பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 40

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்
Published on

“திரைத்துறையில் பி. சுசீலாவைப் போல் ஒரு பாடகி இனி உருவாக முடியுமா என்று தெரியவில்லை.  “குழல் தந்த இசையாக, இசை தந்த குயிலாக, குயில் தந்த குரலாக’ப் பாடிக்கொண்டிருக்கும் சுசீலாவிடம் வாயிருந்தால் திரை இசை இப்படித்தான் சொல்லும்:  “நீ இல்லாமல் நானும் நானல்ல”. காற்றின் திசைகளுக்கேல்லாம் அரை நூற்றாண்டை தேனாபிஷேகம் செய்துகொண்டிருக்கிறது பி. சுசீலாவின் கந்தர்வ கானம். - பேராசிரியை திருமதி. பொன்மணி வைரமுத்து.

எழுபதுகளின் இறுதியில் நாற்பத்தைந்து நாட்கள் அமெரிக்கா, மற்றும் கனடாவில் பி.சுசீலா,ஜமுனாராணி, எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் வெற்றிகரமாக நிகழ்சிகளை நடத்திவிட்டு திரும்பினார்கள்.

அட்லாண்டா இசை நிகழ்ச்சியில் இசை அரசி – கே. ஜமுனா ராணி
அட்லாண்டா இசை நிகழ்ச்சியில் இசை அரசி – கே. ஜமுனா ராணி

அவற்றில் சிகாகோவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சியின் அனுபவம் சற்றுத் த்ரில்லிங்கானது.

வழக்கம் போல ஒரு மணிநேரம் முன்னதாக அனைவரும் சென்று எல்லா ஏற்பாட்டையும்  சரிபார்த்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக் செட் தயார் செய்ய மறந்துவிட்டிருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேறு எங்கிருந்தும் வாடகைக்கு ஏற்பாடு செய்யவும் முடியாத சூழ்நிலை.

அரங்கமோ பார்வையாளர்களால் நிறைந்துவிட்டிருந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நண்பர் ஒருவர் விரைவாகத் தன் வீட்டிலிருந்து டேப் ரெக்கார்டரில் பதிவு செய்வதற்காக பயன்படுத்தும் சின்ன மைக் ஒன்றை “இது ஒண்ணு தான் இருக்கு பாலு.” என்று  கொண்டு வந்து கொடுத்தார்.

“இந்த மைக்கை வைத்துக்கொண்டு எப்படி இசை நிகழ்ச்சி நடத்துவது?”

குழம்பிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் பி. சுசீலாவிடம், “என்னம்மா இப்படி ஆயிடுச்சே.  பேசாம நிகழ்ச்சியை கான்சல் பண்ணிடலாமா?” என்று கேட்டார்.

“வேண்டாம் பாலு. இத்தனை பேர் எங்கிருந்தெல்லாமோ வந்து இருக்காங்க. எப்படியாவது சமாளிச்சு நாம் பாடித்தான் ஆகணும்” என்றார் பி. சுசீலா.

மேடைக்கு வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூடியிருந்த ரசிகர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லிவிட்டு தன்கையில் இருந்த குட்டி மைக்கை கை உயர்த்தி எல்லோருக்கும் காட்டிவிட்டு “இதை வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்த நாங்கள் தயார். கேட்பதற்கு நீங்கள் தயாரா என்று சொல்லுங்கள்” என்று கேட்டதும் கூட்டத்தினர் “வி ஆர் ரெடி” என்று ஒரே குரலில் பதிலளிக்க அன்று நிகழ்ச்சி முழுவதும் அந்த ஒற்றை மைக்கை வைத்துக்கொண்டே பி. சுசீலாவும், எஸ். பி. பாலசுப்ரமணியமும் நடத்தி முடித்தார்கள்.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் குட்டி மைக்கை முன்னால் நீட்டினால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.  அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டு சிறப்பாகப் பாடி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த கைகொடுத்தார் பி. சுசீலா.

