முகம்”
“கொண்டியா முடி அலங்கரித்துக் கொஞ்சும் கிளி கையில் வைத்து”
“கருணையின் உருவமே கலைகளில் வடிவமே”
“காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா”
“கலைவாணி நின் கருணைத் தேன் மழையே” என்று அனைத்துமே கேட்பவர் மனங்களைத் தெய்வீகத்தால் நிறைத்தன.
“ஸ்ரீசக்ர திருத்தலங்கள்” – என்ற பக்தி இசை தொகுப்பு – கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் பாடல்கள் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் இசையில் -
இதில் குறிப்பாக “எத்தனை சௌந்தர்யம் எத்தனை மனோகரம்” என்ற திருவொற்றியூர் வடிவுடை அம்மனின் அழகை வர்ணிக்கும் பாடலைப் பி. சுசீலாவின் தேனினும் இனிய குரலில் கேட்கும்போது தேவியின் திருவடிவம் அப்படியே மனக்கண் முன்னால் தோன்றும். Ethanai Soundaryam Thiru Votriyur Vadivudainayaki (youtube.com)
ஆர்.வி. குமாரின் இசையில் கேட்கக் கேட்கத் திகட்டாத “அஷ்ட லக்ஷ்மி” பாடல்கள். Ashtalakshmi Songs || P. Suseela | Tamil songs Jukebox | Aditya Bhakthi |#bhaktisongs #lakshmisongs (youtube.com)
“சிவ க்ஷேத்திரங்கள்- தொகுப்பில் டி.எம். சௌந்தரராஜன் பி. சுசீலா இருவரும் தலா நான்கு பாடல்களைப் பாடியிருந்தனர்.
“செஞ்சடைப் பொன்மேனியே” Senchadai Ponmeniye - P Suseela - Sivan Devotional Song (youtube.com) , “ஆலவாய் அழகனே” ஆகிய பாடல்களைப் பி. சுசீலாவின் குரலில் கேட்கும்போது தஞ்சைக்கும், மதுரைக்கும் நாமே சென்று தரிசித்த உணர்வைத் தரவைத்த பாடல்கள். Aalavaai Azhagane - P Suseela - Sivan Devotional Song (youtube.com)
“ஸ்ரீ பாலாஜி பாமாலை” – திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் மீதான பக்தி பாடல்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
“திருமால் திருத்தலங்கள்” - தென் திருப்பதிகள் என்று போற்றப்படும் தென்பாண்டி நாட்டுத் தலங்களாகத் திருவரங்கம் தொடங்கி, திருமாலிருஞ்சோலை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, திருப்புல்லாணி, ஆழ்வார் திருநகரி, நாங்குநேரி. ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி என்று டி.கே. புகழந்தி அவர்களின் இனிய இசையில் அதி அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் பி. சுசீலா
நேரில் சென்று தரிசிக்கும் போது கூட தெய்வீக உணர்வு மனதில் பரவுமோ என்னவோ.. ஆனால் இந்தப் பாடல்களை பி. சுசீலா பாடியிருக்கும் அழகு கேட்கும்போது தெய்வீகத்தை மனதில் நிலைபெறச் செய்துவிடுகிறது என்பது சத்தியமான உண்மை.
கவியரசரின் “கிருஷ்ண கானம்” பாடல்களை அறியாத தமிழ் நெஞ்சங்களே இருக்க முடியாது. மெல்லிசை மன்னரின் இசையில் இந்தப் பாடல் தொகுப்பில் இரண்டு பாடல்களை பி. சுசீலா அதி அற்புதமாகப் பாடி இருக்கிறார்.
அவற்றில் “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைக் காணுங்கள்” பாடல் ஒரு பக்திப் பிரவாகம்.
இந்தப் பாடலில் “உச்சிக்காலத்து சிங்காரம் அவன் ஒவ்வொரு அழக்குக்கும் அலங்காரம்” என்ற வரிகளில் “ஒவ்வொரு அழகுக்கும்” என்ற வார்த்தையை படிப்படியாக கீழிறக்கிக் கார்வைகள் கொடுத்துக் கேசாதி பாதம் குழந்தைக் கண்ணனை அலங்கரிக்கும் உணர்வை கேட்பவர் மனதில் எற்படுத்துவதைப்போல பாட எப்படித்தான் இவரால் முடிந்ததோ! வேறு யாராலும் இப்படிப்பாட முடியவே முடியாது. Guruvayurukku Varungal - Lyrical | Lord Krishna | P. Susheela | M.S. Viswanathan | Kannadasan (youtube.com)
திரை உலகிற்கு வருவதற்கு முன் பக்தி இசைத் தொகுப்புகளுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த “தேனிசைத் தென்றல்”தேவா அவர்களின் இசையில் பி. சுசீலா பாடிய மதுரை மீனாட்சி பாடல்கள், காசி விசாலாட்சி கருணை, திருப்பரங்குன்றம் முருகன் பாமாலை ஆகிய இசை ஆல்பங்கள் தேவாவுக்கு ஒரு அழுத்தமான முகவரியை ஏற்படுத்திக் கொடுத்தன.
திரை உலகில் காலெடுத்த வைத்த பிறகு இந்த மெட்டுக்களைத் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தேவா பயன்படுத்திக் கொண்டார்.
“தேவியே தெய்வத் தாயே” என்று பி. சுசீலா பாடிய இனிமையில் தோய்ந்த பாடல் மெட்டை அப்படியே “தூது போ செல்லக் கிளியே” என்ற பாடலாக திரைப்படத்தில் எஸ். ஜானகியைப் பாடவைத்தார் தேவா.
“பூலோக கைலாசம் இதுதானா” என்ற காசி திருத்தலப் பாடலைப் பி. சுசீலா பாடக் கேட்கும்போது இந்த இனிமையை விட மோட்ச சாம்ராஜ்யம் வேறு இல்லை என்று கண்டிப்பாகத் தோன்றிவிடும்.
இவ்வளவு சொன்ன நான் அவரது “சாய் கீதாஞ்சலி”யை மட்டும் விட்டுவிட முடியுமா என்ன?
தெலுங்கு – தமிழ் ஆகிய இருமொழிகளிலும் நடிகை அஞ்சலிதேவி அவர்களின் கணவர் திரு. ஆதி நாராயண ராவ் அவர்களின் இசையில் வெளிவந்த இந்த இசைத் தொகுப்பு புட்டபர்த்தி சாய்நாதனுக்கு ஒரு அற்புதமான இசை அஞ்சலி.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற “மதுர மோகன ஜகன்னாத கண்ணனே சாயி” பாடல் இனிமையிலும், தெய்வீகத்திலும் இசை அரசியின் குரல் உச்சம் தொட்ட பாடல். உலகமெங்கும் உள்ள சாய் பக்த சகோதரர்களின் இல்லங்கள் அனைத்திலும் இந்தப் பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். Madhura Mohana (youtube.com)
இப்படி திரை இசையைத் தாண்டி பக்தி இசைத் தொகுப்பிலும் மகத்தான சாதனை படைத்தார் பி. சுசீலா.
(இசையின் பயணம் தொடரும்..)