“அவர் மட்டும் மைக்கை அரேஞ் பண்ணாம விட்டது நிகழ்ச்சி பொறுப்பாளர்களின் தப்பு. என்னால பாட முடியாது.  பேசாம கான்சல் பண்ணிடுவோம்” என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தாரென்றால் யாராலும் எதுவும் செய்திருக்க முடியாது.  அவர் கூட வந்திருந்த அவரது கணவரும் சுசீலா பாடமாட்டார் என்று சொல்லியிருந்தாரென்றால் அதை மீறவும் மாட்டார் அவர். ஆனால் திரு. ராம் மோகன் ராவ் அவர்களோ எதிலும் தலையிடவே இல்லை.  அவரது ஒத்துழைப்பு அந்த அளவுக்கு இருந்தது.  “இது முழுக்க முழுக்க உங்க பிரச்சினை. இதை நீங்க எப்படிச் சமாளித்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு” என்பது போல முழுச் சுதந்திரம் கொடுத்து நிகழ்ச்சியை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிறப்பாக நடத்தி முடிக்க கைகொடுத்தார் அவர்” – என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத்  திரும்பும்போது லண்டனில் மூன்று நிகழ்ச்சிகளுக்காக அவர்கள் ஒரு வாரம் தங்கவேண்டியதாகி விட்டது. 

அப்போதெல்லாம் இப்போது போல ஹோட்டலில் தங்க வசதி செய்து கொடுக்க மாட்டார்கள். ஏற்பாடு செய்பவர்களில் ஒருவர் வீட்டில் தான் தாங்கிக்கொள்ள வேண்டும். பி. சுசீலா- அவரது கணவர் – மகன் ஜெயகிருஷ்ணா  – எஸ்.பி. பாலசுப்ரமணியம்  ஆகியோருடன் கூட வாத்தியக் கலைஞர்களையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேர் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள்.

அந்த நேரத்தில் தினமும் காலையில் ப்ரேக் பாஸ்டாக உப்புமாவையே தான் சாப்பிட வேண்டியாக இருந்தது.  அதிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே வெள்ளை ரவை உப்புமா தான்.

ஒரு நாள் இரண்டு நாள் என்று இல்லை.  அவர்கள் தங்கி இருந்த அந்த ஒரு வாரமும் அதே உப்புமாதான்.

“என்ன பாலு இது? தினமும் உப்புமாவையே கொடுக்குறாங்க. அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ப்ரெட்டாவது கொடுக்கக்கூடாதா?” என்று எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் ஐந்தாவது நாள் வாய்விட்டே பொருமி விட்டார் பி. சுசீலா.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சும்மா இருக்காமல் வெளிப்படையாகவே அந்த வீட்டு அம்மாவிடம் கேட்டே விட்டார்.

“என்னம்மா இது டெய்லி உப்புமாவையே கொடுக்குறீங்களே. ஒரு நாளைக்காவது வேற ஏதாவது கொடுக்கலாமே”

எஸ்.பி.பி. இப்படிக் கேட்டதும் அந்த அம்மா,’அதுவா. நீங்க எல்லாரும் வரப்போறீங்கன்னு சொன்னதும் முதல் நாளே நிறைய உப்புமாவைப் பண்ணி ப்ரிட்ஜ்லே வச்சிட்டேன்.  அதெல்லாம் தீர வேண்டாமா?” என்றாரே பார்க்கலாம்!

இதைக் கேட்டதும் பி.சுசீலாவுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கும் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

***

வாழ்வில் வெற்றிச் சிகரத்தை அடைய திறமை, உழைப்பு, கடவுளின் கருணை, அதிர்ஷ்டம் இவை எல்லாமே ஒரே நேர்க்கோட்டில் இணையவேண்டும்.  அப்படிக் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதென்பது அதன் பிறகு அவரவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்தே அமையும்.

குழந்தை உள்ளம் கொண்ட இசை அரசியின் கள்ளமில்லாத வெள்ளைச் சிரிப்பு
குழந்தை உள்ளம் கொண்ட இசை அரசியின் கள்ளமில்லாத வெள்ளைச் சிரிப்பு

பி. சுசீலாம்மாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்று வரை மாறாமல் இருந்துவருகிறார்.

வெற்றி மாலைகளின் கனத்தை அவர் தலைக்கு என்றுமே ஏற்றிக்கொண்டதில்லை.

தனக்குக் கிடைத்த வெற்றிகளுக்குக் காரணமே சொல்லிக்கொடுத்த இசை அமைப்பாளர்கள் தான் என்பதுதான் எப்போதுமே அவரது கருத்து.

“எல்லாம்..அவங்க தான்.  அவங்க சொல்லிக்கொடுத்தபடியேதான் நான் பாடினேன். அவங்க தான் எனக்கு கிடைச்ச நல்ல பெயருக்கெல்லாம் காரணம். என் கிட்டே என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லே.” என்று தான் இன்றும் பணிவோடு கூறுவாரே தவிர என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அவர் என்றுமே பேசியதில்லை.  அது மட்டுமல்ல இசை அமைப்பாளர் என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ அதை மட்டுமே பாடுவார் அவர்.  அதிகப்படியான சங்கதிகளைச் சேர்த்துக் கொண்டு தனது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்வதென்பது அறவே அவரிடம் கிடையாது.

“அவங்க சொல்லிக்கொடுத்தாலும் அதை இனிமையா பாடியது நீங்க தானேம்மா?” என்று விடாப்பிடியாக மடக்குவதுபோலப் பேசினாலும் அப்போது கூட, “அதுக்கு காரணம் கடவுள். மேலே இருக்காரே அவர்தான். அவர் மேல இருந்து ஒரு மாலையைப் போட்டாரு. அது எத்தனையோ கோடி மனிதர்களுக்கிடையிலே அப்படியே தவறிப்போய் என் தொண்டையிலே வந்து விழுந்துடுத்து. அவ்வளவுதான்.” என்று தனக்குக் கிடைக்கும் அந்தப் பெருமையை அப்படியே இறைவன் காலடியில் சமர்ப்பித்துவிடுவார் அவர்.

அந்த அளவுக்கு பக்குவமான ஒரு பெண்மணியாக அவர் இருக்கிறார்.

நமக்கெல்லாம்  ஒரே ஒரு மொழிதான் தாய்மொழிதான் இருக்கமுடியும். 

ஆனால் பி. சுசீலா அவர்களைப் பொறுத்தவரையில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, துளு, சமஸ்கிருதம், ஹிந்தி, இவ்வளவு ஏன் சிங்களம் என்று அவர் எந்தெந்த மொழிகளிலெல்லாம் பாடுகிறாரோ அந்த மொழிகள் எல்லாமே அவரைத் தங்கள் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு விடுகின்றன.

அதனால் அவை எல்லாமே அவருக்குத் தாய் மொழியாகி விடுகின்றன.

பொதுவாக சமஸ்கிருதத்தில் உபநிடதங்களைப் பெண்கள் பாடக்கூடாது என்பார்கள்.  ஆனால் உபநிஷத்துக்களில் இருந்து தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை வைத்து ஒரு ஆல்பம் தயாரிப்பதென்று முடிவானபோது அதில் யாரைப் பாடவைப்பது என்ற கேள்வி எழுந்த நேரத்தில் அனைத்துப் பாடக பாடகியரின் பெயர்களை எல்லாம் எழுதித் திருவுளச் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுப்பது என்று முடிவானது.  அப்படி திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தபோது அதில் பி. சுசீலாவின் பெயரே தேர்வானது. வேத பண்டிதர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து உபநிஷத ஸ்லோகங்களை எப்படி உச்சரிப்பதென்று தெள்ளத் தெளிவாகக் கற்றுக்கொண்டு அதன்பிறகே அவற்றைப் பாடிக் கொடுத்தார் பி. சுசீலா.

அவரது உண்மையான ஈடுபாட்டுக்கும் சிரத்தைக்கும் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த சம்பவம் இது.

எத்தனை எத்தனை விருதுகள்!

ஐந்துமுறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள்.

தமிழில் பெற்ற இரண்டு விருதுகள் பற்றி நாம் அறிந்ததுதான்.

மற்ற மூன்றும் தெலுங்கில் அவர் பாடிய பாடல்களுக்குக் கிடைத்தவை.

“சிரி சிரி முவ்வா” படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் 1978ஆம் ஆண்டிலும், ரமேஷ் நாயுடுவின் இசையில் “மேகசந்தேசம்” படத்திற்காக 1982ஆம் வருடத்திலும், அடுத்த ஆண்டிலேயே எம்.எல்.ஏ. ஏடு கொண்டலு படத்திற்காகவும் என்று மூன்று தேசிய விருதுகளை பெற்றார்.

இவை தவிர தமிழ் நாடு அரசின் “கலைமாமணி” விருது, ஆந்திரப் பிரதேச அரசின் சிறந்த பாடகிக்கான நந்தி விருதுகளை ஐந்து முறைக்கு மேலும், FILM FARE வழங்கிய சிறந்த பாடகிக்கான விருதுகளை மட்டுமல்லாமல் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.

1987-இல் “விஸ்வநாத நாயுகுடு” என்ற நடிகர் கிருஷ்ணாவின் சொந்தப் படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த இந்தத் தெலுங்குப் படத்திற்காக ஜே.வி. ராகவலுவின் இசையில் “இதி நாட்ய நீராஜனம்” என்ற பாடலை வெகு அருமையாகப் பாடியிருந்தார் பி.சுசீலா. 

“கவிஜன சமாஜ பூஜா – ரூப விஹித மனோஜா

அவதார தேவா – நவ நாட்ய தேவா”

என்று விருத்தமாக ஆரம்பிக்கும் பாடல். ஆரம்பிக்கும்போதே கல்யாணி ராகத்தில்  உச்சத்தைத் தொடவேண்டிய பாடல்.

சரண வரிகளிலோ துரித கால மற்றும் உச்ச ஸ்தாயிப் பிரயோகங்கள் நிறைந்த பாடல் இது.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஒரே பாடலை இரண்டு நடிகைகளுக்காகப் பாடி இருக்கிறார் பி.சுசீலா.

நடனமாடும் ஜெயப்ரதாவுக்காகவும் அவரை ஆட்டுவிக்கும் நடன குருவான ராஜசுலோச்சனாவுக்காகவும் பாடி இருக்கிறார்.  பாடலின் இடையில் வரும் துரிதகால ஸ்வரங்களை ராஜசுலோச்சனவுக்காகப் பாடும்போது ஆரம்பத்தில் தென்பட்ட இளமைத் துள்ளல் சட்டென்று மாறி ஒரு லேசான முதிர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் அந்த லாவகம் பி.சுசீலாவுக்கு மட்டுமே கை வந்த ஒரு கலை.  Viswanatha Nayakudu Movie || Idhi Naatya Neeraajanam Video Song || Krishnam Raju || Shalimarcinema (youtube.com)

இப்படிப்பட்ட பாடல்களை அனாயசமாகவும் சிறப்பாகவும் பாடுவதில் வல்லவர் என்பதே அவருக்கு மிகப் பெரிய விருது.

2003- இல் தமிழக அரசின் “அறிஞர் அண்ணா விருது” அப்போதைய முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களால் வழங்கப் பட்டது.  இந்த விருது வழங்கும் விழாவில் பி. சுசீலாவின் கன்னத்தில் ஜெயலலிதா முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியது சற்றும் எதிர்பாராத ஒன்று

பத்ம பூஷண் விருது பெறும் இசை அரசி
பத்ம பூஷண் விருது பெறும் இசை அரசி

2008- இல் இந்திய அரசாங்கத்தின் “பத்ம பூஷண்” விருது.

2018-இல் உலகளாவிய அளவில் தென்னிந்திய சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருது.

ஆரம்ப அத்தியாயத்தில் குறிப்பிட்ட “கின்னஸ்” சாதனை விருது.

தற்போது தமிழ் நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் விருது.

என்று நீண்டு கொண்டே போகின்றன இந்த விருதுகளின் பட்டியல்.

ஆனால்.. இத்தனை விருதுகளைச் சுமந்தும் இன்னும் தனது இயல்பிலிருந்து மாறாமல் அதே அடக்கம், பணிவு, அன்பு, கனிவு என்று நற்பண்புகளின் உறைவிடமாக இருந்து வருகிறாரே இவை நமக்கு கிடைத்த விருது.

“கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைக் கொடுத்திருக்கிறார். எனக்குப் பாட்டை கொடுத்திருக்கிறார். அதை எந்த அளவுக்கு என்னால் அர்ப்பணிப்புடன் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு நான் செய்திருப்பதாகத்தான் கருதுகிறேன்” என்று தன்னடக்கத்துடன் தான் சொல்வார் பி.சுசீலா.

பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் எல்லாரும் “அந்தக்காலத்துலே” என்று ஆரம்பித்துத் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டு இன்றைய தலைமுறையினரை மட்டம் தட்டுவது இயல்பு.

ஆனால் சுசீலாம்மாவிடம் மருந்துக்குக் கூட இந்தக் குணம் கிடையாதென்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

இளம் தலைமுறைப் பாடகியரைப் பற்றி மிகவும் சிலாகித்துத்தான் பேசுவார்.

ஒரு முறை சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு சிறுவர் பாடல் போட்டிக்கு நடுவராக வந்தபோது போட்டியில் பாடிய அனைத்து சிறுவர் சிறுமியரையுமே வெற்றியாளர்களாக அறிவித்துவிட்டார்.  “பாவம் குழந்தைங்க. கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்ஞ்சிட்டு வந்திருக்காங்க. எல்லாருமே நல்லாத்தானே பாடினாங்க.அதனாலே எல்லாருக்குமே ப்ரைஸ்” என்று அவர் சொன்னபோது அவரது உயர்ந்த மனம் சிலிர்க்க வைத்தது.

மகன் ஜெயகிருஷ்ணா – மருமகள் சந்தியா மற்றும் பேத்திகள் ஜெயஸ்ரீ-சுபஸ்ரீயுடன் இசை அரசி.
மகன் ஜெயகிருஷ்ணா – மருமகள் சந்தியா மற்றும் பேத்திகள் ஜெயஸ்ரீ-சுபஸ்ரீயுடன் இசை அரசி.

கர்நாடக இசை அரசி திருமதி.எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஒரு முறை பி. சுசீலாவைச் சந்தித்தபோது “சுசீலா. நீ மறுபடியும் கர்நாடக சங்கீதம் பாட வந்துவிடேன். உனக்கு நான் கற்றுத் தருகிறேன்” என்று ஒரு முறை சொன்னது சுசீலாம்மாவின் மீது அவர் வைத்திருந்த அன்புக்கும் மரியாதைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய இசைத் துறைக்கு தானும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, கவிஞர் வைரமுத்து, பாடகி பாலசரஸ்வதி தேவி, நடிகை ஜமுனா  ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டு 2008ஆம் ஆண்டு  பி.சுசீலா ட்ரஸ்ட் என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி ஒரு காலத்தில் தன்னுடன் பணியாற்றித் தற்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் வயது முதிர்ந்த நலிவுற்ற இசை, வாத்தியக்  கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகிறார் பி. சுசீலா. இசைத்துறையில் சாதனை புரிந்த சக கலைஞர்களில் வருடம் தோறும் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவித்தும் வருகிறார் பி.சுசீலா.

பி.சுசீலா விருது பெரும் கலைஞர்கள் – கே.ஜமுனாராணி – எஸ்.பி.ஷைலஜா-எல்.ஆர்.ஈஸ்வரி
பி.சுசீலா விருது பெரும் கலைஞர்கள் – கே.ஜமுனாராணி – எஸ்.பி.ஷைலஜா-எல்.ஆர்.ஈஸ்வரி

தொன்னூறாவது வயதை எட்டிக்கொண்டிருக்கும் ஈடு இணை அற்ற இந்த இசை அரசி வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்வதே நமக்கு மிகப் பெரிய பாக்கியம்.

அந்த பாக்கியம் இன்னும் பல வருடங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

வாழி நலம் சூழ என்றே வணங்குகிறோம் வாழ்க.

**

(இசையரசி தொடர் இத்துடன் நிறைவடைந்தது. தொடரை வாசித்து ஆதரவு தந்த வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. தொடரின் அனைத்து பாகங்களையும் பின்வரும் லிங்குகளில் படிக்கலாம்.)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com